Saturday, October 17, 2015

ஸ்டாலினும் இந்துமதமும்

DMK treasurer M.K. Stalin with temple priests in Thanjavur on Thursday
ஸ்டாலின் தனது “நமக்கு நாமே” சுற்றுப்பயணத்தின் போது தஞ்சாவூரில் புரோகிதர்களை சந்தித்து அவர்களின் வேண்டிகோள்களுக்கு செவி கொடுத்து ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இப்படம் இப்போது சமூகவலைதளங்களில் உலவி வருகிறது. செய்தியிலும் இடம்பிடிக்கிறது. இயல்பாகவே ஒரு சாரார், இதை வைத்து தி.மு.க கொள்கையில் இருந்து தடம் புரண்டு விட்டது என்றும், இரட்டை வேடம் போடுகிறது என்றும் கடுமையாய் விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது திமுகவினர் கலந்து கொண்டதும், ஸ்டாலின் அதை ஆதரித்ததும் கூட சலசலப்புக்கு உள்ளானது. இதை நாம் எப்படி பார்க்க வேண்டும்?

கலைஞர் ஒரு பகுத்தறிவாளர் (மஞ்சள் துண்டு விவகாரம் பற்றி அவர் விளக்கம் அளிக்காத நிலையில் அதை நாம் மதத்தோடு தொடர்புபடுத்த இயலாது). அவர் அடிக்கடி இந்துமத மூடநம்பிக்கைகளுக்கு எதிராய் அறிக்கை விட்டு சீண்டுவார். ஆனால் மாறாக கணிசமான திமுக உறுப்பினர்கள் மதநம்பிக்கை கொண்டவர்கள். ஸ்டாலினும் குடும்பத்தாரே தீவிர பக்தர்கள். இதை ஸ்டாலினே மீடியாவில் ஒத்துக் கொண்டிருக்கிறார். இந்த முரண்பாட்டை சந்தர்ப்பவாத அரசியல் எனலாமா? நான் இதை வேறுவிதமாய் பார்க்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு வரை திமுகவினரின் மதவாதம் என்னை எரிச்சலூட்டியதுண்டு. நான் அதை ஒரு அபத்தமாய் கருதியதுண்டு. இன்று எனக்கு தி.மு.க இந்து மதத்தில் இருந்து விலகி நிற்பது தான் அபத்தம் எனப் படுகிறது. ஏன்?
பெரியாரின் பிரச்சாரமே இந்துமதத்தை அழிக்க வேண்டும் என்றல்ல. அம்பேத்கரைப் போல் அவர் தாழ்த்தப்பட்டவர்கள் பௌத்தத்துக்கு மாற வேண்டும் என வலியுறுத்தவில்லை. சொல்லப் போனால் நான் பெரியாரை ஒரு மென்மையான இந்து, ஒரு மத சீர்திருத்தவாதி என்றே பார்க்கிறேன். மதம் என்பது கடவுள் நம்பிக்கை மட்டும் அல்ல. அது ஒரு கூட்டு செயல்பாடு. சடங்குகளும், கடவுள்களும் அந்த கூட்டுசெயல்பாட்டுக்கு வடிவம் கொடுப்பதற்கான குறியீடுகள். மக்களுக்கு கூட கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி எல்லாம் கவலையில்லை. கராறாய் யோசித்தால், பெரியார் இந்துமதத்தில் இருந்து வெளியேறினவர் என்றால் அவர் அதன் மூடநம்பிக்கைகள், கடவுள் நம்பிக்கைகள் பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை. உதாரணமாய் நீங்கள் பாகிஸ்தானின் பட்ஜெட் தாக்கல் பற்றி என்றாவது கவலைப்படுவீர்களா? சீனாவின் தொழில் உற்பத்தி குறைகிறது என்று அச்சப்படுவீர்களா? இல்லை. அவை அந்நிய நாடுகள். இந்து மதமும் ஒரு அந்நிய மதம் என்றால் ஏன் பெரியார் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும். உண்மையில் அவர் அம்மதத்தினுள் தான் இருந்தார். ஆனால் கடவுள் நம்பிக்கையும், பழமைவாத நம்பிக்கையும் அற்றவராய், பகுத்தறிவு மற்றும் அறிவியல் பார்வை கொண்டு அதை சீர்திருத்த விரும்பியவராய் தான் இருந்தார்.
 நான் இன்னொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பெரியார் ஏன் இஸ்லாம் அல்லது கிறித்துவத்தின் கடவுள் நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கைகளை தாக்கவில்லை? ஏனென்றால் அவர் தன்னை அம்மதங்களின் பிரதிநிதியாக கருதவில்லை.
பிராமணர்களின் சமூக அதிகாரத்தை எதிர்ப்பது பெரியாரின் முக்கிய நோக்கம். இதை தி.மு.க ஒரு அரசியல் கொள்கையாக முன்வைக்கவில்லை என்றாலும் திராவிட மரபில் வருகிறவர்கள் பிராமணர்களை விரோதியாய் பார்ப்பதும் பிராமணர்கள் திமுகவை தம் ஜென்ம விரோதியாய் கருதி கசப்பு கொள்வதும் இங்கு ஒரு வழக்கமாய் உள்ளது. பிராமணர்களின் சமூக அதிகாரத்தை எதிர்க்க வேண்டுமே ஒழிய ’அவர்களை’ அல்ல எதிர்க்கவோ வெறுக்கவோ வேண்டியது. அதிகார எதிர்ப்பு என்பது அதிகாரத்தில் இருப்பவர்களுடன் உள்ள ஒரு எதிர்மறை உறவு. ஒரேயடியாய் அதிகாரத்தில் இருப்பவர்களை வெறுத்து ஒதுக்குவதோ அழிக்க நினைப்பது அல்ல. பிராமண அதிகாரம் என்பது ஒரு நாற்காலி என்றால் அந்நாற்காலியை அவர்களை காலி செய்யும் வரை தான் அவர்களுடன் முரண்பட வேண்டும். மற்றபடி தி.மு.கவினர் பிராமணர்களை தம்மில் ஒருவராய் எற்கவும் அக்கறையும் கொள்ளவுமே வேண்டும்.
எதிர்ப்பு என்பது வெறுப்பதோ மறுப்பதோ அல்ல. எதிர்ப்பை ஒரு போட்டி என்று, அதிகாரத்துக்கான ஒரு விளையாட்டு என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லா சமூகங்களையும் சந்தித்து குறைகேட்பது அரசியல்வாதிகளுக்கு வழக்கம் தான் என்றாலும், பிராமணர்களுடனான தன் உரையாடலை ஸ்டாலின் துணிச்சலாய் முன்வைத்திருப்பது பாராட்டுக்குரியது. விநாயக சதுர்த்தியை ஒட்டின அவரது செயல்பாட்டுடன் சேர்த்து பார்க்கும் போது இது தி.மு.கவினுள் ஒரு நல்ல மாற்றத்திற்கான துவக்கம் எனப் படுகிறது.
இதுவரை தி.மு.க தலைமை இஸ்லாமிய, கிறித்துவ மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது வலதுசாரிகள் “நீங்கள் ஏன் இந்துக்களை மட்டும் தனித்து விடுகிறீர்கள்?” எனக் கேட்பார்கள். இஸ்லாமிய, கிறித்துவ மத நம்பிக்கைகளை ஏற்கலாம் என்றால் இந்து நம்பிக்கைகளையும் ஏற்கலாம் தானே? இந்துக் கடவுளை மறுப்பதென்றால் இஸ்லாமிய, கிறித்துவக் கடவுளையும் மறுத்தாக வேண்டுமே? இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுக திணறி வந்தது. இந்த குழப்படி வாழ்க்கை இயக்கம் பற்றின தெளிவின்மையில் இருந்து வருகிறது.
இரண்டு எதிரெதிர் சக்திகள் மோதித் தான் இயக்கம் தோன்றுகிறது. இதை ஹெகல் முரணியக்கம் என்றார். உதாரணமாய் ஒரு ஆணும் பெண்ணும் தம்மை பரஸ்பரம் பூரணமாய் நேசிக்கிறார்கள் என்றால் அவர்கள் காதலிக்க மாட்டார்கள். ஆண் அப்பெண்ணை தன்னைப் போன்றே கருதினால் ஏன் அவளை நேசிக்க வேண்டும்? தன்னையே நேசிக்கலாமே? காதலினுள் ஒரு சின்ன வெறுப்பு உள்ளது. காதலியை முரண்பட்டு அவளை தன்னுள் அடக்க வேண்டும் எனும் வேட்கை உள்ளது. காதலியும் இதை எதிர்த்து காதலனை லேசாய் வெறுத்து அவனை தன்னுள் அடக்க முயலும் போது தான் காதலிக்கிறாள். அதனால் தான் திருமணத்திலும் தொடர்ந்து அடித்துக் கொள்ளும் தம்பதியினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இவ்விசயத்தில் தி.மு.கவின் காதலி என இந்து மதத்தை வைத்துக் கொள்ளலாம்.
இந்து மத சடங்குகளில் பங்கு பெறும் போது தி.மு.க தன் கொள்கையில் நீர்த்து விடாதா? இல்லை. ஒன்று இதுவரை தி.மு.க இந்து விரோதி எனும் போலி பிம்பம் உடைகிறது. இது நல்லது (ஆனால் பா.ஜ.கவுக்கு நல்லதல்ல. பா.ஜ.கவின் இடம் மெல்ல மெல்ல சுருங்கி விடும்). அடுத்து, ஒருவருடன் கருத்து முரண்பாடு கொண்டால் அவர் நம் விரோதி எனும் எதிரிடையை (binary) கைவிட வேண்டும். இந்து மதத்தின் பல்வேறு சிக்கல்களை பற்றி பேசிக் கொண்டே தி.மு.க அம்மதத்துடன் இணக்கமாய் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இத்தனை நாளும் பட்டும்படாமல் நடந்து வந்த உறவாடலை இப்போது ஒரு எதிர்கால தலைவர் வெளிப்படையாய் முன்வைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
நானும் என் மகனுக்கு பகுத்தறிவை தான் போதிப்பேன். ஆனால் அவன் கோயில் விழாக்களில் கலந்து கொள்ளவும் சடங்குகளை அருகில் இருந்து கவனிக்கவும் தூண்டுவேன். ஒரு விலகல் மனப்பான்மையுடனும் கூர்மையான விழிப்புணர்வுடனும் அவன் மதத்துடன் உறவாட விரும்புவேன். இது ஒரு நுட்பமான விளையாட்டு தான். ஆனால் சாத்தியமே. ஒன்றுடன் விலகி இருக்கும் போது நாம் முழுமையாக இழக்கிறோம். ஆனால் விலகலுடன் உறவாடும் போது தேவையற்றதை விடுத்து தேவையானதை பெறுகிறோம்,
தி.மு.க இதுவரை செய்து வந்துள்ள முக்கியமான தவறு தனது கொள்கைகளை கடந்த சில தலைமுறை மக்களிடம் சரியாய் கொண்டு சேர்க்காதது. கலைவடிவங்கள் மற்றும் பள்ளி பாடதிட்டத்தை இதற்காய் பயன்படுத்தி இருக்க வேண்டும். இரண்டையும் தி.மு.க செய்யவில்லை. பள்ளிக்கல்வியை எடுத்துக் கொண்டால் அங்கு வெளிப்படையாய் இந்து மதம் போதிக்கப்படுகிறது. குறிப்பாய் தமிழ்ப்பாடங்கள் வழி. அது வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் கூடவே நமது பகுத்தறிவு கொள்கைகள், அரசியல் வரலாறு, திராவிட தலைவர்கள், தமிழ் தேசியம் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். இன்றுள்ள பல இளைஞர்களுக்கு பெரியார் என்றால் யாரென்றே தெரியவில்லை. இதை நான் வகுப்புகளில் சோதித்து பார்த்திருக்கிறேன். எழுபது பேருக்கு மேலான வகுப்பில் ஒரு மாணவருக்கு கூட பெரியாரை தெரியவில்லை என்றால் யோசித்து பாருங்கள். ஆனால் இவர்களுக்கு ஔவையாரையும் திருவள்ளுவரையும் பெயரளவிலாவது தெரியும். தி.மு.க சமீபத்தில் சந்தித்துள்ள சரிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
பாடத்திட்டத்தை பிரச்சார வடிவமாக்குவது என் நோக்கம் அல்ல. ஆனால் நமது அரசியல் கட்சிகளின் வரலாற்றையும் கொள்கைகளையும் மாணவர்கள் அறிவது முக்கியம். எந்த சார்பும் இன்றி எல்லா கட்சிகளின் வளர்ச்சிப்பாதைகளையும் சிந்தனைகளையும் சிக்கல்களையும் பற்றி நாம் பள்ளி மாணவர்களிடம் உரையாட வேண்டிய அவசியம் உள்ளது.

No comments: