Friday, October 16, 2015

சகிப்பின்மையும் கருத்துரிமை தடையும் மிகைப்படுத்தப்படுகிறதா?பா.ஜ.க அடிப்படையில் வன்முறையை ஊக்குவிக்கும் கட்சி. அவர்களின் முதல் போராளியே கோட்சே தான். அவர்கள் காந்தியின் படுகொலைக்கு பின் தில்லியை ஒட்டின கிராமங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அன்பு, கருணை, சகிப்புத்தன்மை ஆகியவை இந்துக்களை பேடியாக்கும் என்பது அவர்கள் கருத்தியல். எல்லா கட்சிகளின் தேர்தல் அரசியலிலும் வன்முறை உண்டு என்றாலும் பா.ஜ.க வன்முறையை ஒரு கருத்தியலாக முன்வைக்கும். “நாட்டை விட்டு போகாவிட்டால் உன்னை அடிப்போம்” என நேரடியாகவே அதன் தலைவர்கள் சிறுபான்மையினர் நோக்கி கூவுவார்கள். ஆக பா.ஜ.கவின் அரசியல் வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்டது தான். இயல்பாகவே பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும் போது வன்முறை கருத்தாக்கம் முன்னிலைப்படுகிறது. குறிப்பாக உ.பி, பிகார் போன்ற மாநிலங்களில் அவர்கள் மக்களை இந்து-இஸ்லாம் என பிரித்து மதவாத உணர்வுகளை கிளர்த்தி தேர்தலில் ஓட்டுக்களாக வெறுப்பை அறுவடை பண்ண நினைக்கிறார்கள். அதனால் தான் பா.ஜ.க வலுப்பெற்றுள்ள வட மாநிலங்களிலும் கர்நாடகா போன்ற இந்துத்துவா தீவிரமாய் பரவியுள்ள மாநிலத்திலும் சிறுபான்மையினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மூன்று முற்போக்காளர்கள் மீதான தாக்குதல் மற்றும் படுகொலை நடந்தது.

இதை பா.ஜ.க அரசியலின் ஒரு பின்விளைவு என பார்க்க விரும்புகிறேன். மக்களிடையே வெறுப்பை உண்டாக்கி ஓட்டு பெறலாம் என அவர்கள் நம்பும் வரை இந்த தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சனைகளை பிராந்தியம் சார்ந்து (localized) நாம் பார்க்க வேண்டும். கர்நாடகாவில் நடந்தது ஏன் தமிழகத்திலோ கேரளாவிலோ நடக்கவில்லை? இக்கேள்வி முக்கியம். ஏனென்றால் இங்கே அது செல்லுபடியாகாது என பா.ஜ.க அறியும். ஆக பா.ஜ.கவுக்கு கருத்துரிமையை பறிப்பதை விட முக்கியம் ஓட்டு வாங்குவது தான். தேசம் பூரா எழுத்தாளர்கள் மற்றும் தனிமனிதர்களின் வாயை மூட வேண்டும் எனும் நோக்கம் அக்கட்சிக்கு உள்ளதாய் நான் நம்பவில்லை. ஏனென்றால அதனால் அவர்களுக்கு பயனில்லை.
ஒரு பிரச்சனையை கீழிருந்து மேலே நோக்க வேண்டுமா அல்லது மேலிருந்து கீழே பார்க்க வேண்டுமா என்பது முக்கியமானது. ஒரு மரம் வீழ்கிறது என்றால் நாம் அதன் வேரில் என்ன பிரச்சனை என கவனிக்க வேண்டும். இலை, கிளைகளை பாதுகாக்க ஓடக் கூடாது. பா.ஜ.கவுக்கு ஒரு தேசிய சகிப்பின்மை திட்டம் உள்ளது போல் கற்பனை பண்ணி அதற்கு எதிராய் எழுத்தாளர்கள் விருதை திருப்பி அளிப்பது ஒரு மிகை மற்றும் தவறான அணுகுமுறை. மத்தியில் ஒருவர் ஒரு வரைவை தயாரித்து அதன் படி உளவுத்துறையினரையும் போலிசாரையும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களையும் நம் வீடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கவில்லை.
நான் மோடி பதவியேற்றபின் தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்துத்துவா மற்றும் மோடியை கடுமையாய் விமர்சிக்கும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை படித்திருக்கிறேன். அவர்களை எல்லாம் இந்த அரசு கைது பண்ணியதா? நானே உயிர்மையில் மோடியை திட்டி எழுதினேன். என்னை தாக்கினார்களா? யுவ புரஸ்கார் விருது கிடைத்த பின் எனக்கு சென்னையில் நண்பர்கள் ஒரு கூட்டம் நடத்தினார்கள். நான் அப்போது மேடையில் எப்படி பா.ஜ.க தேர்தலில் வென்றதும் நான் கடுமையாய் கசப்புற்று மிகவும் சோர்ந்து போனேன், ஒரு வாரம் அந்த கசப்பை வெளிப்படுத்த தெரியாமல் தவித்து பின் கட்டுரையாய் எழுதி ஆசுவாசம் கொண்டேன் எனக் கூறினேன். இது முடிந்து போகும் போது என் நண்பர் ஒருவர் கேட்டார் “ஒரு மத்திய அரசு விருது வாங்கி விட்டு எப்படி மேடையில் மத்திய அரசை எதிர்த்து பேசுகிறீர்கள்? பயமாக இல்லையா?”. இல்லை. நான் அப்படி யோசித்ததே இல்லை. என்னுடைய சீனியர்கள் முப்பது வருடங்களாக அதைத் தான் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ஏதும் நடந்ததில்லை. எனக்கும் நடக்கும் என நான் அஞ்சவில்லை. ஆனால் அந்த நண்பர் பொதுமக்களின் பிரதிநிதி. அவர் சிறுபத்திரிகை ஆள் அல்ல. அவர் மனதில் அப்படியான ஒரு பிம்பம் தான் உள்ளது.
கருத்துரிமை மீதான தாக்குதல் உண்மையில் பலதரப்பட்டது, அது பிராந்தியங்கள் சார்ந்து வேறுபடுவது. தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். இங்கே யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? கவிஞர் ஹெச்.ஜி ரசூல் வஹாபிய இஸ்லாமிய அமைப்பினால் ஊர்விலக்கம் செய்யப்பட்டார். பெருமாள் முருகனும், புலியூர் முருகேசனும் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டார்கள். ஜனாய்லுதீன் தலைமையில் ஆயிரக்கணாக்கானோர் பங்கேற்ற ஒரு கூட்டமே மனுஷ்யபுத்திரனை கடுமையாய் திட்டி விமர்சிக்க எற்பாடு செய்யப்பட்டது. அதை டிவியில் நேரடி ஒளிபரப்பாய் காட்டின நினைவு. இதைக் கொண்டு தமிழகத்தில் சாதிக்கு எதிராய் யார் பேசினாலும் தாக்கப்படுவார்கள் என கூறலாமா? இஸ்லாமிய அமைப்புகள் சகிப்பின்மை கொண்டவர்கள் எனலாமா? இல்லை. இவையெல்லாம் ஒவ்வொரு பிராந்தியத்தில் உள்ள சில தனிப்பட்ட சமூகவிரோதிகளால் நடத்தப்பட்ட உதிரி வன்முறை சம்பவங்கள். இவை நம் மையநீரோட்ட அரசியல் அல்ல.
வட இந்தியாவிலும் கர்நாடகாவிலும் இது போல் நடக்கிற வன்முறையை கொண்டு ஒட்டுமொத்தமாய் ஒரு அச்சமூட்டும் சூழல் நிலவுவதாய் கருதினால் அது மிகை. சாதி, மத படுகொலைகளும் தாக்குதல்களும் அதிகரிக்கிறதா என்று கேட்டால் அது உண்மை. அவை மிகப்பெரிய அளவில் பெரிய மக்கள் கூட்டத்தை குறிவைத்து நிகழ்த்தபடும் மனித அவலங்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் கவனிக்க வேண்டும்.
இந்து-இஸ்லாமியர் என மக்களை இரண்டு முகாம்களாய் பிரித்து வன்முறை நிகழ்த்தும் ஒட்டுமொத்தமான செயல்திட்டம் பா.ஜ.கவுக்கு உண்டா என்று கேட்டால் நிச்சயம் உண்டு. இங்கு தமிழகத்தில் நடத்தப்பட்ட விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் ஒரு உதாரணம். ஆனால் எழுத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்களின் பேச்சுரிமையை முடக்கும் ஒட்டுமொத்த செயல்திட்டம் பா.ஜ.கவுக்கு உண்டா என்றால் இல்லை.
நான் ஒரு நடைமுறைவாதி. எழுத்தாளர்களுக்கும் கருத்தாளர்களுக்கும் நம் சமூக மையநீரோட்டத்தில் எந்த இடமும் இல்லை. அவர்களை வாயை மூட வைத்து மோடி அரசுக்கு எந்த பலனும் இல்லை. நானோ நீங்களோ இந்த்துத்துவாவை விமர்சிப்பது மோடிக்கு பிரச்சனையே அல்ல. எழுத்தாளர்களுக்கு பதிலாக அமிதாப் பச்சன், ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான் ஆகியோர் பா.ஜ.கவுக்கு எதிராய் பிரச்சாரம் செய்தாலோ விமர்சித்தாலோ தம் படங்கள் வழி பா.ஜ.கவை எதிர்த்தாலோ பா.ஜ.க அஞ்சும். உடனே அவர்களின் படங்களை முடக்க முனையும். அவர்கள் மேல் வழக்குகள் பதிவு பண்ணும்.
நான் எழுத்தாளர்களை கொச்சைப்படுத்த இதை சொல்லவில்லை. நடைமுறை உண்மையை சொல்கிறேன். எழுத்தாளர்கள் சமூக உதிரிகள். அவர்கள் அப்படி இருக்கும் வரை எந்த அரசும் அவர்கள் பேச்சுரிமையை பறிக்க முயலாது.
மோடி பாசிச மனப்பன்மை கொண்டவர் தான். அவர் ஆழ்மனதில் ஒரு சர்வாதிகாரி. ஆனால் தனது பாசிசத்தை சுலபமாய் அவர் இத்தேசத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. இலங்கையை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே ராஜபக்சேவால் போருக்கு பின்னான சில வருடஙக்ள் மட்டுமே தனது சர்வாதிகாரத்தை வெளிப்படையாய் காட்ட முடிந்தது. இந்தியாவைப் போல் இவ்வளவு பரந்து பட்ட, சிக்கலான, பல அடுக்குகள் கொண்ட தேசத்தில் ஒரு சர்வாதிகாரி தோன்றி பாசிசத்தை செயல்படுத்துவது கிட்டத்தட்ட அசாத்தியம். நான் மோடியை நியாயப்படுத்தவோ ஆதரிக்கவோ முயலவில்லை. ஆனால் மிகைப்படுத்தப்பட்ட ஒரு பீதியை நாம் நம்பவோ பரப்பவோ அவசியமில்லை என்கிறேன்.
இந்த தேசம் என்றுமே முழுமையாய் மதவாதத்திற்கு அடிமையாகும் என நான் நம்பவில்லை. பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் வரை தலைதூக்கும் இந்த இந்த்துத்துவா விரைவில் மீண்டும் பாதாளத்துக்குள் மறையும். பாப்ரி மசூதியை இடித்த மிக கொடூரமான பிரிவினை சம்பவமே நம் தேசத்தை பிளக்கவோ இங்குள்ள ஒற்றுமையை அழிக்கவோ இல்லை. இந்த தேசம் எல்லாவிதமான தீமைகளையும் முழுங்கி செரிக்கும் ஜீரண சக்தி கொண்டது. பா.ஜ.கவின் வீழ்ச்சியை உங்களைப் போன்றே நானும் எதிர்நோக்குகிறேன். அதோடு அவர்கள் கொஞ்ச காலத்திற்கு தடயமில்லாமல் காணாமல் போவார்கள். இந்தியா என்றும் போல் மாற்றமில்லாமல் இருக்கும்.
இன்னும் இரண்டு விசயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.
 இதன் தீர்வு என்ன? அந்தந்த மாநில தேர்தல்களில் பா.ஜ.கவை முறியடிப்பது தான் இதன் ஒரே தீர்வு. ஏனென்றால் இந்த வெறுப்பு அரசியல் செல்லுபடியாகாவிட்டால் அவர்கள் அதை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். விருதுகளை திருப்பிக் கொடுத்து காறி உமிழ்ந்தால் ஒரு நடைமுறை பிரச்சனை தீராது. மாறாக அது நமக்கு ஒரு போலியான திருப்தியை தரும். தெருவில் கூட்டத்தோடு கூட்டமாய் தர்ம அடி கொடுக்கும் போது நம் தினவு தீரலாம். ஆனால் பிரச்சனை தீராது. நம்மால் தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு நேரடியாய் பீஹார் தேர்தல் முடிவை மாற்ற முடியாது என்றால் விருதை திருப்பிக் கொடுத்து சரி செய்யலாம் என நினைக்கிறோமா?
சரி குறைந்தது இப்படியாவது நம் எதிர்ப்பை காட்டலாமே? இலக்கியமே படிக்காத, இலக்கியவாதியை மதிக்காத ஒரு பெரும்பான்மை சமூகம் இலக்கியவாதி விருதை திருப்பிக் கொடுத்தான் என பா.ஜ.வுக்கு ஓட்டளிக்காமல் இருக்க போகிறதா? என்ன அபத்தமான பார்வை. ஒன்றுக்கும் பலனில்லாத ஒரு செயலை செய்யக் கூடாது என்பது என் நிலைப்பாடு.
ஏதோ எங்கள் மனத்திருப்திக்கு நாங்கள் காறித் துப்புகிறோம் என்றால் தாராளமாய் செய்யுங்கள். எனக்கு உடன்பாடில்லை. வெறும் மீடியாவில் மட்டும் செல்லுபடியாகும் குறியீட்டு எதிர்ப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த டிரெண்டை நாம் தொடர்ந்தல் நாளை ஒரு பெரிய ஊழல் வெடிக்கும் போது ஒரு எழுத்தாளர் பெட்ரோல் கேனுடன் தோன்றி நான் தீக்குளிக்க போகிறேன் என்பார். நாமும் பைடு பைப்பரின் கதையில் வரும் எலிகளைப் போல் அவர் பின்னால் பெட்ரோல் கேன்களுடன் செல்ல வேண்டுமா? அல்லது ஊழலுக்கு எதிரான சீர்திருத்தத்தை அதிகார கட்டமைப்பிலும் தேர்தல் அரசியலிலும் எப்படி கொண்டு வரப் போகிறோம் என யோசிக்க வேண்டுமா?

No comments: