Monday, September 28, 2015

அற்பங்களின் உலகம்சின்ன வயதில் இருந்து நான் நடக்கும் போது அடிக்கடி விழுந்து கொண்டிருப்பேன். வீட்டுக்குள் விழுந்து காயம் ஏற்படுவதை தவிர்க்க நான் வீட்டுக்குள் சக்கர நாற்காலி பயன்படுத்த துவங்கினேன். வெளியில் நடக்கையில் என் காலில் அணிந்திருக்கும் காலிப்பரின் லாக் சரியாக பொருந்தாமல் விழுந்து விடுவேன். இதில் ஒரு விசயம் என்னவென்றால் விழும் போது அந்த அரைநொடி எனக்கு இரண்டு மூன்று நிமிடங்களாய் ஸ்லோமோஷனில் போகும். அப்போது நான் “விழுந்து காலிப்பர் ஒடியக் கூடாதே” என மனதுக்குள் கவலைப்படுவேன். கவலைப்பட்டு முடிக்குமுன் கீழே கிடப்பேன். சரியாய் கீழே விழுந்து தரையில் தொடுகிற தருணம் என் நினைவில் இருக்காது.

 இது போன்ற நேரங்களில் எனக்கு வருத்தமோ பயமோ அவமானமோ ஏற்படுவதில்லை. சீவும் போது சீப்பில் நான்கு தலைமயிர்கள் கொத்தாய் வருவதை பார்ப்பது போல் ஒரு உணர்வு. இதுவரை விழுந்து ஒருமுறை கூட எனக்கு உடம்பில் அடிபட்டதும் இல்லை. விழுந்து விழுந்து அப்படி பழகி விட்டது. ஆனால் பார்ப்பவர்கள் பயந்து விடுவார்கள். அவர்கள் ரொம்ப கவலைப்படுவார்கள். முன்பு ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. கிண்டி இண்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில் என் வண்டியில் ஏறும் தவறி விழுந்து விட்டேன். மாலை ஏழரை இருக்கும். இருட்டான தனியான பகுதி. ஒருவர் அவ்வழியாய் வந்தார். அவரை அழைத்து என்னை தூக்கி எழுப்பி விடுமாறு கேட்டேன். அவர் என்னை ஏதோ குடித்து விட்டு கிடக்கிறவர் என நினைத்தார். எதற்கு வம்பு என என் பக்கத்தில் வரவே தயங்கினார். நான் அவரிடம் நான் போதையில் எல்லாம் விழவில்லை என விளக்கினேன். பிறகு என் வண்டியை பார்த்ததும் ஊனமுற்றவர் என நம்பிக்கை ஏற்பட்டு உதவி செய்தார். அந்த பகுதி வழியாக இப்போது போகும் போதெல்லாம் எனக்கு இதை நினைத்து சிரிப்பு வரும்.
இன்று ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது காலிப்பர் லாக் விழாமல் நான் விழுந்து விட்டேன். விழுந்த தாக்கத்தில் காலிப்பரின் நான்கைந்து ஆணிகள் கழன்று தெறித்து விட்டன. அதை குத்துமதிப்பாய் பொருத்தி நடந்து வீட்டுக்கு வந்து விட்டேன். நாளை மறுநாள் மதுரையில் சாகித்ய அகாதெமியின் கருத்தரங்கில் பேசுகிறேன். என்னுடன் நண்பர் லஷ்மி சரவணகுமார் மற்றும் வீரபாண்டியன் (பருக்கை நாவல்) ஆகியோர் பேசுகிறார்கள். நாளை மாலை ரயிலில் புறப்பட வேண்டும். நாளைக்குள் காலிப்பரை ரிப்பேர் பண்ண முடியாவிட்டால் பயணத்தை ரத்து பண்ண வேண்டியது தான்.
 நானெல்லாம் நாய்க்கு மாதம் ஐயாயிரம் ரூபாய்க்கு மீன் வாங்கி போடுவது பற்றியோ பத்தாயிரம் ரூபாய்க்கு ரெமி மார்டின் எப்படி குடிப்பது என்றோ கவலைப்படுவதில்லை. என் பிரச்சனைகள் சாதாரணமானவை. அற்பமானவை. செருப்பு வார் அறுத்தால் அதை ஒரு தெருவோரக் கடையில் நின்று பொறுமையாய் தைத்து வாங்கி போகும் இந்த நாட்டின் லட்சக்கணக்கான பேர்களைப் போன்றவன் நான். சுதந்திரம் சமத்துவம் போன்ற உயர்ந்த லட்சியங்களை பற்றி யோசிக்கவெல்லாம் நேரம் இருப்பதில்லை. நல்ல சாப்பாடு, வலியில்லாத உடல், கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் பெரிய திருப்தி. வாழ்க்கை என்றால் விலையுயர்ந்த அனைத்து இன்பங்களையும் அனுபவித்து கொண்டாட வேண்டும், அதிகாரத்துக்கு எதிராய் கலகம் செய்ய வேண்டும் என சொல்பவர்களை பார்த்தால் எனக்கு அந்நியமாய் தோன்றும். என் உலகம் சின்ன சின்ன விசயங்களால் ஆனது. இதை ஒரு நண்பரிடம் சொன்னால் “ஏன் கம்யூனிஸ்டுங்க மாதிரி பேசுறீங்க?” என்கிறார்.

1 comment:

Unknown said...

அற்பர்க்ளின் உலகம் மிகவும் யதார்த்தம், எளிய சுவையான நடை
ஜம்புநாதன் டி.எஸ்