Monday, September 28, 2015

அகல்யாநானும் சில நண்பர்களும் கருத்தரங்குக்கு முந்தின நாளே சென்றுடைந்த போது விடாது மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஒரு நாய் உடலை குறுக்கி புட்டத்தை லேசாய் தூக்கி ஒரு குட்டை அருகே மலம் கழிக்க முயன்று கொண்டிருந்தது. நீராய் கழிந்த மஞ்சள் மலம் மெல்ல அந்த குட்டையின் கறுப்புநீரில் ஓவியனின் தூரிகையை முக்கும் போது கரையும் சாயம் போல் கலந்து ஓடத் தொடங்கியது. தன் அவஸ்தை முடிந்து நாய் எங்களை தலைதூக்கிப் பார்த்தது. சந்தீப்பும் பார்த்திவ் ஷர்மாவும் என்னை நோக்கி சிரித்தனர்.
 நாங்கள் அப்பகுதியில் பார்த்த நாய்களை கணக்கெடுத்து வந்தோம். அதன் செவியின் நுனி கத்தரிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் எ.பி.சி எனும் கருத்தடை செய்யப்படாத ஒன்று என குறித்துக் கொண்டோம்.
அவ்வரிசையில் நான்கு தேநிர்க் கடைகள் இருந்தன. எல்லாவற்றில் இருந்து புட்டு வேகிற வாசனையும் புகையும் வெளியாகின. பக்கத்து கடையில் இருந்து அகல்யா குனிந்தபடி கையில் ஏந்திய குடையுடன் ஓடி சாலைக்கு வந்தாள். ஆவலாய் நாயை நெருங்கி அதற்கு ஒரு பிஸ்கட்டை கொடுத்தாள். அது முகர்ந்து பார்த்தது. அவள் பிஸ்கட்டை தின்னும்படி அதை கெஞ்சி கேட்டாள். அது மீண்டும் முகர்ந்து விட்டு வாலாட்டியது. எதிர்சாரி கடை வாயிலில் யாரோ எச்சில் இலைகளை தொட்டியில் போடுவது பார்த்தது பாய்ந்து அங்கு ஓடியது. அது தொட்டி மீது முன்னங்கால்களை ஊன்றி நின்று தலையை நுழைத்து தேடியது. கடை முதலாளி ஒரு கம்புடன் ஓடி வந்து அதனை துரத்தினார். அது ஓட அவரும் ஆப்பம் தின்ற எச்சில் கையுடன் வாடிக்கையாளர்களும் கற்களை பொறுக்கி அதன் மீது வீசி அடித்தனர்.
குடையை மறந்து போட்டபடி அகல்யா அவர்களை நோக்கி ஓடி சென்று நிறுத்தும்படி கூறினாள். சற்று நேரத்தில் அவளுக்கும் கடைக்காரர்களுக்கும் வாதம் வலுத்தது. அவர்கள் அவளையும அவள் தோழிகளையும் வெளியே போகும் படி வலியுறுத்த நாங்கள் சென்று சமாதானம் செய்தோம்.
கடைக்காரர் மிக ஆவேசமாய் அது ஒரு வெறிநாய் என்றார். அகல்யா அது வெறிநாய் அல்ல, வெறுமனே தோல்வியாதி கொண்ட நாய் என்றாள். கடைக்காரர் சரளமாய் அடுக்கடுக்கான கெட்டவார்த்தைகளை நாய் மீது பிரயோகித்தார். “நீங்க நாய் கருத்தரங்குக்கு வந்த ஆட்கள் தானே?” என்று கேட்டார். அவரது குரலில் வன்மம் தொனித்தது. அந்த பகுதியை சேர்ந்த ஒரு நண்பன் வந்து பேச ஆரம்பித்த பிறகு தான் அவர் சற்று தணிந்தார். அங்கு கடந்த ஒரே வாரத்தில் மட்டும் பத்து பேரை நாய் கடித்திருப்பதாய் சொன்னார். கூட்டத்தில் ஒருவர் அவரது தம்பியின் குழந்தை. முகத்தை நாய் கடித்து குதறி விட்டதாய் விவரித்தார். அகல்யா குறுக்கிட்டு அவர்கள் நாய்களை ஏ.பி.சி செய்து எண்ணிக்கையை கட்டுப்படுத்தாதனால் ஏற்படும் சிக்கல் அது எனக் கூறி வாதிட்டாள். கூட்டத்தினர் அவளை நோக்கி கெட்டவார்த்தைகளை பிரயோகிக்க அவளை நாங்கள் தனியே அழைத்து வந்து விட்டு மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.
மூடியிருந்த கடைவாசலின் ஒழுகும் கூரை கீழே அவள் என் தோளில் சாய்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள். அலுவலகத்தில் அவள் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை செய்கிறாள். நாங்கள் நேரடியாய் களத்தில் இறங்கி காயமுற்ற பசு, நாய் போன்றவற்றை பல்வேறு இடங்களில் இருந்து காப்பாற்றி வண்டியில் ஏற்றி எங்கள் காப்பகத்துக்கு கொண்டு வரும் வேலை செய்து வந்தோம். அலுவலகத்துக்கு உள்ளே வேலை பார்ப்பவர்களை நேரடியாய் சந்தித்து உரையாடும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்காது. காலையில் எங்கள் ஆம்புலன்ஸில் ஏறி கிளம்பினால் நான் வீடு திரும்ப இரவு பத்தாகி விடும். அகல்யா உள்ளிட்டு அலுவலகத்துக்குள் மொத்தம் 12 பெண்கள் வேலை பார்த்தார்கள். சமூக வலைதள பக்கங்கள், இணையதளங்கள் ஆகியவற்றை நிர்வகிப்பது, நிறுவனத்துக்கு நிதி வழங்கும் புரவலர்களுடன் நிரந்தர தொடர்பில் இருப்பது ஆகிய பணிகளை செய்து வந்தர்கள்.
 நாங்கள் ஒரு முறை சாக்கடை குழாய்க்குள் மாட்டிக் கொண்ட நாய்க்குட்டி ஒன்றை காப்பாற்றுவதற்காய் சென்றிருந்தோம். அதன் கால் ஒடிந்திருந்ததால் உள்ளே இறங்கி எடுப்பதற்குள் ரொம்ப சிரமமாகி விட்டது. நாய்க்குட்டியை நாங்கள் வெளிக்கொணரும் நேரும் அலுவலக பெண்கள் சிலரும் ஸ்பாட்டில் இருந்தார்கள். அவர்கள் எங்களுடன் சேர்ந்து நாய்க்குட்டியை கையில் வைத்துக் கொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்தனர். சில நிமிடங்களில் நாய்க்குட்டியை அவர்கள் சேர்ந்து எவ்வாறு காப்பாற்றினார்கள் என உணர்ச்சிகரமான அறிக்கையை எழுதி பேஸ்புக்கில் பதிவேற்றி விட்டார்கள். இது போன்ற பதிவுகளுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளுக்கும் அதன் வழியாக லட்சக்கணக்கான தொகை நிதியும் எங்களுக்கு கிடைப்பதுண்டு. குறிப்பாக நடுரோட்டில் திரியும் பசு ஒன்றை பிடித்து லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து அதைக் காப்பாற்றியதாய் எழுதினால் வெளிநாட்டில் வசிக்கிறவ்ரகளிடம் இருந்து அதைப் பற்றி விசாரித்து நிறைய குறுஞ்செய்திகளும் ஸ்பான்சர்ஷ்பிப் ஏற்றுக் கொள்ளும் விருப்பங்களும் குவியும். இந்த பசுக்களின் உரிமையாளர்கள் பின்னர் எங்களிடம் வந்து விசாரிக்கும் போது அவற்றை திரும்ப அனுப்புவதற்கு எங்கள் நிறுவனத்தார்கள் ரொம்பவே பிகு பண்ணுவார்கள். நேரடியாக தனியார் லாயங்களில் இருந்து மோசமாய் பராமரிக்கப்படுவதாய் சொல்லி மீட்கப்படும் பசுக்களை சில ஆயிரங்களாவது கட்டணம் வசூலிக்காமல் எங்கள் சி.இ.ஒ சி.கெ மகேந்திர சிங் திரும்ப அளிப்பதும் இல்லை.
 இந்த கூட்டத்தில் அகல்யா போன்று ரொம்ப நாணயமான மிருகவதை போராளிகளும் உண்டு. சதா நாய்களுக்கு உணவளிப்பது, அடிபட்ட நாய்களுக்கு மருந்தளித்து காப்பாற்றுவது என நெரடியான களப்போராளி அவள். பேரழகி. எங்களிடையே அவளுக்கு ஏராளமான ரசிகர்கள்.
எங்கள் சி.இ.ஒ மகேந்திர குமார் முப்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. ஓய்வெடுக்க அடிக்கடி ஸ்விட்செர்லாந்த் போகும் அளவுக்கு வளமானவர். சில வருடங்களாய் அகல்யா அவருக்கு நெருக்கமாக இருந்தாள். ஒருநாள் அவள் அவருடன் இ.சி.ஆரில் உள்ள ஒரு பங்களாவில் இருக்கையில் அவரது மனைவியும் சில உறவினர்களுமாய் அங்கு வந்து தகராறு செய்தாள். அவளை காவல்நிலையத்திற்கு கொண்டு போனார்கள். அவளை மீட்பதற்காய் சென்ற தோழிகள் மூலமாய் செய்தி அலுவலகம் முழுக்க பரவியது.
பிரச்சனை நடந்து இரண்டு நாட்களில் மகேந்திர குமார் அலுவலகம் வரத் தொடங்கினார். ஆனால் அகலயா ஒரு மாதம் போல கிட்டத்தட்ட எல்லார் பார்வையில் இருந்தும் மறைந்திருந்தாள். அதன் பிறகு ஒருநாள் மீண்டும் ஒரு அடிபட்டு ரத்தம் ஒழுகும் நாயை சிகிச்சைகாக அரவணைத்து தூக்கியபடி அலுவலகம் வந்து சேர்ந்தாள். அச்சம்பவம் பற்றி நாங்களும் விசாரிக்கவில்லை; அவளும் சொல்லவில்லை. உறைந்து நின்ற காட்சியை ரிமோட்டில் ஒரு பொத்தானை அழுத்தி விடுவித்தது போல் இருந்தது. பழையது போல் பரபரப்பானாள்.
அகல்யா ஒரு டிஷ்யுபேப்பரால் கண்களை ஒத்திக் கொண்டு நிமிர்ந்து என்னை நோக்கி சிநேகமாய் புன்னகைத்தாள். என் தோளில் இருந்து விலகிக் கொண்டாள். அன்று காலையில் வந்ததில் இருந்து சாலையில் சாகடிக்கப்பட்டு கிடந்த நாய்களின் பிணங்களைப் பற்றி என்னிடம் பேசத் தொடங்கினாள். தன் செல்போனில் எடுத்திருந்த புகைப்படங்களை காட்டினாள். அங்குள்ள டி.வி, பத்திரிகை முழுக்க நாய்கள் தாம். நாய்த்தாக்குதலால் மக்கள் கடுமையாய் பாதிக்கப்படுவதாயும், நாய்களை ஒட்டுமொத்தமாய் அழிப்பது இதற்கு ஒரு தீர்வல்ல என்றும் இருவாறாய் விவாதிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் அக்கருத்தரங்குக்கு நான்கு பெரிய மிருகவதை எதிர்ப்பு நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தன. நான் அவள் பேச்சை கேட்டபடி அழைத்து ஒரு ஆட்டோவில் ஏற்றி பெண் பங்கேற்பாளர்களூக்கான தனிவிடுதிக்கு அனுப்பினேன்.
அவ்வளவு சீக்கிரம் அவள் என்னிடம் ஒட்டிக் கொள்வாள் என எதிர்பார்க்கவில்லை. சந்தீப் மற்றும் பார்த்திவ் ஷர்மா தம் பொறாமையை நேரடியாகவே தெரிவித்தார்கள். மாலையில் அவள் மூன்று தெரு நாய்கள் பின் தொடர எங்கள் விடுதிக்கு வந்தாள். அதை கராறான விடுதி என அழைக்க இயலாது. ஒரு பழைய ஊழியர் குடியிருப்பை மாற்றி கட்டியிருந்தார்கள். ஐம்பது பேர் வசிக்கத்தக்க கட்டிடத்தில் நாங்கள் பத்து பேர் மட்டுமே இருந்தோம். சுற்றிலும் கட்டிடமோ கடைகளோ இல்லை. ஆட்டோ பிடிக்க நான்கு கிலோமீட்டராவது நடக்க வேண்டும்.
அவள் என்னை ஷாப்பிங்குக்கு துணையாக வர முடியுமா எனக் கேட்டாள். கடைகளில் சுற்றிய பின் நாங்கள் சேர்ந்து படகு சவாரி சென்றோம். அங்கெல்லாம் எங்கள் சக ஊழியர்களை காணும் போது அவள் எங்கள் அணுக்கத்தை சற்று மிகையாகவே பறைசாற்ற முயன்றாள். மகேந்திர குமாரைக் கண்டதும் என் இடுப்பை சற்று கெட்டியாக அணைத்துக் கொண்டாள். நான் ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல அவள் பிரியத்தில் நெகிழ்ந்து விட்டேன். இரவில் பிரியாவிடை பெறும் போது எனக்கு ஒரு மோதிரம் அணிவித்து விட்டாள்.
மறுநாள் காலை கருத்தரங்கை மத்திய அமைச்சர் திறந்து வைத்தார். நாங்கள் காலையில் சுவைத்த வெள்ளை அப்பம் போன்ற முகம் அவருக்கு. நன்றாய் சீவி விட்ட பூடில் நாயைப் போன்ற தலைமுடி. மாட்டுக்கறி தடையின் முக்கியத்துவத்தை விளக்கி அவர் “இப்படி நாய்களைப் பற்றி மட்டும் கவலைப்படாது பசுமாடுகளை பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும். அடுத்த வருடத்திற்குள் ஓராயிரம் கோஷாலாக்களை இந்தியா பூரா திறப்பது உங்கள் இலக்காக இருக்க வேண்டும்” என்று கூறி விட்டு சென்றார்.
மதியம் நானும் அகல்யாவும் பேருந்தில் டவுனுக்கு சென்றோம். அங்கு ஆட்டோக்களில் நாய் பிடிப்பவர்கள் சுருக்கு தொங்கும் கோல்களுடன் திரிவதைப் பார்த்தோம். குளிர் அக்குளைத் துளைக்க நான் கைகளை இறுக்கக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து வந்தேன். என்னை ஒட்டி இருந்த அவள் கண்ணீர் பளபளக்கும் விழிகளுடன் அங்கு திரியும் நாய்களைப் பார்த்தபடி வந்தாள். விடிகாலை நான்கு மணி போன்ற வெளிச்சம். மின்னல் வெட்டிய போது ஒரு கணம் அவளது சிவந்த முகம் பளிச்சென்று தோன்றியது. அப்போது அவள் குழந்தை போல் புன்னகைத்துக் கொண்டு என் கையைப் பிடித்துக் கொண்டாள். தூறல் அவள் முகத்தை நனைக்க கன்னத்தின் பிசிறுபிசிறான மென்மயிர்கள் பொன்னிறத்தில் மினுங்கின. சற்று நேரத்தில் வெளியே எதுவும் புலப்படாத படி மழைத்திரைகள் மூடிக் கொண்டன.
அங்கு ஒரு பத்திரிகையாள நண்பரை அவர் வீட்டுக்கு சென்று சந்தித்தோம். அவரிடம் அவள் கருத்தடை மூலம் எவ்வாறு பிற மாநிலங்களில் நாய்களின் தொகை எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பது போன்ற புள்ளிவிபரங்கள் மற்றும் பிற ஆதாரங்களை அளித்தாள். இது பற்றி எழுதும்படி கேட்டுக் கொண்டாள். அவர் சமீபத்தில் குழந்தைப்பேற்றை விரும்பாது அதை தள்ளிப்போடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றி ஒரு ஒரு விரிவான கட்டுரை எழுதி வருவதாயும் சொன்னார். அகல்யா கேட்டாள் “இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் எங்களை குழந்தை பெறும் மெஷினாக நடத்தப் போகிறீர்கள்?”. குழந்தைப்பேறு ஆணின் உரிமையும் அல்லவா என நண்பர் கேட்டார். அதிலிருந்து விடுதலை அடைவது தான் உண்மையான பெண் முன்னேற்றம் என அகல்யா தெரிவித்தாள். தாய்மையுணர்வே இயல்பில் இல்லாத பெண்களும் உண்டு என்றாள்.

வேலையை முடித்து விட்டு மீண்டும் பேருந்து நிலையம் அடைவதற்கு நாங்கள் இரண்டு குறுக்குசந்துகள் வழியாய் நடக்க வேண்டி இருந்தது. அவை ஆளரவமற்று இருளும் சகதியுமாய் தோன்றின. ஒரு மூடப்பட்ட கடை வாயிலில் ஒரு பெண் நாயின் முதுகில் ஒரு ஆண் நாய் தன் கால்களை வைத்து நின்று காதில் எதையோ விசாரித்துக் கொண்டிருந்தது. எனக்கு உடம்புக்குள் குறுகுறுப்பாய் இருந்தது. அவள் உற்று பார்த்து விட்டு அந்த பெண் நாயை கருத்தடை பண்ணவில்லை என்று கவலை தெரிவித்தாள். பிறகு என் முகம் பார்த்து அவள் முகமும் வெட்கத்தில் சிவப்பேறியது. அப்போது எங்கிருந்தோ ஒரு கல் வந்து ஆண் நாயின் மண்டையில் பட்டது. அது சிக்குண்ட உடல் பிணைப்பில் இருந்து சற்று சிரமப்பட்டு விடுவித்துக் கொண்டு ஓடியது. பெண் நாயும் ஊளையிட்ட படி திரும்பிப் பார்த்தபடி ஓடியது.
பேருந்தில் போகும் போது கிட்டத்தட்ட இரவு போல் வெளியே தோன்றியது. காதுநுனிகள் ஜில்லிட்டன. கருந்துளிகள் சாலையில் விழுந்து உடைந்தன. சிறு சிறு கும்பல்களாய் அங்கங்கே நாய்களைக் கண்டோம். அவை குரைத்தபடி ஒன்றையொன்றி துரத்தின. பெண்ணிடம் அணுக்கம் பெறுவதற்காய் போராடின. காலியான பேருந்து நிறுத்தம் ஒன்றில் மழையை பொருட்படுத்தாது ஒரு ஜோடி சேர்ந்து இருந்தது. அவள் முகம் திருப்பிக் கொண்டாள். நான் வெம்மைக்காக என் உள்ளங்கைகளை உரசிக் கொண்டேன். சிறுநீர் கழிக்காமல் அடிவயிற்றில் அதக்கிக் கொண்டிருந்தது இதமாய் இருந்தது.
பிரதான பாதை ட வடிவில் பிரிந்தது. என் விடுதி நோக்கி நடந்தேன். தெற்காய் இருபதடிகள் நடந்தால் அவளது விடுதி வந்து விடும். ஆளரவமற்ற காட்டுப்பாதை வழி நடந்து போக வேண்டும் என்பது மட்டுமே பிரச்சனை. ஆனால் அவளோ தன் விடுதிக்கு செல்ல யார் துணையும் தேவையில்லை என்றாள். நான் விடுதிக்கு வந்து உடை மாற்றி விட்டு டவுனுக்கு சென்று ஒரு பாட்டில் ரம்மும் உணவும் வாங்கிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் ஒரு கார் என்னருகே நின்றது. அதனுள் இருந்து அகல்யாவின் தோழிகள் சிலர் என்னை விசாரித்தார்கள். அவளை வழியில் பார்த்த போது ஏறிக் கொள்ள சொன்னதாயும் ஆனால் அவளோ என்னைப் பார்க்க என் விடுதிக்கு சென்று கொண்டிருப்பதாய் சொன்னதாயும் சொன்னார்கள். ஒரு தோழி கண்ணடித்தவாறே “இனிய மாலையாய் அமையட்டும் கௌதம்“ என்றாள்.
நான் விடுதியை அடையும் முன்னமே அவள் என்னை போனில் அழைத்தாள். தன்னை சில ஆண்கள் பின் தொடர்ந்து வந்ததாயும் பயந்து போய் என் விடுதிக்கே வந்து விட்டதாயும் கூறினாள். அவளை காத்திருக்க சொன்னேன். ஏன் தோழிகளின் காரில் ஏறிக்கொள்ளவில்லை என கேட்கவில்லை.
நான் கீழே வரவேற்பறைக்கு சென்ற போது அவள் தன் மழைக்கோட்டை கழற்றாமல் இறுக்கமான முகத்துடன் இருந்தாள். இருவருமாய் என் அறைக்கு வந்தோம். நானில்லாத பட்சத்தில் என் நண்பர்கள் மதியமே பக்கத்து ஊரிலுள்ள வேறு ஒரு நண்பனைக் காண சென்று விட்டார்கள். என்னைத் தவிர அப்போது விடுதியில் இரு அறைகளில் மட்டுமே ஆட்கள் இருந்தார்கள்.
அவளை விடுதியில் கொண்டு சேர்ப்பதற்காய் என்னிடம் உள்ள ஒரு எண் மூலம் ஒரு ஆட்டோ ஓட்டுநரை அழைத்திருந்தேன். என் அறையை நோட்டம் விட்டவள் “ஆண்கள் மட்டுமே தனியே என்பதால் குடியும் குமமாளமுமாய் இருப்பீர்கள் என நினைத்தேன். ஆனால் ரொம்ப சுத்தமாய் இருக்கே” என்றாள். நான் மதுப்பொத்தலைக் காட்டி அவளுக்கு விருப்பமுண்டா எனக் கேட்டேன். அவள் வேண்டாம் என்றாள். ஒருவேளை சங்கோஜப்படுகிறாளோ என மீண்டும் விசாரித்தேன். மீண்டும் மறுத்தாள். இப்போது அவள் முன் தனியே அருந்த எனக்கு கூச்சமாக பொத்தலை திரும்ப அலமாரிக்குள் வைத்தேன்.
 உணவருந்தி விட்டு ஆட்டோவுக்காய் அவருக்காய் காத்திருந்தோம். பேச்சு சகதோழிகள் பற்றி வளர்ந்தது. தன்னுடன் வசிக்கும் பெண் வரைமுறையின்றி நிறைய ஆண்களிடம் பழகுவதாயும் அந்த ஆண்கள் சிலநேரம் தன்னிடம் அத்துமீற முயல்வதாயும் வருத்தப்பட்டாள். ”ஒருத்தன் நான் தனியாய் இருக்கும் போது போன் போட்டு சரக்கடிக்க வரட்டுமன்னு கேட்கிறான்” என்று அலுத்துக் கொண்டாள். அதன் பிறகு அவள் தனக்கு நேர்கிற பல்வேறு பாலியல் தொந்தரவுகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள்.
 பத்து மணி ஆனது. ஆட்டோ ஓட்டுநரை திரும்பத் திரும்ப அழைத்த போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார். இனி காத்திருப்பதில் பலனில்லை என உணர்ந்தோம். அவள் எரிச்சலாகி ஜன்னல் திண்டில் போய் அமர்ந்து கொண்டாள். ஆட்டோ வரும் என நான் சொன்னதை நம்பினது தப்பாய் போயிற்று. இப்போது இரவு வெகுவாய் தாமதமாகி விட்டது. தனியாய் ஆண்களின் விடுதியில் வேறு மாட்டிக் கொண்டாயிற்று என புலம்பினாள்.
எனக்கு மறுநாள் காலை ஊருக்கு போக வேண்டிய அவசர தேவை இருந்தது. காலை அவள் மிகவும் பிரியமாய் அழைத்ததனால் தான் அவளுடன் நகரத்துக்கு சென்றேன். இப்போது அவள் முற்றிலும் வேறொரு பெண்ணாய் இருந்தாள். என்னைப் பார்த்தாலே அவள் விழிகளின் நுனியில் வெறுப்பு கசிந்தது. பையை தூக்கிக் கொண்டு இரவு பேருந்திலேயே கிளம்பி விடலாமா என யோசித்தேன். ஆனால் அது அநாகரிகம் என தோன்ற முடிவை மாற்றிக் கொண்டேன்.
 மழையில் அவள் ஆடைகள் நனைந்து பிசிபிசுத்திருக்க அணிவதற்கு என்னுடைய டிஷர்ட் மற்றும் பேண்டை அளித்தேன். அவள் குளியலறை போய் ஆடையை மாற்றிக் கொண்டாள். அந்த ஆடைகள் அவளுக்கு மிகவும் பாந்தமாய் நளினமான இருக்கும் என ஊகித்தேன். ஆனால் வெளியே வரும் போது என் ஆடைக்கு மேலாய் தன் மழைகோட்டை இறுக்கமாய் மாட்டிக் கொண்டிருந்தாள். விறைப்பாய் நடந்து அருகே அமர்ந்தாள். அறைக்குள் எதற்கு மழைக்கோட்டு என கேட்க நினைத்து பிறகு ஏனோ அது விரசமான கேள்வி எனப் பட எனக்குள் முழுங்கிக் கொண்டேன்.. சற்று நேரம் டி.வி பார்த்தோம். சகஜமாய் அரட்டை அடித்தோம். பதினொரு மணி ஆனதும் அவள் பேசுவதை நிறுத்தி மீண்டும் இறுக்கமானாள். மார்புக்கு குறுக்காய் கைகளை கட்டிக் கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து தூங்கத் தொடங்கினாள்.
நானும் என்னை அறியாமலே படுக்கையில் சாய்ந்து அசந்து தூங்கிப் போனேன். பிறகு இடி இடித்த ஓசை என்னை எழுப்பியது. அவள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது பார்த்தேன். அதற்கு மேல் என்னால் நிம்மதியாய் உறங்க இயலவில்லை. அவளை படுக்கையில் தூங்குமாறு கேட்டேன். பதிலளிக்காமல் ஒரு உறுதியான கற்சிலையை போல் இருந்தாள். தூக்கி படுக்க வைத்தால் கூட சிலையைப் போல் இருந்த வாகிலேயே அசையாது இருப்பாளோ எனத் தோன்றியது. அவள் அமர நான் மட்டும் சொகுசாய் தூங்குவது சிரமமாய் இருந்தது. மேலும் எனக்கு எப்போதும் அறையில் தனியாய் தூங்கியே பழக்கம். கண்ணை மூடினாலும் அவள் பார்வை என்னை உறுத்தியது. கீழே படுக்கலாம் என்றால் தரை ஐஸ் பாளம் போல் இருந்தது.
நான் எழுந்து நாற்காலியில் அமர வேண்டும் என்றேன். அவள் வேறுவழியின்றி எழுந்து கொண்டாள். நான் அங்கு அமர அவள் சற்று நேரத்தில் தானாகவே படுக்கையில் போய் அமர்ந்தாள். மீண்டும் இருவருமாய் சற்று நேரம் டிவி பார்த்தோம்.
நான் அவள் அருகே போய் அமர்ந்தேன். அவள் படுக்கையின் ஓரமாய் நகர்ந்து கொண்டாள். அவள் வெப்பம் அருகில் செல்லாமலே என்னை சுட்டது. இருளில் அவளது பூனையைப் போன்ற கண்களின் உணர்ச்சியற்ற பளபளப்பான வெளிச்சம் என்னை நோக்கி பிரகாசித்தது. நான் அவளிடம் என் பிரியத்தை தெரிவித்தேன். அவள் மீது எந்தளவுக்கு மதிப்பு கொண்டுள்ளேன் என சொன்னேன். பிறகு இருவரும் எங்கள் இளம்பிராயத்து நினைவுகளை பரிமாறிக் கொண்டோம். நான் அவளிடம் படுக்கையில் படுத்து உறங்குமாறு கேட்டுக் கொண்டேன். நான் வேண்டுமானால் நாற்காலியில் போய் அமரத் தயார் என்றேன். அவள் வேண்டாம் என மறுத்தாள். நான் அத்துமீறி நடக்க மாட்டேன் என்றும், என்னை நம்பலாம் என்றும் மென்மையாய் உறுதியாய் சொன்னேன். அவள் என் கண்களுக்குள் உற்றுப் பார்த்து முடியாது என தலையாட்டினாள். சரி போகட்டும் என நான் ஒரு ஓரமாய் படுத்து என்னை அறியாது தூங்கிப் போனேன்.
அடுத்து நான் எழுந்தது யாரோ இரைந்து பேசுவது கேட்டு தான். படுக்கையில் அவளைக் காணவில்லை. வாசலுக்கு சென்று எட்டிப் பார்த்தேன். காணவில்லை. பால்கனிக்கு சென்று கீழே பார்த்தேன். அவள் கீழே வாயிற் கதவுக்கு அருகே நின்று காவலாளியிடம் வாதிட்டுக் கொண்டிருந்தாள். கதவைத் திறந்து விடுமாறும், தான் நடந்து தன் விடுதிக்கு போகப் போவதாயும் சொன்னாள். காவலாளி நரைத்த மீசையை முறுக்கிக் கொண்டே தன் கரகரப்பான குரலில் சொன்னார்,
 “உங்களுக்கு இந்த பகுதி பற்றியெல்லாம் ஒண்ணும் தெரியல. இந்த நேரத்தில் அந்த வழியா ஒரு பொம்பளை நடந்து போறது ரொம்ப ஆபத்தானது. நான் திறந்து விட முடியாது. எப்பிடியும் என்னிடம் சாவி இல்லை. மானேஜர் வர வேண்டும். எப்பிடி உங்களை ஒரு ஆண்கள் மட்டும் தங்கும் விடுதிக்குள் அனுமதித்தேன் என கேட்பார். என் வேலையை தொலைச்சிட்டு தன் அடங்குவீங்களா?”.
 அவள் தனக்கு திரும்பிப் போக வாகனம் அமையாததனாலே அங்கு ஒரு அறையில் தங்க நேர்ந்ததாக சொன்னாள். காவலாளி அதை நம்பாதது போல் தலையை பலமாய் அசைத்தார். எந்த அறை எனக் கேட்டார். அவள் சொன்னாள். அப்போது அவர் பால்கனியில் நிற்கும் என்னை கவனித்து விட்டார். முறைத்தார்.
நான் கீழே சென்றேன். அவர் என்னிடம் கேட்டார் “இந்த பிள்ள யாரு? இங்க இந்த மாதிரி எல்லாம் கூடாதுண்ணு உங்களுக்கு தெரியாதா?”. நான் அவரிடம் விளக்கினேன். நான் அவரிடம் மன்றாடுவது பார்த்ததும் அவள் மிகுந்த கோபத்துடன் சரேலென திரும்பி விடுதிக்குள் சென்றாள். இப்போது அங்கு தங்கியிருக்கும் வேறு இரு வாடிக்கையாளர்களும் தத்தமது ஜன்னல்களைத் திறந்து எட்டிப் பார்த்தனர்.
அவள் என் அறைக்கு வெளியே வராந்தாவில் நின்றிருந்தாள். நான் அவளை உள்ளே அழைத்தேன். வர மறுத்தாள். தன் கைகளை மார்புக்கு குறுக்காய் கட்டிக் கொண்டு கால்களை மாற்றி மாற்றி வைத்து நின்றாள். உள்ளே சென்று ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அவளை அமரச் செய்தேன். பிறகு நான் உள்ளே போய் தூங்க முயன்றேன். ஆனால் மனம் அமைதியற்று தவித்தது.
என் பக்கத்து அறையில் உள்ள கிழவர் அடிக்கடி வெளியே வந்து வராந்தாவற்கு குறுக்குமறுக்காய் நடந்தார். அவர் குரல் கேட்க நான் அவசரமாய் எழுந்து வெளியே ஓடினேன். அவர் அவளிடம் எதுவோ தப்பாய் விசாரித்துக் கொண்டிருக்க அவள் தரையைப் பார்த்து மௌனமாய் நின்றாள். நான் அருகே செல்ல அவர் விலகி தன் அறைக்குள் சென்று கதவை சாத்தினார். நான் அவளிடம் சொன்னேன் “உன்னை கெஞ்சி கேட்கிறேன். உள்ளே வா. உங்கிட்ட ஏதாவது தப்பா நடந்துக் கிட்டேனா?”
அவள் பதிலளிக்கவில்லை. “இப்பிடியெல்லாம் செஞ்சு தான் நீ யார் கிட்ட எதை நிரூபிக்கிறே?”. அவள் சட்டென நிமிர்ந்து பார்த்தாள். எதையோ சொல்ல முனைந்து முழுங்கினாள். பிறகு அவளாகவே அறைக்குள் வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். போர்வையை எடுத்து தன்னைச் சுற்றிக் கொண்டாள். நான் மீண்டும் ஒருமுறை தூங்கிப் போனேன். கனவில் எதையோ விபரீதமாய் கண்டு திடுக்கிட்டேன்.
எழுந்து பார்த்தேன். அவள் கண்ணைத் திறந்து அசைவற்று இருந்தாள். தோளை மெதுவாகத் தொட்டேன். கண்களில் அசைவில்லை. பெயரை அழைத்தேன். பதில் இல்லை. மூச்சு வருகிறதா எனப் பார்த்தேன். அதுவும் இல்லை. பயந்து என்னை செய்வதென அறியாமல் அங்கும் இங்கும் நடந்தேன். இதயம் துடிக்கிறதா எனப் பார்க்கலாமா? ஆனால் அதற்கு தயக்கமாய் இருந்தது. மீண்டும் வந்து மூக்கருகே விரல் வைத்துப் பார்த்த போது லேசாய் மூச்சு வந்தது. பிறகு அவள் விழிகள் நிறைந்து கன்னத்தில் துளிகள் உருண்டு வந்தன. 
(செப்டம்பர் 2015 தீராநதியில் வெளியானது)