Wednesday, October 7, 2015

நயன்தாரா சீஹல்லின் விருது அதிர்ச்சி மதிப்பு போராட்டம்தாத்ரியில் இந்துத்துவா அரசியல்வாதிகள் நடத்திய படுகொலையை கண்டித்து நயன்தாரா சாஹல் தனது சாகித்ய அகாதெமி விருதை திரும்ப அளிப்பதாய் கூறியுள்ளார். அவர் 1987இல் விருது பெற்றார். அதற்கு இரு வருடங்களுக்கு முன்பு தான் சீக்கியர்களை காங்கிரஸ் அரசு கொடுமையான முறையில் வேட்டையாடி கொன்றது. அந்த படுகொலைகளைக் கண்டித்து ஏன் சாஹல் அப்போதே விருதை வாங்க மறுக்கவில்லை. அதன் பின்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும், மதக்கலவரங்கள் நடத்தப்பட்ட போதும் அவர் ஏன் விருதை திரும்ப அளிக்கவில்லை ஆகிய கேள்விகளை ராஜ்திப் சர்தேசாய் இக்கட்டுரையில் எழுப்புகிறார்.

 சாஹல் இதற்கு அளிக்கும் பதிலான “இப்போது மட்டுமே இந்துத்துவா அரசு ஆட்சியில் இருக்கிறது” என்பது ஏற்கும் படியாய் இல்லை. ஏனென்றால் காங்கிரசும் மென்மையான இந்துத்துவா அரசியல் கொண்டது தான். நரசிம்மராவ் ஆட்சியில் அவர் மதக்கலவரங்களை, இஸ்லாமியர்களின் படுகொலைகளை தடுக்கவில்லை. ஏனென்றால் அவர் ஆர்.எஸ்.எஸ் சார்பு கொண்டவர். அறுபதுகளிலேயே ஐந்து மாநிலங்களில் பசுவதை சட்டத்தை இயற்றியது காங்கிரஸ் அரசாங்கம் தான். காந்தியின் மரணத்துக்கு கருத்தியல் பின்புலம் நல்கிய சவார்க்கரை விடுதலை போராட்ட தியாகி என வர்ணித்து அவர் மீதான தடையை நீக்கி அவரை சுதந்திரமாய் இயங்க அனுமதித்ததும் காங்கிரஸ் தான். எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி சீக்கியர்களின் படுகொலைக்கு எதிராய் அன்று தீவிரமாய் போராடிய சாஹல் ஏன் விருதை மட்டும் ஏற்றுக் கொண்டார் என்பது.
 நான் அடிப்படையில் இதை ஒரு அதிர்ச்சி மதிப்பு போராட்டமாகத் தான் பார்க்கிறேன். ஆனால் அத்தகைய போராட்டங்கள் தற்காலிகமானவை. அரசை நாம் கண்டிக்கலாம், விமர்சிக்கலாம், ஆனால் ஒரேயடியாய் அதனுனான உறவை துண்டிக்கும் விதத்தில் செயல்படக் கூடாது. அது ஒருவிதத்தில் இந்துத்துவா சக்திகளுக்கே சாதகமாய் முடியக் கூடும்.

87இல் அவர் விருதை ஏற்றதில் தவறில்லை. அது அவரது இலக்கிய செயல்பாட்டுக்காய் வழங்கப்பட்டது. நீங்கள் ஒரு அரசை விமர்சிக்கும் வேளையில் அது அளிக்கும் அங்கீகாரத்தை மறுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நம் விமர்சனத்துக்கு உள்ளாகிறவர்கள் நம் எதிர்தரப்பினரே அன்றி எதிரிகள் அல்ல. எதிர்தரப்பினோடு முரண்படும் போது அவர்களை முழுக்க நிராகரிக்க வேண்டியதில்லை. முரண்படுவது ஒருவரை மாற்றத்தானே ஒழிய மறுக்க அல்ல.

சாஹலை தொடர்ந்து அஷோக் வஜ்பய் என்னுடம் இன்னொரு பெருந்தலையும் விருதை திரும்ப அளிக்கிறார். சாஹல் நேருவின் சகோதரியின் மகள். அஷோக் வஜ்பய் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் லலித் கலா அகாதெமியின் தலைவராய் இருந்தவர். முன்னாள் அரசு அதிகாரி. இருவருக்குமே ஒரு மறைமுக காங்கிரஸ் தொடர்பு உள்ளது. இருவரும் அதிகார வட்டத்தை சேர்ந்தவர்கள். எலைட்டுகள். சாஹல் தான் காங்கிரசோடு தொடர்பற்றவர் என கூறினாலும் அவரது போராட்டங்களுக்கு என்று ஒரு தொடர்ச்சி இல்லை என்பது சிக்கலானது. கடந்த பத்து வருடங்களில் இதைவிட கொடுமையான மதக்கலவரங்களை பா.ஜ.க நடத்திய போது அவர் எங்கு போனார்? காங்கிரஸ் ஆட்சியில் மோசமான ஊழல்கள் நடந்த போது என்ன செய்து கொண்டிருந்தார்? ஒருவேளை இப்போது அவர் தன் சகிப்புத்தன்மையை இழந்திருக்கலாம். ஆனால் அரசியல் எதிர்வினை ஆற்றுகிறவர்கள் அவ்வப்போது மட்டுமே உயிர்கொள்கிறவராய் இருக்க கூடாது. அது பல சந்தேகங்களை தூண்டும்.

No comments: