Friday, November 20, 2015

”நடிப்பு” பத்திரிகைநண்பர் (தம்பி) சோழனின் “நடிப்பு” பத்திரிகையின் முதல் இதழ் செறிவாகவும் தீவிரமாகவும் வந்திருக்கிறது. நடிப்பு எனும் ஒற்றைப்புள்ளியை மையமிட்டு நடிப்புக் கலை, முக்கியமான நடிகர்கள், நடிப்பு பற்றின நூல்களில் இருந்து அத்தியாயங்கள், பேட்டிகள், நடிகர்கள் பற்றின நூல் விமர்சனம் என பல விசயங்களை பிசிறின்றி தந்திருக்கிறார். மீள்பிரசுரங்களில் மகேந்திரனின் “நடிப்பு என்பது” எனும் நூலில் இருந்து ”விழிமொழியும்”, சோழனின் ”நீங்களும் நடிக்கலாம்” நூலில் இருந்து “நம்ப வைப்பது தான் நடிப்பும்” முக்கியமாய் படிக்க வேண்டியவை. 


கட்டுரைகளில் நவாசுதின் சித்திக்கி பற்றின ரிஜின் ரோஸின் கட்டுரை என்னை கவர்ந்தது. அவர் தொடர்ந்து எழுதினால் சிறப்பு. பெரும்பாலான கட்டுரைகள் உள்ளார்ந்த அவதானிப்பும் கற்பனையும் நடிப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மையசரடாக கொண்டுள்ளன. கோட்பாட்டு கட்டுரைகள் இல்லை. நடிப்பு பற்றின அனுபவ பூர்வமான அவதானிப்பு பதிவுகளுக்கு தான் அதிகம் இடமளிகப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்டதா அல்லது எதேச்சையாய் அமைந்ததா என தெரியவில்லை. கில் ஆலனின் பேட்டியை இன்னும் விரிவாய் செய்திருக்கலாம் எனத் தோன்றியது. குறிப்பாய், அவர் பிரபுதேவா ஒரு சிறந்த நடிகர் என ஒற்றை வரியில் சொல்லி விட்டு நகர்கிறார். ஏன் அப்படி சொல்கிறார் என அறிய ஆர்வம் தோன்றியது. கமல் மற்றும் மோகன்லாலை ஒப்பிடும் எனது கட்டுரையும் வெளியாகி உள்ளது.
இவ்வளவு பேரிடம் இருந்து குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை வாங்குவது எவ்வளவு சிரமம் என அறிவேன். நூறு பேரிடம் கேட்டால் பத்து பேர் தான் எழுதுவார்கள். அலுப்பில்லாமல் மீண்டும் மீண்டும் தொந்தரவு பண்ணி பொறுமை காத்தால் தான் இவ்வளவு கட்டுரைகளை கேட்டு வாங்க முடியும். இவ்விசயத்தில் தமிழ் ஸ்டுடியோ அருண் திறமைசாலி. முதலில் பத்து சொற்களில் கட்டுரையை நினைவுபடுத்தி குறுஞ்செய்தி அனுப்புவார். நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அடுத்து எட்டு சொற்களில் கேட்டு அனுப்புவார். அதுவும் பலிக்கவில்லை என்றால் ஐந்து, மூன்று. ரெண்டு என சொற்கள் குறைந்து கொண்டே போகும். ஆனால் கேட்பதை மட்டும் நிறுத்த மாட்டார். ஒருமுறை எனக்கு கேள்விக்குறியை மட்டும் குறுஞ்செய்தி அனுப்பினார். அதைப் பார்க்க எனக்கு ஒரு அருவா போல் தோன்றியது. பயந்து விட்டேன். இருப்பதிலேயே எளிது தொடர்ச்சியாக எழுதும் பிரபலங்களிடம் இருந்து கிடைப்பதை வாங்கி தொகுத்து வெளியிடுவது தான். ஆனால் அது பத்தோடு பதினொன்றாய் இருக்கும். ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்து இப்படி ஒரு இதழை சோழன் தயாரித்திருப்பது பாராட்டத்தக்கது.
 இது போல் இலக்கியத்திலும் யாராவது thematic பத்திரிகை வெளியிட்டால் சுவாரஸ்யமாக இருக்கும். பேட்டிக்கென்றே ”நேர்காணல்” என்றொரு பத்திரிகையை நண்பர் பௌத்த ஐயனார் கொண்டு வருகிறார். முன்பு கி.ரா கடிதங்களுக்காய் ஒரு கையெழுத்து பத்திரிகை நடத்தினார் என கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றைய வாட்ஸ் ஆப் குரூப், பழைய செயின் மெயில் போன்றவற்றின் தொல்வடிவம் அது. அதற்கு முன்பு ”எழுத்து” பத்திரிகை சிறுகதைகளுக்காய் தனித்து இயங்கியது. இப்போதும் கார்களுக்கு என்று தனியாய் பத்திரிகைகள் வருகின்றன. ஆங்கிலத்தில் மது வகைகளைப் பற்றி பத்திரிகை வருகிறது. நாமும் இது போல் செய்ய முடியும். பொதுவாக விமர்சனம் என்றால் யாரையாவது வரிக்கு வரி பாராட்டிக் கொண்டே போவது என தமிழில் ஒரு மரபு உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் எதிர்மறையாய் விமர்சிப்பதற்கு ஒரு polemical பத்திரிகையை யாராவது நடத்தலாம். எழுத்துக்கலை பற்றி நடத்தலாம். யாராவது இறந்தால் உடனே ஒவ்வொரு பத்திரிகையிலும் பத்து பேராவது அவரைப் பற்றி அஞ்சலிக் குறிப்பு எழுதுவார்கள். ஏன் அஞ்சலிக் கட்டுரைகளுக்கு என்றே தனியாய் ஒரு பத்திரிகை நடத்தக் கூடாது?

1 comment:

சு.மு.அகமது said...

’நடிப்பு’க்கு வாழ்த்துகள்.தம்பி சோழன் இன்னும் மெருகேற்றுவார்.நம்புகிறேன்.”அஞ்சலி”க்கென்றே ஒரு இதழை யாராவது நடத்தினால் நன்றாயிருக்கும்...?!!!(நல்லாயிருக்கு அபிலாஷ்...!?!எத்தனை பேருக்கு அஞ்சலி செலுத்துவது? இல்லை அஞ்சலி என்பவருக்கான பத்திரிக்கையை குறிப்பிடுகிறீர்களோ...?) வாழ்த்துகள் அபிலாஷ்...!!!சந்திப்போம். அன்புடன் சு.மு.அகமது