Tuesday, November 24, 2015

வாசக சாலை கூட்டத்தில் கோபி கிருஷ்ணன் பற்றின கலந்துரையாடல்போன ஞாயிறு பனுவலில் வாசக சாலை நடத்திய கோபி கிருஷ்ணன் படைப்புலகம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நான் எதிர்பாராத வகையில் பேச வேண்டியதாயிற்று. நான் பொதுவாக எந்த நிகழ்ச்சியில் பார்வையாளனாய் கலந்து கொள்வதென்றாலும் அதில் பேசப் படக் கூடிய எழுத்தாளனின் படைப்புகளை முந்தின நாள் ஒருமுறை வாசித்து விடுவேன்; ஏற்கனவே படித்திருந்தால் ஒரு மீள்வாசிப்பு செய்வேன். ஆகவே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தீர்மானித்ததும் கோபி கிருஷ்ணன் படைப்புகளை முந்தின நாளில் இருந்தே புரட்டிக் கொண்டிருந்தேன். மனதில் பட்டதை குறிப்பெடுத்தேன். ஒரு கட்டுரையாக எழுதலாம் என எண்ணிக் கொண்டிருந்த போது மூன்றரை மணி அளவில் நண்பர் அருண் அழைத்து அன்றைய கூட்டத்தில் பேச வேண்டிய ஒருவர் வர முடியாத நிலையில் அவருக்கு பதில் நான் பேச முடியுமா என்றார். கூட்டம் ஐந்தரைக்கு. ஏற்கனவே தயாராக இருந்ததால் சரி என்றேன். 


கோபி கிருஷ்ணனின் கதை உலகம் எப்படியானது, அவரது தனிப்பட்ட குணாதசியம் என்ன என்பது பற்றியெல்லாம் நிகழ்ச்சியில் ச.தமிழ்ச்செல்வன் அற்புதமாக உரையாற்றினார். எளிமையும் அடர்த்தியும் நேர்மையும் கொண்ட அந்த பேச்சை கேட்க நேர்ந்தது என் அதிர்ஷ்டம் தான். அதன் பின் அழகியசிங்கர் கோபி கிருஷ்ணனுடனான தனது நட்பு, தனிப்பட்ட அனுபவங்கள் பற்றி மிகவும் இயல்பாக பேசினார். கோபி கிருஷ்ணன் எப்படி வேலையிடத்தில் தன் நண்பருக்காய் பரிந்து பேசச் சென்று வேலையை இழந்தார், பெண்களின் பிரச்சனைகள் பற்றி ஒருவர் கூட்டத்தில் பேசுவது கேட்டு தாரைதாரையாய் கண்ணீர் வடித்தார் என அவர் பற்றிய ஒரு புது பக்கத்தை திறந்து காட்டினார். ஒருநாள் அவர் அழகியசிங்கரை போனில் அழைத்து உடனடியாய் சிறிது பணம் வேண்டும் என கேட்கிறார். வந்து வாங்கிக் கொள்ளுமாறு அழகிய சிங்கர் சொல்ல கோபி கிருஷ்ணன் தான் வரக் கூடிய நிலையில் இல்லை என்கிறார். அழகியசிங்கர் தான் வார இறுதியில் அவர் வீட்டுக்கு வந்து பணமளிப்பதாய் உறுதி அளிக்கிறார். ஆனால் சில நாட்களில் கோபி கிருஷ்ணன் இறந்து விட்டதாய் தகவல் கிடைக்கிறது. அவர் உண்மையில் தான் மரண தறுவாயில் உள்ள விசயத்தை நண்பர்களிடம் தெரிவிக்கவில்லை. ஒரு நண்பருக்கு திரும்ப திரும்ப தன்னை வந்து பார்க்கும் படி அந்த வாரம் பல கடிதங்கள் எழுதுகிறார். ஆனால் நண்பர்கள் வரும் முன் அவர் உயிர் பிரிந்து விடுகிறது. நம் நண்பர்கள் நமக்கு மிக அருகில் இருப்பதாய் நினைத்திருக்கும் போது அவர்கள் சட்டென வெகுதொலைவு சென்று விடுகிறார்கள். மிக அருகில் இருக்கும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்ட முடியாதபடி சந்தர்ப்பம் சில நேரம் அமைந்து விடுகிறது.
வாசகர் பார்வை எனும் பிரிவில் பேசின கமலி பன்னீர்செல்வம் கோபி கிருஷ்ணனின் கதைகள் அனைத்தையும் சிரத்தையாக படித்து வந்து நேர்த்தியாக பேசினார். பொதுவாக கூட்டங்கள் என்றால் எதையும் படிக்காமல் போகிற போக்கில் கதையளப்பது தான் சிறுபத்திரிகை உலகில் வழக்கம். ஆனால் நேற்றைய கூட்டம் ஒரு சின்ன பல்கலைக்கழக கருத்தரங்கம் போல் இருந்தது.
நான் இறுதியாக பேசினேன். கோபி கிருஷ்ணன் அவர் காலத்துக்கு நவீனத்துவ எழுத்தாளர்களிடம் இருந்து எப்படி மாறுபட்டவராக இருக்கிறார், அவரிடம் உள்ள பின்நவீனத்துவ கூறுகள் என்னென்ன, அவரது எழுத்தில் பிராய்டிய கோட்பாட்டுக்கு உள்ள தாக்கம், பிராய்டின் தாக்கம் எப்படி அவரது படைப்பும் பலமும் பலவீனமுமாய் ஒரேசமயம் இருக்கிறது என விளக்கினேன். அதன் பிறகு மீண்டும் பேசிய ச.தமிழ்ச்செல்வன் சுவாரஸ்யமான விசயம் ஒன்றை குறிப்பிட்டார். கோபி கிருஷ்ணன் தான் வாழ்ந்த காலத்தைய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை பெரும்பாலும் படித்திருக்கவில்லை. அவர் உளவியல் மற்றும் பிற விசயங்கள் பற்றி ஆங்கிலத்தில் படித்ததையும் சொந்த அனுபவங்களையும் முன்வைத்து தான் இவ்வளவு அபாரமான ஒரு படைப்புலகை கட்டியெழுப்பி இருக்கிறார். தமிழில் யாரையும் அதிகம் படிக்காதது அவரை தனித்துவமானராய் ஆக்கி இருக்கிறது என்றார் தமிழ்ச்செல்வன்.
வாசக சாலை பார்வையாளர்களுக்கு ஒரு தனி குணம் உண்டு. எவ்வளவு சிக்கலான விசயங்களை எவ்வளவு நேரம் பேசினாலும் கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். முதுகலை வகுப்பு இலக்கிய மாணவர்களிடம் கூட நான் இப்படியான ஒரு சீரான ஒருமுகமான கவனத்தை பார்த்ததில்லை. ஆனால் வேறு அமைப்புகளின் கூட்டங்களில் பார்வையாளர்கள் பல விதங்களில் இருப்பார்கள். சிலர் கூட்டம் நடக்கும் போதே எழுந்து வந்தும் போயும் இருப்பார்கள். இன்னும் சில கூட்டங்களில் ஆட்டம் துவங்கியதும் முதல் சில இருக்கைகளில் உள்ளவர்கள் டீ குடிக்க எழுந்து வெளியே போவார்கள். கூட்டத்துக்கு டீ வந்ததும் திரும்ப வந்து அதைக் குடித்து விட்டு சிகரெட் புகைக்க மீண்டும் வெளியே போவார்கள். சில பார்வையாளர்கள் கண்ணாடி போன்ற கண்களுடன் பேச்சாளனையே வெறித்து பார்ப்பார்கள். அதில் பேச்சாளன் தன் முகம் பிரதிபலிப்பதை காணலாம். ஆனால் எந்த சலனமும் இராது. இன்னும் சிலர் போண்டா சாப்பிடுவதில் மட்டும் கவனமாய் இருப்பாளர்கள். பேச்சு தொடங்கியதும் பேச்சாளனைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் பராக்கு பார்ப்பார்கள். அவர்களைப் பார்த்ததுமே உங்கள் தன்னம்பிக்கை பஞ்சர் ஆன டயர் போல் படுத்து விடும். ஆனால் ’வாசக சாலை’ பார்வையாளர்கள் ரொம்ப சமர்த்து. இது ஏதோ என் கருத்து தான் என்றில்லை. இதற்கு முன் அங்கு பேசின வேறு சிலரும் என்னிடம் குறிப்பிட்டுள்ளார்கள். எவ்வளவு பேசினாலும் கண்ணசராமல் கவனிக்கிறார்க்ளே என வியந்திருக்கிறார்கள்.
அடுத்த மாதம் 19 வாசக சாலையில் முதலாம் ஆண்டு நிறைவு விழாவும் விருது வழங்கும் விழாவும் சேர்ந்து நடக்கிறது. அதற்கான டீஸரில் என்னை பேசுமாறு கேட்டு கேமராவை ஆன் செய்தார்கள். இதற்கு முன் பல டிவி நிகழ்ச்சிகளில் சுலபமாய் பேசி இருக்கிறேன். ஆனால் இரண்டு வரிகளில் ஒரு குறிப்பிட்ட அறிவிப்பை சொல்ல வேண்டும் என்றதும் எனக்கு வாய் குழற ஆரம்பித்தது. அருண் வேறு பல டேக்குகள் வாங்கி விட்டார். கருத்துக்களை பேசுவது சுலபம், ஆனால் தகவல்களை மனனம் செய்து கேமரா முன் கடகடவென சொல்வது ரொம்ப சிரமம். எப்படியோ இரண்டு வரியை பேசி முடித்த பின் சொன்னேன் “என் தலைவர் சாரு ரெண்டு விரல்களால் டான்ஸ் ஆடுவதற்கே நூறு டேக் வாங்கினார். நானெல்லாம் எவ்வளவோ பரவால்லீங்க”.

No comments: