Friday, September 25, 2015

இஷாந்த் ஷர்மா மீதான தடை நியாயமா?
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இறுதி டெஸ்டில் இஷாந்த் ஷர்மா விக்கெட் வீழ்த்திய பின் மிகவும் உணர்ச்சிகரமான வகையில் தன் தலையை கையால் அடித்து சற்று நாடகீயமாய் பாவனை செய்தார். இந்த எதிர்வினைக்காய் அவர் ஐ.சி.சியால் ஒரு டெஸ்ட் ஆட்டத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளார். இஷாந்தின் எதிர்வினை டிவியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. அதை தனித்து பார்ப்பவர்களுக்கு அவர் அநாகரிகமாய் நடந்து கொள்வதாய் தோன்றும். இஷாந்த் அடிப்படையில் சாதுவாய் அறியப்பட்டவர் என்பதால் அவரது கோபச் செயல் வேடிக்கையாகவும் பலருக்கும் பட்டது. ஆனால் இஷாந்தை இப்படி கோபப்படுத்தியது என்ன என பலரும் கேட்கவில்லை.


 ஒருவர் மட்டுமீறி கோபப்படுவது தவறு தான் என்றாலும் அவரை அப்படி செய்யத் தூண்டுவதும் தவறு தானே? “பொல்லாதவன்” சினிமாவில் தனுஷுக்கும் டானியல் பாலாஜிக்கும் இடையிலான மோதலுக்கு காரணம் செண்டிராயனின் ஈகோவும் பொறாமையும். ஒரு நள்ளிரவில் தாதா கிஷோரின் ஆட்கள் ஒருவரை கொலை செய்யும் போது குட்டி ரௌடியான செண்டிராயன் அங்கு ஒரு அழகான பெண்ணுடன், கம்பீரமான் பல்சர் பைக்கில் வரும் தனுஷை பார்க்கிறான். ஆண்மையின் அடையாளங்களான பைக்கும் பெண்ணும் தன்னிடம் இல்லையே என அவனுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. அவன் அந்த பைக்கை திருடுகிறான். இதன் பிறகு பிரச்சனை தனுஷுக்கும் நிழலுலக தாதாக்களுக்கும் இடையிலான பெரும் மோதலாக மாறுகிறது. இது முடிந்த இன்னொரு காட்சியில் செண்டிராயன் தனுஷை கண்டு “நான் தான் உன் பைக்கை எடுத்தேன். என்ன டா பண்ணுவே? வாடா வந்து அடிடா” என சீண்டுவான். தனுஷ் அவனை முடிந்தளவு தவிர்ப்பார். பிறகு கடுப்பாகி அடிப்பார். கிரிக்கெட்டில் எப்போதும் செண்டிராயன்கள் தான் சண்டையை உருவாக்குவார்கள். பிறகு சண்டை உக்கிரமாகி இரு பக்கமும் சேதங்கள் ஏற்ப்ட அவர்கள் மறைந்து விடுவார்கள்.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் எதிரணித் தலைவர் மேத்யூஸ் ஒரு புது உத்தியை பயன்படுத்தினார். பந்து சற்றே பழசானது அது மட்டையாளர்களுக்கு ஆட எளிதானது. இதைத் தடுப்பதற்கும் எதிரணியினரை காயப்படுத்துவதற்கும் அவர் வேகவீச்சாளர்களை மட்டையாளனை சுற்றி வந்து (round the wicket) உடம்பில் படும்படியாய் எல்லாம் பந்துகளையும் உயரப்பந்துகளாய் வீச வைத்தார். இது ஆபத்தானது மட்டுமல்ல எதிர்மறையான ஆட்டமும் கூட. கிரிக்கெட்டில் இப்படியான பந்து வீச்சுக்கு bodyline பந்து வீச்சு என்று பெயர். உண்மையில் இது தான் கிரிக்கெட்டின் கண்ணியத்துக்கு (spirit of the game) எதிரான ஒன்று. இப்படியான ஆபத்தான உத்தி பயன்படுத்தப்பட்டால் நடுவர்கள் அதை தடை செய்யலாம் என ஒரு விதிமுறை உள்ளது. ஆனால் இம்முறை நடுவர்கள் தம் கடமையில் இருந்து தவறினார்கள். இந்திய மட்டையாளர்களும், வீச்சாளர்களும் உயரப்பந்துகளை சாமர்த்தியமாய் தவிர்த்தார்கள்.
பின்னர் கோலியும் இலங்கை மட்டையாளர்களுக்கு உயர பந்து வீசும்படி தன் வேகவீச்சாளர்களை பணித்தாலும் அது அவர்களை காயப்படுத்தும் அளவுக்கு தொடர்ச்சியான தாக்குதலாய் இருக்கவில்லை. இரண்டாவது டெஸ்டில் இந்தியா வென்றதும் தொடர் 1-1க்கு என சமநிலையை அடைந்தது. மூன்றாவது டெஸ்டை இந்தியா வெல்லும் நிலைக்கு சென்றது. அப்போது மேத்யூஸ் இன்னொரு உத்தியை பயன்படுத்தினார். அது எதிரணியினரை முறைப்பது, தகாத வார்த்தைகளால் சீண்டுவது, உடலை மோதுவது எனும் sledging. இந்த ஆட்டத்தில் இஷாந்த் வீசிய உயரப்பந்தால் அப்போது மட்டையாடிக் கொண்டிருந்த இலங்கை வீச்சாளர்தமிக்க பிரசாதின் கையில் காயம்பட்டது. பிரசாத் பந்து வீசும் போது இஷாந்த் மட்டையாட வந்தார். அப்போது பிரசாத் அனைத்து பந்துகளையும் உயரப்பந்துகளாய் வீசியது மட்டுமில்லாமல் ஒவ்வொருமுறையும் முறைக்கவும் செய்தார். அது மட்டுமில்லாமல் இஷாந்தை தொடர்ந்து அச்சுறுத்துவதற்காய் ஓவரை நீட்டிக்கும் பொருட்டு அவர் வேண்டுமென்றே நோ பால் போட்டார். இதை நடுவர் கண்டித்தார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத இஷாந்த் பிரசாதிடம் சென்று தன் தலையில் நேரடியாய் பந்து வீசும்படி கேட்டார். இதை அடுத்து தினேஷ் சந்திமல் ஓடி வந்து இஷாந்திடம் வம்புக்கிழுத்தார். அவர் வேண்டுமென்றே இஷாந்தை இடித்தபடி கடந்தார். அது மட்டுமல்ல இஷாந்த் அவுட் ஆகி வெளியேறினதும் அவரைத் தொடர்ந்து பிரசாத் பின்னாலே ஓடினார். டிரெஸ்ஸிங் ரூமின் அருகே அவர் இஷாந்தை சந்தித்து மோதலை தொடர முயல இரு அணி நிர்வாகிகளும் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.
 இதெல்லாம் இலங்கை அணியின் திட்டமிட்ட செயல்கள் என்பது வெளிப்படை. தம் அணி தோல்வியின் விளிம்பில் உள்ள நிலையில் எதிரணியுடன் கசப்பை ஏற்படுத்துவது தம் அணிக்கு தோல்வி எண்ணங்களை மறக்கவும் உத்வேகமாய் ஆடவும் உதவும் என மேத்யூஸ் கருதி இருக்கலாம். ஆனால் இந்த உத்தி இலங்கைக்கு எதிராகத் தான் திரும்பியது. இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியதும் மிகுந்த கோபத்துடன் பந்து வீச வந்த இஷாந்த் தன் களைப்பையும் உடல்வலியையும் மறந்து பழிவாங்கும் வெறியும் உச்சவேகத்தில் வீசினார். ஒரு ஸ்பெல்லில் அவர் வீழ்த்திய இரு விக்கெட்டுகளும் ஆட்டத்தை போக்கை மாற்றியது. தன் உத்தி சொதப்பியதை உணர்ந்த மேத்யூஸ் மட்டையாட வந்ததும் இஷாந்திடம் கனிவாக பேசி இறுக்கத்தை தளர்த்தினார். மேத்யூஸின் நிதானமான சமாதான சொற்களைக் கேட்டதும் இஷாந்தின் பந்து வீச்சில் இருந்த வெறித்தனமும் மூர்க்கமும் குறைந்து போயிற்று.
ஆனால் அடுத்த நாளே இஷாந்த் ஒரு டெஸ்ட் தடை செய்யப்பட்டார். அவரை தூண்டின பிரசாத்தும் நேரடியாய் உடலில் மோதிய சந்திமலும் சொற்ப தண்டனைகளுடன் தப்பித்தனர்.
அணிகள் இவ்வாறு தம் எதிரணியின் முக்கிய வீரர்களை வேண்டுமென்றே சீண்டி தண்டனை பெற வைப்பது புதிதல்ல. 2008இல் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் ஆடியது. தொடர்ந்து அடிவாங்கிய ஆஸ்திரேலியா இந்தியாவை கட்டுப்படுத்துவதற்கு அப்போது மிகச்சிறந்த ஆட்டநிலையில் இருந்த கம்பீரை சீண்டுவதே சிறந்த உத்தி என முடிவு செய்து அதை செயல்படுத்தியது. இயல்பில் கோபக்காரரான கம்பீர் திரும்ப சண்டைக்கு போக அவர் தடை செய்யப்பட்டார்.
முதலில் குறிப்பிட்ட bodyline பந்து வீச்சை துவக்கி வைத்ததே இங்கிலாந்து தான். 1932இல் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட சென்ற போது பிரேட்மேன் அற்புதமான ஆட்டநிலையில் இருந்தார். அவரை கட்டுப்படுத்த ஒரே வழியென்று அப்போதைய இங்கிலாந்து அணித்தலைவருக்கு உதித்த ஐடியா தான் பாடிலைன். விளைவாக ஆஸ்திரேலிய மட்டையாளர்கள் பலரும் காயமுற்றனர். பிரேட்மேன் திணறினார். இரு தேசங்களுக்கும் இடையிலான உறவு சீர்கெட்டது. காயமுற்றிருந்த ஆஸ்திரேலிய அணித்தலைவர் வுட்புல்லை சந்தித்து மன்னிப்பு கோருவதற்காய் இங்கிலாந்து மேலாளர் ஆஸ்பத்திரிக்கு போனார். வுட்புல் சொன்னார் “உங்களை பார்க்கவே நான் விரும்பவில்லை. இங்கு ஒரு அணி (ஆஸ்திரேலியா) உண்மையாய் கிரிக்கெட் ஆடுகிறது. மற்றொரு அணி (இங்கிலாந்து) கிரிக்கெட் ஆடுவதாய் பாவனை செய்கிறது”.
இப்பிரச்சனைக்கு மூன்று தீர்வுகள். ஒன்று இலங்கை பயன்படுத்திய பாடிலைன் பந்து வீச்சு தடைசெய்யப்பட வேண்டும். இரண்டு, கோபமாய் எதிர்வினையாற்றும் ஒரு வீரரை தண்டிக்கும் முன் அவரை அவ்வாறு தூண்டினவர்களையும் அதே போல் தண்டிக்க வேண்டும். மூன்றாவது இது போன்ற எதிரணி தந்திரங்களை எப்படி கையாள்வது என வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
2008இல் இங்கிலாந்து அணி சென்னையில் ஒரு டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட தோற்கும் நிலையில் இருந்த போது இந்திய அணியின் யுவ்ராஜ் சிங்கை நோக்கி பிளிண்டாப் பாடிலைன் முறையில் பந்து வீசினார். ஒவ்வொரு பந்தையும் தன் உடம்பில் படாத வகையில் யுவ்ராஜ் சிரமப்பட்டு தடுத்தாடியதும் பிளிண்டாப் அவரை நோக்கி நக்கலாய் சிரித்தபடி சீண்டும்விதமாய் எதாவது கூறுவார். ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாத யுவ்ராஜ் பிளிண்டாப்பிடம் சென்று அமைதியாக சொன்னார் “நாம் இரண்டு பேரும் ஒரு வேலை செய்வதற்காய் வந்திருக்கிறோம். என்னை ஏன் தேவையில்லாமல் சிரம்மப்படுத்துகிறாய்? நாம் ஏன் அவசியமில்லாமல் சண்டை போட வேண்டும்?”. பிளிண்டாப் உடனே புரிந்து கொண்டு சீண்டுவதை நிறுத்தினார். இஷாந்த் செய்திருக்க வேண்டியதும் இது தான்.
(கல்கி வார இதழில் வெளியான கட்டுரை)

No comments: