Sunday, November 29, 2015

கூவி விற்பது

இரண்டு நாட்களுக்கு முன்னால் வேலை கேட்டு ஒரு கால்சண்டுக்க போயிருந்தேன். வரவேற்பறையில் ஒரு பெரிய டிவியில் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருக்க காத்திருக்கும் பலர் வரிசையான இருக்கைகளில் சாய்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது ஒரு எலைட்டான கல்லூரி வளாகம் போலவே இருந்தது. நிறைய பேரைப் பார்க்க வேலை செய்ய வந்ததாய் அல்ல வண்ண ஆடைகளுடன் ஹாயாய் ஷாப்பிங் பையுடன் திரிவது போன்றே பட்டது.

 அதை ஒரு பிரம்மாண்ட பாப்கார்ன் எந்திரம் எனலாம். தொடர்ந்து தகுதியான ஆட்கள் சல்லிசான சம்பளத்துக்கு தேவைப்படுகிறார்கள். அவர்களை எப்படியாவது ஈர்ப்பது தான் நோக்கம். ஆட்கள் வந்தும் போயும் இருப்பதால் ஊழியர்களை தேர்ந்தெடுத்து தகுதியானவர்களாய் பயிற்சி கொடுத்து வேலையில் பொருந்த வைப்பது வரை அனைத்தையும் மனிதவளத்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு அதிக புள்ளிகள் கிடைக்கும். நிறுவனம் விதிக்கும் டார்கெட்டை எட்ட முடியும். என் பக்கத்தில் பாவமாய் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் non-voice வேலை தேடி வந்திருந்தார். இதற்கு முன் ஒரு நிறுவனத்தில் தகவலை உள்ளிடும் வேலை. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார். ஆங்கிலத்தில் எதாவது கேட்டு விடுவார்களோ என பயந்து கொண்டிருந்தார். ”கொஞ்சம் டென்ஸனா இருக்குங்க” என சொன்னார். நான் அவரிடம் சொன்னேன் “நமக்கு தகுதியும் திறமையும் இருக்கிறதோ இல்லையோ அதிர்ஷ்டம் இருந்தால் தான் வேலை கிடைக்கும்”. அவர் உடனே நெர்வஸாய் புன்னகைத்து விட்டு “அதென்னமோ சரியா சொன்னீங்க” என்றார். சின்ன வயதில் படிப்பை நிறுத்தி விட்டு பி.பி.ஓவில் வேலைக்கு போக வேண்டியிருந்ததென்றால் அவர் எப்படியான குடும்ப நெருக்கடிகளை சந்தித்திருப்பார் என நினைத்துப் பார்த்தேன். இனி அவர் வாழ்க்கை முழுக்க பல்வேறு சம்மந்தமில்லாத வேலைகளை செய்ய வேண்டி வரும். கால்செண்டரில் மட்டும் தான் பட்டப்படிப்பு இல்லாமல் வேலை கொடுப்பார்கள்.
நான் அங்கு போனதுமே என் முன்னாள் மாணவி ஒருவரை பார்த்தேன். அவள் தான் என்னை உள்ளே மனிதவளத்துறை வரை அழைத்துப் போய் “நீங்க சந்திக்க வேண்டிய ஆள் புஷ்டியாய் சிவப்பாய் இருப்பார்” என சொல்லி விட்டு சென்றிருந்தாள். அவள் தோழிகளும் என்னிடம் சிநேகமாய் புன்னகைத்து மரியாதை காட்டினார்கள். கொஞ்ச நேரத்தில் எனக்கு அங்கு பார்க்கும் ஒவ்வொருவரும் கல்லூரி மாணவர்கள் போன்றே தோன்றினார்கள். ஒரு புஷ்டியான ஆள் வேகமாய் நடக்க முயன்று மெதுவாய் உள்ளே போவதைப் பார்த்து பின் தொடர்ந்து சென்றேன். அங்கே அவரைப் பார்த்து என்னன்னமோ கோருவதற்காய் ஊழியர்கள் வந்தும் போயும் இருந்தார்கள். இரண்டாம் வருட இளங்கலை மாணவர்கள் என்பதால் மனிதவளத்துறை ஆளையும் சார் சார் என அழைத்து ஏதோ வாத்தியார் போன்று நடத்தினார்கள். என்னை பார்த்து விட்டு ஐந்து நிமிடம் இருங்கள் என்றார். ஐந்து நிமிடம் ஒன்றரை மணிநேரம் ஆனது. ஒருவழியாய் என்னிடம் வந்தவர் என் சி.வி பார்த்து விட்டு “உங்களுக்கு வேலை இல்லை. Freshers மட்டும் தான் எடுக்கிறோம்” என்றார். வர வர நான் எங்கு போனாலும் இதையே தான் சொல்கிறார்கள் என்பதால் ஏதோ ஒரு வேலை கொடுங்கள் என்றேன். சம்பளம் ரொம்ப குறைவாய் தான் வரும் என்றார். பரவாயில்லை ஏதோ முடிந்ததை கொடுங்கள் என்றேன். என்னை எப்படி துரத்துவது என சற்று நேரம் யோசித்தவர் ஒரு தொலைபேசி நேர்முகத் தேர்வு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் மதிப்பெண் பார்த்து ஏதாவது ஒரு அமெரிக்க கால்செண்டருக்கு தள்ளி விடுகிறேன் என்றார்.
 சரி என்று அவர் எழுதிய குறிப்பை எடுத்துக் கொண்டு வரவேற்பறைக்கு சென்று அங்குள்ளவரிடம் கொடுத்தேன். தேர்வு ஆரம்பித்தது. போனை எடுத்து காதில் வைத்தேன். எதிரில் ஏதோ ஒரு பெண் ஆங்கிலத்தில் பேசினார். அதிகமாய் கேள்வி கேட்காமல் என்னை பேச விட்டார். நானும் அவரை யோசிக்க விடாமல் எப்.எம் தொகுப்பாளர் போல் பேசிக் கொண்டே சென்றேன். ஏனோ இவர்களுக்கு புத்தகங்கள் மேல் கொஞ்சம் மரியாதை இருக்கிறது. நான் எழுத்தாளன் என்றதும் எழுதுவது சம்மந்தமாய் கேள்விகள் கேட்டார். என்னை சுணக்கமின்றி நிறைய பேச வைப்பது தான் அவர் நோக்கம். நானும் தமிழ் எழுத்தாளர்கள் மாதிரி பயங்கர பில்ட் அப்கள் செய்தேன். உதாரணமாய் மூன்று வருடங்கள் தினமும் நான்கு மணிநேரம் எழுதித் தான் என் நாவலை முடித்தேன் என்று போது அவர் அப்பாடா என்றார். அப்படியென்றால் உங்கள் நாவல் நாலாயிரம் பக்கமா என்றெல்லாம் கேட்கவில்லை. உடனே நம்பி விட்டார். இந்த தேர்வை கிளியர் செய்ததால் என்னை மனிதவளத்துறையின் இன்னொரு பகுதிக்கு அழைத்துப் போனார்கள்.
அங்கு ஒரு இளைஞர் என்னை அடுத்த நிலை தேர்வுக்கு தயார் செய்தார். நேர்முகத்தேர்வில் எப்படியான கேள்விகள் வரும், அதற்கு நான் எப்படியெல்லாம் பதிலளிக்கலாம் என டிப்ஸ் கொடுத்தார். அது நம்மூர் ஏர்டெல் போல ஒரு தொலைதொடர்பு சேவை நிறுவனம். போன் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தீர்வு சொல்லி விட்டு அவர்களிடம் நிறுவனத்தின் ஏதாவது ஒரு புது சேவையை விற்க வேண்டும். எனக்கு கடையில் காய்கறி பேரம் பேசவே வராது. இதில் கூவி விற்பதென்றால் வேடிக்கை தான் என அப்போதே நினைத்துக் கொண்டேன். ஆனால் வடிவேலு ஒரு படத்தில் சொன்னது போல தெரியாத தொழிலை செஞ்சா தானே முன்னேற முடியும்.
நான் இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வுக்காய் காத்திருக்கும் போது தான் அங்குள்ள மனிதவளத்துறை ஊழியர்கள் வெளியே பார்க்க பந்தாவாய் ஆடையணிந்து அரட்டையடித்துக் கொண்டிருப்பதாய் தோன்றினாலும் உள்ளுக்குள் எப்படியான அழுத்தத்தில் இருக்கிறார்கள் என புரிந்து கொண்டேன். பெரும்பாலானவர்கள் காலை வந்தால் இரவு வரை அங்கேயே இருந்து யாராவது ஒருவரை வேலைக்கு எடுத்து தயார் செய்வதிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். ஒரு பெண் தன் மின்னஞ்சலை திறந்து பார்த்து தான் அனுப்பி வைத்த இருபது ஆட்களும் தேர்வாகி விட்டார்கள் என கைதட்டி துள்ளுகிறாள். இன்னொரு பெண் யாரோ ஒரு வேலை தேடும் ஆள் தொலைபேசியில் நிர்வாகிகளுடன் நேர்முகத்தேர்வில் பேசுவது ஸ்பீக்கரில் போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாள். அது அவர்களின் வேலைகளில் ஒன்று. இந்த ஒட்டுக் கேட்பதிலும் முழு கவனம் இல்லை. ஒரு பக்கம் இந்த உரையாடல் ஓட இன்னொரு பக்கம் அவர்கள் போனில் பேசுவது, பக்கத்தில் இருப்பவரிடம் அரட்டையடிப்பது, நகப்பாலிஷ் போடுவது என மல்டிடாஸ்கிங் செய்கிறார். கேரளாவை சேர்ந்த ஒரு ஆண் தான் ஏன் கால்செண்டரில் சேர விரும்புகிறேன் என திணறி திணறி பொய் சொல்லிக் கொண்டிருந்தார். அவரை பேட்டி எடுத்தவர் “கேரளாவில் உங்க ஊர் எங்கே?” என்றார். “கொச்சின்”. உடனே அவர் கொச்சினில் இப்போதும் கப்பல் எல்லாம் போகிறதா, துறைமுகம் உங்கள் வீட்டில் இருந்து பக்கமா என்றார். இவரும் உற்சாகமாகி “ஆமாங்க சும்மா அரைமணிநேரத்தில போயிடலாம்” என பேசத் துவங்கினார். இப்படி தான் பேசுவதை ஒரு மனிதவளத்துறை ஆள் ஸ்பீக்கரில் போட்டு கேட்கிறார் என தெரியாமலே ஒருவர் ரொம்ப சீரியஸாய் பேசிக் கொண்டிருக்கிறார் என நினைக்க சற்று பரிதாபம் ஏற்பட்டது. நான் பேசியதையும் யாராவது இது போல் அக்கறையில்லாமல் ஒட்டுக் கேட்டிருப்பார்கள் என நினைக்க பரிதாபம் அதிகமானது.
ஒரு ஒல்லியான பெண் ஊழியர் வந்தார். அவரது தோழிகள் “வேலை செஞ்சு செஞ்சு நோய் வந்த மாதிரி ஆயிட்டியே” என்றார்கள். உடனே அவள் “இங்க நீ ஒருஷம் இருந்து பாரு தெரியும்” என்றார். ஹன்சிகா மோட்டுவானி போன்ற ஒரு பெண் “நான் இங்க வந்ததில இருந்து குண்டாயிட்டே போறேன். இதுக்கு பதிலா வீட்ல இருந்து வொர்க் அவுட் பண்ணி டிரிம்மாயிருக்கலாம்” என்றார். இப்படியெல்லாம் லூட்டி அடித்தாலும் அவர்களிடம் ஒரு குழந்தைமை இருக்கிறது. மாலையில் சாலையில் திரிந்து பானிபூரி தின்காமல், வீட்டில் இருந்து டிவி பார்க்காமல் விடிந்தது முதல் இரவு கவியும் வரை அங்கேயே கிடந்து யாரோ தீர்மானிக்கும் டார்கெட்டை அடைவதற்காய் முந்தியடித்து பாடுபடுகிறார்கள்.
நான் ஒரு மனிதவளத்துறை ஊழியரின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த கோப்பில் இருந்த சி.விக்களை லேசாய் புரட்டிப் பார்த்தேன். கணிசமான பேர் மென்பொறியாளர்கள். 60% மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். மென்பொறியியலில் அது நல்ல மதிப்பெண்ணா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் லட்சக்கணக்கில் செலவழித்து படித்து விட்டு ஏன் பத்து பதினைந்தாயிரத்து இங்கு வந்து போராடுகிறார்கள் என புரியவில்லை. ஒருவர் மெரைன் எஞ்சினியரிங் படித்து ஒரு வருடம் வணிக கப்பலில் பணி புரிந்து விட்டு வேலையை விட்டு விட்டார். இப்போது கால்செண்டரில் விண்ணப்பித்திருக்கிறார். இப்போது இது போல ஒரு போக்கு ஆரம்பித்திருக்கிறது. எங்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு நண்பர் மென்பொருள் துறையில் வேலை செய்தவர் ராஜினாமா செய்து விட்டு ஆங்கிலத்தில் எம்.ஏ சேர்ந்து படிக்கிறார். இன்றைய இளைஞர்களால் கடுமையான அழுத்தம் கொண்ட அலுப்பான வேலைகளில் நீண்ட காலம் இருக்க முடிவதில்லை. எல்லாவற்றையும் உதறி விட்டு வேறெங்காவது போய் விடத் துடிக்கிறார்கள்.
பயங்கரமாய் மேக் அப் போட்டு டைட்டாய் ஜீன்ஸ் அணிந்து ஒரு இளம்பெண் வந்தார். அவர் வேலைக்கு சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன. பயிற்சிக்கு பிறகும் அவர் தேறவில்லை என்று அவரை தேர்ந்தெடுத்த மனிதவளத்துறை ஊழியரிடமே திரும்ப அனுப்பி விட்டார்கள். சிவாஜி படத்தில் வரும் “ஆபீஸ் ரூம்” போல இங்கு ஒரு அறை உள்ளது. யாருக்காவது கடுமையான எதிர்வினையை தெரிவிப்பதென்றால் அங்கே வரச் சொல்வார்கள். அப்பெண்ணும் அங்கே அழைக்கப்பட்டாள். திரும்ப வரும் போது உதட்டை சுழித்து தோளை தொங்கப் போட்டுக் கொண்டு அழகான சோகத்துடன் சொன்னார் “என்னை வேலையில இருந்து ஒண்ணும் அனுப்பல. இன்னொரு கம்பெனியோட கால்செண்டருக்கு மாத்த போறாங்க”.
என்னுடன் நேர்முகத்தேர்வுக்கு இன்னொரு பெண்ணும் இருந்தார். அவரை போனில் யாரிடமோ பேசச் செய்தார்கள். ஒரு மணிநேரம் போல் பேசிக் கொண்டே இருந்தார். எனக்கு அதைப் பார்த்தது திகிலானது. இவ்வளவு நேரம் என்னால் பதில் எல்லாம் சொல்ல முடியாது. மேலும் எனக்கு பொதுவாய் போனில் பேசவே பிடிக்காது. போனை காதில் வைத்தாலே களைப்பாகி விடுவேன். நண்பர்களை நேரில் போய் பார்த்து பேசுவது தான் என் வழக்கம். எனக்கு போய் இப்படி ஒரு சோதனை வைக்கிறார்களே என நினைத்தேன். விதியில் இருந்து யார் தப்ப முடியும்?
எனக்கு பொறுப்பான மனிதவளத்துறை தம்பியிடம் விசாரித்தேன் “இவ்வளவு நேரம் பேசறாங்கன்னா பயங்கரமான கேள்வியெல்லாம் கேட்பாங்களோ?” அவர் சொன்னார் “அந்த பெண் பேசினதில அவருக்கு திருப்தி இல்ல போல. அதனால தான் மேலும் மேலும் பேச வைத்து எப்படியாவது தேறுமா என பார்க்கிறார்” என்றார். போச்சுடா என நினைத்தேன்.
அந்த பெண் பேசி முடித்ததும் கைகளை உதறிக் கொண்டே வந்தார். என்னங்க கேட்டார் என்றேன். அவர் சொன்னார் “என்னன்னமோ கேட்டார். பயங்கரமான குறுக்குக் கேள்விகள் கேட்டு திணறடித்து விட்டார்”. அவரைப் பார்க்க உண்மையில் ஏதோ பந்தியில் இடித்து மோதி இடம் கிடைக்காமல் திரும்ப வந்தவர் போல் பாவமாய் இருந்தார். அவரை “ஆபீஸ் ரூமுக்கு” போக சொன்னார்கள்.
அடுத்து நானும் என் முறை வந்து விட்டதே என போனை பிடித்துக் கொண்டு அமர்ந்தேன். எதிர்முனையில் என்னை நேர்முகம் கண்டவர் ”உங்களுக்கு தாமதமாயிடுச்சா. உடனே வீட்டுக்கு போகணுமா?” என்றார். அப்படியெல்லாம் இல்லை, வீட்டில் என்னை எதிர்பார்த்து ஒரு நாய் மட்டும் இருக்கிறது. ஒன்பது மணிக்கு மேல் நான் வரவில்லை என்றால் வாசலில் முனகிக் கொண்டே படுத்திருக்கும் என்றேன். என்னைப் பற்றி சுருக்கமாய் கூறக் கேட்டார். என் படிப்பு, வாழ்க்கை பற்றியெல்லாம் சொன்னேன். அவர் எதிர்கேள்வி கேட்காததால் குஷியாகி விட்டேன். எனக்கு வகுப்பில் பேசிப் பேசி அப்படி ஒரு வழக்கம். குறுக்கிடாமல் என்னை பேச விட்டால் உற்சாகமாய் சரளமாய் ஒரு மணிநேரம் பேசுவேன். நடுவே உச்சுக் கொட்டினால் கூட எனக்கு சரிப்படாது. இவர் மூச்சு விடுவது கூட கேட்கவில்லை. என் பேச்சினிடையே அடிக்கடி சிரித்தார். நான் சீரியஸாய் பேசினால் எதிரில் இருப்பவர் திகிலாகுவதைத் தான் பார்த்திருக்கிறேன். ஒருவர் முதன்முறை இப்படி சிரிக்கிறாரே என யோசித்தேன். சரி அவரிடம் நாம் இன்று மாட்டியிருக்கிறோம். என்னைப் பற்றின என் கற்பனைகளைத் தான் அதிகம் சொன்னேன். அவருக்கு பிடித்து விட்டது. என் சமீபத்தைய புத்தகம் பற்றி சொல்லக் கேட்டார். தலைப்பை சொன்னேன். “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”. உடனே “அதை எனக்கு விற்றுக் காட்டுங்கள்” என்றார். இப்படி மனுஷ்யபுத்திரன் கூட என்னிடம் சொன்னதில்லை. என்னவோ தெரியவில்லை என் புத்தகத்தை விற்க வேண்டும் என்றதும் துடிப்பாகி தலைப்பு தொடங்கி புத்தகத்தின் அமைப்பு, கதை, களம், கருத்து, சுவாரஸ்யம் என உச்சஸ்தாயில் பேசிக் கொண்டே போனேன். புத்தகத்தை வாங்கும் முதல் நூறு நூறு பேருக்கு 30% விலைக்கு தரப் போவதாய் கூடச் சொன்னேன். இன்னும் என்னன்னமோ சொன்னேன். அவர் சொன்னர் “நீங்கள் எழுதின புத்தகத்தை விற்க சொன்னதால் ரொம்ப உத்வேகமாய் பேசினீர்கள். சரி இப்போது ஒரு பேனாவை விற்றுக் காட்டுங்கள்.” அதை ஏகப்பற்ற் கற்பனை கதைகள் சேர்த்து விற்றுக் காட்டினேன். அவர் “நீங்க நன்றாக பேசினீங்க. இந்த தேர்வில் பாஸாகிட்டீங்க” என்றார்.
வீட்டுக்கு வந்த பின் இப்படி நாம் ஏன் புத்தகங்களை உண்மையில் கூவி விற்பதில்லை என யோசித்தேன். வாங்க மாட்டார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் உலக அளவில் கூட பொதுவாக கலைப்படைப்புகள் மற்றும் வணிகரீதியான பண்பாட்டு வடிவங்களை ஒரு போன் அல்லது சட்டையை போல் நேரடியாய் விளம்பரப்படுத்துவதில்லை. ஒரு புத்தகம் அல்லது சினிமா பற்றி மறைமுகமாய் ஒரு நல்ல எதிர்வினையை உருவாக்க மட்டும் முயல்கிறார்கள். நட்சத்திர அந்தஸ்து, பரபரப்பு எல்லாம் விற்பனைக்கு உதவினாலும் நேரடியாய் கூவி விற்கக் கூடாது எனும் ஒரு விதி உள்ளது. படம் வெளியாகும் முன் இயக்குநர், நடிக, நடிகைகள் சேர்ந்து பங்கேற்கும் புரொமோஷன் நிகழ்ச்சிகளை டிவியில் பார்க்கிறோம். யாரும் இந்த வருடத்தை மிகச்சிறந்த படம், பார்க்க தவறினால் மிகப்பெரிய இழப்பென்று சொல்வதில்லை. கூச்சத்துடன் சற்றே குற்றவுணர்வுடன் தான் சுயவிளம்பரம் செய்கிறார்கள். படத்துக்கு பதில் நட்சத்திரங்கள் தங்களைப் பற்றியோ அல்லது அவர்களைப் பற்றி பிறரோ விலாவரியாக பேசுகிறார்கள். படமோ புத்தகமோ அதை ஏற்பதில் மக்களுக்கு ஒரு சுதந்திரம் உள்ளது, அதில் குறுக்கிட முடியாது எனும் ஒரு பொது நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் விற்கப்படும் எதுவும் ஒரு பண்டம் தானே?
இன்னொரு பிரச்சனை இருக்கிறது. ஆயிரம் ரூபாய்க்கு மூணு சட்டை என சந்தைப்படுத்தினால் அதை வாங்க தயங்க மாட்டார்கள். ஆனால் ஒரு புத்தகத்தை சிலாகித்து சொல்லி வாங்க சொன்னால் நம் மக்கள் பலவிதமாய் யோசிப்பார்கள் “நீங்க பேசினது கேட்டதே புக்கை படிச்ச மாதிரி பீலிங் கொடுக்குதுங்க.” என்பார்கள். இல்லையென்றால் “நீங்க படிச்சிட்டீங்கன்னா எனக்கு கொடுங்க. ரெண்டே நாளில திரும்ப கொடுத்திடறேன்”. நான் கூட ஒரு சட்டை அல்லது கைக்குட்டையை உடனே நம்பி வாங்கி விடுவேன். ஆனால் புத்தகத்தை யாராவது புரொமோட் பண்ண முயன்றால் ஏமாற்றுகிறார்களோ என யோசிக்க துவங்கி விடுவேன்.
 ஒருவேளை நம் கருத்துநிலை, நம்பிக்கை, ஈகோ, கற்பனை இதெல்லாம் சம்மந்தப்பட்டிருப்பதால் இருக்கலாம். இன்னொருவர் சொல்வதை கேட்பதும் ஏற்பதும் மனிதனுக்கு ரொம்ப கடினமான காரியம். ஒரு கோன் ஐஸோ பாப்கார்னோ ஒரு புத்தகம் அல்லது படம் போல் நம் ஈகோவை அசைத்துப் பார்ப்பதோ நம் கருத்தில் இருந்து மாறுபட்டு யோசிக்க கேட்பதோ இல்லை. அதனால் தானோ ஏனோ ”ஏமாற்றம் அடைவது” கலையில் தான் அதிகமாய் இருக்கிறது.

1 comment:

திருப்பதி மஹேஷ் said...

munthaiya pathivai padikkumpothe keka ninaithen.

ithil innum thelivaaka eluthi irukkurirkal.


engineering padichavan nilamai vidunga.

phd scholar aana ungalukkee entha oru thaniyaar kalluriyilum velai kidaikkaliyaa sir.
thiramaiyaana ungalukkee kidaikaatti chennaiyil velai santhai nilavaram paarthaal payamaakathan irukku.