Monday, November 16, 2015

தால்மியாவின் மரணமும் அரசியல் மாற்றங்களும்


(இக்கட்டுரை அக்டோபர் மாத கல்கியில் வெளியானது. ஷஷாங்க் மனோகர் தலைவரானதும் ஸ்ரீனிவாசன் ஐ.சி.சி தலைவர் பதவியில் இருந்து விலகினதும் இக்கட்டுரை எழுதப்பட்ட பின் நிகழ்ந்தன)
 
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் தால்மியாவின் மரணம் ஒரு பெரிய அரசியல் தலைவரின் மரணத்தை போல் குழப்பங்களுக்கும் புது மாற்றங்களுக்கும் வழிவகுத்துள்ளது. தலைவராக அவர் பதவி ஏற்ற காலத்தில் கூட அவர் உடல்நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. ஒருவேளை அவர் பதவியில் இருக்கையில் மரணிக்க கூடும் என வாரிய நிர்வாகிகள் அச்சம் தெரிவித்தனர். ஆனால் எல்லா அரசியல் தலைவர்களையும் போல அவரும் தன் வயது மற்றும் ஆரோக்கியத்தின் நிமித்தம் பதவியை விட்டுத் தர தயாராக இருக்கவில்லை. தால்மியாவின் மரணம் கங்குலி மற்றும் மேற்குவங்க வீரர்களுக்கு ஒரு பின்னடைவாகவும் ஸ்ரீனிவாசனுக்கு தனது இழந்த அதிகாரத்தை மீட்கவுமான வாசல்களை திறந்து விட்டன.
ஸ்ரீனிவாசனுக்கு எதிராய் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு உச்சநீதிமன்றம் அவரை கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்கிய சந்தர்பத்தில் அதுவரை அவருக்கு நண்பர்களாய் இருந்த நிர்வாகிகள் பலரும் அவரை விடுத்து எதிரணிக்கு சென்றனர். அடுத்து வந்த தேர்தலில் தாகுர் செயலாளராகவும் தால்மியா தலைவராகவும் தேர்வாயினர். இந்த கூட்டணி ஸ்ரீனிவாசனுக்கு கடும் நெருக்கடி அளித்தது. ஐபிஎல்லில் இருந்து சென்னை அணி தடை செய்யப்பட்ட போது, சென்னையை கலைத்து அதனிடத்தில் புது அணியை உருவாக்கலாமா அல்லது அதே அணியை வேறு பெயரில் புது நிர்வாகிகளையோ (ஸ்ரீனிவாசனின் பினாமிகளையோ) கொண்டு தொடர்ந்து நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டது. சென்னையுடன் ராஜஸ்தானும் இருவருடங்கள் மட்டும் தடைசெய்யப்பட்டுள்ளதால் புது அணிகளை ஏலமெடுத்து உருவாக்குவது இருவருடங்களுக்கு பிறகு ஐபிஎல்லின் அணிகளின் தொகையை அதிகமாக்கி விடும் என ஸ்ரீனிவாசனின் ஆதரவாளர்கள் வாதிட்டார்கள். தோனி தலைமையிலான அணி ஐபிஎல்லின் ஆக பிரபலமான அணி என்பதால் அதை சிதறடிப்பது ஐபிஎல்லின் புகழை மங்க செய்யும் என்றும் கூறப்பட்டது. ஆனால் வாரிய தலைமையான தாகுரும், தால்மியாவும் ஸ்ரீனிவாசனின் எதிர்முகாம் என்பதால் இந்த சாக்குபோக்குகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதே போல் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தையும் ஸ்ரீனிவாசன் பிரதிநுத்துவப்படுத்த கூடாது என்று வாரியம் வழக்கு தொடுத்தது. அது போல் ஸ்ரீனிவாசன் இனியும் சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவராய் பதவி வகிக்க கூடாது என்றும் வாரியம் கருதி அதற்காய் நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கிறது. இன்னும் ஒரு வருடம் இதே கூட்டணி நீடித்தால் ஸ்ரீனிவாசனை முழுக்க வெளியேற்றி விடுவார்கள் என நாம் எதிர்பார்த்தோம். அப்போது தான் கதையில் ஒரு திருப்பம். தால்மியா காலமானார்.
தால்மியாவுக்கு கங்குலி மிகவும் நெருக்கமானவர். இருவரும் ஒரே மாநிலத்துக்காரர்கள். தால்மியா இந்திய வாரியத்தின் தலைவராக இருந்த காலத்தில் தான் திராவிடை விடுத்து கங்குலியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ஆக்கினார்கள். தால்மியா இம்முறை ஒரு சிறப்பு தொழில்நுட்ப குழுவை அமைத்தார். அதில் லஷ்மண், சச்சின், கங்குலி இடம்பெற்றனர். தால்மியாவின் வலதுகையான கங்குலி வாரியத்துக்குள் அதிகாரம் மிக்கவராய் வளர்ந்து வந்தார். தால்மியாவின் மரணம் ஒரு கிரிக்கெட் நிர்வாகியாக கங்குலியின் வளர்ச்சிக்கு சற்று பின்னடைவு தான். அது மட்டுமல்ல தால்மியா தொடர்ந்திருந்தால் வங்க அணி வீரர்களுக்கு தேசிய அணியில் அதிக வாய்ப்புகள் கிடைத்திருக்கும். மேற்குவங்க வீரர் மனோஜ் திவாரி இதற்கு நல்ல உதாரணம். கடந்த சில ரஞ்சி கோப்பை ஆட்டங்களிலோ ஐபிஎல்களிலோ திவாரி அதிகமாய் ஆடவோ ஓட்டங்கள் எடுக்கவோ இல்லை. ஆனாலும் தால்மியா தலைவர் ஆனதும் திவாரி எதிர்பாராத விதமாய் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணிக்கு தேர்வானார். அந்த பயணத்தொடரில் அவர் மோசமாய் சொதப்பினார். திவாரியை போன்றே சாஹா மற்றும் பிற மேற்குவங்க அணி வீரர்களுக்கும் குறுக்குவழியில் இந்திய அணிக்கு தேர்வாகி தொடர்ந்து ஆடும் கனவு இருந்திடுக்கும். இனி அக்கனவுகள் கனவுகளாய் மட்டுமே இருக்கும். அது மட்டுமல்ல தால்மியா தொடர்ந்திருந்தால் தோனியின் ஓய்வுக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டிருக்கவும் கூடும்.
இந்த சந்தர்பத்தில் ஸ்ரீனிவாசன் பரபரப்பாய் காய்களை நகர்த்தினார். அவருக்கு இப்போதும் வாரியத்தில் பாதிக்கு மேல் ஆதரவாளர்கள் உண்டு. பா.ஜ.கவிலும் ஆதரவு உண்டு. வாரிய விதிமுறைப்படி இம்முறை கிழக்கு மாநிலங்களில் இருந்து ஒரு பிரதிநிதி மட்டுமே தலைவராக முடியும் என்பதால் ஜார்கண்டை சேர்ந்த அமிதாப் சௌத்ரி எனும் ஸ்ரீனிவாசன் ஆதரவாளர் தலைவராகக் கூடும் என்றார்கள். அப்போது முன்னாள் வாரிய தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமான சரத் பவார் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இந்நேரம் பவாரை ஸ்ரீனிவாசன் சென்று சந்தித்து அரசியல் பேரம் பேசியதாய் கூறப்பட்டது. ஸ்ரீனிவாசனும் பவாரும் பழைய நணபர்கள். ஆனால் சமீபமாய் விரோதியானார்கள். ஊழல் விவகாரத்தில் ஸ்ரீனிவாசனை கடுமையாய் எதிர்த்தவராய் பவார் இருந்தார். ஆனால் இப்போது இருவரும் கைகுலுக்கி மீண்டும் நண்பர்கள் ஆயினர். பவார் தலைவரானால் ஐசிசி தலைவராக ஸ்ரீனிவாசனின் பதவிக்கு ஆபத்து இருக்காது; ஐபிஎல்லில் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் முடிவுக்கு வரக் கூடும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் கதையில் மீண்டும் ஒரு திருப்பம். திரைமறைவில் மற்றொருவரும் காய்கள் நகர்த்திக் கொண்டிருந்தார். அவர் வாரிய செயலாளரான தாகுர்.
தாகுர் பா.ஜ.கவின் அருண் ஜேட்லியுடன் சேர்ந்து ஒரு எதிர்-ஸ்ரீனிவாசன் கூட்டணிக்காய் முயன்று வந்தார். அவர்கள் நாக்பூரை சேர்ந்த வழக்கறிஞரும் முன்னாள் வாரிய நிர்வாகியுமான ஷஷாங் மனோகரை அணுகினர். மனோகர் ஸ்ரீனிவாசனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். அவருக்கு பா.ஜ.வில் ஆதரவு அதிகம். ஸ்ரீனிவாசன் எதிர்ப்பு+ ஆளுங்கட்சி அதரவு என இரு பிளஸ்கள் ஷஷாங்க் மனோகரின் வடிவில் சேர பவார் மைனஸ் ஆனார். அவர் போட்டியில் இருந்து விலகினார்.
ஷஷாங்க் மனோகர் தான் அடுத்த வாரிய தலைவர் என்பது கிட்டத்தட்ட நிச்சயம். ஆனால் அரசியலில் தான் ஒன்றும் நிச்சயம் இல்லையே. எதுவும் நடக்கலாம்!

No comments: