Friday, October 16, 2015

புழுவை சாப்பிடும் சிங்கம்

மனிதர்கள் பற்றின நம் புரிதல் நாம் பார்க்கிறவர்களிடம் இருந்து உருவாகிறது. என்னுடன் இருப்பவர்கள் பளிச்சென்று புது சட்டை போட்டால் நான் சாயம் வெளுத்த சட்டை போடுவது பற்றி அவமானமாய் உணர்வேன். இப்படித் தான் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஒரு தரத்தை நமக்காய் நிர்ணயிக்கிறோம். அதன்படி நம்மை நாமே மதிப்பிடுகிறோம்.
 “லயன் கிங்” படத்தில் ஒரு அழகான காட்சி வரும். சிம்பா எனும் குட்டி சிங்கம் ஒரு பாலைவனத்திற்கு வந்து சேர்ந்து பசியிலும் களைப்பிலும் சோர்ந்து விழும். அப்போது அங்கு டிமன் எனும் மீர்க்கட்டும் (ஒரு சின்ன பாலூட்டி வகை) பும்பா எனும் பன்றியும் அவனுக்கு தோஸ்தாவார்கள். அவர்கள் அவனை உணவருந்த அழைப்பார்கள். சுற்றும் முற்றும் பார்த்தால் சாப்பிட மானோ முயலோ இல்லை. சிம்பா எதை சாப்பிட என யோசிக்கும் போது டிமனும் பும்பாவும் ஒரு பாறையை புரட்டிப் போடுவார்கள். கீழே ஈரமான இடத்தில் நிறைய புழுக்கள் நெளியும். டிமனும் பூம்பாவும் எச்சில் ஒழுக அவற்றை எடுத்து சுவைப்பார்கள். சிம்பாவுக்கு முதலில் குமட்டலெடுத்தாலும் மெல்ல மெல்ல அவற்றின் சுவையையும் அறிந்து ஏற்பான். நம்முடைய பழக்கத்தால் இதற்கு மேல் நம்மால் கீழே இறங்க முடியாது என நினைப்போம். ஆனால் எவ்வளவு கீழே போனாலும் உலகம் ஒன்று தான்.
சில வாரங்களுக்கு முன் என் டி.வி பழுதாகியது. கம்பெனி ஆள் பார்த்து விட்டு ரிப்பேர் செய்த பத்தாயிரம் ஆகும். புதிதாய் வாங்கி விடுங்கள் என்றார். புது டி.வி வாங்க என்னிடம் பணம் இல்லை. வீட்டில் அம்மா இருந்தார்கள். அவர்களுக்கு டி.வி இல்லாவிட்டால் வெறுப்பாகி விடும். முன்பு நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் புது டி.வி தேவையென்றால் நேரே கடைக்கு போய் பணத்தை நீட்டி வாங்கி விடுவேன். அன்று சாத்தியமான ஒரு எளிய விசயம் இன்று அசாத்தியம். சரி பழைய டி.வி ஒன்று வாங்கலாம் என முடிவு செய்து பழைய பொருட்களை விற்கும் கடைகளுக்கு சென்று தேடினேன். பழைய டிவியே பெரிய விலை சொன்னார்கள். நான் ரெண்டாயிரம் ரூபாய்க்குள் தேடினேன். ஆரம்பத்தில் ரெண்டாயிரத்தை ஒரு பெரிய தொகையாக நினைக்கும் நிலை வந்து விட்டதே என சங்கடம் ஏற்பட்டது. ஆனால் பாருங்கள் என் பட்ஜெட்டுக்குள் பழைய டிவி கூட மாட்டவில்லை. ரெண்டு நாள் கழித்து வாருங்கள் என்றார்கள். ரெண்டு நாள் கழித்தும் கிடைக்கவில்லை.
 பிறகு எதேச்சையாய் இன்னொரு கடையில் ஒரு டி.வி மாட்டியது. அதன் போர்டை மட்டும் மாற்றி உள்ளதாய் கூறினார்கள். அதை வாங்க அங்கு காத்து நின்ற போது என் நிலைமை வேறு யாருக்கும் இருக்காது என தோன்றியது. அப்போது ஒரு இளம் தம்பதி அங்கு என்னைப் போல பழைய டிவி தேடி வந்தார்கள். பார்க்க ரொம்ப ஏழைகளாய் படவில்லை. ஆனால் அவர்கள் பட்ஜெட்டோ என்னை விட கீழே இருந்தது. ரெண்டாயிரம் ரூபாய் டிவி கூட அவர்களுக்கு கட்டுப்படியாக வில்லை. நான் அங்கு நின்றிருந்த கொஞ்ச நேரத்தில் இந்த உலகில் எல்லா நிலையிலும் மக்கள் இருக்கிறார்கள் என உணர்ந்தேன். பொருளாதார நிலையை பொறுத்து மதிப்பீடும் தேவையும் ரசனையும் மாறுகின்றன.
பழைய டிவி அங்கங்கே அழுக்குப் படிந்து ஒரு புராதனப் பொருள் போல் இருக்கிறது. சில இடங்களில் அழுக்கு கறை துடைத்தாலும் நீங்கவில்லை. யார் எப்படி பயன்படுத்தினார்களோ என நினைக்க அருவருப்பு ஏற்பட்டது. ஆனாலும் என்ன ஒழுங்காய் வேலை செய்கிறது. என்னிடம் முதலில் இருந்த எல்.ஜி எல்.சி.டி டிவி போல் இதில் நிறங்கள் துல்லியமாய் தெரியவில்லை. நீலம் பச்சையாகவும் சிவப்பு ஊதா போலவும் தோன்றியது. இடது பக்கம் மேல் ஓரத்தில் அலையலையாய் நெளிகிறது. சிலநேரம் நெளிவில் மட்டையாடும் தோனி டிஸ்கோ நடனம் ஆடுகிறார். ஆனாலும் இப்போது பழகி விட்டது. எந்த குறையும் தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் பணம் வந்தாலும் புது டிவி வாங்க தோன்றாது என நினைக்கிறேன்.
இப்போதெல்லாம் அந்த டிவியை பார்க்கும் போது கல்லைப் புரட்டிப் போட சிம்பாவின் முன் தோன்றின நெளியும் புழுக்களின் சித்திரம் தான் எனக்கு நினைவு வருகிறது. சிம்பா அதை சாப்பிட்டு பழகி பெரிதான பின் புழுக்களை மட்டும் தின்னும் சாதுவான சிங்கம் ஆகி விடுவான். எதற்கு கஷ்டப்பட்டு துரத்தி மான், மாடெல்லாம் வேட்டையாட வேண்டும், எதற்கு வேறு சிங்கங்களுடன் போட்டியிட்டு சண்டையெல்லாம் போட வேண்டும் என அவனுக்கு தோன்றும். கொஞ்சம் மாற்றி யோசித்தால் எல்லாம் இயல்பாகி விடுகிறது.

No comments: