Wednesday, October 21, 2015

வெங்கட் சாமிநாதன்திரு.வெங்கட் சாமிநாதன் மறைந்தார். அவருக்கு என் துயரார்ந்த அஞ்சலி. வெங்கட் சாமிநாதனுக்கு இரு முகங்கள். ஒன்று உக்கிரமானது. கண்ணை மூடி வாளை சுழற்றும் போர் வீரனுக்கு உரியது. இன்னொன்று மென்மையானது. கனிவானது.

நான் அவரை முதலில் சந்தித்தது என் பத்தொன்பதாவது வயதில். ஜெயமோகன் ஊட்டியில் நடத்திய இலக்கிய முகாமில் கலந்து கொண்டிருந்தேன். நித்ய சைதன்ய யதி ஆசிரமத்தின் அறைகளில் முகாமில் பங்கு பெற்றோர் தங்கி இருந்தோம். தாழ்வான கூரை கொண்ட ஜன்னலற்ற சின்ன அறை. அங்கே என்னுடன் கவிஞர் தேவதேவன் தங்கி இருந்தார். அவர் மிகவும் அமைதியாக இருந்தார். இரவில் உணவருந்த போகும் போது “வாங்க” என கண்களை மென்மையாய் தாழ்த்தி சொல்வார். அதற்கு மேல் பேச மாட்டார். என்னை அழைத்து விட்டு அவர் ஒரு தென்றலை போல் கழன்று மிதந்து சென்று விடுவார். பக்கத்து அறையில் வெங்கட் சாமிநாதன் இருந்தார். நான் அவருடனும் ஆசிரமத்தின் தலைமை துறவியான வினய சைதன்ய யதியுடனும் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பேன். வினய சைதன்ய யதி விளையாட்டுத்தனமும் துடுக்கும் மிக்கவர். வெங்கட் சாமிநாதன் ஒரு தாத்தாவின் பரிவும் கனிவும் மிக்கவர். நான் அவரிடம் மிகவும் நெருக்கமாய் உணர்ந்தேன். ஒவ்வொரு நாளும் காலையில் உணவருந்துவதில் துவங்கி கூட்டங்களில் கலந்து கொண்டு இரவு உணவு வரை அவர் என் கூடவே வந்து என்னை மென்மையாய் கவனித்துக் கொள்வார். ஒரு பெரியவர் நம்மை கட்டுப்பாட்டில் வைத்து பார்த்துக் கொள்ளும் உணர்வே இராது. ஒரு நண்பனைப் போல், சமவயதினனைப் போல் நடத்தினார். ஊருக்கு வந்த பின்னரும் நான் அவருடன் தொடர்பில் இருந்தேன். சென்னைக்கு படிக்க வந்த போது அவரை சந்திக்க விரும்பினேன். ஆனால் “என் வீடுள்ள தெரு ரொம்ப குண்டு குழியாக இருக்கும். நீங்க சிரமப்பட்டு வர வேண்டாம்” என்று விட்டார்.
 அவர் பொதுவாய் மிக மெதுவாய் அமைதியாய் குறிப்பிட்ட ஒரு விசயத்தை மட்டும் வலியுறுத்தி பேசுவார். பேச்சில் எப்போதும் கருத்து/கவன சிதறல் இராது. ஆனால் எழுத்தில் நாம் பார்க்கும் வெங்கட் சாமிநாதன் முதிர்ச்சியின்மையும் ஆவேசமும் கொண்டவர். பேச்சில் உள்ள நிதானத்தை அவரது எழுத்தில் காண இயலாது. அன்றுள்ள நவீனத்துவர்களைப் போல் அவர் புறவயமான கருத்தியல்களில் ஆர்வம் காட்டவில்லை. கலையை கலையின் மொழி மூலமே அறியலாம் என நம்பினார். உதாரணமாய் ஒரு சிறந்த கவிதையை மற்றொரு சிறந்த கவிதையுடன் ஒப்பிட்டு மதிப்பிட்டு அறிவது. அவருக்கு இடதுசாரிகளுடன் இருந்த முரண்பாடு இந்த அக-புற பார்வைகள் சார்ந்ததே. வாழ்க்கையை முழுக்க புறவயமாய் வகுத்து புரிய முயன்ற இடதுசாரிகளிடம் அவர் இயல்பாகவே மாறுபட்டார்.
அவருக்கு நாட்டார் நிகழ்த்து கலைகளின் மீது அபார ஈடுபாடு இருந்தது. இன்று நாட்டார் கலைகளை சமூக அறிவுக்காய் ஆய்வு செய்யும் நோக்கு பரவலாய் உள்ளது. ஆனால் வெங்கட் சாமிநாதன் இக்கலைகளின் சன்னத நிலை, அப்போது கூடி வரும் அனுபூதி மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஊட்டி முகாமிலும் பின்னர் என்னிடம் தனிப்பட்ட முறையிலும் மிகவும் ஆர்வத்துடன் இது குறித்து உரையாடினார். உலக உண்மையை அறிவை கைவிடுவதன் மூலம் மட்டுமே உணர முடியும் என நம்பினார். இலக்கியத்தையும் பண்பாட்டையும் கோட்பாடுகளாய் வகுத்துப் பார்க்க முயன்றவர்கள் மீது கடும் அதிருப்தி கொண்டார்.
ஆனால் இந்த முரண்பாட்டை, மாறுபட்ட நிலையை தர்க்கரீதியாய் முன்வைக்க, விவாதித்து புது கருத்து நிலையை சென்றடைய அவரால் முடிந்ததில்லை. அவருக்கு தர்க்க விவாதம் ஒவ்வாதது. ஆனால் தன் அதர்க்கவாதத்தை நிறுவ அவருக்கு தர்க்கம் தேவைப்பட்டது. கருத்தியல்களில் அவரது பயிற்சியின்மையை இன்று அவரது கட்டுரைகளை வாசிக்கையில் உணர முடிகிறது. பல இடதுசாரி நிலைப்பாடுகளை அவர் மூர்க்கமாய் எதிர்க்க முனைகிறாரே ஒழிய அவர் முன்வைக்கும் வாதங்கள் சொதப்பலாய் உள்ளன. வெற்று உணர்ச்சியும் இலக்கற்ற வார்த்தைக் குவியல்களூமாய் இன்று அவரது எழுத்து நமக்கு தோன்றுகிறது.
ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் அவரது எழுத்துக்களை படிக்க நேர்கையில் எனக்கு ஆயாசமும் ஏமாற்றமும் தான் எஞ்சியது. ஆனால் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மனிதராய் அவரை எனக்குத் தெரியும். அவர் சனாதனி என கூறுகிறவர்கள் உண்டு. ஆனால் சாதி வெறுப்பை மனித உறவுகளில் காட்டுபவர் அல்ல. சொல்லப்போனால் பல முற்போக்காளர்களை விட பரிவும் கனிவும் மிக்கவராகவே அவர் எனக்கு தென்பட்டார். மனிதன் முரண்பட்ட குணாதசியங்களால் ஆனவன். இதில் எதை ஒருவரது ஆதார குணமாய் எடுத்துக் கொள்வது?

No comments: