Thursday, October 8, 2015

தமிழ் எழுத்தாளன் விருதை திரும்ப அளிக்க வேண்டுமா?
இதுவரை மூன்று எழுத்தாளர்கள் மோடி அரசை கண்டித்து தம் சாகித்ய அகாதெமி விருதை திரும்ப கொடுத்திருக்கிறார்கள். விருதை திரும்ப அளிக்கும் மனநிலை ஒரு தொற்றுநோய் போல், தற்கொலை விருப்பம் போல் பரவுகிறது. தமிழில் எழுத்தாளர்களும் திரும்ப கொடுப்பார்களா என கேட்கிறார்கள். எனக்கு இது ஒரு கவன ஈர்ப்பு, குறியீட்டு நடவடிக்கையை நாம் தவறாய் புரிந்து கொள்வதன் விளைவு என தோன்றுகிறது.
நான் ஏற்கனவே சாஹல் பற்றி ஒரு விசயம் எழுதியிருந்தேன். கூட்டங்கூட்டமாய் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட இரு வருடங்கள் கழித்து காங்கிரஸ் அரசாட்சியின் போது அவர் எந்த தயக்கமும் இன்றி சாகித்ய அகாதெமி விருதை பெற்றார். இத்தனைக் காலமும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசுகளின் ஆட்சிகளில் பல தவறுகள், குற்றங்கள், பாதகங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சாஹல் அப்போதெல்லாம் பொறுத்தார். இப்போது அவர் அவநம்பிக்கையின் உச்சிக்கு சென்று விட்டார். இந்த அரசுடன் விவாதிக்கவே முடியாது எனும் கசப்புணர்வில் அவர் விருதை திருப்பி அளிக்க போவதாய் சொல்கிறார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் விருதை திரும்ப அளிக்கிறார்கள்.


ஆனால் இது ஒரு போராட்ட முறைமை அல்ல. பாதிக்கப்பட்ட பெண்களூக்கு நீதி வேண்டி பெண்கள் மேலாடை இன்றி பொதுவில் சென்று போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இதற்காய் ஊரிலுள்ள மிச்ச பெண்களிடம் எல்லாம் போய் நீங்களும் மேலாடை இன்றி நடக்க வேண்டும் என கேட்க முடியாது. ஒரு பிரச்சனை கொழுந்து விட்டு எரியும் போது சிலர் தம்மை தீக்கிரையாக்குவார்கள். அதற்காய் போராடுபவர்கள் எல்லாரும் தம்மை எரிப்பதில்லை. அப்படி எரித்தால் போராட ஆட்களே இருக்க மாட்டார்கள். வறுமையின்/மணவாழ்க்கையின் கொடுமை தாளாமல் குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் குதித்து சாகும் அம்மாக்கள் உண்டு. அதற்காய் பிரச்சனை ஏற்படும் போது எல்லாரும் பிள்ளைகளை கிளற்றில் எறிய வேண்டுமா? உணர்ச்சி மேலிடும் போது நாம் நம் உடைமை, அங்கீகாரம் அல்லது உயிரை கூட தியாகம் செய்ய நினைக்கலாம். அதற்கு ஒரு மதிப்பு நிச்சயம் உண்டு. ஆனால் ஒரு குறியீடு என்பதைக் கடந்து இச்செயல்களுக்கு அர்த்தம் இல்லை. எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப கொடுப்பதால் இந்துத்துவா படுகொலைகள் நின்று விடும் என எதிர்பார்ப்பது பத்தாம்பசலித்தனம்.

 மதப்படுகொலைகள் மற்றும் மனித உரிமை குற்றங்களுக்கு எதிராய் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைவது தான் சரியான போராட்ட முறைமை. ஒருவர் விருதை திரும்ப அளிப்பது துவக்கமாய், உணர்ச்சிகரமான இணைப்பு புள்ளியாய் இருக்கலாம். ஆனால் எழுத்தாளர்கள் மொத்தமாய் விருதுகளை திரும்ப அளிப்பது என்பது இப்போராட்டத்தை நீர்த்து போகவே வைக்கும். அடுத்த வாரத்துடன் மக்களூம் மீடியாவும் இதில் ஆர்வம் இழந்து விடுவார்கள். பத்து நாள் கழித்து நீங்கள் விருதை திரும்ப அளிப்பதாய் சொன்னால் ஒருவரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் நீங்கள் வாங்கிய போதே அவர்கள் பொருட்படுத்தவில்லையே!

ஆனால் எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக மீடியாவிலும் பொதுவெளியிலும் இந்துத்துவா அடக்குமுறைக்கு எதிராய் செயல்படுவதற்கு ஒரு நீடித்த தாக்கம் இருக்கும். இந்தியாவில் முற்போக்காளர்கள் ஒரு சிறிய கூட்டம் மட்டுமே. அவர்களுக்கு அதிகாரமோ மக்கள் பின்புலமோ குறைவு. ஆனால் சமூக மனசாட்சியிடம் தொடர்ந்து உரையாட அவர்களால் மட்டுமே முடியும். ஒருவேளை ஒருவர் தீக்குளிப்பது போன்றோ விருதை திரும்ப கொடுப்பது போன்றோ இவ்வுரையாடல் பரபரப்பாய் இருக்காது. ஆனால் நீதியை காப்பாற்றுவதற்கு நீண்ட கால போராட்டங்களும் உரையாடல்களும் தான் அவசியமே அன்றி தற்காலிக சலசலப்புகள் அல்ல. வா.கீதாவோ, அ.மார்க்ஸோ தீக்குளிக்கவோ நிர்வாண ஊர்வலம் செல்லவோ மாட்டார்கள். அவர்களுக்கு என்று ஒரு நீடித்த போராட்ட பாணியும் வரலாறும் உள்ளது. நாம் இன்று நின்று பேசும் களத்தை அவர்கள் உருவாக்கி அளித்தார்கள். ஒரு பரபரப்பின், திடீர் கோபத்தின் அடிப்படையில் கிளம்பும் சமூக போராட்டம் சீக்கிரமே பிசுபிசுத்துப் போகும். டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் போல. கடைசியில் எல்லாமே மீடியா யானைக்கு கவளங்களை ஊட்டும் வேடிக்கை செயலாக மாறி விடும்.

இடதுசாரி இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நிலப்பிரபுத்துவ குடும்பங்களை சேர்ந்தவர்களும் தான் கணிசமாய் கலந்து தீவிரமாய் போராடினார்கள். அவர்கள் தம் சொத்துக்கள் அனைத்தையும் கைவிட்டு நிலங்களை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கவில்லை. அப்படியான ஸ்டண்டுகளுக்கு நடைமுறையில் இடமிருப்பதில்லை. ஒரு அமைப்புக்குள் இருந்தபடி சிறுக சிறுக அதனுடன் உரையாடி அதை மாற்றுவது தான் நம்மால் சாத்தியமான ஒன்று. ஒரு சமூக பிரச்சனைக்கு மீடியா இரண்டு நாள் அவகாசம் மட்டுமே அளிக்கும். அதற்காய் இரண்டே நாளில் அது முடிந்து போகாது. இரண்டு நாட்களுக்குள் எல்லாரும் தத்தம் ஆடைகளை களைந்து, உயிரை துறந்து, விருதுகளையும், அங்கீகாரங்களயும் விட்டுக் கொடுத்து, குழந்தைகளை கிணற்றில் எறிந்து மீடியா ஆவேசத்தில் பங்கு கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் பத்தினி இல்லை என வற்புறுத்துவது என்ன அபத்தம்!

அதனால் நண்பர்களே சில நாட்களில் இப்பிரச்சனை முடிந்ததும் விருதை திரும்ப அளித்த எழுத்தாளர்கள் தம் சோலியை பார்க்க போய் விடுவார்கள். இந்துத்துவாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறவர்கள் எந்த சத்தமும் இன்றி அதை தொடர்ந்து நடத்துவார்கள். மதவாத அநீதிகள் அடுத்த நூற்றாண்டிலும் தொடரும். அப்போதும் அதற்கு எதிராய் காத்திரமாய் செயல்படுகிறவர்கள் இருந்து கொண்டிருப்பார்கள். நடுநடுவே ஸ்டண்ட் அடிப்பவர்களும் வருவார்கள். இது நிதர்சனம்.

No comments: