Saturday, November 14, 2015

பா.ஜ.கவும் சாதியும்


பசு புனிதமானது என்று தான் மாட்டிறைச்சி தடைக்கான காரணமாய் இதுவரை ஆர்.எஸ்.எஸ் கூறி வந்தது. இப்போது புதிதாய் மாட்டுச்சாணத்தினால் அணு குண்டு/உலை கதிரியக்கத்தையே தடுக்க முடியும் என கூறியிருக்கிறது. இந்த கண்டுபிடிப்பை பயன்படுத்தி நாம் ஏன் நிறைய மாட்டுச்சாணியை ஜப்பானின் புக்குஷிமோவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது? மோடியின் Make in India திட்டத்திற்கு சிறந்த துவக்கமாகவும் அமையுமே!
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்றவை பல்வேறு கருத்துக்களும் நம்பிக்கைகளும் ஊடுபாவும் அமைப்புகள். அதாவது சம்ஸ்கிருதமயமாக்கலுக்கு கொடிபிடிக்கும் அதே பா.ஜ.கவுக்குள் பிராமணியத்துக்கு எதிரானவர்களும் இருப்பார்கள். தலித்துகளும் இடைநிலை சாதிகளும் பெருமளவில் இன்று அக்கட்சியின் ஆதார பலமாக உள்ளார்கள். ஆனால் தலைமை பெருமளவில் பிராமணர்களால்/மேல்சாதிகளால் ஆனது. தன்னுடைய பிரதான அடையாளமாய் பிராமணிய பாரம்பரியத்தை முன்வைக்கவே பா.ஜ.க விரும்புகிறது. இந்து மதத்தின் உச்சாணிக் கொம்பு பிராமணர்கள் எனும் ஆழமான கொள்கைபிடிப்பு இந்துத்துவர்களிடம் உள்ளது. ஆனால் கட்சியின் இன்றைய போக்கு இடைநிலை/தாழ்த்தப்பட் சாதிகள் நோக்கி உள்ளது. உதாரணமாய் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் பலர் மாமிசம் உண்பவர்கள் எனும் சேதியை இந்து பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது. ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் மாமிசம் உண்ண தடையில்லை; ஆனால் தலைமையகத்தில் சைவ உணவுக்கு மட்டுமே அனுமதி. இது சம்மந்தமான முரண்பாடுகள் எளிதில் வெளியே வராது; ஏனென்றால் பா.ஜ.கவினர் தலைமைக்கு மாறுபட்டு மீடியாவில் பேச மாட்டார்கள். உள்ளுக்குள் பிராமணியத்தை ஏற்காத இந்துத்துவா தலைவர்களும் வெளிப்படையாக அதை ஆதரிப்பார்கள்.
பா.ஜ.கவின் பெரும்பான்மைவாதம் இந்து மத அடையாளம் மற்றும் தேசியவாதம் எனும் இரு போக்குகளை கொண்டது. ரெண்டாயிரத்துக்கு பிறகு மத பெரும்பான்மைவாதத்தை விட தேசிய பெரும்பான்மைவாதம் மக்களுக்கு ஏற்கத்தது எனும் முடிவுக்கு கட்சி வந்து விட்டது. ஆனால் இன்றும் சில பிற்போக்கான மாநிலங்களில் மக்களை திரட்டவும் கலவரங்களை தோற்றுவித்து வாக்குக்ளை திரட்டவும் மத பெரும்பான்மைவாதம் தேவைப்படுவதால் பா.ஜ.க அதையும் முழுக்க கைவிடவில்லை. என்றாலும் எதிர்காலத்தில் பா.ஜ.க மத பெரும்பான்மைவாதத்தை மெல்ல மெல்ல கைவிடும் சாத்தியங்கள் தெரிகின்றன.
வைதிக பெரும்பான்மைவாதத்தை பா.ஜ.க கைவிடுமா எனும் கேள்வி உள்ளது. பிராமணர்க அதிகாரத்தில் இருந்து சாய்த்து விட்டு மோடி எனும் வைஸ்யர் பா.ஜ.கவை கைப்பற்றியது ஒரு முக்கிய திருப்புமுனை என்றும், இனி இடைநிலை சாதிகள் முக்கியத்துவம் பெறுவார்கள் என்றும் இடைநிலை சாதி இந்துத்துவர்கள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த புதிதில் பெருமிதம் கொண்டார்கள். ஆனால் பா.ஜ.க பிராமணியத்தை இரண்டு விதங்களில் காண்கிறது.
 ஒன்று பிராமணியம் என்பது நம் சாதி அமைப்பில் ஒரு சாதிக்கு உரித்தானது அல்ல. அது சாதி படிநிலைக்குள் ஒருவர் மேலே செல்வதை குறிக்கும் ஒரு அடையாளம் மட்டுமே. உதாரணமாய் ஒரு தலித் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்து இயங்கி கவனமும் அங்கீகாரமும் பெற்றதும் அவர் ஒரு கால்வாசி “பிராமணர்” ஆகி விடுவார். இந்த சாதி மேல்நிலையாக்க ருசி தான் பல தலித்துகளை ஆர்.எஸ்.எஸ் நோக்கி ஈர்க்கிறது. ஊரில் தேர்த்திருவிழாவில் ஒரு தலித் ஒதுக்கப்படலாம். ஒடுக்கப்படலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தில் அவன் உற்சாகமாய் கலந்து கொள்ள முடியும். ஆனால் இது சாதி ஏற்பு அல்ல. சாதிய கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்துத்துவா கட்சிகளுக்கு ஆள் சேர்க்கவும் மட்டுமே இது பயன்படும். பா.ஜ.க பிராமணரல்லாத சாதிகளை பயன்படுத்தும் விதம் அது பிராமணர்களை விட பிராமணியம் எனும் உளவியலை சார்ந்திருப்பதை காட்டுகிறது. தலித்துகளை பிராமணர்களாய் மாற்றி இந்துத்துவாவை வலுப்படுத்த முடியும் என அது நம்புகிறது. எதிர்காலத்தில் பா.ஜ.க பூணூல் அணிந்த இடைநிலை சாதியினரையும் தலித்துகளையும் தன் வாக்குவங்கியாகவும் செயல்வீரர்களாகவும் மாற்ற திட்டமிடுகிறது.
எனக்குள் அடிக்கடி எழும் கேள்வி: சமிஸ்கிருதத்துக்கு மோடி அரசு அளிக்கும் அளப்பரிய மதிப்பையும், அம்மொழியை முன்னெடுப்பதற்கு எடுக்கும் முயற்சிகளையும் பிராமணர்களை எதிர்க்கும் இந்துத்துவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? நான் உரையாடியவர்களில் பிராமணர்களும் அவர்களை சார்ந்து நிற்கும் சில மேல்சாதியினரும் தான் கணிசமாய் சமிஸ்கிருத முன்னெடுப்பை ஏற்கிறார்கள். ஆனால் பிற இந்துத்துவர்கள் இடையே இஸ்லாமிய எதிர்ப்பை போல் சமிஸ்கிருத முன்னெடுப்பு பெரிய ஆர்வத்தை தூண்டவில்லை. இதை கட்சிக் கொள்கை எனும் அளவில் ஏற்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். இந்தியாவில் மிகச்சிறுபான்மையினராய் உள்ள பிராமணர்களின் ஒரு ஆதி அடையாளமாய் உள்ள மொழி சமிஸ்கிருதம். அம்மொழியில் எழுதப்பட்ட வேதங்களும் அவ்வாறே பிராமணர்களுக்கு மட்டுமே மிக முக்கியமாய் உள்ளது. பெரும்பான்மை இந்துக்களுக்கு வேறு பல தெய்வங்களும் நம்பிக்கைகளும் கலாச்சார வேர்களும் உள்ளன. இந்தியா முழுக்க பரவலாய் உள்ளது தாய்தெய்வ வழிபாடு தான். உதாரணமாய் தமிழகத்தில் பெருமாளை கும்பிடுகிறவர்களை விட முருகனையும் அம்மனையும் வழிபடுகிறவர்கள் மிக அதிகம். ஏன் இந்து மதம் என்பது ஒரு சிறுபான்மை சாதியினரின் (பிராமணர்களின்) தெய்வ நம்பிக்கையை ஒட்டியதாய் பா.ஜ.கவில் முன்வைக்கப்படுகிறது?
மாட்டிறைச்சி தடையை பொறுத்த மட்டிலும் கூட அதற்கு பூரண ஆதரவு அளிப்பவர்கள் ஜெயின் சமூகத்தினரும் பிராமணர்களும் தான். ஜெயின்கள் இந்திய வணிக சமூகங்களின் இதயமாகவும் பிராமணர்கள் இந்துத்துவாவின் பண்பாட்டு தலைமையாகவும் உள்ளார்கள் என்பது தான் பா.ஜ.க மாட்டிறைச்சி தடையை முன்னெடுக்க பிரதான காரணம். இன்னொரு காரணம் உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பொருளாதாரம் மாட்டிறைச்சி ஏற்றுமதியை நம்பி உள்ளது என்பது. ஆனால் மாட்டிறைச்சி என்பது இஸ்லாமியரின் உணவு மட்டும் அல்ல. என்னுடைய பல இந்து நண்பர்களின் மாட்டிறைச்சி விரும்பிகளாக உள்ளார்கள் கேரளாவில் உண்ணப்படும் மாட்டிறைச்சியின் அளவு கணிசமானது. அங்கு மக்களின் பிரதான உணவே மாட்டிறைச்சி வறுவலும் பரோட்டாவும் தான். பசு புனிதம் எனும் உணர்வு சில வட இந்திய மாநிலங்களிலும் பிராமணர்கள் ஜெயின்கள் மத்தியிலும் வலுவாக இருக்கலாம். ஆனால் அது இந்தியாவின் ஒட்டுமொத்த உணர்வு அல்ல. இவ்விசயத்தில் ஏன் இந்துத்துவா கட்சிகள் பெரும்பான்மையை எதிர்த்து சிறுபான்மையை தூக்கிப்பிடிக்கிறது?
சமீபத்தில் தில்லி பல்கலைக்கழகத்தின் சமிஸ்கிருத துறையின் தலைவர் வேதங்கள் உருவான காலத்தை அந்த பிரதிகளில் உள்ள சோதிட குறிப்புகளைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்ய போவதாய் கூறி உள்ளார். அதாவது இதுவரை தொல்லாய்வு முறைப்படி வேதகாலத்துக்கு முன்பு நமக்கு இங்கு ஒரு தொன்மையான நாகரிகமான சமூக வாழ்வு இருந்தது எனி கூறி வந்தார்கள். இது பிராமணர்கள் என்பவர்கள் இந்தியாவுக்குள் பின்னாளில் குடியேறின ஆரியர்கள் எனும் கருத்தாக்கத்துக்கு ஆதாரமாய் விளங்கியது. ஆனால் இப்போது வேத கவிதைக்குள் உள்ள சோதிட குறிப்புகள் மூலம் காலத்தை மீளமைப்பது எனும் தவறான முறையை பின்பற்றி பிராமணர்களே இந்தியாவின் ஆதிகுடி என நிறுவ விரும்புகிறது பா.ஜ.க தலைமை. இதன் மூலம் வந்தேறிகள் எனும் பழியில் இருந்து பிராமணர்களே காப்பாற்றுவதே நோக்கம். இடைநிலை மற்றும் தலித்துகளின் உழைப்பால் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க ஏன் சிறுபான்மை சாதி ஒன்றை பாதுகாப்பதற்காய் இவ்வளவு மெனக்கெட வேண்டும்?
இந்துத்துவா வேதகால பெருமை மற்றும் வைதிக மரபை தன் அடிப்படையாக கொண்டது என்றாலும் அது இன்று வெகுவாக மாறிக் கொண்டிருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின் பா.ஜ.கவின் கிளை துணை அமைப்புகள் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான பிற்போக்கான கருத்துக்களை கூறுவதும் சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுவதும், மோடி அரசு தமக்கும் இவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என மறுப்பதும், அதேவேளை இவர்களை தடுக்காமல் மென்போக்கை கடைபிடிப்பதும் வாடிக்கை. பா.ஜ.கவுக்குள் பல்வேறு குழப்பங்கள் தோன்றி உள்ளன. அவர்கள் விரும்பினாலும் முழுமையாக மத பெரும்பான்மைவாதத்தையோ பிராமண சார்பையோ கைவிட முடியவில்லை. பசுவையும் சாணியையும் பூணூலையும் கொண்டாடுகிற அரசியல் நீண்ட நாள் நிலைக்காது. தேசிய பெருமிதத்தையும் சாதிய கட்டமைப்பையும் நம்பி இயங்கும் இந்துத்துவா தான் எதிர்காலத்தில் இருக்கும். அதுவும் ஆபத்தானது தான் என்றாலும் கூட! 
நன்றி: வெற்றிவேந்தன், அக்டோபர் 2015

4 comments:

A.N Raj said...

சார் அத்வானி பிராமணர் அல்ல!

Abilash Chandran said...

நன்றி ராஜ். திருத்திக் கொள்கிறேன்

shiva said...

சமஸ்கிருதம் பிராமணர்களின் பிரமணர்களுக்கான மொழி அல்ல. நாத்திகம் உள்ளிட்ட எராளமான இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. நாகார்ஜுனர் உள்ளிட்ட பிற்கால பவுத்த அறிஞர்களின் மொழியாகவும் சமஸ்கிருதமே இருந்தது. இன்றைக்கு இடை நிலை சாதியினரே சமஸ்கிருதத்தை முன் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது... இவ்வாறு இருக்க ஒற்றைப்படையாக சமஸ்கிருதம் பார்பன மொழி என் முத்திரை குத்தி ஒதுக்குவது அதன் மிகச்சிறந்த செறிவான இலக்கியங்களை அறிய தடையே ஆகும். நான்கு வேதங்கள் மட்டும் சமஸ்கிருதம் அல்ல. வேறு யாரிடமும் கூட இதை கூறியிருக்க மாட்டேன்.... நீங்கள் ஒரு இலக்கியவாதியாக இருந்தும் இத்தகைய முன் தீர்மானங்களுடன் ஒரு மொழியை அணுகுவதாலேயே இதனை கூறுகிறேன்...

Abilash Chandran said...

சிவா, நான் பிராமணர்களின் கலாச்சார சின்னமாய் சமிஸ்கிருதம் முன்னிறுத்தப்படுவதைத் தான் குறிப்பிட்டேன். அது பிராமணர்களின் மொழி மட்டுமே என நான் நம்பவில்லை. உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடே!