Friday, October 2, 2015

பிறசாதி ஈர்ப்பும் கலப்பு மண குழந்தைகளும்சமீபத்தில் சாதிக் கலவரங்கள் பற்றின ஒரு டி.வி விவாதத்தின் போது ஒரு பா.ம.க பிரமுகர் ஒரு கேள்வி கேட்டார்: “ஆளாளுக்கு சொந்த சாதிக்குள்ளேயே பார்த்து காதலிச்சா என்ன? யாருக்கும் பிரச்சனை இல்லை.” இது ஒரு முக்கியமான கேள்வியாக எனக்குப் பட்டது. சாதி மீறி காதலிப்பவர்களில் பெரும்பாலானோர் கருத்தளவில் சாதிக்கு எதிரானவர்கள் அல்ல. நாளை சாதி கடந்து திருமணம் செய்தாலும் தகப்பனின் சாதியை பிள்ளைக்கு அளிப்பார்கள். அச்சாதியின் அனைத்து சடங்குகள், நம்பிக்கைகளையும் பின்பற்றி வளர்ப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் நாளை சாதி மீறி காதலித்தால் அதை கடுமையாக எதிர்ப்பார்கள். இந்தளவுக்கு சாதிக்குள் ஊறியவர்கள் எவ்வாறு சாதியை மீறி ஒரு துணையை தேர்ந்தெடுக்கும் மனநிலையை பெறுகிறார்கள்? இது வெறும் தற்காலிக ‘சறுக்கலா’? உணர்ச்சி மேலிடலால் நிகழ்கிற ஒன்றா? அல்லது ராமதாஸ் போன்றவர்கள் நம்ப விரும்புவது போல் பணம் பறிப்பதற்காய் இளைஞர்கள் திட்டமிட்டு நடத்தும் நாடகத்தில் பெண்கள் பலியாவதா? தமிழகத்தில் கணிசமான பெற்றோர் தம் மகளோ மகனோ தம் சாதிக்குள் மணப்பதையே விரும்புவார்கள். அவர்கள் மனதிற்கு நிச்சயம் இக்கேள்வி இருக்கும்: மிச்ச எல்லா விசயங்களில் சாதிய ரீதியாய் ’சரியாய்’ இருக்கும் தம் பிள்ளைகள் ஏன் காதலில் மட்டும் சறுக்கி ‘தவறான’ முடிவு எடுக்கிறார்கள்?
என் ஊரான பத்மநாதபுரத்தில் மலையாளிப் பெண்களுக்கும் பக்கத்து ஊர் தமிழ்ப் பையன்களுக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு சதா இருந்து வருவதை நான் சிறுவயதில் கவனித்திருக்கிறேன். ஊரிலுள்ள மலையாளி இளைஞர்கள் மீது இப்பெண்களின் பார்வை எளிதில் திரும்புவதில்லை. அதே போல் பிராமண மற்றும் இஸ்லாமிய பெண்களால் கவரப்படும் வேற்றுசாதி/மத இளைஞர்களைக் கண்டிருக்கிறேன். சுற்றி விட்ட காந்தம் போல் இவர்களை எங்கு கொண்டு விட்டாலும் அந்த மாதிரி பெண்களை நோக்கித் தான் இவர்களின் மனம் திரும்பும். மிக இளமையில் இருந்தே தம் சொந்த சாதிப் பெண்கள் மீது இவர்களுக்கு ஆர்வம் மிக குறைவாக இருக்கும். சென்னை கிறுத்துவக் கல்லூரியில் கேரளத்தின் சிரியன் கிறுத்துவ பெண்கள் நிறைய படிப்பார்கள். அவர்கள் பாலியலை பொறுத்த மட்டில் தமிழர்களை விட திறந்த மனப்பான்மையுடன் இருப்பார்கள். இவர்கள் தம் சொந்த சாதி/மத இளைஞர்களுடன் இணைந்து சுற்றுவதை மிக மிக அரிதாகவே கண்டிருக்கிறேன். பெரும்பாலோனோர் தமிழ் ஆண்களை காதலிப்பார்கள். ஆனால் படிப்பு முடிந்ததும் ஊருக்கு சென்று வழுக்கையும் தொப்பையுமான ஒரு மலையாளியை திருமணம் பண்ணிக் கொள்வார்கள். இவர்களை குறிப்பிடக் காரணம் இவர்கள் அடிப்படையில் தம் சாதி/மதத்தில் மிகவும் பிடிப்பு கொண்டவர்கள் என்பது.
இந்த முரணான மனநிலை குறைத்து ஒரு விரிவான ஆய்வு செய்யப்பட்டு நம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் மனதில் என்ன மாதிரியான துணை தேர்வு விருப்பங்கள் உள்ளன என கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் என்னதான் சாதிய ரீதியாய் ஒரு குறுகின மனப்பான்மை கொண்டவர்களாய், குழுவுணர்வு மிக்கவராய் நாம் இருந்தாலும், ஆழ்மன அளவில் பிற சாதி ஆண்/பெண்கள் மீது இனம்புரியாத இச்சை ஒன்று நமக்குள் உள்ளது.
இந்த இச்சையை பொறுத்த மட்டில் அனைவரையும் நாம் ஒரே அடைப்புக்குறிக்குள் வைக்க இயலாது. நம்மூரில் சொந்த மாமாவை இளம்பெண்களுக்கு கட்டி வைக்கும் வழக்கம் இருந்துள்ளது. அதே போல் மாமன் மகள்களை மிகவும் நேசித்த பண்பாடும் நம் சினிமாவில் பதிவாகி உள்ளது. ஒரு கட்டத்தில் நம் சினிமாவில் இது மாமன் மகள் என்பதில் இருந்து சிறுவயதில் சந்தித்து பழக்கமான பெண்/ஆணை பின்னால் வளர்ந்த பின் நேசிப்பது என்றாகியது.
ஆக, இச்சையை இரண்டாக பிரிக்கலாம். குடும்பத்துக்குள் அல்லது நெருக்கமான உறவுகளுக்குள் அதிகம் இணங்கி பழகுகிற பெண்/ஆண் மீது வரும் இச்சை. இதை உள்-குடும்ப இச்சை (incest) என வகைப்படுத்தலாம். குடும்ப உறவுகளுக்குள் மணமுடிப்பது சொத்தை தக்க வைப்பதற்கும், உறவுகளை நெருக்கமாக்கவும், பழகிய கலாச்சார சூழலுக்குள் தொடர்ந்து வாழவும் உதவும் ஆகியன உண்மை என்றாலும், ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ இந்த நடப்பியல் தேவைகளைத் தாண்டி ஒரு உள்சாதி/உள்குடும்ப வேட்கை நிச்சயம் உள்ளது என்பதையும் மறுக்க வேண்டியதில்லை. உட்குடும்ப வேட்கையை ராமதாஸும் பிற சாதிய தலைவர்களும் நிச்சயம் ஆதரிக்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களும் அதுவே சரி என நினைக்கிறார்கள்.
 ஆனால் மனித இயற்கை இவ்விசயத்தில் ஒரு புதிரான முறையில் செயல்படுகிறது. உட்குடும்ப வேட்கை கொண்டவர்கள் பொதுவாக நம் மத்தியில் குறைவாகவே இருக்கிறார்கள். அதாவது நம்மிடையே சாதிக்குள் திருமணம் செய்பவர்கள் அதிகம் என்றாலும் நிச்சயம் வேற்றுசாதிக்குள் காதலிப்பவர்கள் அதிகம். நடைமுறை நிர்பந்தம் தான் நம்மை உட்குடும்ப திருமணத்துக்குள் தள்ளுகிறது. இப்போது கல்வி, பொருளாதார வளர்ச்சி, நவீன தொடர்புசாதனங்கள், நீண்ட தூரம் பயணிக்கும் வாய்ப்புகள் மற்றும் புது கலாச்சார அறிமுகங்கள் மேற்சொன்ன நடைமுறை நிர்பந்தங்களை தளர்த்தி உள்ளது. இதன் விளைவாக இயற்கை வெல்லுகிறது. சாதிக்கு வெளியே காதலித்து வந்தவர்கள் ஏன் சாதிக்கு வெளியேவே மணமுடிக்கக் கூடாது என சிந்திக்கிறார்கள். ஆனால் சாதி ரீதியிலான நடைமுறை நிர்பந்தங்கள் தளர்ந்துள்ளனவே ஒழிய முழுக்க அழியவில்லை. விளைவாக இயற்கைக்கும் சமூக நிர்பந்தங்களூக்கும் இடையில் ஒரு முரண்பாடு தோன்றுகிறது. கடந்த இரு பத்தாண்டுகளில் இந்தியாவில் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் காரணமாய் தோன்றின நவீன மாற்றங்களும் பொருளாதார வளர்ச்சியும் இந்த முரண்பாட்டை உச்சத்துக்கு கொண்டு போனது. கடந்த இரு பத்தாண்டுகளில் மெல்ல மெல்ல கௌரவக் கொலைகளும் அதிகரித்துள்ளதற்கு இதுவே காரணம்.
பிறசாதி துணையை நோக்கி ஒருவரை ஈர்க்கிற இயற்கைக்கு வருவோம். இதற்கு ஒரு முக்கிய காரணம் மனிதனுக்கு தன் மரபணு குட்டையை (gene pool) விரிவாக்கும் ஆசை என பரிணாமவியல் கூறுகிறது. நெருங்கின உறவினர்களுக்கு மணம் புரியும் போது ஒரே விதமான மரபணுக்கள் கலப்பதற்கான வாய்ப்பு அதிகம். இன்றைய கணிசமான வியாதிகள் மற்றும் உடல் கோளாறுகள் மரபணுவில் உள்ள பிழையினால் ஏற்படுகின்றன. உதாரணமாய் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு பார்வைக்குறைபாட்டை ஏற்படுத்தும் மரபணு இருக்கலாம். அவர் தன் சாதியை சேர்ந்த மற்றொருவரை மணக்கும் போது பார்வைக்கோளாறுக்கான இரண்டு ஜோடி குரோமோசோம் கொண்ட மரபணுக்கள் சந்திக்கின்றன. இது இரண்டு பார்வையற்றவர்கள் ஒருவரை ஒருவர் கையை பிடித்துக் கொண்டு சாலையை கடப்பது போல் சிக்கலானது. ஒருவேளை அவர் மாற்றுசாதியில் மணம் புரிந்தால் பிள்ளைக்கு பார்வைக் கோளாறு ஏற்படாமல் இருப்பதற்கு 50% சாத்தியம் குறைவாக இருக்கும். ஏனென்றால் மாற்றுசாதி துணையின் மரபணுக்குள் பார்வைக்கோளாறு ஏற்படக் காரணமான பழுது இல்லாத குரோமோசோம் இருக்கும். இயற்கை அதை பயன்படுத்திக் கொண்டு பழுதான குரோமோசோமை கைவிடும். விளைவு நன்மையாக முடியும். ஆனால் சுயசாதிக்குள் பரம்பரை பரம்பரையாக மணக்கும் போது அதே பழுதான குரோமோசோம்கள் உள்ளுக்குள் சுற்றிக் கொண்டிருக்கும். உதாரணமாய் கணிசமான பிராமண குழந்தைகள் சிறுவயதில் இருந்தே கண்ணாடி மாட்டியிருப்பதை பார்க்கலாம். பார்வைக் கோளாறு குரோமோசோம் பிராமணர்களின் மரபணுக்குள் களையெடுக்கப்படாமல் மாட்டிக் கொண்டிருக்கிறது. அதே போல் பிராமணர்கள் இடையில் எழுபது வயதுக்குள் மாரடைப்பு வருகிற வாய்ப்புகளும் அதிகம். ஒரே மரபணு குட்டைக்குள் மணப்பதன் சிக்கல் இது. காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பில் ஆமோஸ் கென்யாவில் குழந்தை மரணங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஒரே இனக்குழுக்குள் மணந்த பெற்றோர்களுக்கு பிறந்த மரபணு பன்மயம் (genetic) அற்ற குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் இறந்திருப்பதை கண்டறிந்தார். வேறு சாதி/இனத்துக்குள் மணக்கையில் நம் மரபணுக் குட்டையை அகலமாகிறது. சந்ததியினரும் ஆரோக்கியமாய் இருப்பார்கள்.
இந்த உண்மையை நம் பிரக்ஞை உணர்வதில்லை. நம் பிரக்ஞை எப்போதும் உடனடியான சமூகச் சூழல், எதிர்விளைவுகளையே கவனத்திற் கொள்ளும். ஒரே சாதிக்குள் மணந்தால் சமூகத்தில் கௌரவமும் பொருளாதார வளமையும் உறவினர்/ சாதிய ஆதரவும் அதிகமாகும். இன்னொரு புறம் கலப்பு சாதி பிள்ளைகள் நம் சமூகத்தில் கீழானவர்களாக பார்க்கப்படுவார்கள். அவர்களுக்கு என்று ஒரு அடையாளம் இல்லாமல் போய் விடும் என்றெல்லாம் நம் பிரக்ஞை கவலைப்படும். ஆனால் நம் ஆழ்மனதுக்கு இந்த புற உண்மைகளில் ஆர்வமில்லை. அது எதிர்கால சந்ததி ஆரோக்கியமாய் இருக்க வேண்டும் என்று மட்டுமே விரும்பும். விளைவாய் நம் மனம் இரண்டாய் பிளக்கிறது. ஒன்றுக்கு சாதிக்கு ஆதரவாயும் மற்றொன்று சாதிக்கு எதிராயும் சிந்திக்கிறது.
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கில்லியன் ரோட்ஸ் ஒரு வித்தியாசமான ஆய்வு செய்தார். எவ்வகையான முகங்கள் மக்களுக்கு அழகாக தோன்றுகின்றன என்பதை அறிவதே நோக்கம். ஜப்பானியர் மற்றும் வெள்ளையர்கள் ஆய்வில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் எவ்வகையான ஆட்களை அழகாய் கருதுகிறார்கள் என கேட்கப்பட்டது. ஜப்பானியர் ஜப்பானியரையும் வெள்ளையர்கள் வெள்ளையரையும் அழகானவர் என வழக்கம் போல் குறிப்பிட்டனர். அடுத்து கணினி மூலம் டிஜிட்டல் முறையில் பல்வேறு இனங்களை சேர்ந்தோரின் தோற்றப் பண்புகள் கொண்ட சராசரி முகங்கள் உருவாக்கப்பட்டு இந்த பங்கேற்பாளர்களிடம் காட்டப்பட்டது. முதலில் தம் இனத்தவரே அழகு எனக் கூறியவர்கள் இப்போது (ஐரோப்பிய-ஆசிய) கலப்பின தோற்றம் கொண்ட முகங்களை அழகானவை என தேர்ந்தெடுத்தனர்.
2004இல் நியு மெக்ஸிக்கோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த கிரெயிக் ராபர்ட்ஸ் மற்றொரு ஆய்வு செய்தார். பங்கேற்பாளர்கள் பெண்கள். அவர்களிடம் கலப்பின ஆண்கள் மற்றும் கலப்பற்ற ஆண்களின் குளோசப் படங்கள் காட்டப்பட்டு அவற்றில் ஆரோக்கியமான தோல் யாருக்கு என கேட்கப்பட்டது. பெருவாரியான பெண்கள் கலப்பின ஆண்களையே தேர்ந்தெடுத்தனர். பொதுவாக ஒருவரை அழகு என மதிப்பிடுவதற்கு தோலின் ஆரோக்கியம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. நோய் வாய்ப்பட்டிருந்தாலோ அதிக கவலையில் இருந்தாலோ தூக்கமற்றிருந்தாலோ தோல் வறண்டு மிளிரவற்று தோன்றும். ஒரு மனிதனின் உடல்நிலை மற்றும் மனநிலையை கணிப்பதற்கு தோலின் தோற்றம் முக்கிய அறிகுறியாக உள்ளது. அதனாலே தோல் களிம்புகளுக்கு இவ்வளவு பெரிய சந்தை உள்ளது.
முதல் ஆய்வுக்கு வருவோம். ஏன் கலப்பின முகங்கள் அழகாய் தேர்ந்தெடுக்கப்பட்டன? முதல் காரணம் இந்த முகங்களின் சமச்சீர்மை (symmetry). போதுமான இடைவெளி கொண்ட கண்களும் பிற முக அம்சங்களும் அழகை கூட்டுகின்றன. இது பொதுவாய் அழகானவர்களுக்கு பொருந்தக் கூடிய கூற்று தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அறிவியல் வேறொன்றை கூறுகிறது. குழந்தை தாய் வயிற்றில் கருவாக இருக்கும் போது உணவு அல்லது மருந்து மூலமான விஷமான மூலப்பொருட்கள் அதனை பாதித்தாலோ நுண்கிருமிகள் தாக்கினாலோ, அக்குழந்தை பிறக்கும் போது முகத்தின் சமச்சீர்மை கெட்டு விடும். ஆக சரியான சமத்தன்மை கொண்ட முக இயல்புகள் ஒருவரின் ஆரோக்கியத்தின் அறிகுறியாக உள்ளது.
ஒருவரின் சிறந்த தற்காப்பு சக்திக்கு காரணமான ஜோடி மரபணுக்களை major histocompatability complex (MHC) என்கிறார்கள். கிரெயிக் ராபர்ட்ஸின் மற்றொரு ஆய்வில் இந்த MHC அதிகமாய் மற்றும் குறைவாய் உள்ளவர்களின் படங்கள் பங்கேற்பாளர்களுக்கு காட்டப்பட்டது. MHC அதிகமுள்ளோர் அழகானவர்கள் என தேர்ந்தெடுத்தார்கள் பெரும்பாலான பங்கேற்பாளர்கள்.
ஆரோக்கிய அறிகுறிகள் கொண்ட துணையை தான் அழகென கருதி நம் மனம் தேர்ந்தெடுக்கிறது. பொதுவாக மரபணு ரீதியாய் ஆரோக்கியமும் அதிக தற்காப்பு சக்தியும் கொண்ட கலப்பினத்தவர்கள் அழகானவர்கள் என இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டது இதனால் தான். ஆனால் இதனைக் கொண்டு கலப்பினத்தவர் மட்டுமே அழகானவர், ஆரோக்கியமானவர் என கூற வரவில்லை. இயல்பாகவே அகன்ற மரபணு குட்டையில் இருந்து அக்குழந்தைகள் உருவாவதால் அவர்களுக்கு தற்காப்பு ஆற்றல் மிகுதியாய் இருக்கும். அப்படி உள்ளவர்கள் அழகானவர்களாகவும் எதிர்பாலினத்தோருக்கு தோன்றக் கூடும். மாற்று சாதியினர் பால் நாம் ஈர்க்கப்பட ஒரு காரணம் இது போன்ற அழகான ஆரோக்கியமான குழந்தைகள் நமக்கு பிறக்க வேண்டும் எனும் ஆழ்மன விழைவு தான்.

(நன்றி: உயிர்மை, செப்டம்பர் 2015)

No comments: