Thursday, November 19, 2015

இன்று ஒரு சேதி
எனக்கு பன்னிரெண்டு பதிமூன்று வயதிருக்கையில் வீட்டிலிருந்த ஒரு பழைய வானொலியை துடைத்து பேட்டரி போட்டு என் அறையில் வைத்து பயன்படுத்த ஆரம்பித்தேன். அலைவரிசையை டியூன் செய்யும் பகுதியில் உள்ள கண்ணாடியை சுத்தம் செய்கிறேன் என என் அப்பா ஒருமுறை பெட்ரோலால் துடைக்க அது நிரந்தரமாய் பூவிழுந்த கண்ணைப் போல் ஆகி விட்டது. அதனால் இன்ன அலைவரிசை என எண் குறித்து தேட முடியாது. நானாக தேடி ஒரு குறிப்பிட்ட அலைவரிசைக்கு வந்ததும் பென்சிலால் அந்த இடத்தில் கண்ணாடி மேல் கோடு கிழிப்பேன். இப்படி நான் அறையில் தனியாக இருக்கும் வேளையெல்லாம் சில குறிப்பிட்ட சேனல்களை கேட்பதும் அது சம்மந்தமாய் யோசிப்பதுமாய் எனக்கான அந்தரங்க உலகை உருவாக்கி வைத்திருந்தேன்.


 தினமும் காலை ஆறு இருபதுக்கு ஒரு அலைவரிசையில் ஒரு மலையாள கிறுத்துவ போதகர் பேசுவார். அவர் பேசும் தொனி, பிரத்யேக கொச்சை மற்றும் சில சமயம் அவர் கூறுகிற விசயங்களுக்காகவும் கேட்பேன். அவருக்கு அடுத்து தமிழ் வானொலியில் காலை செய்தி முடிந்ததும் ஏழு இருபதுக்கு தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலை தவற விட மாட்டேன். தனக்கே உரித்த கரகரப்பான குரலில் ஏதோ விட்ட இடத்தில் இருந்து துவங்குவது போல் “இப்பிடித் தாங்க” என ஆரம்பித்து ஒரு குட்டிக்கதை, கருத்து என அருமையாய் பேசுவார். எந்த அழுத்தமோ ஏற்ற இறக்கமோ அற்ற பாணி அவரது தனித்துவம். அவர் சொல்லுகிற செய்தியும் எந்த நாடகீயமோ கொதிப்போ அற்றதாய் ஒரே ஸ்ருதி கொண்ட ஒரு நிதானமான கதையாகவோ தத்துவமாகவோ இருக்கும் என்பதால் சில பேச்சாளர்களைப் போல் அவர் தைய தைய என பேச வேண்டிய தேவையும் இருக்காது.

பதினேழு பதினெட்டு வயதானதும் தென்கச்சியார் என் உலகில் இருந்து நழுவத் தொடங்கினார். அவர் சொல்லுகிற விசயங்களை படித்து தெரிந்து கொள்ள நிறைய புத்தகங்களும், அவரை விட தீவிரமாய் அடர்த்தியாய் பேசுகிற நிறைய எழுத்துலக அண்ணாச்சிகளும் அறிமுகமாகி இருந்தனர். குழந்தைப் பிராயத்து பழைய பொம்மை போல் அவர் வளர் இளம் பருவத்துக்குக்கான ஒரு துணையாக என் நினைவுகளில் இருந்தார். அதன் பிறகு அவர் புத்தகங்கள் எழுதினதாய் நினைவு. அதை படிக்க தலைப்படவில்லை. அவரை டிவியில் பேசிப் பார்த்த போது ஒரு பழைய நடிகையை பார்த்தது போல் இருந்தது. அவர் பேச்சுக்கு அந்த சலனமற்ற முகமும் உடலும் ஒரு மைனஸ் என்றே பட்டது. அதன் பிறகு முற்றிலும் மறந்து போனேன்.

இன்று சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சி படப்பிடிப்புக்காய் சென்றிருந்தேன். அப்போது முன்பு தென்கச்சியாருடன் வானொலியில் வேலை பார்த்த ஞானப்பிரகாசம் என்பவரை சந்தித்தேன். ஆல் இந்திய வானொலியில் இருந்து ஓய்வு பெற்ற பின் சன் லைப் சேனலில் வேலை செய்கிறார். என்னிடம் ”நீங்க எவ்வளவு புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ஆறு புத்தகங்கள் என்று விட்டு ஒவ்வொரு புத்தகம் பற்றியும் சுருக்கமாய் விளக்கினேன். உடனே அவர் ”நான் 35க்கு மேல் புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்” என்றார். எனக்கு உடனே கூச்சமாய் போயிற்று. இதனை அடுத்து “எழுத்து தான் முழுநேர தொழிலா?” என்றார். எனக்கு அவர் ”திருவிளையாடல்” பட சிவபெருமான் போல் தோன்றினார். எதற்கு வம்பு என்று “ஏதோ டைம் கெடைக்கிறச்சே அப்பப்போ எழுதுறதுங்க. அவ்வளவு தான்” என்று சமாளித்துக் கொண்டேன்.

 வானொலியில் பேசிப் பழகுகிறவர்களுக்கு ஒரு பேச்சு பாணி உண்டு. வாக்கியங்களுக்கு இடைவெளி விடாமல் தடதடவென ஒரு ரயில் ஓடுவது போல் பேசிக் கொண்டே போவார்கள். யாராவது அப்படி தாளலயத்துடன் பேசினால் நான் சொக்கி கேட்டுக் கொண்டிருப்பேன். அப்படித் தான் இவரை எனக்கு பேசிக் கேட்டவுடன் பிடித்துப் போயிற்று. இருவரும் சேர்ந்து உணவருந்தினோம். அவர் தென்கச்சியார் பற்றி நிறைய விசயங்களை சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டே போனார்.

“அவர் எந்த பற்றும் இல்லாம ரொம்ப அமைதியா வாழ்ந்துட்டு போயிற்றாருங்க” என்றார். அதன் பிறகு அவரே இதை விளக்க சில சம்பவங்களை கூறினார். ஒன்று அவர் ஒரு கூட்டத்தில் பேசச் சென்றது பற்றியது. பொதுவாக வானொலி சார்பாய் பேட்டி எடுப்பது, நிகழ்ச்சி எடுப்பது என சென்றால் கவரில் பணம் போட்டு கொடுப்பார்களாம். தென்கச்சியார் அதை கண்டிப்பாய் வாங்க மறுத்து விடுவாராம். தனக்கு சின்ன குடும்பம், அதனால் இந்த கூடுதல் வருமானம் அவசியம் இல்லை என்பது அவரது தரப்பு. ஆரம்பத்திலேயே சம்மந்தப்பட்டவர்களிடம் தனக்கு பணம் தரக் கூடாது என எச்சரித்து விடுவர். ஒருமுறை அதையும் மீறி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அவருக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்து விடுகிறார்கள். உடனே அவர் மேடைக்கு சென்று “அந்த பகுதியில் உள்ள அநாதை விடுதிகள், முதியோர் இல்லங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா?” எனக் கேட்கிறார். ஒருவர் எழுந்து தன் வீடருகே ஒரு அனாதை இல்லம் உள்ளதாய் கூறுகிறார். தென்கச்சியார் அவரிடம் அப்பணத்தை கொடுத்து இல்லத்துக்கு வழங்கிடுமாறு கேட்கிறார். நிகழ்ச்சி முடிந்து திரும்ப வரும் போது ஒரு நண்பர் தென்கச்சியாரிடம் கேட்கிறார் “அவர் ஒருவேளை அந்த பணத்தை அனாதை இல்லத்துக்கு கொடுக்காம அபேஸ் பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க? அவரை எப்படி நல்லவர்னு நம்பி கொடுத்தீங்க?”. அதற்கு தென்கச்சியார் சொன்னார் “அப்பிடீன்னா அவரையே ஒரு அனாதைன்னு நெனச்சிக்கிட்டு சந்தோசப்பட்டிக்கிறேங்க.”

 குறிப்பிட்ட பணம் நம்முடையது இல்லை என நினைத்தால் அது எங்கு யாரிடம் போனாலும் நமக்கு கவலை இருக்காதே! தானம் செய்யும் முன் ஆயிரம் ஐயங்களை எழுப்பி யோசிப்பவர்கள் அது கொடுக்கப்பட்ட பின்பும் தம் பணம் எனும் பிரமையில் இருப்பவர்கள். “ஓம் சாந்தி ஓசன்னா” படத்தில் ஒரு வசனம் வரும். ”ஒரு வீட்டு உடமையாளர் தான் வாடகைக்கு விட்ட வீட்டை அவ்வப்போது கள்ளத்தனமாய் வந்து கண்காணிப்பது போல் ஒருவன் தன் மனதளவில் முன்னாள் காதலியை பின் தொடர்ந்து கொண்டே இருப்பான்.” கொடுக்க தெரியாதவன் கொடுக்கிற பணமும் இந்த முன்னாள் காதலியை போலத் தான். தென்கச்சியார் கொடுக்க தெரிந்தவர்.

1 comment:

‘தளிர்’ சுரேஷ் said...

தென்கச்சியாரின் தத்துவம் சிறப்பு! சிறந்த பகிர்வு! நன்றி!