Friday, November 27, 2015

சூரிய வணக்கமும் புரூஸ் லீயும்
இன்று ஒளிபரப்பான சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் நான் பேசினது நன்றாய் இருந்தது பல நண்பர்கள் கூறினார்கள். எனக்குத் தான் பேசி முடித்த பின் அவ்வளவாய் திருப்தி ஏற்படவில்லை. ஏனென்றால் படப்பிடிப்புக்கு முன் அது புருஸ் லீ பற்றின இரண்டு நிமிட பைட்டாக தான் இருக்கும் என நினைத்து போயிருந்தேன். என்னுடைய “புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்” நூலைக் கூட முழுக்க புரட்டிப் பார்த்து விட்டு செல்லவில்லை. அங்கு போன பிறகு தான் அது சூரிய வணக்கத்துக்கான முழுபேட்டி என உணர்ந்தேன். சரி நினைவில் இருப்பதை வைத்து பேசலாம் என எப்படியோ ஒப்பேற்றி விட்டேன். ஆனால் சில நேரம் அரைகுறை தயாரிப்புடன் பேசுவது நன்றாய் அமைந்து விடுகிறது.

 இன்னொரு விசயம். இந்நிகழ்ச்சியில் என்னை பேச அழைத்ததற்கு நான் எழுதிய ”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்” தான் பிரதான காரணம். அதை நிகழ்ச்சி முழுக்க பின்னணியில் காட்டினார்கள். நான் எழுதிய நூல்களில் நான் அதிகம் பொருட்படுத்தாது இந்நூல் தான். நான் அதற்கு ஒரு கூட்டம் நடத்தவில்லை. புரொமோட் செய்ய முயலவில்லை. ஆசைக்காகவும் தனிப்பட்ட பொழுதுபோக்குக்காகவும் தான் அதை எழுதினேன். இந்நூலை எழுதும் தூண்டுதல் மிக எதேச்சையாக கிடைத்தது. அதற்கு முன் நான் புரூஸ் லீயை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. ஒருமுறை எஸ்.ராவின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் அறையில் இருந்த பட சி.டிக்களில் புரூஸ் லியின் படங்களும் இருந்தது கண்டு வியப்புற்றேன். எஸ்.ராவே புரூஸ் லீயின் படங்களை முக்கியம் என நினைத்து தன் நூலகத்தில் வைத்திருந்தால் அவர் உண்மையில் எப்படியான கலைஞன் எனும் கேள்வி எழுந்தது. நான் எஸ்.ராவிடம் இது பற்றி கேட்கவில்லை. வீட்டுக்கு வந்த பின் அது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பிளிப்கார்ட்டில் புரூஸ் லீ பற்றிய சில புத்தகங்களை வாங்கி வாசித்தேன். அப்போது தான் எனக்கு அவரது பல புது பரிமாணங்கள் தெரிய வந்தன. அவரது சண்டைக்கலையின் தத்துவ விளக்கங்கள், அவரது வாசிப்பு, ஜென் மீதான அக்கறை, சண்டைக்கலையை அவர் வாழ்க்கைக்கலையாக பார்த்தது, அவரது வாழ்க்கையின் பல்வேறு ஏற்ற இறக்கங்கள், போராட்டங்கள், இறுதியான வீழ்ச்சி என பல விசயங்கள் என்னை கவர்ந்தன.
 நம்மூரில் இலக்கிய எழுத்தாளர்கள் சினிமா ஐகான்கள் பற்றி புத்தகம் எழுதும் மரபு இல்லை. அதனால் புரூஸ் லீ பற்றி ஒரு நூல் எழுதலாம் என்று தோன்றினதும் மிகுந்த தயக்கத்துடன் மனுஷ்யபுத்திரனுடன் கூறினேன். அவர் உடனே என்னை மிகவும் ஊக்குவித்தார். அதன் பிறகு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மளமளவென வேலையில் இறங்கினேன். தற்காப்பு கலைகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்பதால் பொதுவாக இவ்வகுப்புகள் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள என் வீட்டருகே சிவபாலன் எனும் மாஸ்டர் நடத்தும் வகுப்பில் சேர்ந்தேன்.
மாஸ்டர் சிவபாலன்

இஷின்ரியு கராத்தே அவரது ஸ்டைல். அவர் தோன்றினால் மட்டுமே கற்றுத் தருவார். பெரும்பாலான நேரம் நான் பிற மாணவர்கள் பயில்வதை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் எப்போதாவது என்னிடம் கவனம் காட்டி கற்றுத் தரும் போது அவர் எவ்வளவு சிறந்த ஆசிரியர் என உணர்ந்து கொண்டேன். அந்த வகுப்புகளுக்கு சென்றது, கவனித்தது எனக்கு புத்துணர்வூட்டும் அனுபவம். புத்தகத்துக்கும் மிகவும் பயன்பட்டது. அந்த ஆறு மாதங்கள் நான் முழுக்க முழுக்க புருஸ் லீ மற்றும் குங்பூ பற்றி படிப்பது, படங்கள் பார்ப்பது என செலவழித்தேன். இலக்கியம், கோட்பாடு, சமூகம், அரசியல், தத்துவம் ஆகியவற்றில் இருந்து விலகி இன்னொரு ஏரியாவில் இப்படி பயணிப்பது உற்சாகமாய் இருந்தது.
 பிரசுரத்தின் போது நிறைய படங்கள் சேர்க்க வேண்டி இருந்ததால் மிகுந்த கவனத்துடன் பிழை திருத்தவும் பக்க அமைப்பை சரி பார்க்கவும் வேண்டி இருந்தது. என்னை விட பக்கங்களை அமைத்த செல்வி அபாரமாய் வேலை பார்த்தார். நான் எடுத்துக் கொடுத்த பக்கங்கள் போதுமான ரெசலூஷனில் இல்லாததால் பதிப்பில் சரியாய் வராது, அதனால் எடுத்து விடலாமா என முதலில் கேட்டார். நான் எப்படியாவது படங்களை சேர்த்து விடுங்கள் என கேட்டுக் கொண்டேன். பிறகு நிறைய முயற்சி செய்து படங்கள் நன்றாய் வரும்படி செய்தார். ஒரு சின்ன புத்தகம் வெளி வருவதன் பின்னால் எவ்வளவு வேலை இருக்கிறது என குறிப்பிடத் தான் இவ்வளவும் சொன்னேன்.
 நான் ஒரு ஜாலி முயற்சியாய் செய்தது என்றாலும் என் புத்தகங்களில் பரவலாய் வாசிக்கப்பது ”புரூஸ் லீ சண்டையிடாத சண்டைவீரன்” தான். ஏனென்றால் பிரபலங்கள் பற்றி சீரியஸாய் எழுதப்படும் நூல்களுக்கு என்று ஒரு தனி தேவை உள்ளது. அதே போல தீவிரமான இலக்கியவாதிகள் பற்றி எளிதாய் சுவாரஸ்மாய் எழுதப்படும் நூல்களுக்கும் ஒரு பெரிய தேவை உள்ளது. உயிர்மையில் எஸ்.ரா எழுதி வரும் “செகாவ் வாழ்கிறார்” புத்தகமாய் வெளிவரும் போது மிகப்பெரும் வரவேற்பு பெறும். அவரது சிறந்த நூல்களில் ஒன்றாய் அது நிச்சயம் இருக்கும். இந்த இரண்டு வகைமைகளிலும் நாம் எழுதுவதற்கு இன்னும் நிறைய நூல்கள் காத்திருக்கின்றன.

No comments: