Sunday, September 27, 2015

கவரிமான்

“முன்பெல்லாம் மைக்கை ஆன் செய்ததும் ஸ்வ்ய்ய்ங், வொய்ங்ங் அப்டீன்னு ஒரு சத்தம் ஒலிக்கும். அதைக் கேட்கையில தான் எனக்கு மீட்டிங் வந்த பீல் கிடைக்கும். சில நாள் சும்மா இருக்கும் போது அது ஒரு ஓங்கார சப்தம் போல என் காதில ஒலிச்சிக்கிட்டு இருக்கும். இப்போ உள்ள நவீன மைக் சிஸ்டம் ஆன் பண்ணதும் தெரியல ஆப் பண்ணதும் தெரியல. வேஸ்ட்”.

இதை என் பக்கத்தில் நாற்காலி நிரம்ப அமர்ந்திருந்தவர் சொல்ல, மதிலில் ஒட்டி வளர்ந்து புறமுதுகு காட்டி நிற்கும் ஒரு செடியின் வேர்களைப் போல தோன்றின அவரது மூக்கின் வெள்ளை மயிர்களையே உற்றுப் பார்த்தேன். ஒருமுறை செருமி விட்டு அவர் தொடர்ந்தார். முன்பு ஆய்வுத்துறையில் மிகப்பெரிய ஆளுமைகள் அம்மேடையை அலங்கரித்து, அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்து அமளுதுமளி ஆனது பற்றியெல்லாம் பேசினார். நல்ல சுவாரஸ்யம். ஆனால் எனக்குத் தான் கேட்க மனமில்லை. கூட்டம் இன்னும் துவங்கவில்லை. ஏற்கனவே 40 நிமிடம் தாமதம்.
 மயிலை வெங்கடமூர்த்தி அடிகளார் அறக்கட்டளையின் 31வது விருது வழங்கும் விழா எனும் பெரிய நீல பேனர் மேடையில் தனியாக தொங்கியது. மையத்தில் ஒல்லியாக வீற்றிருந்த அடிகளாரின் மகன் செப்பொலி சீனிவாசனார் அடிக்கடி கண்ணாடியை துடைப்பதும், பின்புறமாய் சென்று சால்வைகளை எண்ணுவதுமாய் இருந்தார். அவர் மைக் பக்கம் போகும் போதெல்லாம் இதோ விருது வாங்கும், வழங்கும், வாழ்த்தும் முக்கியஸ்தர்களை அழைக்க போகிறார் என எண்ணி ஆர்வமாய் நாற்காலியின் விளிம்புக்கு செல்வேன். ஆனால் அவர் பஜ்ஜிக் கடைக்காரர் தன் பலகாரங்களை ஆறுதலாய் தொட்டுப் பார்ப்பது போல் மைக்கை தொட்டு சுண்டு விரலால் தொப் என ஓசை எழுப்பி பார்த்து தலையாட்டி விட்டு அகன்று விடுவார்.
 எல்லாரும் வந்து விட்டார்கள் என என் மூளை சொல்லியது. பலமுறை எண்ணிப் பார்த்து அழைப்பிதழுடன் ஒப்பிட்டு விட்டேன். ஆனால் அழைப்பிதழ் பாராமலே என் பக்கத்து இருக்கைக்காரர் சொன்னார் “ஐயர் வரலையே? அவர் வந்தா தான் ஆரம்பிக்க முடியும்”. அதைக் கேட்டதும் இந்த நிகழ்ச்சிக்கு புரோகிதர் எதற்கு என யோசித்தேன். பிறகு சட்டென இது பிரம்மி எழுத்துக்களுக்கும் புராதன தமிழுக்குமான வேர்த்தொடர்பை நிறுவின முத்துசாமி ஐயர் அல்லவா எனத் தோன்றி சங்கோஜம் ஏற்பட்டது. என்னவானாலும் அனுபவஸ்கர்களின் தீர்க்கப் பார்வை தனிதான். ஐயர் இல்லாமல் முப்பது வருடங்களில் இவ்விழா துவங்கினதே இல்லையே. ஐயர் ஒரே ஒருமுறை தான் விழாவில் கலந்து கொள்ள மறுத்தார் என்றார் பக்கத்து இருக்கைக்காரர்.
“அப்படியா?”
“நான் அப்போ தான் சாந்தோமில இருந்து மாற்றமாகி தாம்பரத்துக்கு வந்தேன். கோபாலகிருஷ்ண பாவலரை தெரியுமில்லையா அவர் தான் என் பக்கத்து வீட்டில் இருந்தார். எங்கள் தெருவில் அப்போ என்னைத் தவிர எல்லாருமே பல்கலைக்கழக பேராசிரியர்கள்.”
“ம்ம்”
“நான் எதைச் சொல்லிக் கிட்டு இருந்தேன்?”
எனக்கும் மறந்து விட்டது. ஐந்து நிமிடங்கள் இருவரும் தீவிரமாக யோசித்தோம்.
“ஆமா ஐயர் வர மறுத்த மீட்டிங்”
அவருக்கு என்னவொரு நினைவுத்திறன் என வியந்து கொண்டேன். எனக்கே அது இன்னும் நினைவுக்கு வரவில்லை.
“அந்த முறை ஐயரோட பையனுக்கு அவார்ட் கொடுத்தாங்க. ஐயர் மகா கோபக்காரர். நேரே விழா ஸ்பாதனத்தாரை போய் பார்த்து கடுமையா தன்னோட ஆட்சேபங்களை தெரிவிச்சிட்டு வந்தார்”
“ஏன்?”
“அவர் பையனோட ஆய்வுமுடிவு பிழையானதுங்கிறது ஐயரோட நம்பிக்கை. அவர் அதை கடைசி வர மாத்திக்கல. அவர் பையனுக்கு பிறகு மத்திய அரசு அவார்டு எல்லாம் கொடுத்தாங்க. அமெரிக்கா எல்லாம் போய் வந்தான். ஆனால் ஐயர் அசையலையே. ம்ஹும்”
“அவர் எப்பவுமே லேட்டா தான் வருவாரா?”
“முப்பது வருசத்தில ஒருவாட்டி கூட அவர் மேடையில இருக்க கூட்டம் தொடங்கி நான் பார்த்ததில்லை. ஆனா மீட்டிங் ஆரம்பிச்சதும் டாண்ணு வந்து மேடை ஏறிடுவார். எத்தன வாட்டி பாத்திருக்கேன். இப்போ கூட இங்க பக்கத்தில் எங்கியாவது தான் நின்னுகிட்டு இருப்பார். ஆனா நம்ம கண்ணுக்கு மாட்ட மாட்டார்”
ஒரு ஏப்பம் விட்டார்.
“முன்னெல்லாம் வடை தான். ரப்பர் மாதிரி இருக்கும். ஒண்ணு ரெண்டு கல்லாவது வாய்ல மாட்டாம இருக்காது. அந்த வடையை நாங்கெல்லாம் டீயில முக்கி சாப்பிடுவோமுன்னா பாருங்களேன். அதுக்கு பிறகு சட்டுன்னு வெறும் பிஸ்கட்டுக்கு மாறினாங்க. ரொம்ப சிரமமா போச்சு. அப்புறம் பருப்பு வடை, அதிரசம்னு மாறி இன்ப அதிர்ச்சி கொடுத்தாங்க. பிறகு சமோசாவும் தக்காஸி சாஸும். அதுவும் அந்த சாஸ் பாக்கெட்டை நாங்கெல்லாம் பிரிக்க கத்துக்கிட்டதே ஒரு தனி கதை. கடைசியா இப்போ பப்ஸ், கிரீம் கேக், காபியில வந்து நிக்கிறோம். ஆனா பாருங்க இந்த கேக் மேலே அப்பியிருக்கிற க்ரீமை பார்த்தேலே பல்லெல்லாம் கூசுது. பார்த்தாலே உள்ளூக்குள்ளால ஷுகர் ஏறுறாப்ல ஒரு பயம்.”
கேக்கில் க்ரீம் மெல்ல உருகத் தொடங்கி இருந்தது. என் பக்கத்தில் ஒரு பெண் ஒரு குழந்தைக்கு கேக் ஊட்ட அது மேடையை சுட்டிக் காட்டி எதையோ கேட்டபடி இருந்தது. ஒரு சின்ன குழந்தையே கேட்கிறது. சட்புட்னு ஆரம்பிக்க கூடாதா?
எழுந்து ஒரு சுற்று நடந்தேன். ஆளாளுக்கு ஒரு திசையில் நின்று சாவகாசமாய் அரட்டையடித்துக் கொண்டிருக்க, கழிப்பறைக்கு வெளியே ஒரு சிறு கூட்டம். கழிப்பறை என நினைத்து மின் தூக்கிக்குள் நுழைய எத்தனித்த ஒரு தாத்தாவை இறுதி நொடியில் காப்பாற்றி இழுத்து, கழிவறை வாசலில் கொண்டு நிறுத்தினேன். அவர் அங்கு இல்லாத கதவை திறக்க முயல உள்ளே கொண்டு போய் பத்திரமாய் நிறுத்தினேன்.
குணா பத்து பெண் விசிறிகள் சூழ நின்று புகழ் காற்று வாங்கிக் கொண்டிருந்தான். அடிக்கடி ஏதோ ரகசியம் சொல்லும் பாவனையில் ஒரு பெண்ணின் காதருகே போய் எதையோ சீரியசாய் சொல்ல அவள் சிரிக்க இவன் முகத்தை இரட்டிப்பு சீரியஸாய் வைத்துக் கொள்வான். பக்கத்தில் போய் தோளை சுரண்டினேன். நான் அக்குழுமத்துக்குள் நுழைந்து விடக் கூடாதென்று என்னை தனியே அழைத்துப் போனான்.
“டைம் ஆகுதுடா?”
வெட்கப்படத் தெரியாத பெண் கண்ணாடி முன் நின்று வெட்கமாய் எதையோ யோசிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான், “பின்னாடியே போய் அவார்டை தூக்கிட்டு ஓடிரலாமா?”
“ஆமாமா ஓடிட்டாலும். நீ வாங்கணும், இவங்கெல்லாம் கைதட்டணும், அப்புறம் ஏற்புரை, அப்புறம் நிறைய பேரோட அதிகபிரசங்கி உரைகள்…இதெல்லாம் முடியாம உன்னை இங்கேருந்து எப்பிடி நகத்துறது?”
“என்ன முதலிரவா நடக்கப் போவுது? ஏன் என்னை இழுத்துப் போறதுக்கு இவ்வளவு டென்ஷன் இப்போ?”
“டேய் விழாவில கலந்துக்கிறது, சமோசா பப்ஸ் சாப்பிடறது, ஜொள்ளு விடறது, சிரிக்கிறது, தூங்குறது, கைதட்டுறது, கிளம்புறது மட்டுமில்ல மரபு. நீண்ட நெடுங்காலமா நாம் பின்பற்றி வந்த பிற சடங்குகள் இருக்கு. இங்க முடிச்சிட்டு ரெண்டு லார்ஜ் போட்டுட்டு ரோட்டுக்கடையில் சாப்பிட்டு விவாதம் பண்ணி பிரியறது தானே டா நம்ம வழக்கம். இன்னிக்கு அதெல்லாம் நடக்குமான்னு கவலையா இருக்கு”
முகவாயை தூக்கி அசட்டையாய் சொன்னான் “டைம் இருக்குடா”
“பிணம் தூக்கிறவனுக்கு எப்பவுமே டைம் இருக்கும். பிணத்துக்கு தான் இல்ல. கடையை சாத்திருவாங்கடா”
“நீ போய் குடிச்சிட்டு வந்திரு”
“அதுக்கு நான் ஏன் இங்க வந்து இவ்வளவு நேரம் வெயிட் பண்ணனும்?”
“உன் கேள்வியிலேயே விடையும் இருக்கு”
அவன் அங்கிருந்து அகன்று மற்றொரு குழு ஆராதகர்களுடன் சங்கமித்துக் கொண்டான். நான் தேநீர் அருந்த கீழே செல்ல உத்தேசித்து மாடிப்படிகளை அடைந்தேன். மாடிப்படி ஒரு அனகோண்டாவை போல் மனிதர்களை சரம் சரமாய் தனக்குள் இழுத்து நகர்ந்தது. கீழே இறங்கவா வேண்டாமா? இரண்டு நிலைகளிலும் ஏகப்பட்ட கூட்டம். நெரிசலின் உஷ்ணத்தில் உடல் பிதுங்கின டூத் பேஸ்ட் போல் ஆகிடுமே? ஒருவர் என் தோளைத் தொட்டுச் சொன்னார் “எவ்வளவு கூட்டம்! ஏ அப்பா. இங்க இடம் கிடைக்கலேன்னு தான் இரண்டு நிலைகளிலும் மக்கள் காத்து நிக்கிறாங்க. ரெண்டாயிரம் பேர் இருக்க மாட்டாங்க?”
ரெண்டாயிரமா? ஆய்வாள விருது நிகழ்வுக்கா? அது மரபில்லையே. என் முகக்குறியை வாசித்தவர் போலச் சொன்னார் “இந்த முறை நடந்த சர்ச்சையில பயங்கரமான பப்ளிசிட்டி. அதான் மக்கள் கூட்டம் அம்முது. கீழே போனீங்கன்னா மேலே திரும்ப வர முடியாது”
பயத்தில் என் இருக்கையை ஒரு தடவை எட்டிப் பார்த்தேன். படிக்கட்டின் கம்பிகளில் சாய்ந்தபடி வேடிக்கை பார்த்தேன். சில நிமிடங்களில் அது வேறு கூட்டம் என புரிந்து விட்டது. மின்தூக்கி பக்கமாய் சென்று ஆப்பரேட்டரிடம் விசாரித்ததில் முதல் இரு நிலைகளிலும் இரண்டு வெவ்வேறு திருமண வரவேற்புகள் நடக்கின்றன என தெரிந்து கொண்டேன். தெரியாமல் அங்கு போக வேண்டிய இங்கு மூன்றாவது நிலைக்கு வந்து விட்டால் என்னாவது என யோசித்தேன். இங்குள்ள கூட்டத்தை ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் பலரும் கல்யாண வீட்டுக் களையுடன் தான் தோன்றினார்கள். ஆனால் அவர்கள் சமோசா, கேக்கின் அருமையை உணர்ந்து தன்னிறைவு கொண்டவர்களாகவும் தோன்றினார்கள். குழம்பியது.
செப்பொலி சீனிவாசனார் குரல் திடீரென ஸ்பீக்கர்களில் ஒலிக்க நான் மணலில் கால் சுட்டு விட்டதைப் போல இருக்கை நோக்கி ஓடினேன். பக்கத்து இருக்கைக்காரர் ஒரு கையால் என் இடத்தை தன் பையை தூக்கி வைத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு அமர்ந்தேன். “மேடையில் வீற்றிருக்கும் சான்றோரே ஆய்வுப்பெருந்தகைகளே” என சீனிவாசனார் தன் கோழிக்குரலில் ஒலித்த போது கூட்டத்தினிடையே ஒரு சிறு சலசலப்பு. பக்கத்து இருக்கைக்காரர் இமையை தூக்கி ஒரு திசையில் கண்ணைக் காட்டினார். வேகவேகமாய் ஐயர் ஏறி மேடையை அடைந்தார். ஆனால் அவருக்கு நாற்காலி இல்லை. அவர் சற்றும் சிந்திக்காமல் ஒரு இளைஞனை எழுப்பி விட்டு அமர்ந்தார். அவன் தன் பக்கத்தில் இருக்கிறவரை எழுந்திருக்க கேட்டு அமர்ந்தான். இப்படி ஒவ்வொருவராய் எழுந்து இடம் கொடுத்து அமர கடைசிக்கு முந்தின இருக்கையில் இருந்த முன்னாள் துணைவேந்தரான ஒரு அம்மணி சீனிவாசனாரின் இருக்கையில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தார். வரவேற்று திரும்பிய பின் தான் தனது இடம் மாயமானதை உணர்ந்த சீனிவாசனார் ஒரு முக்காலியை கேட்டு வாங்கி மைக் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.
நான் ஆசுவாசமாய் இருக்கையில் சாய்ந்தேன். ஆனால் என் நிம்மதி நீடிக்கவில்லை. ஆளாளுக்கு சர்ச்சையை தொட்டு நாலு கோடிழுத்து தான் பேச்சை ஆரம்பித்தார்கள். மூத்த ஆய்வாளரும் ஆளுங்கட்சியில் பெரும் செல்வாக்கு கொண்டவருமான சுப்பாராவும் சீனிவாசனாரும் ஒரு சட்டையின் இரு கைகளைப் போன்றவர்கள். அவர்களால் தனித்து சிந்திக்கவோ பேசவோ சண்டை போடவோ முடியாது. அந்தளவுக்கு நெருக்கம். ஆனால் அந்நெருக்கத்தின் விளைவு எப்படி இருக்கும் என யாரும் ஊகிக்க முடியாது. திடீரென மிகக் கடுமையாய் மோதிக் கொள்வார்கள். சமீபமாய் மயிலை வெங்கடமூர்த்தி அடிகளார் அறக்கட்டளையின் இளம் ஆய்வாளர்கள் விருதுக்கு தேர்வானவர்களை ஆய்வுமுறைமை அறியாத பேதைகள், முதுகெலும்பற்ற எடுபிடிகள் என்றெல்லாம் கூறி ராவ் அறிக்கை விட்டார். உடனடியாய் சீனிவாசனார் அவரை பிற்போக்கு ஆட்டுமந்தையின் தலைவர், ஆளுங்கட்சியின் சொம்புதூக்கி, முட்டாள், பைத்தியம் என விளித்து ஒரு கட்டுரை எழுதினார். இதை ஒட்டி இருவரின் ஆதரவாளர்களும் சரம்சரமாய் அறிக்கைகளும், கருத்துக்களும் எய்து காயம் பட்டுக் கொண்டனர். இந்த சச்சரவு பற்றி பல முன்னணி பத்திரிகைகளில் அறிக்கைகளும் இருவரது பேட்டிகளும் வந்தன. அறிஞர்களிடையே இந்த வன்மமும் கசப்பும் என ஓயும் என விசனித்து ஒரு நடுப்பக்க கட்டுரை கூட வந்தது. இறுதியாக மூன்று நாட்களுக்கு முன்பாக செய்தி அலைவரிசை ஒன்றில் முதலமைச்சரை விமர்சித்த எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையை படித்து காட்டிய பின் சீனிவாசனார் மற்றும் ராவ் சர்ச்சை பற்றி படத்தொகுப்பு வந்தது. நான் கடித்துக் கொண்டிருந்த சிக்கன் காலின் துண்டு அதிர்ச்சியில் என் தொண்டையில் போய் மாட்டிக் கொண்டது.
முதலில் சீனிவாச அடிகளார்.
“நீங்கள் திரு.ராவை சொம்புதூக்கி என மோசமான மொழியில் திட்டினது தவறு என கூறப்படுகிறதே?”
“ஆம். உணர்ச்சிவேகத்தில் நான் சில சொற்களை மிகுதியாக கூறியிருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஆளும் கட்சி தலைவர்களை ஜால்ரா போட்டு அவர்களுக்கு தகாத சில உதவிகளை செய்து கொடுத்தும் முக்கியமான அரசு குழுமங்களிலும் பதவிகளை பெற்று அதன் மூலம் முன்னணி ஆய்வாளராக தன்னை காட்டிக் கொள்ளும் இவரைப் போன்றவர்களை வேறு என்ன சொற்கள் மூலம் நான் சித்தரிக்க வேண்டுமென சொல்லுங்கள். நீங்கள் பரிந்துரைக்கும் சொற்களில் இனிமேல் அழைக்கிறேன்”
அடுத்து ராவ்.
“மயிலை வெங்கடமூர்த்தி அடிகளார் அறக்கட்டளையின் விருதுகளை திட்டமிட்டு அவதூறு செய்யும் நோக்கிலும், சில விருதாளர்களை திட்டமிட்டு தாக்கும் நோக்கிலும் நீங்கள் செயல்படுவதாய் விமர்சனம் வைக்கப்படுகிறதே?”
“ஆம் இந்த விருது தவறான ஆட்களுக்கு ஊழல் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆய்வுலகில் புல்லுருவிகளையும் போலிகளையும் பெருக்கி உலவ விடுவதே சீனிவாசனாரின் நோக்கமாகத் தெரிகிறது. என்னை அவர் மோசமாய் தாக்கி எழுதுவதை பேசுவதை பாருங்கள். அவர் ஒரு ஆயுவுலக பயங்கரவாதி என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்”
ஆய்வறிஞர்களும் சிந்தனையாளர்களும் சச்சரவுகளை முடித்துக் கொண்டு மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என தொகுப்பாளர் முடித்துக் கொண்டார்.
நான் உற்சாகமாய் என் பக்கத்து டேபிளில் இருந்து கிட்டத்தட்ட பிரியாணியில் மூழ்கிப் போகும் நிலையில் இருந்தவரிடம் சொன்னேன் “சிந்தனையாளர்களிடையே வரும் பிரச்சனைகளை மெயின்ஸ்டிரீமில் விவாதிக்கிற அளவுக்கு நம் சமூகம் முன்னேறி விட்டது பாருங்களேன். ரொம்ப பெருமையா இருக்கு”
அவர் “எனக்கு ஒண்ணுமே புரியல” என்றார்.
மேடையில் மூன்றாவதாய் பேசக் கூடியவர் வந்து சில பல புள்ளிவிபரங்களை அடுக்கி ராவை தாக்கி பேசினதும் கூட்டம் உண்மையிலேயே உஷ்ணம் பிடித்தது. ஏ.ஸிக்கே வேர்க்க தொடங்கி விட்டது என்றால் பாருங்களேன். அது நின்று போய் விட்டது. ராவ் அரசுப் பொறுப்பில் இருந்தபடி செய்த 12 கோடி ஊழல் என ஒன்றை அவர் அவிழ்த்து விட கூட்டம் பரபரப்பானது. பக்கத்து இருக்கைக்காரர் தனக்கு வயிற்றை கலக்குகிறது என எழுந்து போனார். அவரிடத்தில் தொளதொளவென சட்டை அணிந்து கோட்டோவியம் போல் தோன்றின ஒரு இளைஞர் வந்தமர்ந்தார்.
இளைஞர் சொன்னார் “ராவ் சாரோட இந்த புரோஜெக்டில நானும் ஆறு மாசம் வேலை செஞ்சேன். அதோட மொத்த வேல்யுவே ஒரு கோடி தாண்டாது. பிறகெப்படி 12 கோடி ஊழல்?”
“நீங்க எந்த கட்சி?”
“தனிக்கட்சி”
மூன்று பேச்சாளர்கள் முழங்கி முடிக்கவே மணி ஒன்பதாகி விட்டது. நான் கையை பிசைந்தேன். குணாவை போனில் பலமுறை அழைத்தேன். அவன் துண்டித்தான்.
“சீக்கிரம் வா. செக்கை பிற்பாடு வாங்கிக் கொள்ளலாம்” என குறுஞ்செய்தி அனுப்பினேன்.
“பின்புறத்தை மூடிக் கொண்டு அமைதியாக இருக்கவும்” என பதில் அனுப்பினான்.
பேச்சாளர்களில் ராவ் சார்பாக பேச ஒரு கறுப்பாடு உள்ளதாய் ஒரு கருத்து நிலவியது. அது ஐயராக இருக்கலாம் என நான் சொன்னேன். அப்போது பார்த்து பழைய பக்கத்து இருக்கைக்காரர் வந்து நின்று தன் வேட்டியை சற்றே அவிழ்த்து இறுக்கி கட்டிக் கொண்டு பக்கத்துக்கு பக்கத்து காலி இருக்கையில் இருந்தார். அவர் சொன்னார் “ஐயர் என்னிக்குமே விருது வாங்குறவங்கள திட்டாம போனதில்ல. இது மிக நீண்ட மரபு. நானும் எத்தனை வருசமா கவனிக்கிறேன்”
இளைஞன் கேட்டான் “அப்போ அவர் ராவ் ஆள் இல்லைங்கிறீங்க?”
“இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். மரத்தை மறைத்தது மாமத யானை. மரத்தில் மறைந்தது மாமத யானை. ராவ் மரம், ஐயர் யானை”
“அவரோட தோற்றத்தை வச்சா அவரை யானைன்னு சொல்றீங்க?”
பக்கத்துக்கு பக்கத்து இருக்கைக்காரர் பதிலளிக்காமல் வெற்றிலையை எடுத்து தடவினார்.
இளைஞன் தொடர்ந்தான் “இவங்க எப்பவுமே சொந்த பிரச்சனைகளுக்காக வரம்பில்லாம மாறி மாறி ஏசிக்கிறாங்க. சாதாரண மக்களுக்கு உள்ள நாகரிகம், கண்ணியம், கட்டுப்பாடு ஏன் இவங்களுக்கு இல்ல”
வாயில் வெற்றிலைச் சாறை குதப்பியபடி அவர் சொன்னார் “முப்பது வருசமா இந்த சண்டைகள் ஓயல. ஏன் சங்ககாலத்தில் இல்லாத சான்றோர் மோதலா? வாழையடி வாழையாக நிகழ்வது தானே?”
நான் இடையிட்டு சொன்னேன் “தம்பி நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும். சிந்தனையாளர்கள் மக்களை பாதிக்கிற உன்னதமான விசயங்களுக்காக போராடுகிறார்கள். அப்போது கருத்துமோதல்கள் சகஜம். சாதாரண மக்களுக்கு கருத்தே இல்லை. பின்னெப்படி கருத்து மோதல்கள் நடக்கும் சொல்லுங்க?”
“மாறி மாறி சேற்றை வாரி எறிவது தான் கருத்துமோதலா?”
“அவர்கள் ஒரு ஆய்வுதளத்தில் காட்டும் தீவிரமும் ஆவேசமும் வாழ்வின் எல்லா செயல்களிலும் பிரதிபலிக்கும். இன்னொன்று, ஆய்வாளர்களுக்கு ஈகோ சற்று அதிகம் தானே. அதெல்லாம் இல்லாமல் அவர்களால் செயல்பட இயலாது”
இப்படியெல்லாம் சொன்னாலும் நேரம் ஆக ஆக எனக்கு உள்ளுக்குள் இந்த சச்சரவு ஒரு முடிவுக்கு வராதா என்ற ஆற்றாமை பொங்கியது. கடையை சாத்தி விடப் போகிறான்!
அதனால் நான் உடனடியாய் என் நிலைப்பாட்டை சற்றே மாற்றிக் கொண்டேன்.
தலையை குனித்து இருந்த இளைஞனின் தோளைத் தட்டிக் கூறினேன் “ஆனாலும் தம்பி நீங்க சொல்றதும் ஒருவிதத்தில உண்மை தான். இவர்கள் தங்களோட தனிப்பட்ட கருத்துமோதல்களில் சமூகத்தை ஏன் இழுத்து விட வேண்டும்? ஏன் இதையெல்லாம் பொதுத்தளத்தில் வைத்து செய்ய வேண்டும்? மக்கள் இவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கண்ணியம் காக்க வேண்டாமா? இல்லாவிட்டால் மக்களுக்கு இந்த மொத்த அறிவுலகம் மீதே ஆபாசமான எண்ணம் அல்லவா ஏற்படும்? எல்லாவற்றையும் விட முக்கியமாய் இங்கே இத்தனை பேர் வந்து கூடியிருப்பது எதற்காக? சீக்கிரம் ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தி பேச வேண்டியதை பேசி முடித்து கடையை கட்டினால் நாமெல்லாம் நம் வேலையை பார்த்து போவோம் இல்லையா?”
இளைஞன் சொன்னான் “அதானே சார், நானும் ஒரு ஆய்வாளன் தான். நாமெல்லாம் இப்படியா செய்கிறோம்?”
“அதானே?”
ஐயர் அடிக்கடி சீனிவாச அடிகளார் பக்கமாய் திரும்பி எதையோ வினவினார். ஆரம்பத்தில் சீனிவாச அடிகளார் அதற்கு பவ்யமாய் பதிலளித்தாலும் போகப் போக அவர் முகத்தை திருப்ப தொடங்கினார். ஐயரும் விடவில்லை. எழுந்து போய் அவரிடம் நேரடியாகவே கேட்கிறார்.
பக்கத்துக்கு பக்கத்து இருக்கைக்காரர் சொன்னார் “இதோ டைம் நெருங்கிருச்சு. எல்லா மீட்டிங்கிலயும் ஐயர் இது போல உடனடியாய் பேச அவகாசம் கேட்பார். அடிகளார் முடிஞ்சளவுக்கு அவரை கடைசியில் பேச வைக்க முயல்வார். பெரும்பாலும் விருதுகள் கொடுத்த பின் நன்றியுரை முடித்த பின் ஆட்கள் கலையும் வேளையில் மைக் காலி ஆகும் போது தான் ஐயர் பேசத் துவங்குவார். எவ்வளவு கூட்டங்களில் பார்த்திட்டேன். எப்பவுமே இப்பிடித் தான்”
இவர் வேறு குற்றம் கூறி அதற்கு தனியாக ஒரு பட்டிமன்றம் நடத்தினால் இன்று வீட்டுக்கு போக முடியாதே என புது பயம் தொண்டையை கவ்வியது.
கடைசியாய் பேச வந்த நான்கு பேர்களையும் சீனிவாச அடிகளார் சுருக்கமாய் பேசுமாறு நெருக்கடி கொடுத்து ஒன்பது மணிக்கு உரைகளை முடித்து விருது கொடுக்கும் கட்டத்துக்கு கொண்டு வந்தார். எழுந்து நிம்மதியாய் மேடை பக்கமாய் போய் நின்று கொண்டேன். விருது வாங்கினதும் அவனை அப்படியே இழுத்துக் கொண்டு ஓடி விட வேண்டும்.
விருதுகள் கொடுக்கப்பட்டு கரவொலி முடிந்து இயல்புநிலை திரும்பி ஒரு சின்ன களைப்புடன் விருதாளர்கள் மேடையில் இருந்தபடி தொலைதூர இலக்கு எதையோ வெறித்துப் பார்க்கும் வேளையில் நான் குத்துச்சண்டை நடுவர் போல் மேடையின் இடமிருந்து வலமாகவும் பிறகு வலமிருந்து இடமாகவும் ஓடி கைகளை ஆட்டி குணாவை அழைத்தேன். பாதிக்கு மேல் கூட்டம் எழுந்து மேடை அருகில் வந்து விட்டபடியாலும் அவர்களின் ஆரவாரத்தில் என் குரல் அமுங்கி விட்டதாலும் குணா என்னை கண்டுகொள்ளவே இல்லை. சீனிவாச அடிகளார் கூட்டத்தினரை இருக்கைகளுக்கு செல்லும் படி கேட்கும் அவகாசத்தில் ஐயர் எழுந்து மைக்கை நோக்கி சென்று அதை இருகைகளாலும் இறுக்க பற்றிக் கொண்டு ஒருமுறை செருமினார். பிறகு யாருடைய தூண்டுதலும் இன்றியே கூட்டம் மிகுந்த ஆர்வத்துடன் உட்கார்ந்து கேட்டது. மேடையில் இருந்து இறங்க முயன்ற விருதாளர்களை அவர் தடுத்து உட்கார செய்தார்.
“இவை இங்கு விருது தரப்பட்டிருக்கும் மூன்று ஆய்வாளர்களின் நூல்கள்.” அவர் மூன்று புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக மேஜை மீது போட்டார். “முழுசா படிச்சுட்டேன். சல்லிக் காசு பேறாது. இவர் இருக்காரில்லையோ இவர் ஆய்வில் சான்றுகள் எதுவுமே இல்லை. மேற்கோள்களுக்கான ரிபரென்ஸ் இல்லை. அடுத்தவர் இருக்கிறார் இல்லையோ அவரோடது சுத்த தண்டம். ஆய்வு முறைமையை சற்றும் பின்பற்றவில்லை. இது ஆய்வே இல்லை. கடைசியா இதோ நிக்கிறாரே…” அவர் திரும்பி சுட்டிக் காட்டினார். குணா எழுந்து நின்றான். “முதல் விருது வாங்குறாரே…சிறந்த இளம் ஆய்வாளர் குணசீலன் இவரோட வொர்க் ஒரு போலி ஆய்வு. இதையெல்லாம் நான் இங்க விளக்கி நிரூபிக்க முடியும். ஆனால் நான் விமர்சனம் பண்ண முடியாதபடி எனக்கு பேச டைமே தரல. பரவாயில்ல என் கருத்தை நான் விஷுவலா உங்க முன்னாடி காட்டிடறேன்”
அவர் மூன்று புத்தகங்களையும் எடுத்து சில பக்கங்களை கிழித்து வீசினார். “மிச்சத்தை நீங்களே கிழிச்சுக்கோங்கோ” என்றபடி மேடையில் இருந்து இறங்கினார். பிறகு எங்கோ மாயமாய் மறைந்து விட்டார். அவரிடம் கருத்து கேட்கவும் ஐயங்கள் வினவவும் தேடின பலருக்கும் அவர் அகப்படவே இல்லை. முதல் வரிசையில் சற்று நேரம் தலையைப் பிடித்தபடி குனிந்து அமர்ந்திருந்த சீனிவாச அடிகளார் திடீரென எழுந்து விறுவிறுவென நடந்து மைக்கை பற்றினார். அவர் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என கூட்டத்தினர் எதிர்பார்த்திருக்கையில் அவர் “இப்போது விருது பெற்றவர்கள் ஏற்புரை நிகழ்த்துவார்கள்” என்றார்.
 மூன்றாவது விருதை பெற்றவர் முதலில் பேச வந்தார். அவர் தனது ஆய்வு எப்படி ஆரம்பித்தது என்பதில் துவங்கி பிற இரு விருதாளர்களையும் விட தான் பல மடங்கு மேல் என நிறுவத் தொடங்கினார். மணி பத்தாகியும் அவர் முடிப்பதாய் தெரியவில்லை. குணாவின் கவனத்தைப் பெற என்னன்னமோ முயன்றும் பலனளிக்காமல் நான் மேடையில் ஏறி அவன் அருகே சென்றேன். அப்போதும் அவன் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் தோள் பக்கமாய் குனிந்து காதருகே சொன்னேன் “நான் போறேன். பத்து நிமிசம் வெயிட் பண்ணுவேன். நீ வராட்டி நான் கெளம்பிடுவேன். இதுவரை ஒருநாள் கூட நான் கூட்டத்துக்கு வந்து கொண்டாட்டம் இல்லாம திரும்ப போனதில்ல. சரி, இப்பிடி ஒரு கூட்டமே நடக்கலன்னு மனசை தேத்திக்கிறேன்.”
“போடா” என்றான்.
அடுத்த விருதாளர் தோன்றி முதல் விருதாளரை கடுமையாய் சாடத் தொடங்கினார். இருவரும் ஏன் ஐயரின் குற்றச்சாட்டுகள் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என வியப்பாக இருந்தது.
கீழே இறங்கி வாசல் கதவில் சாய்ந்தபடி ஒரு சிகரெட் பற்ற வைத்து நுரையீரலுக்கு கதகதப்பூட்டினேன். இரண்டாவது பேச்சாளர் உறுமுவது இங்கிருந்தே தெளிவாய் கேட்டது. மிச்ச இரு விருதாளர்களும் எந்தளவு கீழான போலியான ஆய்வாளர்கள் என அவர் நிறுவிக் கொண்டிருக்கும் போது குணா இறங்கி என்னருகே வந்து சேர்ந்தான்.
பைக்கில் செல்லும் போது அவன் காசோலையை எடுத்து காண்பித்தான்.
 “நானே ஒரு விருது ஆரம்பிக்க போறேன்டா. இன்னிக்கு நிகழ்ச்சி எப்பிடி? நான் ஏற்புரை வழங்காதது மட்டும் தாண்டா குறை”
“காசை வாங்கினோமா சரக்கடிச்சோமான்னு இல்லாம இதென்னடா தேவையில்லாத குடுமிப்பிடி சண்டை”
அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக்குகளின் வாசல்களை முட்டிப் பார்த்து விட்டு வேறு வழியின்றி அவனது ஏரியாவுக்கே சென்றோம். அங்கே ஒரு கடை பதினொரு மணிக்கு மேல் கூட திறந்திருக்கும் என்றான். அங்கு போனதும் கடைப்பையனிடம் பாதி புட்டி பக்கார்டிக்கு கூடுதலாய் நூறு ரூபாய் சேர்த்து கொடுத்து வாங்கிக் கொண்டு கிளம்பினோம். சாப்பிட ஒரு தள்ளுவண்டிக் கடைக்கு சாப்பிட சென்ற போது இருவர் சட்டைப்பைகளும் காலியாய் இருந்தன. சாப்பிடாமல் வெறுமனே கல்லில் பொரிகிற தோசைகளை பார்த்து எச்சில் முழுங்கியபடி கிளம்பினோம். எனக்கு வயிறு எரிந்தது.
“கவலைப்படாதே வீட்ல சோறு இருக்கு” என்றான். அவனுக்கு தெரிந்த கடையில் கடனுக்கு தயிரும் ஊறுகாயும் வாங்கினோம். மொட்டை மாடி ஏறி அங்கு ஆஸ்பட்டாஸ் ஷீட் கூரையிட்ட அவனது வீட்டில் நுழைந்தோம். தரையே தோசைக்கல் போல் தகித்தது. மேஜை விசிறியை இயக்கினான். அது பசியில் அழுதது. பத்துக்கு பத்து அறை. அதன் மூலையில் சமையலறை. இன்னொரு மூலையில் திரையிட்டு பிரித்து அவனது புத்தக அலமாரியும் ஒரு நாற்காலி மற்றும் மேஜையும். தரையெல்லாம் செய்தித் தாள்கள் இறைந்து கிடந்தன. மற்றொரு மூலையில் நார்க்கட்டிலை சாத்தி வைத்திருந்தான். அதன் பக்கத்தில் உள்ள குப்பைக்கூடைக்கு வெளியே மூன்று முடிச்சிடப்பட்ட ஆணுறைகள் கிடப்பது கண்டேன்.
“இங்கியே அழைச்சிட்டு வருவியோ?”
அவன் அதற்கு பதிலளிக்காமல் பாயை விரித்து மதியம் பொங்கின சோற்றுப் பானையுடன் தண்ணீர் புட்டி மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகளை வைத்தான். தட்டுகளை அலம்பி எடுத்து வந்தான். தன் தட்டில் முகம் பார்த்து தலையை சரி செய்தான். என்னைப் பார்த்து புன்னகைத்து விட்டு பக்கார்டி புட்டியின் கழுத்தை திருகினான். அப்போது எனக்கு அவன் கம்சனைப் போல் தோன்றினான். கோப்பைகள் மீது அதை சாய்த்து குருதியைப் போல ஊற்றினான்.
முதல் வாயை முழுங்கி விட்டு சொன்னேன் “எல்லாம் எவ்வளவு சிம்பிள். சோறு, குடி, ஓளு, வாழ்க்கையில் வேறு என்ன சொகம் வேறும். அப்புறம் எதுக்குடா மாறி மாறி பிராண்டிக்கிறாங்க? ஆய்வும் மயிரும்!”
ஆறி கெட்டிப்பட்ட சோறை தட்டி தயிரை ஊற்றி பிசைத்து வேகவேகமாய் தின்றோம். கண்ணைக் கடுக்க வைக்கும் புளிப்பு. அடுத்து மூன்றாவது, நான்காவது பெக்குகள் போகும் வரை நாங்கள் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. நான்காவது பெக் முடிந்ததும் அவன் எழுந்து என் பக்கத்தில் உட்கார்ந்து விருதுக் கோப்பையை என் மடியில் வைத்தான் “மச்சான் இது உனக்குடா. வச்சிக்கடா”
நான் அவன் மடியில் அதை வைக்க அவன் என் மடியில் வைக்க “வேணாம் மச்சான் வேணாம்” என ஒரே சமயம் கூறிக் கொண்டோம். குணா இறுதியில் கோப்பையை தூக்கி வெளியில் வீசி “த்தூ” என்றான். நான் அவனை கட்டிப்பிடித்து அழுதேன். அவன் என் முதுகைத் தட்டிக் கொடுத்தான். அடுத்த சுற்று முடிந்தது. அவன் என்னை கட்டியணைத்து அழுதான்.
 “மச்சான் என்ன மன்னிச்சிக்கடா”
“எதுக்குடா?”
“உன்னை ரொம்ப கடுப்பேத்தீட்டேண்டா. மன்னிச்சுக்கடா. உன்ன விட்டா எனக்கு யாரும் இல்லடா. என் உசிருடா நீ”
இருவரும் பரஸ்பரம் அழுது முதுகை நனைத்தோம். அடுத்து பாயைத் தூக்கிக் கொண்டு வெளியே போய் தரையில் அமர்ந்து கொண்டோம். இறுதிச் சுற்று. நட்சத்திரங்களை எண்ணினோம். எனக்கு மிதந்து கொண்டிருப்பதாய் தோன்றியது.
“மச்சான் உன் ஆய்வு சூப்பருடா? உன்னை அடிச்சுக்க ஒருத்தனும் இல்லடா. ஆனா ஒரு டவுட்டுடா?”
“சொல்லுடா?”
“கவரிமான்கிறது ஒரு மான் இல்ல, அது திபத்திய யாக் வகையை சேர்ந்த விலங்குக்கிறது உன் ஆய்வு கண்டுபிடிப்பு. சரி தான், ஆனா அது தமிழ்நாட்ல இருந்துச்சா?”
“இருந்திருக்கணும்; பிற்பாடு அந்த இடம் அருகி காணாம போயிருக்கணும்”
“சரி, ஆனா யாக் மாதிரி மயிரடர்ந்த விலங்கு நம்மூர் பருவச்சூழலில் எப்பிடி வாழ முடியும்?”
“ஆங்?”
“சொல்லு”
“பரிமேலழகர் ’மா’ன்னு சொல்றார். ’மா’ என்றால் விலங்கு. அதுனால அது மான் இல்ல, ஆதி தமிழகத்தில வாழ்ந்த விலங்கா இருக்கணும்னு சொல்றேன். இதுல உனக்கு என்ன பிரச்சனை?”
“இது ஒரு கண்டுபிடிப்பாடா? மா என்றால் விலங்குன்னு குழந்தைக்கும் தெரியும். இதுக்கு உனக்கு யுஜிசி உதவித்தொகை 10 லட்சம் வேற? உண்மையான ஆய்வாளர்கள் சோத்துக்கு சிங்கியடிக்கும் போது உனக்கெல்லாம் உதவித்தொகை எவண்டா கொடுத்தான்?”
“இன்னும் செக் வரலடா”
“வந்துரும்லா. அதெப்பிடி இவ்வளவு பிழையான புரொபோஸலுக்கு கிராண்ட் பண்ணலாம் சொல்லு?”
அவன் அமைதியாக இருந்தான். எனக்கு திடீரென குற்றவுணர்வு ஏற்பட்டது.
சட்டென நிமிர்ந்தவன் கண்கள் சிவந்து முகமெல்லாம் வியர்த்து சாமி வந்தவன் போல் தோன்றினான். சில கெட்டவார்த்தைகளை உதிர்த்து விட்டு என்னை நோக்கி கேட்டான்.
“ஐங்குறு நூற்றில் கணினிக் கூறுகள். டேய் கேணக்கூ அந்த காலத்தில் எப்போடா கணினி இருந்துது? யார் காதில பூ சுத்துற? உன் ஆய்வை எப்பிடிறா யுனிவர்சிட்டி ஏத்துக்கிச்சு?”
“வரம்பை மீறி பேசாதே! அமைதியா கேட்டேன்னா பதில் சொல்றேன். பழந்தமிழகத்தில கணினி இருந்துதுன்னு நான் சொல்லல. ஆனா கணினி மாதிரி கட்டளைகள் கொடுத்தா செயல்படுற எந்திரங்கள் இருந்திருக்கலாம். இல்ல அதை நோக்கின தேடல், அதற்கான தொழில்நுட்ப அறிவு இருந்திருக்கணும். சுவடிகளில இது பற்றி குறிப்பு இருக்கு”
“எந்த சுவடி? யார் பதிப்பிச்சது?”
“இன்னும் யாரும் பதிப்பிக்காத சில பழைய சுவடிகள் எங்கிட்ட மாட்டியிருக்கு. அது தான் முதன்மை ஆதாரம்”
“சுத்த பொய். பித்தலாட்டம்”
அவன் கைகொட்டி சிரித்தான்.
“டேய் நிறுத்து. நான் தான் ஆதாரம் இருக்குன்னு சொல்றேன் இல்ல”
அவன் கைதட்டி சிரித்துக் கொண்டே இருந்தான். எதிர்பாராத கணத்தில் அவன் கன்னத்தில் அறைந்தேன். அதிர்ச்சியில் உறைந்தான். அடித்த வேகத்தில் என் உள்ளங்கை எரிந்தது. ஆனால் மீண்டும் அவன் முகம் உயிர்பெற்று அதில் எக்களிப்பு சிரிப்பு மலர்ந்தது. “டேய் நிப்பாட்டுறா” என்றேன். அவன் சிரிப்பதை நிறுத்தவில்லை. அவன் மீது பாய்ந்து மாரில் ஏறி அமர்ந்து மாறி மாறி அறைந்தேன். காலி புட்டி உருண்டி சுவரில் போய் முட்டியது.
“நிறுத்துவியா இல்லையா? நீ நிறுத்தினா தான் நான் என் ஆதாரத்தை உன் கிட்ட நிரூபிக்க முடியும்? நான் பேசுறதை நீ கேட்க மறுத்தா நீ சொல்றதெல்லாம் சரின்னு ஆயிடுமா?”
அவர் சிரித்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் அறைந்து அறைந்து என் கைகள் மரத்தன. அவன் கன்னம் பழுத்து சிவந்தது. விழிகள் கண்ணீர் கோடிட்டு பளபளத்தன. அவனாகவே சிரிப்பை நிறுத்தி அமைதியானான். அந்த அமைதி பெரும் நிம்மதி தந்தது. ஆசுவாசமானேன். மார் மீதிருந்து இறங்கி அவன் பக்கத்தில் படுத்தேன். உருண்டு கிடந்த புட்டியை எடுத்து கவிழ்த்து கடைசித்துளியை நாவில் விட்டு உறிஞ்சினேன். கண்ணை மூடி சற்று நேரத்தில் அவன் குறட்டை ஒலி கேட்டது.
 மனதுக்குள் மீண்டும் மீண்டும் அவன் சொற்கள் ஒலித்தன. காதை மூடி திரும்பிப் படுத்தேன். அரை உறக்கத்தில் ஒரு காட்சி தோன்றியது. வெட்டவெளி. மாலையின் மஞ்சள் ஒளி எங்கும். அங்கங்கே முளைத்த புற்பூண்டுகள். அவற்றின் இடையே கொத்துக்கொத்தாய் பழுப்பு நிற மயிர்க்கற்றைகள் சிதறிக் கிடக்கின்றன. காற்றில் படபடத்து அவை உருள்கின்றன. ஒரு பிடி மயிர் பறந்து எழுந்து என் முகமருகே வருகிறது. அது பொன்னிறத்தில் ஜுவலிக்கிறது. 
(நன்றி: உயிரெழுத்து, ஆகஸ்ட் மாதம் 2015)

No comments: