Sunday, October 4, 2015

விருது என்பது…
சமீபத்தில் சாகித்ய அகாதெமி கருத்தரங்குக்காய் மதுரை சென்றிருந்த போது அதில் கலந்து கொள்ள வந்த நண்பர் லஷ்மி சரவணகுமாருடன் முழுநாளும் நேரம் செலவழிக்க முடிந்தது. கூடவே ஸ்டாலின் ராஜாங்கமும், வீரபாண்டியனும் (பருக்கை நாவல்) இருந்தார்கள். மதியம் என் அறையில் சந்தித்துக் கொண்டோம். மிக சுவாரஸ்யமாய் அரட்டையும் விவாதமும் நடந்தது. லேடி டோக் கல்லூரியின் மாணவிகளின் உபசரிப்பை பாராட்டியாக வேண்டும். டீ கொண்டு வருவார்கள். டீ கப்பை வாங்க வருவார்கள். நொறுக்குத் தீனி கொண்டு வருவார்கள். தட்டை வாங்க வருவார்கள். கொஞ்சு குரலில் அவர்கள் “அண்ணா” என அழைப்பது கேட்க எனக்கு இனிமையாக இருந்தது. மற்ற மூவரும் எப்படி உணர்ந்தார்கள் எனத் தெரியவில்லை.

அன்று மதிய உணவின் போது நானும் லஷ்மி சரவணகுமாரும் தனியாய் ஒரு சிமிண்ட் பெஞ்சில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அவர் சினிமா உலக கதைகளை எடுத்து விட்டுக் கொண்டிருந்தார். அப்போது இயல்பாக யுவ புரஸ்கார் விருது பற்றி பேச்சு வந்தது. அவருக்கு அவ்விருது கிடைக்காதது எனக்கு வருத்தமளித்தது என்றேன். அவர் படைப்புக்களில் செக்ஸ் தூக்கலாய் உள்ளது தான் நிராகரிப்புக்கு காரணம் என்றார். என் சக படைப்பாளிகளில் நான் மிகவும் மதிக்கிறவர் அவர் என்று சொன்னேன். என் விருது பற்றி யாராவது பேசும் போது லஷ்மிக்கு கிடைக்கவில்லையே என எனக்கு குற்றவுணர்வு தோன்றும் என்றேன். ஆனால் அவருக்கு 35 வயதாவதற்கு இன்னும் சில வருடங்கள் உள்ளதால் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன. அவர் மிகவும் கசப்புடன் “இனி கிடைத்தாலும் எனக்கு வேண்டாம்” என்றார். நான் அவரிடம் சொன்னேன் “விருது என்பது லாட்டரி அடிப்பது போல. நாம் அதற்காய் வாழவில்லை, எழுதவில்லை. கிடைத்தால் நஷ்டம் இல்லையே. விருது மூலம் ஒரு படைப்புக்கு மேலதிகமான கவனம் கிடைக்கும். அந்த இலவச விளம்பரமும் கொஞ்ச பணமும் நமக்கு நல்லது தான். மற்றபடி நம் தகுதியை நாமும் வாசகர்களும் தான் தீர்மானிக்கிறோம்”. அவர் ஏற்றுக் கொண்டார்.
தமிழில் விருதுகளின் சீஸன் ஆரம்பித்து விட்டது. இனி தொடர்ந்து நிறைய பேருக்கு விருதுகள் கிடைக்கும். நிறைய புத்தகங்கள் முக்கியமானவையாய் பரிந்துரைக்கப்படும். பதுங்கு குழியில் இருந்து நிறைய பேர் வெளிப்பட்டு தமிழின் சிறந்த எழுத்தாளர்களாய் துப்பாக்கி ஏந்தியபடி டாங்கிகளில் ஏறி வலம் வருவார்கள். ஜனவரியில் மீண்டும் பதுங்குகுழிக்குள் போய் விடுவார்கள். ஜனவரியில் இருந்து நவம்பர் வரை மீண்டும் உண்மையான எழுத்து யுத்தம் நடக்கும். யுத்தம் முடிந்ததும் இவர்கள் மீண்டும் எழுந்து வருவார்கள்.
இதெல்லாம் பார்க்க ரொம்ப ஜாலியான வேடிக்கை. ஆனால் இந்த சீஸனில் தான் நல்ல புது எழுத்தாளர்களும் நூல்களும் வாணவேடிக்கை புகை மற்றும் ஆரவாரத்துக்கு இடையில் பயந்து நடுங்கி வெளியே வருவார்கள் என்பதும் உண்மை.
எனக்கு எந்த விருதும் விளம்பரம் மற்றும் பணம் கடந்து முக்கியமற்றது என தோன்றுகிறது. என் விருதும் உட்பட. விருது பெறும் ஒரு நூலை உடனே வாங்கி பார்க்க ஆர்வம் தோன்றும். பலன் 50-50 தான். இந்த சலசலப்புகளை கடந்தும் நிறைய நல்ல நூல்கள் புத்தக விழாவின் போது காணக் கிடைக்கும்.
முன்பு வயதானவர்கள் மட்டுமே விருது பெறுவார்கள். இப்போது விருதுகள் கொஞ்சம் அதிகரித்து விட்டதால் எழுத துவங்கி உள்ளவர்களும் பெறுகிறார்கள். ஒரு சின்ன கிளுகிளுப்பு, உற்சாகம், கவனம் கடந்து இதையெல்லாம் எழுத்தாளன் பொருட்படுத்த வேண்டியதில்லை.
என்னை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாய் ஒரு எழுத்தாளன் எழுதி எழுதி தடம் பதிக்க, முதிர்ச்சி அடைய பத்து வருடங்களாவது பிடிக்கும். எழுத்தாளனுக்கு ஆயுசு ஜாஸ்தி. சராசரியாய் ஒரு எழுத்தாளன் 40 வருடங்கள் இயங்க முடியும். அதிர்ஷ்டமிருந்தால் 60, 70 வருடங்கள் கூட எழுதலாம். அப்போது தான் ஒரு சில நல்ல நூல்களை எழுத இயலும். நான் அதிகமாய் எழுத துவங்கி 7 வருடங்கள் இருக்கும். இதற்குள் பாராட்டத்தக்கதாய் கவனிக்கத்தக்கதாய் நான் ஒன்றும் எழுதவில்லை. தரமாய் எழுத எனக்கு இன்னும் பத்தாண்டுகள் நிச்சயம் தேவைப்படும். அதுவரை நான் எழுதுவேனா உயிரோடு இருப்பேனே என்று கூட தெரியவில்லை. அப்படி இருக்க ஒரு நீண்ட பயணத்தில் சில அடிகள் எடுத்து வைத்ததுமே விருது மூலமோ அல்லது வாசகர்களாலோ ஒருவர் கொண்டாடப்பட்டால் தான் ஒரு முக்கியமான இடத்தை வந்ததைந்ததாய் எழுத்தாளன் நினைக்கலாகாது. இதை நான் எனக்குத் தான் சொல்கிறேன். நான் இதுவரை எழுதியுள்ளது முதலிரவு படுக்கை மட்டும் தான். அடுத்த பத்து வருடங்களில் மணப்பெண் வர வேண்டும். அதற்கு அடுத்த பத்து வருடங்களில் அது நடக்க வேண்டும். அதுவரை பொறுப்போம்.
புத்தாண்டு கொண்டாட்டம் வீதியில் நடக்கும் போது யாராவது பெயர் தெரியாதவர்கள் நம்மை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறலாம். நாமும் உளமகிழ்ந்து குதூகலிப்போம். ஆனால் அத்தோடு விட்டு விட வேண்டும். கட்டிப்பிடித்தவரை அடுத்த நாள் தேடிப் போய் ஐ லவ் யூ கூறக் கூடாது. விருதையும் நான் இப்படித் தான் பார்க்கிறேன்.
”இன்மைக்கு” ஒருவர் கவிதைகளும் தன் படைப்பு வாழ்வின் விபரங்களையும் அளித்திருந்தார். பார்த்தால் அவர் இதுவரை ஐம்பது விருதுகளுக்கு மேல் வாங்கி இருக்கிறார். ஆனால் அவரை யாரென்றே எனக்குத் தெரியவில்லை. அந்த கவிதைகளும் “அம்மா இங்கே வா வா” அளவில் தான் இருந்தன. உண்ணி.ஆரின் கதைத்தொகுப்பு (காளிநடனம்) உயிர்மையில் வெளிவந்தது. நாமெல்லாம் தொகுப்புக்கு தான் விருது வாங்குவோம். ஆனால் அவர் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதைக்கும் ஒரு விருது வாங்கிருக்கிறார். சாதாரண கதைகள் தாம். அவரை விட நூறு மடங்கு மேலாய் எழுதக் கூடியவர்கள் தமிழில் இருக்கிறார்கள். ஆனால் மலையாளத்தில் நீங்கள் ஒரு சுமாரான கதை எழுதி விட்டு வீதியில் நடந்து சென்றால் முனைக்கு முனை ஒருவர் நின்று கொண்டு உங்களுக்கு ஒரு விருதை நீட்டுவார்கள். அதே போல அட்டு நூல்களெல்லாம் அங்கே ஐயாயிரம் பிரதிகள் விற்கும். அங்கே விருது, வாசிப்பு எல்லாம் தகுதியை மீறி சொறி, படை போல் பரவும் விசயங்கள். அது ஒருவிதத்தில் நல்லது தான் என்றாலும் சுமாராய் எழுதுவதை கொண்டாடும் போது அம்மொழியின் படைப்பு தீவிரம் குறைய வாய்ப்பு அதிகம். அதனால் தான் மலையாள நவீன இலக்கியம் இன்னும் நம்மளவு வளராமல் உள்ளது. டி.டி ராமகிருஷ்ணனின் “பிரான்ஸிஸ் இட்டிக்கூராவை” எடுத்துக் கொள்ளுங்கள். அதை தமிழில் யாராவது எழுதியிருந்தால் பத்து பிரதிக்ள் கூட விற்காது. ஏனென்றால் அதில் ஜீவனில்லை. ஆழமில்லை. இணையத்தில் படித்ததை கற்பனையாய் மேலோட்டமாய் தொகுத்து எழுதின மலின நாவல் அது. ஆனால் அங்கு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றது. கேரளாவில் இலக்கிய நாவல் வாங்குகிறவர்களும் இங்கு ”புலி” படத்தின் திருட்டு டிவிடி வாங்குகிறவர்களும் ஒன்று தான்.
எழுத்தாளன் விருதை வாங்கி மறந்து விட வேண்டும். வாசகன் அதை கவனித்து மறந்து விட வேண்டும். அதை விட அதில் ஒன்றும் இல்லை.

1 comment:

திருப்பதி மஹேஷ் said...

viruthai patriya thangal paarvai arumai sir.