Wednesday, September 2, 2015

சூதாட்டம் எனும் மற்றொரு ஆட்டம்


ஐ.பி.எல் சூதாட்டம் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நிறுவப்பட்ட நீதிபதி லோதா தலைமையிலான குழு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை இரு வருடங்களுக்கு தடை செய்தது. சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்திரா இருவரையும் நிரந்தரமாய் தடை செய்தது. இத்தண்டனை மென்மையானது என விமர்சிப்பவர்கள் இரு அணிகளையும் நிரந்தரமாய் கலைத்திருக்க வேண்டும் என்றார்கள். தண்டனை மிகை என நினைப்பவர்கள் நிர்வாகிகள் செய்த குற்றத்துக்கு ஏன் அணி வீரர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் கேட்டார்கள். ராஜஸ்தான் அணியில் இளம் வீரர்கள் அதிகம் என்பதால் இந்த தடையினால் அவர்களின் எதிர்காலம் கடுமையாய் பாதிக்கப்படும் என அவ்வணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கருதுகிறார்.
 இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வேறு தலைவலி ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இரு அணிகளின் இடத்தில் புது அணிகளை கொண்டு வந்தால், இரண்டு வருட தடைக்கு பின் சென்னையும் ராஜஸ்தானும் திரும்பும் பட்சத்தில் ஐ.பி.எல்லில் ஆடும் அணிகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 8இல் இருந்து 10 ஆகி விடும். அப்போது தொடரை நிர்வகிப்பது மிகவும் சிக்கலானதாகும் என வாரியம் அஞ்சுகிறது. இரு புது அணிகளுக்காய் ஏலம் விடாமல் இரண்டு அணிகளையும் இந்திய கிரிக்கெட் வாரியமே ஏற்று நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது. ஆனால் அப்போது தொடரை நடத்தும் அமைப்பே தொடரிலும் பங்கு பெறுவதாய் ஆகாதா என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். தனிப்பட்ட முறையில் தோனிக்கும் நெருக்கடி தான். இது நாள் வரை அவர் சென்னை அணியின் உரிமையாளரும் முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவருமான ஸ்ரீனிவாசனுக்கு உச்சபட்ச விசுவாசம் காட்டி வந்துள்ளவர். தனிப்பட்ட முறையில் அவர் நேர்மையானவர் என்றாலும் நீதிமன்ற குழு விசாரணையின் போது குருநாத் மெய்யப்பன் கிரிக்கெட் ஆர்வலர் மட்டும் தான் சென்னை அணியின் நிர்வாகி அல்ல என பொய் சொன்னார். ஆனால் அணியின் பயிற்சியாளர் பிளமிங் இப்போது மெய்யப்பன் அணியுடன் மிகவும் நெருக்கமாய் இருந்தார், அதன் நடவடிக்கைகளில் பங்கு கொள்பவராய் இருந்தார் என தெரிவித்துள்ளார். சென்னை அணி இரண்டு வருடங்களுக்கு பங்கெடுக்க முடியாத நிலையில் தோனி இனி வேறு அணிக்காய் ஆடுவாரா? சென்னை மீண்டும் திரும்புமா என்பதே கேள்விக்குறியாக உள்ள பட்சத்தில் அவர் இனிமேலும் ஸ்ரீனிவாசனுக்கு விசுவாசமாய் இருக்க இயலுமா? குருநாத் மெய்யப்பனுக்காய் பொய் சொன்ன தோனியை சூதாட்ட விசயத்தில் இனிமேலும் நம்ப இயலுமா? புது அணி ஒன்றுக்கு அவர் தலைவராகும் பட்சத்தில் சூதாட்டத்தை கண்டும் காணாமல் இருப்பாரா அல்லது கராறாய் செயல்படுவாரா?
ஐ.பி.எல்லில் இவ்வளவு சூதாட்டம் ஏன் நடைபெற்றது? இந்திய கிரிக்கெட் வாரியம் ஏன் இக்குற்றத்தை கண்காணித்து தடுக்கவில்லை? முதல் காரணம் இத்தொடர் எந்த அறமும் அற்று லாபநோக்கோடு மட்டுமே நடத்தப்பட்டது என்பது. பஞ்சாப், ராஜஸ்தான், கொச்சி போன்ற அணிகளில் முதலீடு செய்தவர்கள் யார் என்பது தெளிவில்லை. அது பற்றின சட்டரீதியான ஆவணங்கள் முறையாய் வாரியத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை. விளைவாக ஐ.பி.எல்லில் கணிசமாய் கருப்புப்பணம் விளையாடியது. அதே போல 2012இல் சேம்பியன்ஸ் லீக் தொடர் இந்தியாவில் நடத்த முடியாது போன போது அப்போது ஐ.பி.எல் தலைவரான லலித் மோடி தென்னாப்பிரிக்காவில் நடத்தினார். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு பண மாற்றம் செய்தத்தில் அவர் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் ஆயிரம் கோடிகள் பணம் ஹவாலா முறையில் வெளிநாடுகளில் பதுக்கப்பட காரணமானார். இந்தியாவில் சூதாட்டம் மூலம் ஆயிரம் கோடிகள் பணம் ஒவ்வொரு ஆட்டத்திலும் புழங்குகிறது. ஐ.பி.எல் தொடரை வெல்வதை விட பலமடங்கு பணத்தை சில ஆட்டங்களில் சூதாடுவதன் மூலம் சம்பாதிக்க முடியும் என உணர்ந்த அணி உரிமையாளர்கள் நேரடியாகவே அதில் ஈடுபட்டனர். சூதாட்டம் நடத்துபவர்கள் வாரிய நிர்வாகிகள் மற்றும் அணித்தலைவர்களுடன் நெருக்கமாய் பழகினர். அவர்கள் ஐ.பி.எல் நடக்கும் மைதானங்களில் வி.ஐ.பிகள், வாரிய நிர்வாகிகள், அணி உரிமையாளர்கள் அருகே இருந்து ஆட்டத்தை பார்த்தனர். இதன் மூலம் எளிதில் வீரர்களிடம் நெருக்கம் பெற்று நேரடியாகவும் உரிமையாளர்களுக்காகவும் சூதாடினர். இந்த ஊழலில் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அணி உரிமையாளர்கள், நிர்வாகிகள் என பலருக்கும் ஒரு பங்கு லாபம் இருந்ததால் அனைவருக்கும் தெரிந்த ஆனால் யாருமே கண்டுகொள்ளாத குற்றமாய் சூதாட்டம் தொடர்ந்தது.
 பொதுவாய் சர்வதேச ஆட்டங்களிலும் பாதிக்கு பாதி சூதாட்டத்திற்கு ஆளாகின்றன. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) சூதாட்ட தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடுமையாய் இந்த ஆட்டங்களை கண்காணிப்பதால் ஓரளவுக்கு சூதாடுபவர்களுக்கு அச்சம் உள்ளது. அவர்கள் வீரர்களை எளிதில் நெருங்க முடியாதபடி பல நிலை தடைகள் உள்ளன. ஆனால் ஐ.பி.எல் ஒரு திறந்தவெளி கூத்து. யார் வேண்டுமெனிலும் பங்கேற்கலாம். ஆட்டத்திற்கு பிறகான விருந்துகளில் சூதாட்ட பிரியர்கள் கலந்து கொள்வது பற்றி ஐ.சி.சி இந்திய கிரிக்கெட் வாரியத்தை எச்சரித்தது. ஆனால் ஐ.சி.சியின் சூதாட்ட தடுப்பு பிரிவு ஐ.பி.எல்லுக்கு பாதுகாப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் பணம் வழங்க வேண்டும். லலித் மோடி இந்த கட்டணத்தை சுட்டிக்காட்டி பாதுகாப்பு வேண்டாம் என்று விட்டார். சியர் கெர்ல்ஸுக்கு செலவு செய்ய பணம் உண்டு. ஆனால் சூதாட்டத்தை விசாரிக்க பணம் இல்லை. உண்மையான காரணம் ஐ.பி.எல்லுக்குள் நடக்கும் சூதாட்டத்தைப் பற்றின செய்திகள் வெளிவராமல் இருப்பதையே லலித் மோடி போன்றவர்கள் விரும்பினார்கள்.
இந்த மொத்த சர்ச்சையுமே செயற்கையானது என ஒரு பார்வையும் உள்ளது. அதாவது இங்கு எந்த பொருளாதார குற்றமோ நேரடியான ஊழலோ நடக்கவில்லை. குருநாத் மெய்யப்பனும் ராஜ் குந்தெராவும் சூதாடினதன் மூலம் ஆட்டத்தின் போக்கை மாற்றினதாய் எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் செய்த குற்றம் அணியின் தகவல்களை பயன்படுத்தி சூதாடியது மட்டுமே. இதை insider trading என்கிறார்கள். உதாரணமாய் ஒரு குறிப்பிட்ட ஆட்டம் நடப்பதற்கு முன்னரே ஆடுதளத்தின் குணம், எந்த வீரர்கள் ஆடுகிறார்கள், யார் ஆடவில்லை, அணியின் திட்டம், இலக்கு என்ன, எந்த கட்டத்தில் எந்த சுழலர் வீசுவார், எந்த வரிசையில் எந்த மட்டையாளர் ஆடுவார் ஆகிய தகவல்களை அணியின் உரிமையாளர், பயிற்சியாளர், தலைவர் ஆகியோர் மட்டுமே அறிவர். இவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இத்தகவல்களைக் கொண்டு அணியின் இறுதி ஸ்கோர் எவ்வளவாக இருக்கும் என்பதைக் ஊகித்து சூதாட இயலும். இத்தகவல்கள் வெளியுலகில் யாருக்கும் எளிதில் தெரியாது என்பதால் இவை மிகவும் விலைமதிப்பானவை. ஆட்டத்துக்கு முன்பு வெளியாட்கள் ஆடுதளத்தை பார்க்கவே முடியாது என்பதால் சூதாட்டக்காரர்கள் வீரர்களின் நெருக்கம் மூலம் அதைப் பற்றி ஏதேனும் அறிந்து கொள்ள இயலுமா என முயல்வார்கள். இத்தகவல் மூலம் அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும். இங்கு நாம் மற்றொரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். சூதாட்டம் (gambling) வேறு, ஊழல் (match-fixing) வேறு. சூதாட்டம் என்பது ஒரு ஆட்டத்தில் என்னவாகும் என ஊகித்து அதைப் பொறுத்து பணத்தை முதலீடு செய்வது. 20 ஓவர்களில் ஒரு அணி 160 அடிப்பதற்கான odds 1.40 என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் பத்து லட்சம் செலுத்துகிறேன் என்றால் என் ஊகம் பலிக்கும் பட்சத்தில் என்னுடைய பத்து லட்சத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு ரூபாய் நாற்பது பைசா கூடுதலாய் கிடைக்கும். அது ஒரு பெரிய தொகை. லாட்டரி சீட்டு வெறும் அதிர்ஷ்டம் சார்ந்தது என்றால் இது ஒருவரின் விளையாட்டு ஞானம், புத்திசாலித்தனம், உள்ளுணர்வு கொண்டு ஆட வேண்டிய விளையாட்டு. இந்தியாவில் லட்சக்கணக்கான பேர் ஒரே நாளில் ஆயிரங்கோடி பணத்தை இப்படி கிரிக்கெட் மூலம் சூதாடுகிறார்கள். இதில் சூதாட்டம் நடத்துபவர்களுக்கு லாபம் எப்படி கிடைக்கிறது?
சூதாட்டம் நடத்துபவர்கள் betfair போன்ற இணையதளங்கள் மற்றும் நேரடியான தொலைபேசி தொடர்பு மூலம் மேற்சொன்ன oddsஐ மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இந்தியா வெல்லும் வாய்ப்பு அதிகம் என்றால் இந்தியாவுக்கான oddsஐ ரூபாய்க்கு 80 பைசா என குறைத்தும் எதிரணியின் oddsஐ ரூபாய்க்கு 2 ரூபாய் என்றும் கூட்டியும் வைப்பார்கள். அப்போது கூடுதலான oddsஇல் நிறைய பேர் பணம் கட்டுவார்கள். இதன் மூலம் தமக்கு பெரிய நஷ்டம் ஏற்படாதபடி சூதாட்டம் நடத்துபவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இதில் ஏமாற்று ஏதும் இல்லை. விற்பனையாகாத பொருளின் மதிப்பை உயர்த்தி குறைவான விலைக்கு அதை அதிகமாய் விற்க முயலும் வியாபார தந்திரம் மட்டுமே இங்கு செயல்படுகிறது.
மேட் பிக்ஸிங் என்பது இப்படி புத்திசாலித்தனம் மூலம் ஆடாமல் வீரர்களை பணம் கொடுத்து தமக்கு ஏற்றாற் போல் ஆட வைத்து அதன் மூலம் ஆட்டத்தை போக்கை தீர்மானித்து அம்முடிவை வைத்து சூதாடி சம்பாதிப்பது. இந்தியாவில் சூதாட்டம் மூன்று அடுக்குகளிலாய் செயல்படுகிறது. ஒரு ஆட்டத்தில் ஒரு சூதாட்ட நிர்வாகி எவ்வளவு பணம் செலுத்தலாம், என்னவித odds பயன்படுத்தலாம் என மேல்தட்டு சூதாட்ட நிர்வாகிகள் தீர்மானிக்கிறார்கள். எல்லா சூதாட்ட நிர்வாகிகளும் ஒரு குறிப்பிட்ட திட்டவரைவின் கீழ் செயல்படுகிறார்கள். ஆனால் மேட்ச் பிக்ஸிங் பண்ணுகிறவர்களால் சூதாட்ட தொழிலில் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். மேட்ச் பிக்ஸிங் செய்பவர் தாம் மட்டுமே அறிந்த தகவல் கொண்டு ஆயிரக்கணக்கான சூதாட்ட நிர்வாகிகளை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சுருட்ட இயலும். அதனால் பிக்ஸிங் செய்பவர்களை சூதாட்ட நிர்வாகிகள் எதிர்க்கிறார்கள். ஒருவர் பிக்ஸிங் செய்வதாய் அறிந்தால் அவர்களே அவரை ஒதுக்கி வைத்து விடுவார்கள். நூறு முட்டைகள் நடுவில் உள்ள ஒரு கெட்டுப் போன முட்டையை போன்றவர்கள் மேட்ச் பிக்ஸர்கள். ஆனால் இந்திய மீடியாவில் ஒட்டுமொத்த சூதாட்டமும் மேட்ச் பிக்ஸிங் எனும் தவறான சிந்தனை நிலவுகிறது. ஐ.பி.எல் விசயத்திலும் யாரும் மேட்ச் பிக்ஸிங் செய்ததாய் உறுதியான ஆதாரம் இல்லை. சூதாட்டத்தில் மட்டுமே ஈடுபட்டுள்ளார்கள்.
சூதாட்டம் தவறா? சூதாட்டம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் சட்டபூர்வமானது. இந்தியாவில் அது சட்டவிரோதம். விளைவாக பெருமளவில் கறுப்புப்பணம் புழங்கும் சந்தையாக கிரிக்கெட் சூதாட்டம் இங்கு நிலவுகிறது. குதிரைப்பந்தயம், லாட்டரி போல் கிரிக்கெட் சூதாட்டத்தையும் சட்டபூர்வமாக்கினால் அரசுக்கு கோடிக்கணக்கில் வரி கிடைக்கும். அதே போல் ஊழல் செய்பவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுப்பதும் எளிதாகும். கிரிக்கெட் பார்ப்பது, கிரிக்கெட் ஆடுவது போல் கிரிக்கெட்டை வைத்து சூதாடுவதும் ஒரு விளையாட்டு தான். குடியை போல சூதாட்டமும் இந்தியர்களால் மிதமிஞ்சி பயன்படுத்தப்படலாம். மக்கள் அதற்கு அடிமையாகலாம் என்பது மட்டுமே ஒரே பிரச்சனை.
 மதம், திருமணம், மருத்துவ சீட், ஓட்டு, செக்ஸ் என நாம் தவறாய் பயன்படுத்தாத எந்த அமைப்புமே தான் இல்லையே! மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் மூலம் ஆயிரக்கணக்கான போலி மருத்துவர்கள் களமிறங்க போகிறார்கள் என கூறப்படுகிறது. என்ன மருந்தென்றே தெரியாமல் மக்களுக்கு தவறான சிகிச்சை அளிக்கப் போகிறார்கள். இருந்தாலும் நம் மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் ஆஸ்பத்திரிக்கு போகத் தான் போகிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட் மீதான களங்கமும் அப்படித் தான். ஒரு ஐ.பி.எல் சூதாட்ட விவகாரத்தினால் கிரிக்கெட் வெறியும் அதன் மீதான லட்சம் கோடி வர்த்தமும் சரிந்து விடப் போவதில்லை. இங்கு
”எல்லாம் கடந்து போகுமடா
அந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா”
(நன்றி: உயிர்மை, ஆகஸ்ட் 2015)

1 comment:

godly said...

Very informative Sir ! Good Analysis !!