Tuesday, October 13, 2015

ஏன் நயன்தாரா சாஹலின் செயற்பாட்டை எதிர்க்கிறேன்?நயன்தாரா சாஹல் தனது சாகித்ய அகாதெமி விருதை திரும்ப அளிக்க முன்வந்ததை தொடர்ந்து இப்போது உ.பி., தில்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வேறு சில விருதாளர்களும் அதே போல் விருதை திரும்ப அளிப்பதாய் கூறி உள்ளார்கள். சாஹல் இன்று அகாதெமிக்கு ஒரு லட்ச ரூபாய் காசோலையை அளித்து தனது பரித்தொகையையும் திரும்ப அளித்தார். தமிழக எழுத்தாளர்களில் சிலரும் கூட இவ்விதம் விருதை திரும்பத் தர விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இதை ஒட்டி மீடியாவில் ஒரு அலை கிளம்பி உள்ளது. இந்த எழுத்தாளர்கள் தியாகிகள் என்றும், துணிச்சலாய் அரசை எதிர்ப்பவர்கள் என்றும் ஒரு சித்திரம் மக்களிடம் தோன்றி உள்ளது. பொதுப்படையாய் இது ஒரு நேர்மறையான, வரவேற்கத்தக்க அரசியல் மாற்றமாய் தோன்றலாம். ஆனால் அது உண்மை அல்ல. நாம் இந்த சந்தர்பத்தில் செண்டிமெண்டலாய் யோசிக்கலாமல் நிதானமாய் இச்செயல்களின் பலன் என்னவாக இருக்கும் என அலச வேண்டும்.

இரண்டு வகையான அரசியல் உள்ளது. ஒன்று மீடியா அரசியல். இன்னொன்று நடைமுறை அரசியல். மீடியா அரசியல் அதிர்ச்சி மதிப்புள்ள காரியங்களை ஒரு பொதுப்பிரச்சனை சார்ந்து செய்வது. உதாரணமாய், சமீபமாய் ஒரு கல்லூரியில் ஜீன்ஸ் அணிய அனுமதி அளிக்காததால் ஒரு மாணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இது அசட்டுத்தனம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் தனிமனித உரிமைகள் மறுக்கப்படும் ஒரு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகவும் இதைப் பார்க்கலாம். ஆடை சம்மந்தப்பட்ட சின்ன விசயம் இது என்றால் லட்சம் தமிழர்களின் உயிரிழப்பை முன்னிட்டு முத்துக்குமரன் தீக்குளித்ததும் இது போன்ற அதிர்ச்சி மதிப்பு போராட்டம் தான். இது போன்ற போராட்டங்கள் ஒரு சின்ன தீப்பொறி போல் நடைமுறை அரசியல் போராட்டங்களை முடுக்கி விட பயன்படும். ஒரு கொள்கை பிரச்சனைக்கு எதிரான கிளர்ச்சிக்கும், அநீதி மீதான கோபத்துக்கு உணர்ச்சிகரமான நியாயத்தை இவை அளிக்கும்.
 ஆனால் அத்தோடு இது போன்ற அதிர்ச்சி மதிப்பு போராட்டங்களின் தேவை முடிந்து போகும். முத்துக்குமரனை தொடர்ந்து இன்னும் நூறு பேர் தீக்குளித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? மீடியாவின் டி.ஆர்.பி எகிறி இருக்கும். மக்கள் தொடர்ந்து கவனம் கொள்ளும் ஒரு தீப்பிடித்த சூழல் உருவாகி இருக்கும். ஆனால் அதே மக்களின் கவனம் ஈழத்தில் இருந்து இளைஞர்களின் உயிர் மீது திரும்பி இருக்கும். எல்லாரும் தீக்குளிப்பை பற்றி பேசுவார்கள். ஈழத்தை மறந்து விடுவார்கள். பின்னணியில் இருக்க வேண்டியது முன்னணியாகி விடும். சாஹல் துவக்கி வைத்த விருது திரும்பி வழங்கும் வைபவம் இப்போது இந்துத்துவா வன்முறையின் பின்னணியாக இல்லாமல் முன்னணி விசயமாக மாறி இருக்கிறது.
 மீடியா தொடர்ந்து அரசுக்கும் எழுத்தாளர்களுக்குமான இந்த குறியீட்டு மோதலை மட்டுமே பேசுகிறது. ஏன் பிரதமர் பதிலளிக்கவில்லை, ஏன் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டார்கள், ஏன் பேச்சுரிமை மறுக்கப்பட்டது என விவாதம் திசை திரும்பி விட்டது. ஏன் ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போதும் பா.ஜ.க திட்டமிட்டு மதக் கலவரங்களை தோற்றுவிக்கிறது என்றல்லவா நாம் கேட்க வேண்டும்? ஆனால் இப்போது பிரச்சனை இஸ்லாமியரின் ஒடுக்குமுறையில் இருந்து எழுத்தாளர்களின் பேச்சுரிமை மறுப்புக்கான கண்டனமாய் முனை மழுங்கி போய் விட்டது. இதற்கு காரணம் சாஹலின் அரசியல் புரிதலற்ற செயல்பாடுகளும் அவரைத் தொடர்ந்து பிற எலைட் எழுத்தாளர்களும் தம்மை முன்னிலைப்படுத்தி செய்த பரபரப்பு அரசியலும் முக்கியமான விவாதத்தை நீர்த்துப் போக செய்து விட்டது என்பது.
மீடியா அரசியலின் சிக்கல் இது. மீடியா அரசியலால் மக்களுக்கு பயன் இல்லை. அது மீடியாவின் பசிக்கான தீனியாக, மக்களின் பொழுதுபோக்காக அரசியல் பிரச்சனைகளை மாற்றி விடும். இப்போது தோன்றியுள்ள விருது சர்ச்சைகளால் தாத்ரி வன்முறை, மாட்டுக்கறி தடை, இந்துத்துவா படுகொலைகள் தேசிய கவனம் பெறும் என நினைத்தால் நம்மை விட முட்டாள் வேறு யாருமில்லை! திரைத்துறையினர் ஒன்றாய் கர்நாடகத்திடம் நீர் கேட்டும், ஈழப்போரை நிறுத்தக் கோரியும் உண்ணாவிரதம் இருந்த போது என்ன நடந்ததோ அதுவே இப்போதும் நடக்கும்.
இன்னொரு வகை அரசியல் நடைமுறை அரசியல். நம்மூரில் அ.மார்க்ஸ், வா.கீதா, எஸ்.வி.ஆர் போன்றோர் இந்துத்துவாவுக்கு எதிராய் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாய் போராடி வருகிறார்கள். அவர்கள் என்றுமே விருதை திரும்ப அளிப்பது, தீக்குளிப்பது, நிர்வாண ஊர்வலம் போவது, சாணியை கரைத்து தலையில் ஊற்றுவது போன்ற அதிர்ச்சி மதிப்பு காரியங்களை செய்ய மாட்டார்கள். அவர்கள் கூட்டங்கள் நடத்துவார்கள். மீடியாவில் பேசவும் எழுதவும் செய்வார்கள். கடந்த முப்பது வருடங்களில் நடந்த பல்வேறு அரசியல் சமூக அநீதிகள் ஒவ்வொன்றுக்கும் இவர்கள் எதிர்வினை ஆற்றி இருக்கிறார்கள். இவர்களிடம் ஒரு தொடர்ச்சி உள்ளது. ஆனால் சாஹல் இதற்கு முன் கடைசியாய் முனைந்து போராடியது இந்திரா காந்தியின் நெருக்கடி காலத்தில் தான். அதன் பிறகு நடந்த பல்வேறு அரசியல் சமூக அநீதிகளுக்கு அவரது எதிர்வினை என்னவென யாருக்கும் தெரியாது. நீண்ட காலம் கழித்து அவர் இப்போது தன் மௌனத்தை கலைத்து மீண்டும் எதிர்ப்பு அரசியல் செய்கிறார். இந்த தொடர்ச்சியின்மை தான் இவர்களின் ஆதார பிரச்சனை.
 இப்படி தொடர்ச்சியற்ற அரசியல் போராளிகளால் பயனை விட ஆபத்து தான் அதிகம். அடுத்த மாதம் பாருங்கள் இப்போது விருதை திரும்ப அளித்தவர்கள் தமது உல்லாச எலைட் வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள். ஆனால் வா.கீதாவும் மார்க்ஸும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் அறிவுத்தளம் என்றால் செயல்பாட்டுத் தளத்தில் அரைநூற்றாண்டாக இடதுசாரிகள் இங்கு களப்பணி ஆற்றுகிறார்கள்.
ஒரு சமூக அநீதி நிகழும்போது அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, போராட்டத்துக்கு ஆதரவான ஒரு கருத்துநிலையை மக்கள் மனதில் தோற்றுவிப்பது, அதனை வளர்த்தெடுத்து களத்தில் போராட்டமாய் வடித்தெடுப்பது ஆகிய காரியங்களை நடைமுறை அரசியல் பணியாளர்கள் செய்வார்கள். ஆனால் இப்போது விருதுகளை திரும்ப அளிப்பவர்கள் இப்படியான சிவில் சமூக போராளிகள் அல்ல. இவர்கள் எப்போது கருத்துரிமை விசயத்தில் மட்டுமே கொடி பிடிப்பார்கள். அதை விட பெரிய குற்றங்கள், அநீதிகள் நடக்கும் போது மௌனம் காப்பார்கள். சாஹல் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
நீங்கள் கேட்கலாம்: குறைந்தது இதையாவது செய்து ஒரு சமூக கவனம் ஏற்படுத்தினார்களே, அதை பாராட்டலாமே என்று. அப்படி ஒருவர் கவனத்தை பிரச்சனை மீது திருப்பி விட்டு அதை ஒரு நேரடியான தர்ணா, ஊர்வலம், கருத்தரங்கு, விவாதம் போன்ற போராட்டங்களாய் மாற்றி இருந்தால் நிச்சயம் பாராட்டலாம். அப்போது மக்கள் இதை ஒரு சமூக பிரச்சனை சார்ந்த போராட்டமாக பார்ப்பார்கள். சிவில் சமூகமும் மீடியாவும் இந்துத்துவா அரசியலின் ஆபத்துகள் பற்றி யோசித்திருக்கலாம். ஒருவேளை உடனடி கவனம் கிடைக்காவிட்டாலும் இத்தகைய போராட்டங்கள் ஒரு நீண்ட எழுச்சிக்கான அடித்தளத்தையாவது அமைக்கும். நூறு பேர் சேர்ந்து ஊர்வலம் போனால் எந்த அரசும் சற்று கவலைப்படும். ஆனால் இந்த எழுத்தாளர்கள் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. உதிரி உதிரியாய் அவர்கள் தம் விருதை முன்வைத்து எதிர்ப்பை காட்டியது அரசை சற்றும் பதற்றப்பட வைக்காது. ஏனென்றால் இதன் மூலம் பிரச்சனை நீர்த்துப் போகும் என அரசு நன்றாய் அறியும்.
சரி எழுத்தாளர்கள் விருதை திரும்ப அளிக்கிறார்கள், மற்ற நடைமுறை அரசியல் போராளிகள் அதை போராட்டமாக்கலாமே என நீங்கள் கேட்கலாம். இவர்கள் தினம் தினம் இதை தமது தனிப்பட்ட எதிர்ப்பாக மாற்றி எந்த பொது விவாதத்துக்கும் சாத்தியமில்லாத இடமில்லாத நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். உதாரணமாய் கடந்து ஒரு வாரமாய் வந்த மீடியா ரிப்போர்டுகளை, கட்டுரைகளை பாருங்கள். “சகிப்பின்மைக்கு” எதிரான ஒரு பொது சிக்கலாக தான் மீடியா இப்போது இதைப் பார்க்கிறது. எழுத்தாளர்களின் கொலையையும் ஒரு இஸ்லாமிய முதியவரின் கொலையையும் என்று சாஹல் ஒரே புள்ளியில் இணைத்தாரோ அன்றே பிரச்சனை நீர்த்து விட்டது. ஒன்றிரண்டு எழுத்தாளர்கள் கொல்லப்படுவதையும் ஆயிரக்கணக்கான அப்பாவி சிறுபான்மையினர் திட்டமிட்டு வேட்டையாடப்பட்டதையும் எப்படி நாம் ஒரே புள்ளியில் இணைக்க முடியும் சொல்லுங்கள்.
இதையெல்லாம் யோசிக்க நமக்கு நேரமில்லை. நமக்கு இரண்டு நிமிட தியாகிகள், இரண்டு நிமிட கலகவாதிகள் தேவைப்படுகிறார்கள். அதனால் தான் சாஹலை பகடி செய்து நான் எழுதியதும் ஒரு கூட்டம் வந்து என்னை திட்டிப் போனார்கள். அவர்கள் மனதில் சாஹல் பற்றி உள்ள சித்திரம் வேறு: சாஹல் வயதானவர். அவர் தன்னலமற்று தன் விருதை மோடி அரசுக்கு எதிராக திரும்ப அளிக்கிறார். அவரை எப்படி பழிக்கலாம்? இப்படி யோசிக்கிறார்கள். ஆனால் அவர் செய்தது குட்டையை குழப்பும் செயல் என இவர்களுக்கு புரியவில்லை. எழுத்தாளனை கொச்சைப்படுத்தக் கூடாது என்கிறார்கள். எழுத்தாளன் என்ன கடவுளா? சாதாரண மனிதன் தானே. அவனது அரசியல் குழப்படியாய், கவனச்சிதறல் ஏற்படுத்துவதாய், வெற்று பரபரப்பாய் இருந்தால் அவனை கிண்டலடிப்பதிலோ கேள்வி கேட்பதிலோ என்ன தவறு? ஆர்.எஸ்.எஸுக்கு பசு புனிதம் என்றால் உங்களுக்கு இப்போது விருதை திரும்ப அளிக்கும் சாஹல் போன்றவர்கள் புனிதப் பசுவா? அவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?
விருதை திரும்ப அளிப்பது தியாகம் இல்லையா? சற்றும் இல்லை. சாகித்ய அகாதெமி போன்ற விருதெல்லாம் அது அளிக்கப்படும் பத்து நாட்களுக்கு மேல் மீடியா மதிப்பு இல்லாதவை. கூடிய பட்சம் ஒரு மாதமோ மூன்று மாதங்களோ மீடியா உங்களைப் பற்றி கவனம் கொள்ளும். ஆனால அதன் பின் யாரும் சீந்த மாட்டார்கள். ஆனால் ஒருவர் விருதை திரும்ப அளிப்பதாய் சொன்னால் அவரது புகழோ அங்கீகாரமோ குறையாது. அப்படி கூறுபவர்களிடம் இருந்து விருதை ரத்து செய்யும் எந்த சட்டமும் சாகித்ய அகாதெமியிடம் இல்லை. பணத்தை அது திரும்ப கேட்காது. நாளை மீடியா உங்களை விருது பெறாதவர் எனக் கூறாது. பெற்று திரும்ப அளித்தவர் என்றே சொல்லும்.
 விருதை ஒருவர் வாங்கினதில் இருந்தே அது அழியாத அங்கீகாரமாய் மாறுகிறது. வரலாற்றில் இருந்து அதை அழிக்க இயலாது. மாறாக திரும்ப அளிப்பதாய் சொல்லும் போது கூடுதலாய் ஒரு மாதம் குறிப்பிட்ட ஆளுக்கு மீடியா கவனமும் மக்கள் அபிமானமும் கூடும். இப்போது சொல்லுங்கள் – விருதை திரும்ப கொடுப்பது லாபமா நஷ்டமா? திரும்பவும் நான் எழுத்தாளனை கொச்சைப்படுத்துவதாய் சொல்லாதீர்கள். நாம் ஒரு நடைமுறை உலகில் வாழ்கிறோம். இங்கே எல்லா விசயங்களுக்கும் பெறுமதி உள்ளது. ஒன்றை கைவிடுவதனால் என்ன இழப்பு என்று கணக்கு போடாமல் நாம் தியாகம் செய்ய மாட்டோம்.
தனது சாகித்ய அகாதெமி யுவ புரஸ்காரை திரும்ப அளித்துள்ள அமென் சேதியை எடுத்துக் கொள்வோம். அவர் கொலொம்பியா பல்கலைகழகத்தில் இதழியல் படித்தவர். சமூகத்தின் மேற்தட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படுகிற சொகுசு அமெரிக்க கல்வி. அவருக்கு யுவ புரஸ்கார் ஐம்பதினாயிரம் வெறும் ஒரு பெரிய தொகை அல்ல. அவருக்கு இது ஒரு பெரிய இழப்பு அல்ல. அவர் தியாகம் செய்ய வேண்டுமென்றால் வேறொன்று செய்யலாம். அவர் இந்து பத்திரிகையின் ஆப்பிரிக்க கரஸ்பாண்டென்ட்டாக இருக்கிறார். ஈழப் போரின் படுகொலைகளை கண்மூடி ஆதரித்த, ராஜபக்சேவை கொண்டாடின பத்திரிகை இந்து பத்திரிகை. ஏன் தமிழர்களின் ரத்தம் மட்டும் மனித ரத்தம் இல்லையா? தனது பத்திரிகை முதலாளியின் அரசியல் சார்பை கண்டித்து அவர் ஏன் வேலையை ராஜினாமா செய்யவில்லை? தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர்களிடம் நான் இதை கோர மாட்டேன். அவர்கள் அன்றாடம் காய்ச்சிகள். ஆனால் சேதி போன்ற பணக்காரர்கள் சுலபமாய் வேலையை விட முடியும். அது தியாகம். ஆனால் இவர்கள் அதையெல்லாம் செய்ய மாட்டார்கள். சுதந்திர போராட்டத்தின் போது பல படித்த இளைஞர்கள் பிரிட்டீஷ் அரசாங்கத்தின் கீழ் வேலை செய்து வசதியாய் வாழ விரும்பாமல் போராடி சிறையில் வாடினர். அவர்கள் லட்சியத்துக்காய் தியாகம் செய்தனர். இவர்கள் செய்வது தியாகம் அல்ல. பெரிய இழப்புகள் இல்லாத ஒரு சின்ன எதிர்வினை இது. இட்லிக்கு சாம்பாரை தொடாமல் சட்னியை மட்டும் தொட்டு சாப்பிடுவது போன்ற காரியம். இதற்காய் நாம் இவர்களை புனித பசுக்களாக ஆக்க வேண்டியதில்லை. இவர்களின் மேலோட்டமான அரசியலால் எப்படி ஒரு முக்கிய பிரச்சனை திசை திரும்பி உள்ளது என்றே யோசிக்க வேண்டும்.
நான் சொன்ன இரு வகையான அரசியல்களையும் இணைத்தவர் சசி பெருமாள். அவரது மரணத்தை ஒட்டி ஆளாளுக்கு தற்கொலை செய்திருந்தால் போராட்டம் பிசுபிசுத்து போயிருக்கும். ஆனால் சசி பெருமாள் தான் வாழ்ந்த காலத்தில் காந்திய கொள்கைகளுக்காய் அமைப்பு ரீதியாய், களத்தில் இறங்கி நீண்ட காலமாய் போராடியவர். இதே முறையில் அதிர்ச்சி மதிப்பு மற்றும் கள அரசியலை தேர்தல் அரசியல் எனும் புள்ளியில் இணைத்தவர் கேஜ்ரிவால். அவரது கொள்கை பிடிப்பற்ற போராட்டங்களை நான் எதிர்த்திருந்த போது நடைமுறையில் தன் எண்ணங்களை சாத்தியப்படுத்த அவர் தொடர்ந்து முனைந்து வெற்றி பெற்றதை பாராட்டுவேன். ஒரு மாதம் கழித்து இந்த எழுத்தாளர்கள் மதவாதத்துக்கு எதிராய் தில்லியில் தர்ணா செய்தாலோ, அல்லது இந்துத்துவாவை எதிர்க்கும் கூட்டமைப்பை ஆரம்பித்தாலோ நான் இந்த குற்றச்சாட்டுகளை பின்வாங்குகிறேன். ஆனால் அப்படி நடக்காது என நிச்சயம் அறிவேன். ஒரே மழையில் காணாமல் போகும் மீடியா காளான்கள் இந்த அதிர்ச்சி மதிப்பு போராளிகள். இந்துத்துவா வன்முறை குறித்த விவாதத்தை தம்மைப் பற்றின விவாதமாய் மாற்றிக் கொண்டவர்கள்.
என்னிடம் ஒரு நண்பர் கேட்டார்: ஏன் விருதுப் பணத்தை திரும்ப அகாதெமியிடம் அளிக்க வேண்டும்? அதை இந்த கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கலாமே? இது எனக்கு முக்கியமான கேள்வியாக பட்டது. இந்த எழுத்தாளர்களுக்கு உண்மையிலேயே பொறுப்புணர்வு இருந்தால் அகாதெமிக்கு இத்தொகையை திருப்பி அளிக்காமல் மக்களுக்கு உதவுவார்கள். பத்து பேர் ஆளுக்கு ஒரு லட்சம் திரட்டினாலே ஒரு கோடி ஆகிற்றே! இதை அகாதெமிக்கு அளித்தால் அதை வாங்கி அகாதெமி என்ன செய்யும்? இது சம்மந்தமான எந்த திட்டவட்டமான நடைமுறையும் அகாதெமிக்கு இல்லை. ஆகையால் இத்தொகையால் பிரதமரின் பொது நிதிக்கு செல்லும். தேவையா?
உண்மையிலேயே சமூக நோக்கு இருந்தால் சாஹலும் கூட்டாளிகளும் அரசுக்கே பணத்தை திரும்ப கொடுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் தாம் உத்தமர்கள் என நிரூபிப்பது தான். விருதை கொடுத்தவர்கள் பணத்தை ஏன் திரும்ப கொடுக்கவில்லை என நாளை யாரும் கேட்டு விடக் கூடாதல்லவா? அந்த சுயநல தேவைக்காக தான் பணத்தை திரும்ப கொடுக்கிறார்கள். இந்த பிரச்சனையை எப்படி இவர்கள் தனிமனித கௌரவம், நிலைப்பாடு, ஈகோ சார்ந்த ஒன்றாய் மாற்றி விட்டார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
சாஹலை அரசியல் புரிதலற்ற ஒரு பணக்கார சீமாட்டி என நான் பகடி செய்ததற்கு நண்பர் கிருஷ்ண பிரபு நான் யுவ புரஸ்கார் விருதுக்கு தகுதியற்றவன் என மறைமுகமாய் சுட்டி எழுதி இருந்தார். அவர் இதை ஏன் இவ்வளவு தாமதமாய் புரிந்து கொண்டிருக்கிறார் என எனக்கு தெரியவில்லை. விருது கிடைத்ததில் இருந்தே அது எனக்கு துயரத்தை மட்டுமே தந்திருக்கிறது என நான் பலமுறை எழுதியிருக்கிறேன். என்னுடன் எழுத ஆரம்பித்த லஷ்மி சரவண குமார், போகன் சங்கர், ஸ்டாலின் ராஜாங்கம் மற்றும் பல என் வயது அல்லது என் சமகால எழுத்தாளர்கள் என்னை விட நூறு மடங்கு மேலான எழுத்தாளர்கள். இதையும் பதிவு செய்திருக்கிறேன். ஆகையால் ஒருவர் நான் எந்த மரியாதைக்கும் தகுதி அற்றவன் என நினைத்தால் அதை தயங்காமல் ஏற்பேன். உண்மையில் கிருஷ்ண பிரபு குறிப்பிட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் நினைப்பதை தான் அவரும் சொல்லி இருக்கிறார்.

No comments: