Tuesday, November 10, 2015

பெண்களின் ஆடையும் ஒழுக்கமும்இந்து மற்றும் இஸ்லாமிய ஒழுக்க காவலர்கள் பெண்களின் ஆடையை ஒழுங்குபடுத்துவதன் மூலமாய் பாலியல் ஒழுக்கத்தை கொண்டு வரலாம் என நம்புகிறார்கள். இந்திய இஸ்லாம் வஹாபிச வரவால் அரபுமயமாக்கப்பட்ட போது தான் பர்தா இங்கு பரவலானது. பாப்ரி மஸ்ஜித் இடிப்பை ஒட்டி ஒரு இஸ்லாமிய அடையாள மறுகட்டமைப்பு நடந்தது. இஸ்லாமியர் தம் அடையாளத்தை வெளிப்படையாய் முன்னெடுக்க எண்ணினார்கள். வராபிசமும் இந்துத்துவா எழுச்சியும் ஒன்றிணைந்த தருணத்தில் பர்தா இங்கு முக்கியத்துவம் பெற்றது. இந்துக்களை பொறுத்தமட்டிலும் பெண்களின் ஆடை கட்டுப்பாட்டுக்கும் வலதுசாரி எழுச்சிக்கும் ஒரு தொடர்பு நிச்சயம் உண்டு. ஆனால் உலகமயமாக்கல், தாராளமயமாக்கலின் தாக்கம் காரணமாய் ஆடை கட்டுப்பாடு அரசியலை இந்துக்கள் பரவலாய் ஏற்கவில்லை. நம்முடைய பாரம்பரியத்திலும் கூட முழுக்க உடலை மூடுகிற வழக்கம் இல்லை தான். ஆங்கிலேய காலனியாக்கம் இந்தியாவை நவீனமாக்கும் முன் வரை நம் பெண்கள் மேலாடை இன்றி தான் இருந்தார்கள். இன்று ஜம்பர் எனப்படும் மேலாடை கூட ஒரு காலத்தில் பெண்கள் வெளியே போகையில் ஒரு மோஸ்தருக்காய் அந்தஸ்துக்காய் அணிந்தது தான். பின்னர் அது ஒரு பொது ஆடையானது. சேலையும் அது போல் சமீபத்தைய வரவு தான். குமரி மாவட்டத்தில் உள்ள பல மூதாட்டிகள் மேலாடையாக உள்ளாடை மேல் ஒரு துண்டு போட்டிருப்பதை நான் சிறுவனாக இருக்கையில் கண்டிருக்கிறேன். அந்த துண்டும் பெயருக்கு தான்.

ஒரு மனிதனை கட்டுப்படுத்த அவன் உடலை ஒழுக்கப்படுத்த வேண்டும், கண்காணிக்க வேண்டும் எனும் எண்ணம் வலுப்பெற்றது இந்த நூற்றாண்டில் தான். குறைவான ஆடை பாலியல் எண்ணத்தை தூண்டுகிறது என்பது உண்மையான நோக்கத்தை மறைப்பதற்கான ஒரு போலியான மேம்போக்கான வாதம். ஒவ்வொரு முறை பெண்களுக்கு எதிரான வன்முறை அரங்கேறும் போதும் வலதுசாரிகள் பெண்கள் தான் குற்றத்தை தூண்டியவர்கள் எனப் பேசினர். பெண்கள் காதலனுடன் சுற்றக் கூடாது, நவீன ஆடையணியக் கூடாது என விதிமுறைகளை வலியுறுத்தினர். உடம்பை முழுக்க போர்த்திக் கொண்டு போகிற பெண்கள் பாதிக்க்கப்படுவதில்லையா என பெண்ணிவாதிகள் திரும்ப கேட்டனர். உண்மையில் இந்த விவாதத்துக்கு முடிவே இல்லை.
சமீபமாய் கார்டியன் பத்திரிகையில் ஒரு பெண் தான் ஈரானின் தெர்ஹரானில் வாழ்ந்த போது சந்தித்த மோசமான அனுபவங்களை பற்றி எழுதியிருந்தார். அங்கு பர்தா கட்டாயம். நவீன ஆடை அணிபவர்களை தண்டிப்பதற்காய் மப்டியில் பெண் போலிசார் திரிவார்கள். ஆனால் அங்கு ஒரு விநோதம் என்னவென்றால் பர்தாவில் நடக்கிற பெண்கள் மிக அதிகமாய் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவது தான். பர்தா கண்களைத் தவிர உடலை முழுக்க மறைக்கும்பட்சத்தில் அது பாலியல் உணர்வையே தூண்டக் கூடாதே? பர்தாவில் வெளிப்படும் பெண்ணின் உருவம், அங்கங்களின் அமைப்பு, முகத்தோற்றம் பற்றி ஒரு ஆணால் எளிதில் கணிக்க இயலாதே?
 ஆண்களின் இந்த நடத்தைக்கு அந்த கட்டுரையாளரே ஒரு விளக்கம் தருகிறார். ஈரானில் ஆண்களும் பெண்களும் குழந்தைப் பருவத்தில் பள்ளியில் இருந்தே ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாதபடி பிரித்து வளர்க்கப்படுகிறார்கள். இப்படி பெண் மணமே தெரியாமல் வளரும் ஆணுக்கு ஒரு பெண்ணின் கணுக்கால் கூட பெரிய அகக்கிளர்ச்சியை அளிக்கும். விளைவாக ஒரு பெண் பர்தாவில் தோன்றினாலும் கூட பெண் எனும் உணர்வே அவளை மிகவும் கவர்ச்சிகரமாய் அவனுக்கு தோன்ற செய்யும். இன்னொரு காரணம் அங்கு ஆணும் பெண்ணும் சந்தித்து உரையாடுவதற்கான பொதுவெளிகள் இல்லாதது. உதாரணமாய் ஒரு அரங்கிலோ, கல்லூரியிலோ, டான்ஸ் கிளப்பிலோ ஒரு இளம்பெண்ணை சந்தித்து பழக வாய்ப்பில்லை. அணுகவே சாத்தியமில்லாதவளாய் பெண் ஆகும் போது அவள் வேட்டையாடப்பட வேண்டியவள் என ஆண் நினைக்கிறான். தெஹ்ரானில் ஒரு பெண் தனியே நடந்து போனால் அவளை காரிலும் பைக்கிலுமாய் பின் தொடரும் ஆண்கள் “வருகிறாயா?” என நேரடியாய் கேட்பது வழக்கம் என்கிறார் கட்டுரையாளர். விளைவாக பெண்கள் ஒன்று ஏதாவது ஒரு ஆண் துணையுடன் செல்கிறார்கள். அல்லது காரில் செல்கிறார்கள். இப்படி பர்தா பெண்ணுக்கு எந்த பாதுகாப்பையும் அளிக்கவில்லை. அவளை பாதுகாப்பற்றவளாகவே மாற்றுகிறது என கட்டுரையாளர் முடிக்கிறார்
ஆனால் இந்த வாதத்தில் அப்பட்டமாய் ஒரு பிழை உள்ளது. பர்தா அணிவதால் பெண்கள் தொந்தரவு செய்யப்படுவதில்லை. இக்கட்டுரைக்கு எதிர்வினை செய்யும் பல வலதுசாரி இஸ்லாமியர் “பர்தா அணிந்த பிறகே இவ்வளவு குற்றங்கள் நடக்கிறதென்றால் இப்பெண்கள் சாதாரண உடையில் சென்றால் என்ன கதி ஆவார்கள்” என வாதிடுகிறார்கள். உண்மையில் சிக்கல் பர்தாவில் அல்ல, பாலியல் அடிப்படையில் மனிதர்களை கட்டுப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் இருக்கிறது.
 பாலியல் விருப்பம் உண்மையில் எங்கிருந்து வருகிறது எனும் கேள்வியை இது எழுப்புகிறது. பெண்ணுடல் அதன் இயல்பிலேயே பாலுணர்வு தூண்டுகிற ஒன்றா? இது சரி என்றால் நகரத்தில் தொடைகளையும் பாதி மார்புகளையும் வெளிப்படுத்தி ஆடையணியும் பெண்களை அங்குள்ள ஆண்களால் எப்படி சாதாரணமாய் கடந்து விட முடிகிறது? தேனாம்பேட்டையில் நான் ஒரு தகப்பனையும் மகளும் நடைபழக செல்வதை கண்டேன். அப்பெண் மிக மெல்லிசான இறுக்கமான டிஷர்ட்டும் பிருஷ்டம் பிதுங்கித் தெரியும்படியான டிராக் சூட்டும் அணிந்து இருந்தாள். என்னருகே இருந்த இயக்குநர் நண்பர் சொன்னார் “தன்னுடைய பெண் இப்படியான ஆடையில் இருக்கிறார் எனும் சிக்கலோ பதற்றமோ அத்தகப்பனுக்கு இல்லை. இது உயர்த்தட்டினர் இன்று வந்து சேர்ந்துள்ள மனநிலை”. சென்னைக்கு வந்த பிறகு தான் திறந்தவெளியில் திறந்தமார்க்கமாய் ஆடையணிந்த பெண்களை நான் காண நேர்ந்தது. ஆரம்பத்தில் எனக்கு கிளர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. எம்.ஏயில் என் வகுப்பில் ஒரு வடகிழக்கு மாநில பெண் படித்தாள். அவள் எங்கள் வகுப்புகள் ஆரம்பித்த புதிதில் ஒருநாள் வலை போன்ற ஒரு டிஷர்ட்டை அணிந்து முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். அவளது பிரா துலக்கமாய் தெரிந்தது. அன்று வகுப்புக்கு வந்த ஆசிரியர் அவளிடம் இருந்து பார்வையை விலக்க முடியாது முழித்த முழியும் அன்று மாணவர்கள் அடைந்த உஷ்ணமும் இன்றும் நினைவிருக்கிறது. அன்று அவளை சில பெண் பேராசிரியர்கள் அழைத்து கடுமையாய் கண்டித்த பின்னர் அவள் அப்படியான ஆடைகள் அணிவதை நிறுத்திக் கொண்டாள். நான் ஆசிரியர் ஆன பின்னர் வகுப்பில் கிளிவேஜ் காட்டும் அல்லது தொடை தெரிய உட்காரும் மாணவிகளால் தொந்தரவு அடைந்திருக்கிறேன். முடிந்தளவு அப்பெண்களின் பார்வை வட்டத்தில் இருந்து நகர்ந்து விடுவேன். இதனால் வகுப்பில் மாணவிகளுக்கு ஆடைக்கட்டுப்பாடுகளை விதிக்கப்பவர்களின் பக்கமுள்ள நியாயம் எனக்கு புரிகிறது.
ஆனால் தப்பு உடலை வெளிப்படுத்தும் ஆடை அணியும் பெண்களிடம் இல்லை என்பதும் எனக்கு புரிகிறது. பெண்ணுடல் நம் பார்வைக்கு பழகவில்லை. அதனால் அதன் மீது ஒரு கிளர்ச்சியும் புதிர்மையும் தோன்றுகிறது. பள்ளிக்காலத்தில் இருந்தே குறைவான ஆடையணியும் பெண்களை பார்த்து வளரக் கூடிய ஒருவருக்கு பெண்ணுடல் மீதான கவர்ச்சி வெகுவாக குறையுமே அன்றி கூடாது. உண்மையில் பெண்ணுடலில் எந்த கிளர்ச்சியும் அழகும் பாலுணர்வும் இல்லை. பெண்ணுடல் பற்றின நம் கற்பனையில் தான் இவையெல்லாம் ஒளிந்திருக்கின்றன. அதனால் தான் மிக மிக அழகாய் நினைக்கும் ஒரு பெண்ணை நிர்வாணமாய் பார்த்த பின் அவள் அழகு வெகுவாய் குறைந்து விட்டதாய் உங்களுக்கு தோன்றுகிறது. ஆடை என்பது பெண்ணழகை கற்பனை செய்வதற்கான ஒரு வெளியை உருவாக்குகிறது. எந்தளவுக்கு உடலை மறைக்கிறீர்களோ எந்தளவு தொலைவில் அதை வைக்கிறீர்கள் அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் அதிகமாகிறது. அதனால் தான் பர்தா கலாச்சாரம் பெண்ணுடல் மீது தேவையற்ற ஒரு கவனத்தை, ஆர்வத்தை தோற்றுவிக்கிறது. பெண்ணுடல் மீதான இந்த மிகையான முக்கியத்துவமும், அது தூண்டும் மிகையான கற்பனையும் தான் கணிசமான பாலியல் வன்முறைகளுக்கு காரணம். ஆண்களும் பெண்களும் தடையற்று பழகவும் அறியமும் சாத்தியமுள்ள சமூகத்தில் சாலையில் நடக்கும் ஒவ்வொரு பெண்ணையும் வெறிக்கண்களுடன் பின் தொடர ஆண்கள் இருக்க மாட்டார்கள்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சியின் அளவுகோல் எப்படி மாறி வந்துள்ளது என்பது இதற்கு ஒரு உதாரணம். தொண்ணூறுகளில் தாவணி அல்லது சேலை கட்டின பெண்ணின் தொப்புளை சில நொடிகள் குளோசப்பில் காட்டுவார்கள். அது பார்வையாளர்களை கிளுகிளுப்பூட்டியது. அது போல் மழைப்பாடலும் பிரபலமாய் இருந்தது நாயகிகளை வெள்ளாடை அணிவித்து மழையில் பரிதாபமாய் ஆட விடுவார்கள். ”சிவா” படத்தில் அப்படி ஒரு நடனக்காட்சி வந்த போது உள்ளாடை தெரியாத வண்ணம் ஷோபனாவுக்கு அவரது அம்மா ஒரு சிறப்பு ஆடை தைத்து அளித்ததாய் ஒரு பேட்டியில் அவர் சொல்லி இருந்தார். இன்று அவ்வாறு டிரான்ஸ்பெரண்ட் ஆடை மிக சாதாரணமாய் போய் விட்டது. பெண்களின் பிரா நாடா கண்டு ஒருவன் இன்று கிளர்ச்சி அடைகிறான் என்றால் அவனுக்கு ஏதோ மனக்கோளாறு என்று பொருள். அன்று இன்னும் கொஞ்சம் அதிகமாய் தொடையை காட்டி ஆடுவதற்கு சிலுக்கை போன்றவர்கள் தனியே இருந்தார்கள். அன்றைய சிலுக்கும் டிஸ்கோ சாந்தியும் அணிந்த ஆடைகளை இன்றைய பட நாயகிகள் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியிலே சாதாரணமாய் அணிகிறார்கள். மால்களில் அப்படியான ஆடையணிந்த பெண்களை நூற்றுக்கணக்கில் பார்க்க முடிகிறது. யாரும் அதனால் கிளர்ச்சி அடைவதில்லை. இன்றைய குலுக்கு நடிகைகள் நாயகியின் ஆடையை அணிந்து விகாரமான அசைவுகளை செய்பவர்களே அன்றி உடலை அதிகமாய் வெளிப்படுத்துகிறவர்கள் அல்ல. இன்றைய நாயகிகளின் பெரிய நெருக்கடியே என்னதான் குட்டியாய் ஆடையணிந்து வந்தாலும் பார்வையாளர்களுக்கு எளிதில் அலுத்து விடுகிறது என்பது.
 இது இன்னொரு விசயத்தை காட்டுகிறது. அன்றைய சிலுக்கும் சாந்தியும் செக்ஸியாய் தோன்றியதற்கு உடம்பை மறைத்து நடித்த ரேவதியும் சித்தாராக்களும் முக்கிய காரணங்கள். சித்தாராக்கள் பெண்ணுடலை மறைத்து உருவாக்கிய முக்கியத்துவத்தை சிலுக்குகள் அறுவடை செய்தார்கள். உண்மையான சிலுக்கு சித்தாரா தான். இன்று ஒரு சிலுக்கு தோன்றுவது அதனால் தான் சாத்தியமே இல்லை.
நான் இளங்கலை படிப்பு படித்த காலத்தில் என் சகமாணவன் ஒருவன் திரையரங்குக்கு சென்று ஒரு நீலப்படம் முதன்முதலாய் பார்த்தான். வெளியே வந்ததும் அவனுக்கு ஜுரம் வந்து விட்டது. இன்றைய மாணவர்கள் பள்ளியிலேயே மொபைலில் நிர்வாண உடல்களை கண்டு சலிக்கிறார்கள். அவர்களுக்கு ஜுரம் வருமா சொல்லுங்கள்?
நான் இதை ஒரு நேர்மறையான ஆரோக்கியமான மாற்றமாய் தான் பார்க்கிறேன். பெண்ணுடல் மீதான மாயம் கலைந்து சாதாரண சதையும் எலும்புமாய் அவர்களை இச்சமூகம் பார்க்க ஆரம்பிப்பது பெண் சமத்துவத்தின் ஆரம்ப படியாய் அமையும் (போர்னோ காணொளிகள் கட்டமைக்கு ஆண் அதிகாரம் இதன் எதிர்மறையான ஆபத்தான பக்கம் என்றாலும் கூட!).
மீண்டும் மாணவர் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு வருவோம். நான் சமீபமாய் ஐஐடியில் ஒரு நிகழ்ச்சியில் பார்வையாளராய் சென்றிருந்தேன். எனக்கு எதிராய் ஒரு பருத்த வட இந்திய பெண் ஷிம்மிக்கும் பிக்கினிக்கும் இடைப்பட்ட ஒரு ஆடை அணிந்து இருந்தாள். அங்கிருந்த எந்த ஆணும் அவளை பொருட்படுத்தவில்லை. அவர்கள் அவளைப் போன்ற நூற்றுக்கணக்கான பெண்கள் ஆயிரக்கணக்கான முறை பார்த்திருப்பார்கள். என் முன் திறந்திருந்த அவளது முக்கால் வாசி உடல் எனக்குள் இருந்த கிராமத்தானை சில நொடிகள் கவர்ந்தது. ஆனால் அத்தோடு அலுத்தும் போயிற்று. இதில் என்ன இருக்கிறது என தோன்றியது. நான் நிகழ்ச்சியில் உரையாற்றுபவரை கவனிக்க தொடங்கினேன். ஆடை குறைவாய் அணிகிற பெண்களின் கவர்ச்சியை ரத்து செய்வது அதே போன்ற குறைவான அடையணிந்த வேறு பல பெண்கள் தான். ஒருவேளை ஐஐடியில் அது போல் ஆடையணியும் பெண்ணே இல்லை என்றால் அவளை எந்த ஆணும் நிம்மதியாய் விட்டிருக்க மாட்டான்.
ஆக பெண்களை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதில் இந்த ஆடைக்கட்டுப்பாட்டுக்கு தான் பங்கு அதிகம். ஆடைக்கட்டுப்பாட்டை புரிந்து கொள்ள நாம் அதை பாலியலில் இருந்து பிரித்து பார்க்க வேண்டும். சமீபமாய் சாய்ராம் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான ஒழுக்க விதிமுறைகளை பட்டியலிட்டு ஒரு துண்டறிக்கையாய் வெளியிட்டு இருந்தார்கள். இதை ஒரு மாணவி ஸ்கேன் செய்து பேஸ்புக்கில் வெளியிட சர்ச்சைக்குள்ளானது. இந்த விதிமுறைகள் வேடிக்கையாகவும் மிக பிற்போக்கானதாகவும் உள்ளன. உதாரணமாய் பெண்கள் பெரிய காதணியோ மோதிரமோ அணியக் கூடாது. பட்டியாலா, அனார்க்கலி வகையான பேண்ட்ஸ் அணியக் கூடாது. பெரிய, விதவித நிறங்களிலான டிஸைனர் கைகடிகாரங்கள் அணியக் கூடாது, கல்லூரிக்குள் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது, பைக், கார் ஓட்டக் கூடாது போன்ற விநோதமாய் விதிமுறைகளுடன் வழக்கமான ’முடியை கட்ட வேண்டும், துப்பட்டாவில் இருபக்கமும் மார்பை மூடி பின் செய்ய வேண்டும், ஆண்களிடம் பேசக் கூடாது’ போன்றவையும் உள்ளன. இந்த விதிமுறைகளை உருவாக்கினவர்கள் உண்மையில் பெண்விடுதலைக்கு எதிரானவர்களோ ஒழுக்க காவலர்களோ அல்ல. தம் கல்லூரியில் உள்ள மாணவர்கள் யாரை காதலித்தாலும், யார் மனதில் சபலம் உண்டு பண்ணினாலும் இந்நிர்வாகத்துக்கு உண்மையில் எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் இப்படியான பாலியல் ஒழுக்கத்தை நிர்பந்திப்பதற்கு காரணங்கள் வேறு.
ஒன்று, பெரும்பாலான பெற்றோர்கள் இப்படியான கடும் ஆடை மற்றும் பாலியல் கட்டுப்பாடு உள்ள கல்லூரிகளுக்கு தாம் பிள்ளைகளை அனுப்புவார்கள். மேற்சொன்ன அறிக்கையை பார்க்க நேர்ந்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். பெற்றோர்கள் வெளியில் இருந்து அளிக்கும் பெரும் அழுத்தம் தனிமனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் எம்.ஸி.ஸி போன்ற கல்லூரிகளையே பாலியல் ஒழுக்கம் நோக்கி நகர்த்தி உள்ளது. இரண்டாவது காரணம் மாணவர்களை கட்டுப்படுத்துவது. கல்லூரி வளாகத்தில் நுழையும் மாணவர்கள் இயல்பாகவே சுதந்திரமாய் இருக்க விரும்புவார்கள். நீண்ட காலம் பள்ளி எனும் கூண்டிலிருந்து இருந்து வெளிவரும் அவர்கள் தப்பி நகரத்துக்கு வந்த ஒரு வனமிருகம் போல் இருப்பார்கள். 18 வருடம் அனுபவிக்காததை எல்லாம் ஒரே நாளில் அடைய வேண்டும் எனும் பரிதவிப்பை நான் முதலாம் வருட மாணவர்களிடம் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரே வருடத்தில் அவர்கள் கல்லூரியும் மற்றொரு சிறை தான் என புரிந்து புலன் அடங்கி போவார்கள். ஆனால் இத்தகைய ஆயிரம் மாணவர்களை ஐம்பதோ நூறோ ஆசிரியர்களும் நிர்வாகிகளும் சேர்ந்து கட்டுப்படுத்துவது என்பது உண்மையில் திகைப்பூட்டும் செயல். ஒரு கல்லூரியின் ஐம்பது சதவீத மாணவர்கள் ஒன்றிணைந்து கிளர்ச்சி செய்தால் அக்கல்லூரியை கதிகலங்க வைக்க முடியும். நான் வேலை செய்த கல்லூரியில் ஒரு மாணவனை ஒரு ஆசிரியர் சட்டையை பிடித்து தள்ளினார் என்பதற்காய் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு வந்து கட்டிடங்களை அடித்து நொறுக்கினார்கள். மரங்களை வெட்டி வீழ்த்தினார்கள். ஆசிரியர்களின் கார்களை உடைத்தார்கள். இப்படி நேரக் கூடும் எனும் அச்சம் ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் மனதின் ஆழத்தில் எப்போதும் உண்டு. இம்மாணவர்களை அடித்து கட்டுப்படுத்த முடியாது. வெளியே அனுப்புவது, அபராதம் விதிப்பதும் போன்ற தண்டனைகளும் பலனளிக்காது. அவர்களின் தன்னுணர்வு அவர்களின் உடலில் இருக்கிறது. ஆடை ஒழுக்கம் மற்றும் பாலியல் ஒழுக்கத்தை வலியுறுத்தும் போது தம் உடல் தம் வசமில்லை எனும் உணர்வு இம்மாணவர்களுக்கு வரும். பிறகு அவர்களை யானையை அங்குசம் கொண்டு அடிபணிய வைப்பது போல் கல்லூரி நிர்வாகம் கட்டுப்படுத்தலாம்.
எப்படி இந்துத்துவாவுக்கும் இந்து மதத்துக்கும் சம்மந்தமில்லையோ அது போல் பாலியல் ஒழுக்கவாதத்துக்கும் பாலியலுக்கும் தொடர்பில்லை.
ன்றி: உயிர்மை, அக்டோபர் 2015

No comments: