Tuesday, October 13, 2015

மாட்டுக்கறி விருந்து போராட்டங்களின் பிரச்சனை என்ன?

என்னுடைய சமீபத்திய பகடியில் மாட்டுக்கறி உண்பதை எதிர்ப்பு வடிவமாய் சிக்கலை குறிப்பிட்டிருந்தேன். மாட்டுக்கறி உண்பவர்களை நான் கொச்சைப்படுத்துகிறேனா என சிலர் கேட்டார்கள். அவர்களுக்கானது இந்த விளக்கம்.
தொன்ம ஆய்வாளரும் எழுத்தாளருமான தேவ்தத் பட்நாயிக் இது குறித்து இந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மாட்டுக்கறியை தடை செய்ய வேண்டும் என இந்துத்துவா அமைப்பினர் கோரும் போது அதன் உள்ளர்த்தம் என்ன? இஸ்லாமியர் பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்காய் மாட்டுக்கறி உண்கிறார்கள் அல்லது அவர்கள் உண்பது உணர்வுகளை புண்படுத்துகிறது என்பது தான். முற்போக்காளர்கள் இத்தடையையும், தடையை ஒட்டின ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதற்காய் வெளிப்படையாய் மாட்டுக்கறி உண்ணும் போராட்டங்களை நடத்த துவங்கினார்கள். எழுத்தாளர் ஷோபா டே “நான் இப்போது மாட்டுக்கறி உண்கிறேன். முடியுமென்றால் என்னை இப்போது வந்து கொல்லுங்கள்” என டிவிட்டரில் எழுதினார். இதைத் தொடர்ந்து வேறு சில பிரபலங்களும் இவ்வடிவத்தை முன்னெடுத்தனர். சமூக வலைதளங்களில் பலரும் தாம் ஓட்டலிலும் வீட்டிலும் மாட்டுக்கறி உண்பதாய் படமெடுத்து வெளியிட்டனர். விரைவில் சென்னையில் பல அறிவுஜீவிகள், போராளிகள் பங்கெடுக்கும் மாட்டுக்கறி விருந்து கருத்தரங்கு ஒன்று நிகழப் போகிறது. மதியம் மாட்டுக்கறி விருந்து, காலை மற்றும் மாலையில் இந்துத்துவாவுக்கு எதிரான விவாதம். இது போன்ற போராட்டங்களில் நாம் மாட்டுக்கறியை உண்பதென்பது உண்மையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மகிழ்ச்சியையே அளிக்கும் என்பது பட்நாயிக்கின் வாதம். ஏனென்றால் இந்துக்களின் உணர்வுகளை மேலும் புண்படுத்துவதற்காய் இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் மாட்டுக்கறியை உண்கிறார்கள் என அவர்கள் வாதத்தை வளர்ப்பார்கள். அவர்களின் வாதத்திற்கு இப்படியான போராட்டங்கள் வலு சேர்க்கவே செய்யும்.
மாட்டுக்கறி உண்பது இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் என்பது ஒரு இந்துத்துவா discouse என்றால் நாம் அதை எதிக்கிறோம் எனும் பெயரில் உண்ணும் போது அதே discouseஇல் பங்கு பெற்று அதை செல்லத்தக்கதாக்குகிறோம்.
உணர்ச்சி பெருக்கில் யோசிக்கும் போது மாட்டுக்கறியை உண்பதாய் பிரகடனம் செய்வது ஒரு துணிச்சலான காரியமாய் தோன்றும். ஆனால் அது எதிர்தரப்புக்கு நியாயம் சேர்ப்பதாயே போய் முடியும்.
சரியான வழிமுறை என்ன? இந்துத்துவா அமைப்பினரின் “பசுமாடு புனிதம்” எனும் பரப்புரையின் அபத்தத்தை அம்பலப்படுத்துவதன் தான் சரியான வழிமுறை. நான் சமீபத்தில் பங்கேற்ற சன் நியூஸ் விவாத மேடை இதை சரியாக செய்தது. நண்பர் மனுஷ்யபுத்திரன் தொடர்ச்சியாக இந்த இந்துத்துவா அரசியல் “ஒரு போலியான கட்டமைப்பு” என நிறுவி வருகிறார். மேற்சொன்ன கருத்தரங்கும் மிக முக்கியமான எதிர்ப்பு வடிவமாய் இருக்கும். ஆனால் அங்கும் நாம் ஷோபா டே போல் “வாங்கடா நான் மாட்டுக்கறி தின்கிறதை தடுங்கடா” என முழங்கி நம் கத்தியால் நம் கையையே அறுத்துக் கொள்ள கூடாது. நிதானமாய் யோசித்தால் என் வாதம் உங்களுக்கு புரியும்.
மற்றொரு உதாரணம் தருகிறேன். ராமதாஸ் “காதல் நாடகம்” என ஒரு சர்ச்சையை கிளப்பினார். இதை ஒட்டி தன் கட்சியை பயன்படுத்தி இளவரசனை காவு கொடுத்தார். திட்டமிட்டு தலித் குடியிருப்புகளை தாக்க வழிவகுத்தார். தலித்துகள் திட்டமிட்டு மேல் சாதி பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்பது அவரது பரப்புரை. அப்போது “ஆமாம் அப்படித் தான் செய்வோம்” என நாம் பேசியிருந்தால் அது ராமதாஸின் வாதத்தை செல்லத்தக்கதாக்கியிருக்கும். ஆனால் நம் மீடியாவும் முற்போக்காளர்களும் இதை சரியாக கையாண்டார்கள். ஆனால் இந்துத்துவா பசுவதை தடை என்பது ராமதாஸின் பரப்புரை போல் வெளிப்படையானது அல்ல. அது நுணுக்கமானது. நாம் மிக எளிதாய் அந்த பொறியில் போய் மாட்டிக் கொள்கிறோம்.
கர்த்தர் “ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தை காட்டு” என சொன்னது தியாகத்திற்காகவோ அன்புக்காகவோ அல்ல. திரும்ப அடித்தால் நாம் எதிரியின் வன்முறை discourseஐ ஏற்று நியாயப்படுத்தி விடுவோம் என்பதால் தான். நான் இதை ஒரு முக்கியமான அரசியல் அறிவுரையாகத் தான் பார்க்கிறேன். ஆன்மீக கூற்றாக அல்ல.
“மாட்டுக்கறி சாப்பிட்டு விட்டு வீட்டு செல்ல நாய் ஊளையிட்டால் அரசாங்கம் நடுங்காது” என நான் எழுதியது மிகையாக, புண்படுத்தும் நோக்கம் கொண்டதாய் தோன்றலாம். ஆனால் அதன் அடிப்படை கருத்து மேற்சொன்ன விளக்கம் தான். உடனே போராளிகளை “நாய்” என்று கூறி விட்டாய் என நீங்கள் கொந்தளித்தால் உங்களை நான் காப்பாற்ற முடியாது. எல்லாவற்றையும் நேரடியான பொருளில் தான் எடுத்துக் கொள்வேன் என அடம் பிடித்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

No comments: