Monday, October 12, 2015

என்ன தான் சாப்பிடுவது?
 கல்கி ஆசிரியர் வெங்கடேஷை போன முறை சந்தித்த போது மனிதர் பென்சில் போல் இளைத்திருந்தார். நாற்பது வயதுக்கு மேல் இளைப்பவர்களின் கண்களில் ஒரு குறும்புத்தனம் மிளிரும். இளமையின் பளபளப்புடன் இருந்தார். என்ன பண்ணினீர்கள் எனக் கேட்டதற்கு “டயபடீஸ் ரிவர்சல் டயட்டில்” இருக்கிறேன் என்றார். நான் இந்த டயட் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். அது என்ன?
அவர் முழுக்க அரிசி, கோதுமை உணவை நிறுத்தி விட்டார். தேங்காய், காய்கனி, சிறுதானியங்கள் மட்டும் புசிக்கிறார். அவருடைய ரத்த சர்க்கரையும் இதனால் வெகுவாய் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாய் சொன்னார். அவர் பார்க்க ஆரோக்கியமாய் இருந்தார். நான் சில நாட்களாய் இது போன்ற புது வகை உணவு பரிந்துரைகள் பற்றி படித்தும் யுடியூப்பில் காணொளிகள் பார்த்தும் வருகிறேன்.

இப்போதுள்ள டயட் பேஷன் அரிசி, கோதுமை போன்ற தானியங்களை தவிர்ப்பது. பேலியோ டயட் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கற்காலத்துக்கு முன்னால் மனிதன் உண்டதை இப்போது உண்ண துவங்கி இருக்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு பாரம்பரிய உணவு என்று ஒன்று இல்லை. சந்தை பொருளாதாரம் வடிவமைத்த துரித உணவுகளை சாப்பிட்டு அமெரிக்கர்களின் ஒரு தலைமுறையே ஆரோக்கிய சீர்கேட்டால அங்கு அவஸ்தைப்படுகிறது. சரி அதை விடுத்து மரபான உணவுக்கு நம்மைப் போல் அவர்கள் திரும்ப முடியாது. அப்படி ஒன்று அவர்களுக்கு இல்லை. அதனால் தான் கற்காலத்துக்கு முந்தைய உணவு என்று ஒன்றை தேடிப் போகிறார்களோ என்று தோன்றியது.
 நம்மூர் சைவ உணவும் அங்கே பிரபலம் தான். காந்தியின் சுயசரிதை “சத்திய சோதனை” படித்தவர்கள் அவர் இங்கிலாந்துக்கு போன காலத்திலேயே சைவ உணவை முன்னெடுக்கும் குழுக்கள் அங்கு இருந்ததையும் அதற்காய் பிரத்யேக பத்திரிகைகள் வெளிவந்ததையும் அறிந்திருக்கலாம். அமெரிக்கர்கள் நம்மை விட பத்து மடங்கு கறி சாப்பிடுவார்கள். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கும் அவர்களின் உடல்வாகுக்கும் தேவைப்படுகிறது. ஆனால் அது இப்போது மிகுந்து எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. அதனால் ஒரு கூட்டத்தினர் சைவ உணவே சிறந்தது; ரத்தசர்க்கரை, மாரடைப்பு, புற்று நோயில் இருந்து நம்மை காப்பாற்ற ஏற்றது எனக் கூறுகிறார்கள். பொதுவாக சைவ உணவுக்கு மாறினதும் உடல் எடை வேகமாய் குறையும் என்பதால் இந்த பழக்கம் பிரபலமாகிறது.
 ஒரு பக்கம் நமது பற்களின் அமைப்பு கறி தின்பதற்கு ஏற்றதில்லை என கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் ஆய்வாளர்கள் தாவரங்களில் உள்ள செல்லுலூஸை ஜீரணிக்கும் திறன் பசு, ஆட்டை போல் மனிதர்களுக்கு இல்லை என்கிறார்கள். வீகனிசம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்கள் அசைவம் மட்டுமல்ல மிருகங்களில் இருந்து பெறும் உணவான பால், நெய்யை கூட தவிர்க்கிறார்கள்.
டெட் டாக்கில் இரு மருத்துவர்கள் இது குறித்து மாறுபட்ட வகையில் பேசுவது கேட்டேன். ஒருவர் நம் உடம்பின் வியாதிகள் அனைத்திற்கும் மிருகங்களில் இருந்து பெறும் கொழுப்பு தான் காரணம் என்கிறார். இவர் கொழுப்பு வகை உணவுக்கு எதிரானவர். போம்பா எனும் ஒரு மருத்துவர் கொழுப்பு தான் உடம்புக்கு நல்லது என்கிறார். அதாவது கொழுப்பு உடம்பில் குறையும் போது தான் நீரிழிவு ஏற்படுகிறது என்பது அவரது வாதம். நமது உடம்பின் செல்கள் இன்சுலின் ஹார்மோனை பயன்படுத்தி குளோகோஸ் மற்றும் கொழுப்பை சக்தியாக மாற்றி எரிக்கும். இன்சுலின் அருகில் வரும் போது செல்களின் மேலுள்ள முடிமுடியாக இருக்கும் ரிசெப்டர்ஸ் அதை அடையாளம் கண்டு ஏற்றுக் கொள்ளும். ஆனால் ரத்தத்தில் குளோகோஸின் அளவு அதிகமாகும் போது இந்த ரிசெப்டர்கள் வேலை செய்யாமல் மழுங்கிப் போகும். ஆனால் இயல்பாக உணவில் கிடைக்கும் கொழுப்பு (வெண்ணெய் போன்று) செல்கள் இன்சுலினை அடையாளம் கண்டு ஏற்றுக் கொள்ள உதவும். அதனால் இவர் குளோகோஸை கொண்ட சோறு, கோதுமை, மைதா ஆகியவற்ற முழுக்க உணவில் இருந்து தவிர்க்க சொல்கிறார். அதற்கு பதில் கொழுப்பை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் எந்த கொழுப்பை எவ்வளவு எப்படி சேர்க்கலாம் என அவர் விளக்கவில்லை.
உணவு வல்லுநர்களின் கதை எப்போதும் இப்படித் தான். ஒருவர் தெற்கு என்றால் இன்னொருவர் வடக்கே போக சொல்வார். எனக்கு இந்த குளோகோஸ் உணவுகளை தவிர்ப்பது ஓரளவு நல்ல பயன் தரும் எனத் தோன்றுகிறது. ஆனால் ஒரேயடியாய் அரிசி, கோதுமையை தவிர்க்காமல் ராகி, கம்பு ஆகியவற்றை கொஞ்சமும் நிறைய காய்கறி, கடலை, பயிறு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். பாலும் பால் சார்ந்த பொருட்களும் உடம்புக்கு அவசியம். அசைவம் உண்பவர்கள் எப்படியும் நம் ஊரில் வாரத்துக்கு ஒருமுறை தான் கறி சாப்பிடுவார்கள். இதனால் எப்படியும் சிக்கல் இல்லை. அவர்கள் காய்கறிகளுடன் நிறைய மீன் சாப்பிட்டு பார்க்கலாம். தேங்காய் போன்ற இயற்கை பொருட்களில் இருந்து கிடைக்கும் கொழுப்பு (ரிபைண்ட் எண்ணெயில் இருந்து கிடைக்கும் கொழுப்பை போல் அல்லாது) ரத்த கொழுப்பை குறைக்க உதவும் என்கிறார்கள்.
இதெல்லாம் ஆளாளுக்கு மாறுபட்ட விளைவுகள் ஏற்படுத்தும் என நினைக்கிறேன். ஒரு மாதமாய் மெல்ல மெல்ல உணவுப்பழக்கத்தை இப்படி மாற்றி ரத்த சர்க்கரை, கொழுப்பின் அளவில் மாறுபாடு உள்ளதா, எடை குறைகிறதா என சோதிக்கலாம். ஒகெ என்றால் தொடரலாம். இல்லாவிட்டால் விட்டு விடலாம். எந்த வியாதியும் இல்லாதவர்கள் மரபான உணவுப் பழக்கத்தை மாற்றாமல் தொடர்வது தான் நல்லது.
 இந்த உணவுப் பழக்க மாற்றம் (ரிவர்ஸல் டயட்) சிலருக்கு மருந்தில்லாமலே நீரிழிவை கட்டுப்படுத்த உதவியுள்ளதாய் கூறுகிறார்கள். ஆனால் டைப் 2 நீரிழிவு கொண்டவர்களுக்கு தான் இது சாத்தியம். டைப் 1 ஆட்கள் நிச்சயம் இன்சுலினை தொடர வேண்டும். ஆனால் அதன் அளவை குறைக்க இது பயன்படலாம். முயன்று பார்ப்பதில் தோஷமில்லை.

No comments: