Wednesday, November 4, 2015

உன் இன்னொரு காலை உடைப்பேண்டா


எனக்கு முன்பு ஒரு நண்பர் இருந்தார். அவர் ஒரு தீவிர இடதுசாரி. சிறுபத்திரிகைகளை தொடர்ந்து வாசிப்பவர். அரசியல் கட்டுரைகள் எழுதுபவர். அவர் நான் வேலை பார்த்த இடத்தில் ஒரு பெண்ணை காதலித்தார். அப்பெண்ணுக்கு பல மனக்குழப்பங்கள். தான் பார்க்க அழகாயில்லை என தாழ்வுணர்வு. அதனால் நான் அவளை காதலிக்க முயல்வதாய் என் நண்பரிடம் கதை கட்டி விட்டாள். இதனால் நண்பர் அடையும் கோபமும் பொறாமையும் அவளுக்கு கிளுகிளுப்பாய் இருந்திருக்க வேண்டும். எப்படியோ அவரது நடவடிக்கைகளில் சில மாற்றங்களை கவனிக்க தொடங்கினேன். என்னிடம் கடுமையான வெறுப்பை காட்ட தொடங்கினார். ஒருநாள் எதிர்பாராமல் எனக்கு அவரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மேலே உள்ள தலைப்பில் உள்ளது போல் எழுதி இருந்தார். நான் அவரை போனில் அழைத்து என்னை அவர் எப்படி அவ்வாறு ஊனத்தை சுட்டிக் காட்டி அவமதிக்க முடியும், அதற்கான உரிமையை தந்தது யார் எனக் கேட்டேன். பதில் சொல்லாது அவர் வார்த்தைகளை முழுங்கினார்.
சமீபத்தில் இன்னொரு நண்பர். அவரும் இலக்கியம் தத்துவம் எல்லாம் வாசிக்கும் ஒரு உன்னத சிந்தனையாளர். தமிழ் சிறுபத்திரிகையாளர் அல்ல. வட இந்தியர். ஒரு வேலை விசயமாய் பயிற்சிக்காய் ஹைதராபாத் போயிருந்த போது சேர்ந்து ஒரே அறையில் தங்கினோம். மூன்று நாட்கள் இடைவிடாது நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் உறவை பரஸ்பரம் அவ்வளவு கொண்டாடினோம். நான் எங்கு போனாலும் அவர் என்னுடனே வந்து கொண்டிருப்பார். பிற நண்பர்களிடம் என்னைப் பற்றி உயர்வாய் சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் நான்காவது நாள் அவரது நடவடிக்கையில் குறிப்பிட்ட மாற்றம் தெரிந்தது. என் மீது ஒரு இனம்புரியாத வெறுப்பை காட்டினார். என்னை பரிகசித்துக் கொண்டே இருந்தார். நான் பொருட்படுத்தாமல் பதிலுக்கு வேடிக்கையாய் பேசினேன். மூன்று நாட்களும் பயிற்சி எனும் பெயரில் எங்களை பிழிந்து எடுத்து விட்டார்கள். காலையில் ஆரம்பித்தால் இரவு தான் முடியும். கடுமையான களைப்புடன் விடுதிக்கு திரும்பி பெயருக்கு சாப்பிட்டு தூங்கி மீண்டும் காலையில் அதே பயிற்சி என இடைவிடாத நெருக்கடி. நண்பர் மூன்று நாட்களும் இரவில் தூங்கவில்லை. நான் நன்றாய் தூங்கினேன். காலையில் எழுந்ததும் அவர் எரிச்சலாய் தோன்றுவார். ஒவ்வொரு நாளும் போக அவர் எரிச்சல் பன்மடங்காகும். தூக்கமின்மையின் விளைவு என நினைத்தேன்.
 அதே போல் அவர் பேச்சிலும் சில விநோதங்கள் தெரிந்தன. சம்மந்தமில்லாமல் தன்னுடைய அந்தரங்க வாழ்க்கை பற்றி ஏதாவது ஒரு அதிர்ச்சிகரமான தகவலை சொல்லுவார். உதாரணமாய் தனது அம்மா மீது அவருக்கு சிக்கலான பாலியல் ஈர்ப்பு இருந்தது என்றார். இதையெல்லம் நான் கேட்காமல் அவரே சொன்னார். அடுத்து எங்களுடன் பயிற்சி பெறும் பலரையும் கடுமையாய் பரிகசித்து மட்டம் தட்டி இடைவிடாது பேசிக் கொண்டிருந்தார். எங்களின் துறை நிர்வாகியை கடும் துவேசத்துடன் தூற்றியபடி இருந்தார். அவரை சில ரௌடிகள் ஏற்பாடு செய்து அடித்து நொறுக்கப் போகிறேன் என்றார். அவர் ஆறு மாதங்கள் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாய் கிடக்க போகிறார் என்றார், துறை நிர்வாகி யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லையே, எதற்கு அடிக்க வேண்டும் என இவர் கூறுகிறார் என குழம்பினேன்.
பயிற்சி முடிந்து ஊருக்கு திரும்பும் முன் இருவரும் ஷாப்பிங் செய்ய கிளம்பினோம். திரும்ப விடுதிக்கு வந்து பொருட்களை கட்டி இரவு எட்டரைக்குள் பேருந்தை பிடிக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாய் தாமதமாகிட, நாங்கள் அவசரமாய் தயாராகி ஒரு ஆட்டோவில் சென்று பேருந்தில் ஏறி விட்டோம். இப்போது நண்பர் என்னை பழி கூற துவங்கினார். என்னால் தான் தாமதமாயிற்று என்றார். நான் அவரிடம் பேருந்தில் தான் ஏறி விட்டோமே என்று சமாதானம் செய்தேன். அவர் கேட்கவில்லை. அடுத்து அவர் எனக்காய் இரவு உணவு வாங்கி வரச் சென்றார். அவர் வர தாமதமாக பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து ஹாரனை முழக்கினார். நண்பர் மிகவும் பதற்றமாகி உணவுப் பொட்டலத்துடன் ஓடி வந்தார். வந்தவர் என்னை கடுமையாய் திட்ட தொடங்கினார். நான் மனிதர்களை என் தேவைக்காய் சுரண்டுகிறேன் என்றார். நான் அவரிடம் “உங்களுக்கு உணவு வாங்க முடியாது என்றால் சொல்ல வேண்டியது தானே?” என்றேன். அவர் அதற்கு பதிலளிக்காமல் நான் ஒரு ஊனமுற்றவனாய் அடுத்தவர்களை அண்டி வாழ்பவன், ஆனால் அதற்கான நன்றி உணர்வை காட்டாதவன் என்று திரும்ப திரும்ப கூறினார். ”நீ என்றாவது தனியாய் பயணித்திருக்கிறாயா? உன்னால் யார் துணையும் இல்லாமல் ஒரு இடத்துக்கு போக முடியாது தானே?” என்றார். நான் அது உண்மை அல்ல, நான் பல இடங்களுக்கு தனியாய் சென்றுள்ளே என்றேன். அகாதெமி விருது வாங்க ஷிலோங் வரை தனியாக தான் சென்றேன் என்றேன். அது போல பெங்களூருக்கும், கேரளாவுக்கும், தமிழகத்தில் பல ஊர்களுக்கும் தனியாய் யார் துணையும் இன்றித் தான் பயணித்திருக்கிறேன். நான் பொதுவாய் யார் உதவியையும் கோருவதில்லை; எனக்கு உதவியவர்கள் அதை ஒரு பொருட்டாய் எண்ணி தம்பட்டம் அடித்ததில்லை என்றேன். அவர் அதை ஏற்கவில்லை. நான் அடுத்தவர்களை அண்டி வாழ்பவன் என்றே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தார். அரைமணி என்னை திட்டியபின் அவர் இயல்பானார். நாங்கள் உணவருந்தினோம். அவர் புன்னகைத்தபடி என் கைகளைப் பற்றி என்னிடம் மன்னிப்பு கேட்டார். “உன்னை இவ்வளவு நேரமும் திட்டின பிறகு தான் உள்ளுக்குள் இருந்த டென்ஷன் எல்லாம் வெளியாகி நிம்மதியாய் இருக்கிறது” என்றார். அப்போது தான் எனக்கு இதில் உள்ள விபரீதம் உறைத்தது.
 சற்று நேரம் கழித்து அவர் தான் முன்பு உளவியல் பிரச்சனைக்காய் சிகிச்சை பெற்று வந்ததாயும் பிறகு நிறுத்தி விட்டதாயும் எதேச்சையாய் கூறினார். அவருக்கு இப்போது ஒரு நரம்பு தளர்ச்சி சிக்கல் உள்ளது. ஒரு கை நடுங்கிய படி இருக்கும். அதற்காய் சில மாத்திரைகள் உட்கொள்வார். அம்மருந்தை பைக்குள் வைத்து பேருந்தின் டிக்கிக்குள் போட்டு விட்டார். அன்றிரவு அவரால் மருந்துண்ண இயலவில்லை. ஒருமுறை மருந்தை உண்ண தவறினால் தான் ஒரு வாரம் ரொம்ப கிறுக்குத்தனமாய் நடந்து கொள்ளக் கூடும் என்று கூறினார். இவர் இப்படி தன்னைப் பற்றி சொன்ன துண்டுத்துண்டான தகவல்கள் கேட்டு எனக்கு கிலி ஏற்பட்டது. இவ்வளவு நாளும் நான் காணாத மற்றொரு ஆள் அவரிடம் இருந்து வெளிப்பட்டு கொண்டிருந்தார். பத்து நிமிடம் சிரித்துக் கொண்டு இயல்பாய் இருப்பார். அடுத்து உடனே அவரது நடவடிக்கைகள் முழுக்க மாறும். யாரையாவது கொல்லும் கோபத்தை முகத்தில் கட்டியபடி தரையை முறைத்துக் கொண்டு இருப்பார்.
அது ஒரு ஸ்லீப்பர் பேருந்து. இரவு ஆழமான தூக்கம் பிடிக்க எனக்கு நேரம் பிடித்தது. காலையில் நன்றாய் தூங்கிக் கொண்டிருந்த போது “சென்னை வந்திருச்சு” என அவர் என்னை தட்டி எழுப்பினார். நான் பதறி எழுந்ததும் சிரித்தபடி “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்றார். அதன் பின் என்னால் நிம்மதியாய் தூங்க இயலவில்லை. சென்னை வந்ததும் கோயம்பேட்டில் இருந்து ஒரு ஆட்டோ பிடித்து பேரம் பேசினோம். 250 ரூபாய்க்கு என்னை கிண்டியில் கொண்டு விட ஒருவர் ஒத்துக் கொண்டார். நண்பரின் வீட்டுக்கு போக 450 ஆகும் என்றார்கள். நண்பர் தான் பேருந்தில் செல்லப் போவதாய் சொன்னார். ஆனால் நான் ஆட்டோவில் ஏறினதும் அவர் எதிர்பாராத விதமாய் உள்ளே நுழைந்து என்னுடன் கிண்டி வரை வரப் போவதாய் சொன்னார். பேருந்து நிலையம் நெருங்கினதும் அவரை இறங்கிக் கொள்ள சொன்னேன். என் வீடருகே இறங்கினால் அவருக்கு பேருந்துகள் கிடைக்காது என்பதால் பேருந்து நிலையத்தில் இறங்குவதே உசிதம் என்றேன். அவர் என் வீடு வரை வரப் போவதாய் சொன்னார். அதன் பிறகு “நான் உன்னை டிராப் செய்வதற்காய் தான் உன் வீடு வரை வரப் போகிறேன். இது ஏன் உனக்கு புரியவில்லை. உனக்கு மனிதர்களை புரிந்து கொள்ளவே தெரியாதா?” என திட்ட ஆரம்பித்தார். நான் பணம் கொடுத்து செல்லும் ஆட்டோவில் இவர் என்னுடன் தொத்தி வருகிறார். ஆனால் இவர் எப்படி என்னை டிராப் செய்வதாய் ஆகும் என எனக்கு குழப்பமாகியது.
என் வீட்டை அடைந்ததும் நண்பர் ஆட்டோக்காரருடன் பேரம் பேசத் தொடங்கினார். அப்போது தான் அவர் ஆட்டோ செலவை மிச்சம் பிடிக்க கிண்டி வரை என்னுடன் வந்து அங்கிருந்து தன் இடமான துரைப்பாக்கத்துக்கு குறைந்த செலவில் செல்ல முயற்சிக்கிறார் என புரிந்தது. ஆனால் அதை வெளிப்படையாய் சொல்லாமல் ஊனமுற்ற என்னை டிராப் செய்ய கூட வருவதாய் பாவனை வேறு செய்கிறார் என நினைத்து எனக்கு அருவருப்பாகியது. எப்படியோ போகட்டும் என அமைதியாக இருந்தேன். ஆட்டோக்காரருக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆட்டோக்காரர் 150 கேட்க இவர் 100 தான் தருவேன் என்றார். 100க்கு படிய மாட்டார் என எனக்கு உறுதியாய் தோன்றியது. சற்று நேரம் ஆட்டோக்காரரின் நேரத்தை வீணடித்து விட்டு என்னிடம் ஆங்கிலத்தில் சொன்னார் “இதுவே என் ஊரான பீகார் என்றால் இவன் மண்டையை அடித்து நொறுக்கி இருப்பேன்”. ஐம்பது ரூபாய் கூட கேட்டதற்காய் ஏன் ஒருவரை அடித்து கொல்ல நினைக்கிறார் என எனக்கு புரியவில்லை. இதனிடையே அவரது கை நடுக்கம் மிகவும் அதிகமாக தன் மாத்திரைகளை பையில் இருந்து எடுத்து அவசரமாய் தண்ணீரில்லாமல் முழுங்க தொடங்கினார். சற்று நேரத்தில் அவர் அமைதியானார். ஆட்டோக்காரரிடம் 150 தர ஒப்புக் கொண்டார்.
ஹைதராபாதில் இருக்கும் போது நண்பரிடன் செல்போன் ரிப்பேராகி விட்டது. அதனால் என் போனை தான் அதிகமும் பயன்படுத்தி வந்தார். அறையை காலி பண்ணி வரும் போது செல்லை விடுதியில் தொலைத்து விட்டார். ஆனால் வீட்டுக்கு போனதும் அவர் முதலில் “என் போன் உன் பையில் இருக்கிறதா?” என்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். இல்லை என பதில் அனுப்பினேன். உடனே “நீ தாமதப்படுத்தினதால் தான் நான் என் போனை எடுத்து வர மறந்து விட்டேன். எல்லாம் உன்னால் தான்” என்று மற்றொரு குறுஞ்செய்தி அனுப்பினார். என்னுடைய பொருட்களை பையில் கட்டுவதற்கு நான் அவர் உதவியை பெறவில்லை. என் வேலைகளை நானே தான் செய்தேன். அவர் தன் பையை கட்டினார். இதனிடையே அவர் செல்லை தொலைத்ததற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என புரியவில்லை. ஆனால் அவரது மனப்பிரச்சனை காரணமாய் கொந்தளிப்பை என் மீது கொட்டித் தீர்க்க முயல்கிறார் என உணர்ந்து “இனி மேல் என்னை தொந்தரவு செய்யாதே” என குறுஞ்செய்தி அனுப்பினேன். கொஞ்ச நேரத்தில் அவர் தன் மனைவியின் செல்லில் இருந்து போன் செய்தார். நான் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தார். வேறுவழியின்றி எடுத்தேன். உடனே ஆங்கிலத்தில் என்னை திட்ட தொடங்கினார் “நீ அலுவலகத்துக்கு வாடா உன் தலையை அடித்து உடைக்கிறேன். உன் ரெண்டு காலையும் உடைக்கிறேன்.” என்று ஆரம்பித்தவர் கெட்ட வார்த்தைகளால் சரமாரியாய் என்னை விளாசினார். எனக்கு அவர் ஏன் திட்டுகிறார் என புரியும் முன் அவர் ரெண்டு நிமிடம் நிறுத்தாமல் திட்டியிருந்தார். ”ஒகெ ஒகெ” படத்தில் உதயநிதி ஸ்டாலின் சந்தானத்தை திட்டும் போது கெட்டவார்த்தைகள் வேறு கிடைக்காமல் ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லி திட்டுவாரே இவர் அதே போல் என்னை mother fucker என நூறாவது தடவையாக நிறுத்தாமல் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு இணையாக கெட்டவார்த்தைகளால் திட்டி போட்டியிடும் சக்தி இல்லாமல் நான் இணைப்பை துண்டித்தேன். அதற்கு முன் அவர் என்னிடம் சொன்னார் “நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என உனக்கு தெரியாது. உன்னைப் பற்றி அலுவலகத்தில் எல்லாரிடமும் ரொம்ப உயர்வாய் சொல்லி இருக்கிறேன். என் மனைவியிடம் உன்னைப் பற்றி போற்றி சொல்லாத நாள் இல்லை. உன்னிடம் நெருக்கமாய் இருக்க வேண்டுமென நான் அவ்வளவு ஏங்கினேன். ஆனால் mother fucker நீ என்னை ஏமாற்றி விட்டாய். நீ என்னை பயன்படுத்தி விட்டு உணர்ச்சியில்லாமல் என்னிடம் நடந்து கொள்கிறாய். நான் உன்னை கொல்லாமல் விட மாட்டேன். நீ இனி இந்த வேலைக்கு வராதே. அலுவலகத்தில் பார்த்தால் உன்னை சாகடிப்பேன்”. அவர் எனக்கு அப்படி என்ன மகத்துவமான உதவி செய்தார் என யோசித்தேன். ஆட்டோவில் இருந்து என் பைகளை தூக்கி பேருந்தில் வைத்துத் தந்தார். அவர் இல்லாவிட்டாலும் வேறு யாராவது அதை செய்து கொடுத்திருப்பார்கள். இதற்காய் நான் அவர் காலில் விழுந்து அடிமையாய் கிடக்க வேண்டுமா?
ஊனமுற்றவர்கள் யாரையாவது அண்டி வாழ்பவர்கள்; அவர்களுக்கு மரியாதை எல்லாம் தர வேண்டியதில்லை, உதவி பண்ணினால் போதும், அதற்கு ஈடாய் அவர்கள் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு கோணலான எண்ணம் அவர் மனதில் ஊன்றிப் போய் உள்ளது. அவர் எனக்கு செய்த மிகச்சின்ன உதவியான பையை தூக்கின விசயத்திற்கு நான் அவரிடம் நன்றியுடன் நாய் போல் இருக்காமல் எப்போதும் போல் சுயமரியாதையுடன் நடந்து கொண்டேன் என்பதை அவரால் ஏற்க இயலவில்லை. மேலும் அவர் என்னை ஒரு பொருளை போல் உரிமை கொண்டாட விரும்புகிறார். அதை நான் ஏற்கவில்லை என்பதும் அவரை கடுமையாய் கோபமூட்டியிருக்கிறது. இதனுடன் அவரது உளவியல் பிரச்சனையும் சேர்ந்து கொள்ள சைக்கோ கொலைவெறியை என்னிடம் காட்டி விட்டார். நான் அவரிடம் இறுதியாய் ஒன்று சொல்லி விட்டு துண்டித்தேன் “உனக்குத் தேவை ஒரு நண்பன் அல்ல. ஒரு மனநல மருத்துவர்”. நான் இதை அவரை காயப்படுத்த சொல்லவில்லை. விரைவில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் அவர் நிலைமை மிக மோசமாய் ஆகக் கூடும். இப்போதைக்கு தன் உளவியல் சிக்கல்களுக்கு ஒரு தற்காலிக வடிகாலாய் என்னை ஒரு குத்தும் பையை போல் பயன்படுத்தி வருகிறார். அதன் பெயர் நட்பு அல்ல.
நான் போனை துண்டித்ததும் நண்பர் என் மனைவியை அழைத்து என்னை கொல்லப் போவதாய் மீண்டும் மிரட்டல் விடுத்தார். நான் அவர் எண்ணை என் போனில் பிளாக் பண்ணி விட்டேன். அதனால் அவர் இது முடிந்த அடுத்த நாள் மீண்டும் என் மனைவியை அழைத்து “நான் அபிலாஷிடம் வேண்டுமென்றால் மன்னிப்பு கேட்க தயார். அவனிடம் என் தலையை வெட்டி கொடுக்க போகிறேன். ஏனென்றால் நான் ஒரு சத்திரியன்” என்று கூறியிருக்கிறார். இந்த கடைசி வசனம் கேட்டுத் தான் எனக்கு தலை சுற்றி விட்டது.
இரண்டு விசயங்கள். ஒன்று, பொதுவாய் அறிவுஜீவிகள், இலக்கியம் படிப்பவர்கள் தாம் ஒருவரை காயப்படுத்துவதற்காய் அவரது சாதி அல்லது ஊனத்தை சுட்டி திட்டுகிறார்கள். பெண்ணென்றால் அவளது பாலியல் ஒழுக்கத்தை கேள்வி கேட்பார்கள். ஒரு பக்கம் மிகப்பெரிய தத்துவங்களையும் இலக்கிய விழுமியங்களையும் பற்றி சிலாகித்து பேசியபடியே இன்னொரு பக்கம் இவ்வளவு கீழ்த்தரமாய் மனிதர்களை நடத்த இவர்களால் எப்படி முடிகிறது? இரண்டாவது, ஒரு சைக்கோவை சினிமாவிலோ நாவலிலோ சந்திப்பது போல் அல்ல நேரில் எதிர்கொள்வது. இந்த நண்பருக்கும் சைக்கோ கொலைகாரனாய் மாறும் “கற்றது தமிழ்” பிரபாகரனுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஆனால் “கற்றது தமிழை” நாம் பிரபாகரனுக்காய் கண்ணீர் வடித்தபடி ரசித்து பார்க்கிறோம். ஆனால் நேரில் இது போன்றவர்களை பார்த்தால் தெறித்து ஓட வேண்டியது தான். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த நண்பர் இயக்குநர் ராமை ஒரு டீக்கடையில் பார்த்திருக்கிறார். உடனே அருகில் போய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சொன்னாராம் “நான் உங்களிடம் தஸ்தாவஸ்கி பற்றி விவாதிக்க விரும்புகிறேன். என்று உங்களைப் பார்க்க வரலாம்?”. ராம் அவரை ஊக்குவிக்காமல் தவிர்த்து விட்டாராம். அதை என்னிடம் குறிப்பிட்ட நண்பர் தான் ராம் மீது கொலைவெறியில் இருப்பதாய் சொன்னார். அவரை அடுத்து எங்காவது பார்த்தால் விடப் போவதில்லை என்றார். ஏன் என்று கேட்டேன். அவர் சொன்னார் “எனக்கு ராம் மிகவும் பிடித்த இயக்குநர். தமிழில் நான் பார்த்த சிறந்த படம் “கற்றது தமிழ்”. எனக்கு ராம் மீது அளப்பரிய பிரியம் உள்ளது. இதை அவரிடம் சொல்ல வேண்டும். நிறைய பேச வேண்டும்”. இந்த அளப்பரிய அன்புடன் தான் எல்லாம் ஆரம்பிக்கும்!

1 comment:

‘தளிர்’ சுரேஷ் said...

மனப்பிறழ்ச்சி அடைந்து பிதற்றுகின்ற நண்பருடன் எப்படித்தான் இத்தனை நாள் தங்கினீர்களோ? உடற்குறையை கூறி திட்டுபவர்களை மன்னிக்க முடியாது!