Wednesday, September 9, 2015

மார்த்தாண்ட வர்மாவும் ஐ.ஐ.டியும்நேற்று ஐ.ஐ.டியில் வரலாற்று ஆய்வாளர் அனன்யா வாஜ்பய் உரை நிகழ்த்தினார். நானும் சில நண்பர்களும் பார்வையாளர்களாய் கலந்து கொண்டோம். சூத்திரரான சிவாஜி எவ்வாறு பிராமணர்களின் உதவியுடன் தன்னை சத்திரியராய் உருமாற்றி, அதை உறுதிப்படுத்துவதற்கான சடங்குகள் நடத்தி, தன் குடும்ப வரலாறு பற்றி ஒரு பொய்யாத தகவலை உருவாக்கினார் என்பது பற்றி அனன்யா பேசினார்.
 அவர் பேச்சு முடிந்ததும் கலந்துரையாடல். நான் சில கேள்விகள் கேட்டேன். வர்ணாசிரமம் சார்ந்து மட்டுமே நாம் சாதி அமைப்பை புரிந்து கொள்ள இயலாது. தமிழகத்தில் எவ்வாறு பௌத்தம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட பின் ஏற்கனவே பௌத்தர்களாய் இருந்தவர்கள் தீண்டத்தகாத சாதிகளாய் இந்துக்களால் மாற்றப்பட்டார்கள் என அயோத்திதாசர் விரிவான தகவல்கள் மற்றும் சான்றுகளுடன் பேசியுள்ளதை குறிப்பிட்டேன். ஒரு தாழ்த்தப்பட்ட சாதியானது வர்ணாசிரம அமைப்பினால் மட்டுமல்ல ஒரு மதப் போரின் பின்விளைவாகவும் உருவாகக் கூடும் என்றேன். அதன் பிறகு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மா ஆண்ட போது நடந்த ஒரு சம்பவத்தை பேசத் தொடங்கினேன். அப்போது மொத்த அரங்கிலும் சிரிப்பலைகள் பரவின. எனக்கு சில நொடிகள் ஒன்றுமே விளங்கவில்லை. நான் எவ்வாறு தமிழகத்தின் பகுதியான திருவிதாங்கூரை முன்னர் மார்த்தாண்ட வர்மா ஆண்டார் என்ற போது மீண்டும் சிரித்தார்கள். நான் எதாவது தவறாய் சொல்லி விட்டேனா அல்லது அவர்களுக்கு பைத்தியமா என எனக்கு விளங்கவில்லை. திருவிதாங்கூர் முன்பு மலையாள மன்னர்களின் ஆட்சியின் பகுதியாய் இருந்த சமஸ்தானம். அது பின்னர் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது என்றதும் தான் சிரிப்பலை ஓய்ந்தது.

பின்னர் நான் இந்த கூட்டத்தின் விநோத எதிர்வினை பற்றி ஒரு பேராசிரியரிடம் விசாரித்தேன். அவர் சொன்னேன் “மாணவர்களில் கணிசமானவர்கள் மலையாளிகள். அதனால் தான்”. அவர்கள் மனதில் மார்த்தாண்ட வர்மா ஒரு மலையாள மன்னர் என பதிந்திருக்க வேண்டும். திருவிதாங்கூர் என்பதும் ஒரு மலையாள பிரதேசம் என அவர்கள் நினைத்திருக்கலாம். இன்றும் பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் ஆட்சியின் கீழே உள்ளது. இந்த பத்மநாபபுரம் 1729இல் இருந்து 1795 வரை திருவிதாங்கூரின் தலைநகராக இருந்தது. கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் மன்னர்கள் பதினாறாம் நூற்றாண்டில் துவங்கி இருபதாம் நூற்றாண்டில் இந்தியா சுதந்திரம் பெறும் வரை தமிழகப் பகுதியான திருவிதாங்கூரை மையமிட்டு தான் ஆட்சி நடத்தினர். மார்த்தாண்ட வர்மாவின் கீழ் திருவிதாங்கூர் குமரி துவங்கி கொச்சின் வரை விரிந்து கிடந்தது. இந்த வரலாறு அம்மாணவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரிந்தும் திருவிதாங்கூரை ஒரு கேரளப் பகுதி என்றும் பின்னர் தமிழகம் பிடுங்கிக் கொண்டது என்றும் நினைத்திருக்கலாம். எப்படியோ இப்போது தமிழக மண்ணாக உள்ள ஒரு பகுதியை தம் மலையாள மன்னர் ஆண்டார் எனும் வாக்கியம் அவர்களுக்கு பெரிய ஜோக்காகி விட்டது.
இது ஒரு விதத்தில் குமரிப் பகுதியின் தமிழர்கள் தம் அடையாளம் சார்ந்து உணரும் ஒரு வேடிக்கையான முரண் நிலையையும் காட்டுகிறது. செல் சேவிஸ் என்று ஒரு குமரி மாவட்ட கவிஞர் இருக்கிறார். அவர் விளவங்கோடு என்ற பகுதியை சேர்ந்தவர். அப்பகுதியின் விசேடத் தமிழில் கவிதை எழுதும் ஒரே கவிஞர் அவர் தான். விளவங்கோட்டு தமிழின் சாயலை சற்றே ஜெயமோகனின் வட்டார வழக்கிலும் காணலாம். செல் சேவிஸ் ஒரு முறை சொன்னார். குமரி மாவட்டம் 1956இல் கேரளப் பகுதியில் இருந்து தமிழகத்தின் மாவட்டமாய் இணைந்த விசயம் அவரது பெற்றோர்களுக்கு நீண்ட காலம் தெரியாமல் இருந்ததாம். அவர்களூம் வேறும் சிலரும் அப்போதும் தாம் கேரள மாநிலத்தவர் என்றே நம்பி வந்தனர். இன்றும் குமரி மாவட்டத்தினர் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் நடுவில் தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். மலையாளம் கலந்த தமிழ் பேசுகிறார்கள். இரண்டு மொழிகளையும் பேசுகிறார்கள். அடிக்கடி கேரளாவுக்கு பயணப்படுகிறார்கள். இரண்டு மாநில கலாச்சாரமும் கலந்த ஒரு தனி அடையாளம் அவர்களுக்கு உள்ளது. விளைவாக தமிழர்கள் அவர்களை மலையாளி என்றும் மலையாளிகள் அவர்கள் பாண்டி என்றும் அழைப்பார்கள். ஒரு முக்கியமான மலையாள மன்னர் தமிழகப் பகுதியை ஆண்டார் என்ற வாக்கியம் மலையாளிகளை இவ்வளவு குஷியாக சிரிக்க தூண்டுகிறது என்பது இன்றும் அப்பகுதி யாருடையது எனும் குழப்பம் தீரவில்லை என்று காட்டுகிறது.
மற்றொரு செய்தியையும் நான் புரிந்து கொண்டேன். தமிழகத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறோம் என்பதாலே அது பொதுவான வழக்கமான இடம் என நாம் நம்பி விடக் கூடாது. இதையே நான் ஒரு இலக்கிய கூட்டத்தில் சொன்னால் முன்னெண்ணம் இன்றி கவனிப்பார்கள். ஆனால் மலையாளிகள் மிகுந்த இடத்தில் சொன்னால் அவர்களுக்கு எளிதில் உள்வாங்க இயலாது. வட இந்தியாவுக்கு போய் மோடியை எளிதில் விமர்சித்து ஒரு கூட்டத்தில் பேசவோ இந்த்துவாவை கண்டிக்கவோ முடியாது. இங்கு கைதட்டுவார்கள். அங்குள்ள கூட்டத்தின் எதிர்வினை வேறொன்றாக இருக்கும்.
 என் நண்பர் ஜெய்சங்கர் மற்றொரு கேள்வி கேட்டார். பிராமணர்கள் தோன்றுவதற்கு முன்பான இந்திய சமூகத்தில் சாதி எப்படி இருந்தது என்பதற்கு பதிவு உண்டா? இதற்கு பதிலளித்த அனன்யா ரிக் வேதம் தாம் இருப்பதிலேயே தொன்மமான பதிவு என்றும், அது சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது என்பதால் பிராமணர்களுக்கு முன்பான இந்தியாவை கட்டமைப்பது இயலாது என்றார். மேலும் ஆரியர்கள் சைபர் கணவாய் வழி வந்தார்கள் எனும் கருத்தாக்கத்தை தான் ஏற்பதில்லை என்றார். இது
பற்றி பின்னர் எங்கள் பேராசிரியர் அழகரசனிடம் பேசும் போது வேறொரு விளக்கத்தை தந்தார். வட இந்தியர்களுக்கு பிராமணர்கள் இல்லாத வரலாறு இல்லை. ஆனால் தமிழர்களுக்கு அவ்வாறான பிராமணர்களுக்கு முந்தின வரலாறு உண்டு. நம் தொல்காப்பியம் ஒரு சான்று. சங்கப் பாடல்களில் உள்ள அந்தணர்கள் உண்மையில் பிராமணர்கள் அல்ல என அயோத்திதாசர் சொல்வதை அவர் குறிப்பிட்டார். ஆக பிராமணர்களைக் கடந்த ஒரு சாதிய அமைப்பை பற்றி பேசுவது நமக்கு இயல்பாகவும் சாத்தியமானதாகவும் உள்ளது. மேலும் நாம் சைபர் கணவாய் ஆரியர் படையெடுப்பு வாதத்தை கேட்டு கேட்டு பழகியிருக்கிறோம். இது போன்ற பின்னணி இல்லாத தில்லியை சேர்ந்த அனன்யாவுக்கு பிராமணர்களுக்கு முன்பான இந்தியா எனும் வாதமே விசித்திரமாய் தோன்றும். அவ்வாறு அத்தகைய ஒரு காலகட்டம் பற்றி ஆய்வதற்கு அவரிடம் சான்றுகள் இல்லை. ஆனால் நம்மிடம் அத்தகைய வரலாற்றை கட்டமைப்பதற்கு சான்றுகள் உள்ளது. ஆக சாதி பற்றி விவாதிக்கும் போதே நீங்கள் எந்த பிராந்தியத்தை சேர்ந்தவர் என்பது தான் உங்கள் நிலைப்பாட்டையும் நம்பிக்கையும் தீர்மானிக்கும். ஒரு ஆய்வு முடிவு எல்லா பிராந்தியத்துக்கும் பொருந்த அவசியமில்லை.
என்ன தான் ஒருமித்த இந்தியா என பேசினாலும் பக்கத்தில் மலையாளிகள், தொலைவில் வடக்கில் இந்திக்காரர்கள் நடுவே நாம் எவ்வளவு தனிமையாய் இருக்கிறோம் என இது எனக்கு உணர்த்தியது.

2 comments:

Sam Gideon said...

குமார செல்வா ஒரு விளவங்கோட்டு எழுத்தாளராக தொன்னூறுகளிலிருந்து செயல்பட்டு வருகிறார். பரவலாக இலக்கிய உலகில் கவனம்பெற்றவர். விளவங்கோட்டு வட்டார வழக்கினைத் தன் நடையாக வரித்து எழுதிய அவருடைய கொய்தமுள் கவிதைத் தொகுதி, உக்கிலு, கயம் சிறுகதைத் தொகுதிகள்,சமிபத்தில் வெளிவந்த குன்னிமுத்து நாவல் போன்றவை குறிப்பிடத்தக்கன. இக்கட்டுரையில் செல் சேவிஸ் எழுத்தாளரோடு இவரையும் இணைத்து வாசிக்கலாம் என்ற அடிப்படையில் இத்தகவலைப் பதிவிடுகிறேன். நன்றி

Abilash Chandran said...

அன்புள்ள சேம்
குமார செல்வா அதிகமும் பொதுத்தமிழில் தான் எழுதியதாய் என் நினைவு. உக்கிலு தொகுப்பு ஒரு உதாரணம். செல் சேவிஸ் கலப்பற வட்டார வழக்கில் கவிதை எழுதுகிறவர். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி