Friday, October 16, 2015

மதவாத அரசை எதிர்க்க ஒரு இடதுசாரி அமைப்பை தாக்கலாமா?இதுவரை தமிழில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தேன். ராஜம் கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், ரகுநாதன், சு.சமுத்திரம், பொன்னீலன், அப்துல் ரகுமான், தி.க.சி, சிற்பி, மேலாண்மை பொன்னுசாமி, புவியரசு, சு.வெங்கடேசன், டி.செல்வராஜ் என கணிசமானோர் இடதுசாரிகள் அல்லது இடதுசாரி சாய்வு கொண்டவர்கள். இவர்கள் போக எந்த நேரடி அரசியல் சார்பும் அற்ற அசோகமித்திரன், .க.நா.சு போன்ற இலக்கியவாதிகள்/ கலாச்சார நவீனத்துவர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கல்கி, ந.பா போன்ற பிரபலங்களும், பின்னர் பாரதிதாசன் போன்ற திராவிட ”போர்வாளும்”, அதன் பிறகு மு.மேத்தா போன்ற சினிமாக்காரர்களும் விருதை பெற்றாலும் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாய் அகாடெமியில் இடதுசாரிகளின் பிடி வலுத்துள்ளது.

 நேரடியான வலதுசாரி பார்வை கொண்டவர்களில் ஜெயகாந்தன் மட்டும் தான் விருதை பெற்றிருக்கிறார். அவரும் ஒரு மென் இடதுசாரி தான். பொதுவாய் சமூக நோக்குடனும் எழுதுகிறவர்களும் விளிம்புநிலை வாழ்க்கையை பதிவு செய்கிறவர்களும் அதிகம் தேர்வாகிறார்கள்.
 ஜெயமோகன் போன்றவர்கள் அகாதெமிக்கு எதிராக வைக்கும் குற்றச்சாட்டே அது இடதுசாரிகளின் முகாமாகி விட்டது என்பது தான். ஜோ டி குரூசுக்கு விருது வழங்கப்பட்ட போது நடந்ததாய் ஒன்றை கேள்விப்பட்டேன். குரூஸ் பா.ஜ.கவுடன் நெருங்கி விட்டதாய் ஒரு சேதி பரவுகிறது. அப்போது அவர் பெயர் விருதுப்பட்டியலில் முதலில் இருக்கிறது. ஆனால் ஒரு வலதுசாரிக்கு எப்படி விருதை கொடுப்பது என தேர்வாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. தில்லியில் இருந்து அம்பை குரூஸை அழைத்து இது குறித்து வினவ அவர் தனக்கும் எந்த வலதுசாரி சார்பும் இல்லை என்கிறது. பிறகு தான் அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அதாவது வலதுசாரி சார்பு தகுதியின்மையாகவும் இடதுசாரி சார்பு தகுதியாகவும் உள்ளது.
சாகித்ய அகாதெமியை இரண்டாய் பார்க்கலாம். அதன் தலைவர், செயலாளர் போன்றோர் மற்றும் ஊழியர்கள் ஒரு பக்கம் அரசியலற்றவர்களாய், எந்த கட்சிக்கும் சார்பு அற்றவர்களாய் தங்களை காட்டிக் கொள்ள நினைப்பவர்கள். தமிழகத்தில் நடந்த ஒரு சாகித்ய அகாதெமி கூட்டத்தில் என்.டி ராஜ்குமார் கவிஞர் கண்ணதாசன் ரசிகர்கள் சிலரால் அவமானப்படுத்தப்பட்டு அது சர்ச்சையானது. இதைப் படித்த ஒரு வடக்கிந்திய யுவபுரஸ்கார் விருதாளர் தான் விருது பெற்ற கூட்டத்தின் மேடையில் ஏறி அகாதெமியை கடுமையாய் கண்டித்து பேசினார். அப்போது நான் அங்கே இருந்தேன். என்.டி அவமானப்படுத்தப்பட்ட போது ஏன் அகாதெமி தலையிட வில்லை என அவர் கேட்டார். அதற்கு அகாதெமியின் செயலாளர் மேடையில் பதிலளித்தார். “ஒரு கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பேசுவதற்கு நாங்கள் அகாடெமியினர் பொறுப்பாக முடியாது. ஆக அதனால் நாங்கள் விளக்கமளிக்கவோ மன்னிப்பு கோரவோ முடியாது”. இது ஒரு சிக்கலான நிலைப்பாடு. உயிர்மை கூட்டத்தில் ஜெயமோகனின் நூலை சாரு கிழித்து வீசிய போது இதே போன்ற ஒரு குழப்பம் ஏற்பட்டது. இதற்கு யார் பொறுப்பு? சாருவா உயிர்மையா? ஜெயமோகன் உயிர்மையை பொறுப்பாக்கி கடுமையாய் தாக்கினார். ஆனால் கூட்டம் நடத்தும் நெளியாளர்கள் ஓரளவுக்கு மேல் எதையும் கட்டுப்படுத்த முடியாது. பேச்சாளர்களின் செயல்பாட்டுக்கு அவர்கள் பொறுப்பாக முடியாது. கூடியபட்சம் இறுதியில் தமக்கும் இதற்கும் பொறுப்பில்லை என மைக்கில் கூறலாம். ஆனால் அப்போது “நீங்கள் ஏன் தடுக்கவில்லை?” எனக் கேட்பார்கள். இந்த கேள்விகளுக்கு முடிவே இல்லை.
இந்த அதிகாரிகளின் நிலைப்பாடு தான் சமீபத்தைய கல்புர்கி கொலையின் போதும் விவாதத்தை தோற்றுவித்தது. அகாதெமி கொலையை நேரடியாய் கண்டிக்க மறுத்தது. பெங்களூரில் இரங்கல் கூட்டம் மட்டும் நடத்தியது. ஆனால் இதைக் கொண்டு அகாதெமி மோடியை ஆதரிக்கிறது என கூற முடியாது. நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் அகாதெமி எந்த சர்ச்சையிலும் தலையிடாது.
இதுவரையிலும் அகாதெமி ஒரு தன்னாட்சி அமைப்பு தான். ஆனால் நிதிக்கு அது மத்திய அமைச்சகத்தை நம்பி உள்ளது. மத்திய அமைச்சகம் நேரடியாய் விருது தேர்வில் தலையிடுவதில்லை. ஒருவிதமான தொட்டும் தொடாத உறவு அரசுக்கும் அகாதெமிக்கும் இருந்து வருகிறது. ஒருவேளை அகாதெமி நேரடியாய் அரசை கேள்வி கேட்டால் அரசு சுலபமாய் அகாதெமியை கைவசப்படுத்தும். மேலும் தொடர்ந்து பல அரசுகளின் கீழ் இயங்க தேவையிருக்கும் என்பதால் ஒரு குறிப்பிட்ட அரசை விமர்சித்தால் பிறகு அகாதெமிக்கும் அதன் விருதுகளுக்கும் அரசியல் முத்திரை குத்தப்படும். இதுவும் சிக்கலானது.
ஆனால் இந்த அரசியலற்ற அதிகாரிகள் அகாதெமியின் உண்மையான முகம் அல்ல. அகாதெமி என்பது அதன் விருதளிக்கும் செயலால் தான் அடையாளம் கொள்கிறது. விருதை தேர்வு செய்யும் அதிகாரத்தை, குறிப்பாய் தமிழகத்தை பொறுத்தமட்டில், இடதுசாரிகளே வைத்துள்ளார்கள். அப்படி இருக்க நாம் அகாதெமியை ஒரு மறைமுக இடதுசாரி அமைப்பு என்றே கூறலாம்.
இப்போது மத்திய அரசின் மதவாதத்தையும் சகிப்பின்மை அரசியலையும் கண்டித்து எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பி அளித்து வருகிறார்கள். எனக்கு உள்ள கேள்வி இது தான்: “ஒரு வலதுசாரி அரசை கண்டிப்பதற்கு ஏன் ஒரு இடதுசாரி அமைப்பை எதிர்க்கிறீர்கள்?”

No comments: