Wednesday, August 26, 2015

வாட்ஸ் ஆப் குழப்படி
- 
   காட்சி 1
வாசல் மணி அடிக்கிறது. ஆடம்பரமான மேற்தட்டு வீடு. போனைப் பார்த்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருக்கும் 40 வயதுக்கு மேலான வீட்டுக்கார பெண் எழுந்து போகிறார். கதவின் ஓட்டை வழி பார்க்கிறார். மீண்டும் மீண்டும் பார்க்கிறார். பயந்து போய் தன் கணவனை போனில் அழைக்கிறார். போன் என்கேஜ்டாக இருக்கிறது. மீண்டும் மணியடிக்க வெளிக்கதவை திறக்கிறார். அங்கு கேட்டுக்கு வெளியே ஒரு அழகான மத்திய வயதுப் பெண் கையில் பையுடன் நிற்கிறார்.

பெண்: வணக்கம்மா!
(பதில் இல்லை)
பெண்: நான் கோல்டன் குளோப் லெண்டிங் லைப்ரரியில இருந்து வரேன். நாங்க நிறைய புஸ்தகங்கள், சினிமா டிவிடிகள் வீட்டுக்கு நேரடியா டெலிவரி பண்றோம். எங்க கிட்ட வைட் கலெக்‌ஷன் இருக்கும் மேடம். ஒரு நிமிஷம் கொடுத்தீங்கன்னா எங்களோட கலெக்‌ஷன், சப்ஸ்கிரிப்ஷன் ஸ்கீம்ஸ், சர்வீஸஸ் பத்தி விளக்கிறேன்.
(வெளிக்கதவு மூடப்படுகிறது)
பெண் மீண்டும் அழைப்பு மணியை அடிக்கிறார். கதவு திறக்கப்படுகிறது.
பெண்: மேடம் வீட்ல வேறெ யாராவது இருக்காங்களா?
வீட்டுக்காரம்மா: ஏன் கேட்கிறீங்க?
பெண்: வேறெ யாருக்காவது இண்டிரஸ்ட் இருந்தா சொல்லலாமுன்னு தான் மேடம். இங்க நாலாவது புளோர்ல இருக்கிற மிஸ்டர்.நரசிம்மன் சார்…அவர் கூட எங்களோட கஸ்டமர் தான். இதோ இந்த டிவியெல்லாம அவர் போன வாட்டி எடுத்தது தான். நல்ல கலெக்‌ஷன்ஸ் மேடம். பார்க்கிறீங்களா?
போன் மணியடிக்கிறது. வீட்டுக்காரம்மா கதவை படேரென சாத்தி விட்டு போனில் பேசுகிறார். எதிர்முனையில் அவர் கணவன்.
கணவர்: மீட்டிங்கில இருக்கும் போது கூப்பிடாதேன்னு எத்தனவாட்டி சொல்லி இருக்கேன்.
வீட்டுக்காரம்மா: நீங்க மீட்டிங்கில இருக்கீங்கன்னு எனக்கு எப்பிடிங்க தெரியும்.
கணவர்: நீ கூப்டு நான் உடனே எடுக்கலேன்னா, கட் பண்றேன்னா நான் மீட்டிங்கில இருக்கேன். சரியா?
வீட்டுக்காரம்மா: சரிங்க
கணவர்: அப்புறம் ஏன் திரும்ப திரும்ப ரிங் பண்றே? அந்த அளவுக்கு கூட உனக்கு மூளையில்லையா? நான் இந்த மொத்த சிட்டையையும் மேய்க்கிறேன். ஆனா உன்னை நம்பி எப்பிடித் தான் அந்த வீட்டை விட்டிருக்கேனோ? என்னிக்காவது ஒருத்தன் வந்து உன்னை மொத்தமா மொட்டையடித்து எல்லாத்தையும் சுருட்டிக் கிட்டு போகப் போறான்.
வீட்டுக்காரம்மா: ஐயோ அதுக்கு தாங்க நான் கூப்பிட்டேன். நீங்க போனையே எடுக்கலே. அன்னிக்கு போன்ல ஒரு போட்டோ காட்டினீங்களே. ஆமாங்க அவளே தாங்க வந்திருக்கா. இல்லைங்க எனக்கு நல்லா தெரியும். நான் இப்போ போன்ல அவ போட்டோவை பார்த்து செக் பண்ணுனேனே. ஈரக்குலை நடுங்கிப் போச்சு. என்ன பேசுறது பண்றதுன்னு தெரியல.
கணவர்: அவளை உள்ளே கூப்பிட்டு உக்கார வச்சிருக்கியோ?
வீட்டுக்காரம்மா: நான் என்ன அவ்வளவு முட்டாளா? கதவைக் கூட திறக்கல.
கணவர்: உன் பயத்தினால அவளை துரத்திடாதே. நைசா உள்ளே கூப்பிடு. நான் சொல்ற மாதிரி பண்ணு…
(உரையாடல் ஒலி குறைந்து பின்னணி இசை ஒலிக்கிறது)
வீட்டுக்காரம்மா தன் சேலையையும் தலைமுடியையும் சரி செய்து கொண்டு கண்ணாடி முன் ஒரு நொடி புன்னகைக்கிறார். கதவைத் திறந்து பார்க்கிறார். அகல சிரித்தபடி “சாரிம்மா உள்ளே ஒரு அவசர வேலை. அதான் சரியா கவனிக்கல ஹி ஹி”
பெண் உற்சாகமாகி: பரவாயில்ல மேடம். நீங்க எப்போ ப்ரீயா இருக்கீங்களோ அப்போ நான் வரேன்.
வீட்டுக்காரம்மா கேட்டைத் திறக்கிறார்.
வீட்டுக்காரம்மா: அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நீ உள்ளே வா. உன்னைப் பார்க்க என் முதல் மருமகள் மாதிரியே இருக்கு. இப்போ லாஸ் ஏஞ்செல்ஸில இருக்கா. அவளுக்கும் எனக்கு ஆகாது. நான் இப்பிடித் தான் லொடலொடன்னு சம்மந்தம் இல்லாம பேசிக்கிட்டே போவேன். உனக்கு அவ சாயல் இருக்குன்னு சொன்னேன். அவ்வளவு தான்.
பெண் உள்ளே வருகிறார். ஹாலையும் அங்குள்ள பொருட்களையும் பார்வையை சுழற்றி கவனிக்கிறார். வீட்டுக்காரம்மா அவளை சந்தேகத்துடன் பார்க்கிறாள்.
வீட்டுக்காரம்மா: உட்காரும்மா
அவள் உட்காரப் போகிறாள்.
வீட்டுக்காரம்மா: இல்ல இல்ல இங்க வேணாம்மா. நான் இப்பிடித் தாம்மா ஒண்ணு நெனச்சு இன்னொண்ணு சொல்லுவேன். இப்போ கொஞ்ச நேரத்தில என் பையன் வருவான். நாம உள்ளே உட்கார்ந்து ப்ரீயா பேசலாமே?
பெண்: உங்க பையன்னா ஸ்கூலா காலேஜா?
வீட்டுக்காரம்மா: காலேஜ் பஸ்ட் இயர்.
பெண்: அவருக்கு தேவைப்படற மாதிரி நிறைய புது புக்ஸ் கொண்டாந்திருக்கேன். மாணவர்களுக்கு நாங்க ஒரு ஸ்பெஷல் சந்தா ஸ்கீம் வச்சிருக்கோம் மேடம். அவர் வரட்டுமே. நான் அவர் கிட்டயும் எக்ஸ்பிளெயின் பண்ணலாமே.
வீட்டுக்காரம்மா: இல்லம்மா அவன் ரொம்ப கோவக்காரன். நான் பேசினாலே அவனுக்கு பிடிக்காது. நாம உள்ளே போவோம்.
பெண் எழுந்த படி: சரிங்க
வீட்டுக்காரம்மா: அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஜூஸ் சாப்பிடிறாம்மா?
பெண்: இல்ல பரவாயில்லம்மா
வீட்டுக்காரம்மா: எங்க வீட்டுக்காரர் திட்டுவாரு. ஜூஸ் குடிச்சு நாம பொறுமையா பேசலாமே.
பெண்: சரிங்க
வீட்டுக்காரம்மா: அதுக்கு முன்னாடி நாம உள்ளே போயிடுவோம்.
இருவரும் உள்ளே போகிறார்கள்.
பெண்: நாங்க ஆக்சுவலி முன்னாடி பெங்களூர்ல எங்க லைப்ரரி வச்சிருந்தோங்க. ஷிப்ட் ஆகி வந்து மூணு மாசம் தான் ஆகுது. என் ஹஸ்பண்ட் பிஸியோதெரபிஸ்ட். அவர் தனியா ஒரு கிளினிக் வச்சு பிராக்டீஸ் பண்றார். இங்க வந்த பிறகு இப்போ தான் ஸ்லோவா நாங்க எஸ்டேபிளிஷ் ஆகி வரோம் மேடம். இப்பவே எங்களுக்கு 150 மெம்பர்ஸ் இருக்காங்க.
வீட்டுக்காரம்மா: நான் போய் ஜூஸ் கொணாரேம்மா.
பெண்: ஆக்சுவலி எனக்கு ஜூஸ் ஏதும் வேணாம் மேடம். எங்க சந்தா விபரங்கள் பத்தி சொல்றேன். இப்போ நீங்க வந்து ஒருதடவை தியேட்டருக்கு போய் படம் பார்க்கிற பணத்துக்கு எங்க ஸ்கீம்ல செர்ந்தா பத்து படம் பார்க்கலாம். புதுசா ரிலீஸ் ஆகிய எல்லாம் பெஸ்ட் செல்லர் நாவலும் எங்க கிட்ட உடனே வந்திடும். கோல்டன் மெம்பர் வெறும் 1500 ரூபா. டைமண்ட் 2500. இதில் நீங்க 25 டிவிடி, 30 புக்ஸ் எடுக்கலாம். 10 மேகஸின்ஸ் வேற. ரொம்ப சீப்பா போகணும்னா சில்வர் மெம்பர். 800 ரூபா. உங்களுக்கு கோல்ட் கரெக்டா இருக்கும் மேடம்.
வீட்டுக்காரம்மா: ஆங் இல்லங்க. எனக்கு குழப்பமா இருக்கு.
பெண்: நான் சரியா விளக்கி சொல்றேன் மேடம்
வீட்டுக்காரம்மா: அதில்லம்மா. ஜூஸ் சாப்பிடிறியா. இதோ வந்திடறேன்.
பெண்: சரிங்க மேடம். ஆனா ஜூஸ் வேணாம். கொஞ்சம் தண்ணீர் மட்டும் கொடுங்க
வீட்டுக்காரம்மா: ஜில்லா எடுத்தாரட்டுமா?
பெண் குழப்பமாக: சரிங்க
வீட்டுக்காரம்மா பதற்றமாய் வெளியே வந்து சட்டென கதவைப் பூட்டுகிறார். பெருமூச்சு விட்டபடி மாரைப் பிடித்துக் கொள்கிறார். சற்று நேரம் ஒன்றும் புரியாமல் உட்கார்ந்திருக்கும் அப்பெண் “மேடம் மேடம்” என அழைக்கிறாள். பதில் வராமல் போக “மேடம்” என சத்தமாய் அழைக்கிறாள். அவள் பிறகு கதவைப் பற்றி இழுக்கிறாள். பூட்டப்பட்டிருப்பது உணர்ந்து கதவை அடித்து தட்டியபடி “கதவைத் திறங்க ப்ளீஸ்” என கத்துகிறாள்.
வீட்டுக்காரம்மா போனில் கணவரை அழைக்கிறார்: ஏங்க சொன்னபடியே அவளை பூட்டிட்டேங்க.
கணவர்: பரவாயில்ல. கெட்டிக்காரி தான். எங்க அவ உன்னை உள்ளே வச்சு பூட்டிடுவாளோன்னு நெனச்சேன்
வீட்டுக்காரம்மா: ஆனா வந்துங்க அவ பேசறது கேட்ட ஒருவேளை நல்லவளோன்னு தோணுது. ஆனா போட்டோல பார்த்த அதே முகங்க
கணவர்: நீ நல்லவன்னு சொன்னா அவ கண்டிப்பா திருடி தான். அப்பிடியே இரு. நான் வந்திக்கிட்டே இருக்கேன். ரெண்டு நிமிசத்தில வந்திருவேன்.
சோபாவில் கிடக்கும் அப்பெண்ணின் போன் அடிக்கிறது.
வீட்டுக்காரம்மா: ஏங்க அந்த பொண்ணோட போன் இங்க சோபாவில கிடக்குது. அது அடிக்குதுங்க
கணவன்: அவ கூட்டாளிங்களா இருப்பாங்க. போனை எடுத்து அவ ஓகெ சொன்னா உள்ளே வந்து உன்னை கட்டிப் போட்டுட்டு கொள்ளையடிச்சுட்டு போயிடுவாங்க. அது தான் இவங்களோட மோடஸ் ஆப்பிராண்டி.
வீட்டுக்காரம்மா: என்னங்க அது?
கணவன்: மோடஸ் ஆப்பிராண்டி. அதெல்லாம் உனக்கு புரியாது. எப்பவுமே தப்பான டைம்ல போன்ல பேசினா நிறுத்த மாட்டே. போனை வை.
வீட்டுக்காரம்மா குறுக்குமறுக்குமாய் பதற்றமாய் நடக்கிறார். அறைக்குள்ளிருந்து அப்பெண் கதவும் சத்தம். அவர் காதைப் பொத்திக் கொள்கிறார். சோபாவில் கிடக்கும் போன் அடித்துக் கொண்டே இருக்க அவர் அருகில் சென்று எட்டிப் பார்க்கிறார். ஆனால் எடுக்க தயங்குகிறார். சட்டென அழைப்பு மணி அடிக்க அவர் பயந்து ஓவென கத்துகிறார். மீண்டும் மணியடிக்கிறது. அவர் பயத்துடன் நடந்து போய் ஓட்டை வழி பார்க்கிறார். வெளியே காவல் அதிகாரியான அவரது கணவரும் சில போலீசாரும் நிற்கிறார்கள். வீட்டுக்காரம்மா நிம்மதியாகி கதவையும் கேட்டையும் திறந்து விடுகிறார்.
கணவர் வீட்டுக்காரம்மாவை பார்க்கிறார்.
வீட்டுக்காரம்மா: எனக்கும் ஒண்ணும் ஆகலைங்க
கணவர்: அதான் தெரியுதே. எந்த ரூம்ல?
வீட்டுக்காரம்மா: உங்க பெட்ரூம்லங்க
கணவர்: அதுக்கு தான் பின்பக்கமா கதவு இருக்கே. அதை திறந்து பால்கனிக்கு பக்கத்துக்கு வீட்டு பால்கனிக்கு தாவி தப்பிச்சு போயிருப்பா. உன்னைய வச்சு நான் படுற பாடிருக்கே. தள்ளு
அவர் அறைக்கு போகிறார். போலிசார் கதவைத் திறக்கிறார். உள்ளே அந்த பெண் பயந்து போய் நிற்கிறார். போலிசார் அவரை கைது செய்து அழைத்துப் போகிறார்கள். அவளை பேச விடாதபடி அமுக்கி வெளியே கொண்டு போகிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண்கள் வெளியே நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். வீட்டுக்காரம்மா அவர்களிடம் சென்று நடந்ததை பெருமையாய் விவரிக்க அவர்கள் மோவாயில் கை வைத்து வியக்கிறார்கள்.
காட்சி 2
காவல் நிலையத்தில் அதிகாரியின் அறை. அப்பெண் விசும்பியபடி அமர்ந்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார்.
இன்ஸ்பெக்டர்: இதுவரை எத்தனை வீடுகளில கொள்ளையடிச்சிருக்க? போன மாசம் பெரம்பலூர்ல நடந்த கொள்ளை உன் குரூப்போட வேலை தானே. உன் கேங்ல வேற யாரெல்லாம் இருக்காங்க?
அப்பெண் பதில் கூறாமல் அழுதபடியே இருக்கிறார்.
அறைக்கு வெளியே அப்பெண்ணின் கணவர் ஒரு வக்கீலுடன் வந்து நிற்கிறார். அதிகாரி அவர்களை உள்ளே வரும்படி கூற ஒரு கான்ஸ்டிபள் அழைத்து வருகிறார்.
இன்ஸ்பெக்டர்: யாரு நீ?
பெண்ணின் கணவர்: நான் இங்க வீகேர் ஆஸ்பத்திரியில பிஸியோதெரபிஸ்டா பிராக்டீஸ் பண்றேன். இது என் வைப் சார். நாங்க மூணு மாசம் முன்னெத் தான் சென்னை வந்தோம்.
இன்ஸ்பெக்டர்: இப்பெல்லாம் படிச்சவங்க தான் இந்த தொழில்ல்ல அதிகமா ஈடுபடுறீங்க
பெண்ணின் கணவர்: சார் நீங்க எந்த தப்பும் இல்லாம என் வைபை இங்க கொண்டு வந்து வச்சிருக்கீங்க. அவ என்ன தப்பு சார் பண்ணினா?
இன்ஸ்பெக்டர்: இந்த பொண்ணு ஒரு வாண்டட் திருட்டு கும்பலை சேர்ந்தவ. இவளை பத்தி எங்களுக்கு ஏற்கனவே ரிப்போர்ட் வந்திருக்கு. போட்டோ சகிதம். ரொம்ப நாளா வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்தோம். சரியா மாட்டிக்கிட்டா. இப்போ நீயும் வந்து மாட்டிக்கிட்டிருக்க
பெண்ணின் கணவர்: யார் கிட்ட பேசுறீங்க? தெரிஞ்சு பேசுங்க
இன்ஸ்பெக்டர்: டேய் பொத்துடா. என்ன எகிறுற? ஒழுங்கா திரும்ப போக மாட்டே
அதிகாரி அவரை அமைதிப்படுத்துகிறார்.
அதிகாரி: ஆக்சுவலி இவ என் வீட்டில கொள்ளையடிக்க நுழைஞ்சப்போ தான் மாட்டினா. நானும் என் மனைவியும் விட்னெஸ். போலீஸ் வீடுன்னு தெரிஞ்சே தான் அனுப்புறீங்களா?
பெண்ணின் கணவர்: சார் என் வைப் கொள்ளையடிச்சதை நீங்க பார்த்தீங்களா?
அதிகாரியின் முகத்தில் முதல் முறையாக திகைப்பு தோன்றுகிறது.
அதிகாரி: தெரியாமலா என்ன? இதோ பாரு.
அவர் சில பத்திரிகையின் கத்தரிக்கப்பட்ட பக்கங்களை காட்டுகிறார். அதில் அப்பெண் ஒரு பயங்கர கொள்ளைக்காரி என்றும், சேல்ஸ்வுமனாக வீட்டுக்குள் நுழைந்து தாக்கி பணம் கொள்ளையடிப்பவள் என்றும், அவளை போலீஸ் தேடி வருவதாகவும் எழுதப்பட்டுள்ளது. அவளது போட்டோவும் உள்ளது. அவர் அடுத்து செல்போனில் வந்த வாட்ஸ் அப் சேதியை காட்டுகிறார். அதிலும் அவள் படம் காணப்படுகிறது.
அதிகாரி: கடந்த ரெண்டு மாசமா மொத்த சிட்டியுமே இவளைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கு. பேப்பர், பேஸ்புக், வெப்சைட் எல்லாத்திலெயும் இவளைப் பத்தி நியூஸ் வந்திருக்கு. இதுவரையிலும் வடக்கிந்தியாவில கைவரிசை காட்டி வந்த இவள் இப்போ சவுத் பக்கமா வந்திருக்கிறதா போட்டிருக்காங்க. இது ஒரு ஓப்பன் அண்ட் ஷட் கேஸ்.
பெண்ணின் கணவர் பெருமூச்சு விட்டபடி: சார் அது ஒரு பொய்த்தகவல். எங்களுக்கு வேண்டாதவங்க ஒருத்தர் அவளைப் பத்தி கிளப்பி விட்ட புரளி. இப்போ இருக்கிற டிஜிட்டல் யுகத்தில யார் போட்டோவையும் டவுன்லோட் பண்ணி ஒரு செய்தியை நிமிசத்தில லட்சக்கணக்கான பேருக்கு பரப்ப முடியும். அதெல்லாம் உண்மையாயிடும சார்?
அதிகாரி: உண்மையா இல்லையாங்கிறதை நாங்க விசாரிச்சு முடிவு பண்றோம். அதுவரையில நீங்களும் எங்க கஸ்டடியில இருக்க வேண்டியது தான்.
பெண்ணின் கணவர்: எந்த எவிடென்ஸும் இல்லாம என் வைபை நீங்க எப்படி இப்பிடி அரெஸ்ட் பண்ணி ஹரெஸ் பண்ண முடியும்? நாங்க ரொம்ப கண்ணியமான குடும்பத்தை சேர்ந்தவங்க. எங்களுக்கு தெரிஞ்சவங்க பெரிய இடத்துல இருக்காங்க. உங்களை சும்மா விட மாட்டேன்.
இன்ஸ்பெக்டர்: இந்த நியூஸை வாட்ஸ் ஆப்ல எங்களுக்கு எல்லாம் அனுப்பிச்சதே கமிஷனர் சார் தான். ஹா ஹா.
அதிகாரியும் சிரிக்கிறார்.
வக்கீல் முன்னே வந்து ஒரு கோப்பை நீட்டுகிறார். அதிகாரி அதை வாங்கி திறந்து பார்க்கிறார்.
வக்கீல்: சார் நீங்க சொன்ன மாதிரி இவங்க பேர்ல வாட்ஸ் ஆப், பேஸ்புக் செய்தி பரவினதெல்லாம் உண்மை தான். இது முதல்ல நடந்தது ஆறு மாசம் முன்னாடி. என் கிளையண்ட் அர்ச்சனா அப்போ தில்லியில வேலை பார்த்தாங்க. அவங்களோட ஒரு பழைய பிரண்ட் அவங்க மேல உள்ள கோபத்தில இது போன்ற மெஸேஜ் ஒண்ணை முதல்ல அனுப்பினாரு. ஒரே வாரத்தில அது இவங்களோட நண்பர்கள், உறவினர்கள் வட்டத்தில பரவிடுச்சு. இவங்க அப்செட் ஆகி வேலையை ரிஸைன் பண்ணிற அளவுக்கு போனாங்க. அதன் பிறகு இது பொய்யுன்னு எல்லாருக்கும் புரிய வச்சோம். போலீஸ்ல சைபர் கிரைமிலையும் புகார் கொடுத்தோம். அதோட காப்பி அந்த பைல்ல வச்சிருக்கேன் சார். ஆனா ரொம்ப சீக்கிரமே நிறைய பேருக்கு இந்த மெஸேஜ் பரவிடுச்சு. போலீஸ் இதை பண்ணுனவை பிடிச்சு ஆக்‌ஷன் எடுத்தாங்க. கேஸ் இப்பவும் நடந்துகிட்டு இருக்கு. தில்லி ஸ்டேஷன்ல் இந்த கேஸை ஹேண்டில் பண்ணின இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமாரிடம் வேணும்னா பேசிப் பாருங்க. எப்.ஐ.ஆர் காபி, அப்புறம் வேற கேஸ் டிடெயில்ஸ் எல்லாம் பைல்ல இருக்குது. உண்மையிலேயே இந்த பிரச்சனை கட்டுக்கடங்காம போனதினால தான் என் கிளையண்ட் தில்லியில இருந்து பெங்களூர் போய் இருந்தாங்க. அப்புறம் அவங்க சொந்த ஊரான சென்னைக்கே திரும்ப வந்தாங்க. இங்க நீங்க இதை சொல்லி ஸ்டெஷனுக்கு கூட்டி வந்து ஹரெஸ் பண்ணுறீங்க. நான் உங்களுக்கு எதிரா கேஸ் மூவ் பண்ண முடியும் தெரியுமில்ல.
அதிகாரி பொறுமையாக அந்த கோப்பில் உள்ள காகிதங்களை புரட்டி பார்க்கிறார். அவருக்கு வியர்க்கிறது. கோப்பை அவர் இன்ஸ்பெக்டருக்கு நகர்த்துகிறார். அப்பெண்ணை நோக்குகிறார்.
அதிகாரி: சாரிம்மா. தப்பு எங்க மேல கூட இருக்கலாம். ஜஸ்ட் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. முழுக்க விசாரிச்சிடுறோம்.
அதிகாரி பெண்ணின் கணவரைப் பார்த்து “உட்காருங்க சார்”.
கான்ஸ்டபிளை அழைத்து இருவருக்கும் காபி கொடுக்க சொல்கிறார்.
அப்பெண் காபி வேண்டாம் என்கிறார்.’
அதிகாரி பணிவாக: ஜூஸ் சாப்பிடுறிங்களாம்மா?
பெண் பயமாய் தலையாட்டி மறுக்கிறார்.
அதிகாரி: சில்லா கொஞ்ச தண்ணி கொடுக்க சொல்லட்டுமா? நெர்வஸா களைப்பா இருப்பீங்க. கொஞ்சம் தண்ணியாவது குடிங்க
அப்பெண் மேலும் கலவரமாய் வேண்டாம் என்கிறாள்.
அதிகாரிக்கு மனைவியிடம் இருந்து போன் வருகிறது.
அதிகாரி: போனை வைடி. எல்லாம் உன்னால தான்.

காட்சி 3
அதிகாரி போனில் தில்லியில் உள்ள ஒரு அதிகாரியிடம் பேசுகிறார். பின்னணி இசை ஒலிக்க வெறும் காட்சிகள் ஓடுகின்றன. போனை வைத்து விட்டு அவர் அருகில் உள்ள இன்ஸ்பெக்டரை பார்க்கிறார்
அதிகாரி: நம்ம மேல தான் தப்பு. இப்போ இந்த விசயம் யாருக்கும் தெரிய வேணாம். நீயே மொத்தமா ஹாண்டில் பண்ணு. அவளோட ஹஸ்பண்டை சமாதானப்படுத்தி ரெண்டு பேரையும் அனுப்பிடு. சாரி கேட்டுடு. ஏன்னா நம்ம பண்ணின தப்பு தானே. நான் இப்போ அங்க வந்தா நல்லா இருக்காது. பட் என் வீட்ல தான் இது நடந்துதுன்னோ நான் சம்மந்தப்பட்டிருக்கேன்னோ தெரிய வேணாம்.
இன்ஸ்பெக்டர்: ஓகெ சார்
காட்சி 4
பெண்ணும் அவர் கணவனும் அதிகாரியின் அறைக்குள் வருகிறார்கள். தண்ணீர் அருந்திக் கொண்டிருக்கும் அவர் சட்டென அதிர்ச்சியாகிறார்.
அதிகாரி: Don’t have manners? Who let you barge in like this?
கணவர்: சார் என் வைபை எல்லார் முன்னிலையிலெயும் அரெஸ்ட் பண்ணி கொண்டு வந்திருக்கீங்க. மீடியால ஏற்கனவே நியூஸ் வந்திருச்சு. நாங்க இப்போ வெளியே போக முடியாது. எல்லாரும் எங்களை திருடங்களா தான் பார்ப்பாங்க. எங்களால இனி நார்மலா வாழ முடியாது. நீங்க தான் இதுக்கெல்லாம் பொறுப்பு.
அதிகாரி: மீடியாவில யார் நியூஸ் கொடுத்தது?
இன்ஸ்பெக்டர்: எவனோ செல்லில படம் புடிச்சு அனுப்பியிருக்கான் சார். கொஞ்சம் முன்னாடி உங்க வைப் ஒரு நியூஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்காங்க. அவங்க எப்பிடி பிடிச்சாங்க என்கிற விபரங்களை எல்லாம் சொல்றாங்க. ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சு சார்.
அதிகாரி: உடனே சேனல்ஸை காண்டாக்ட் பண்ணி நிறுத்தி வைக்க சொல்லுங்க. அப்புறம் ஒரு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க.
இன்ஸ்பெக்டர்: சரிங்க சார்
அதிகாரி எழுந்து பெண்ணின் கணவரின் கையைப் பற்றுகிறார்: சாரி சார். We will set this right!
காட்சி 5
மீடியா சந்திப்பு. சலசலப்பான கூட்டம். பேசிக் கொண்டிருக்கையில் அதிகாரியின் போன் அடிக்கிறது. மனைவி அழைக்கிறார்.
அதிகாரி எழுந்து வெளியே வருகிறார்.
அதிகாரி: திரும்ப திரும்ப போன் பண்ணாதேன்னு சொல்லியிருக்கேன். எல்லாம் உன்னால வந்த பிரச்சனை தான். என் மானம் போச்சு. மொத்த போலீசும் கோமாளியாயிட்டோம். எல்லாம் உன்னால. உன் சந்தேக புத்தியால
மறுமுனையில் அவர் மனைவி: இல்லீங்க யாரோ பெல் அடிக்கிறாங்க. என்ன பண்ணட்டும்?
அதிகாரி: என்னவோ பண்ணு. எனக்கு போன் பண்ணாதே. வீட்டுல சும்மா இருந்து இருந்து உனக்கு எதைப் பார்த்தாலும் பயம். வெளியில இருந்து வேலை பார்க்கிற என்னோட டென்ஷன் உனக்கு புரியாது. போனை வை.
அதிகாரி மீண்டும் தன் இருக்கைக்கு திரும்புகிறார்.
அதிகாரி: ஸீ நாங்க இந்த பிரஸ் மீட் கூப்பிட்டதோட நோக்கமே மீடியா இன்னும் பொறுப்பா நடந்துக்கிணமுன்னு சொல்லத் தான். வாட்ஸ் ஆப்லயும், பேஸ்புக்கிலயும் வர செய்திகளை verify பண்ணாம அப்படியே நீங்க செய்தின்னு நம்பி பிரசுரிக்க கூடாது. அதனால சில சமூகவிரோதிகளோட விஷமக் காரியங்களுக்கு நீங்க துணை போறதா ஆகிடும். சமீபமா அர்ச்சனாங்கிற தில்லியை சேர்ந்த ஒரு பெண் தன்னை ஒரு திருடி என்று சித்தரிக்கிற ஒரு தவறான செய்தி வாட்ஸ் அப் மற்றும் இணையம் வழி பரப்பப்படுறதா புகார் கொடுத்தாங்க. அந்த வழக்கில விசாரிச்ச தில்லி போலீஸ் குற்றவாளியை அரெஸ்டும் பண்ணினாங்க. ஆனா அந்த செய்தி வாட்ஸ் ஆப் வழியா இங்க தமிழ்நாட்டிலையும் பரவிடுச்சு. அதை நம்பி நீங்க செய்தியா வெளியிட்டீங்க. பத்திரிகையில அந்த பொண்ணோட போட்டோவோட பிரசுரிச்சு அவளை திருடின்னு பட்டம் கொடுத்திங்க. ஆனா அதை நம்பின போலீஸ் அந்த பெண்ணை தவறுதலா கைது பண்ணிடுச்சு. ஆனா நாங்க எங்க தப்பை உணர்ந்து அந்த பெண்ணை உடனடியா விடுவிச்சுட்டோம். ஆனா நீங்க டிவியில திரும்ப திரும்ப அதையே காட்டி பிரச்சனையை பெரிசாக்கிட்டீங்க. நான் உங்க கிட்ட வேண்டி கேட்டுக்கிறதெல்லாம் அந்த செய்தியை நிறுத்தி விட்டு, ஒரு மறுப்பு செய்தியை வெளியிடுங்க. அதே போல் சமூக வலைதளங்களில் வருகிற செய்திகளை அப்படியே நம்ப வேண்டாமுன்னு நான் இதன் மூலம் பொதுமக்களை கேட்டுக்கிறேன்.
டி.வி நிருபர்: சார், அந்த திருடியை பிடிச்சது உங்க மனைவி தான்னு சொல்றாங்களே. இதில உங்க பங்கு என்ன?
அதிகாரி: அது உண்மையான தகவல் அல்ல. அவங்களை என்னோட குடியிருப்பில் வைத்து கைது செஞ்சாங்க என்பது உண்மை. ஆனால் என் வீட்டில் வைத்தல்ல. இதில் என் குடும்பத்துக்கு எந்த சம்மந்தமும் இல்லை. தயவு செஞ்சு நீங்க பிரச்சனை இன்னும் பெரிசாக்காதீங்க.
பத்திரிகையாளர்: நீங்க சொன்ன வாட்ஸ் ஆப் செய்தியை உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் காவல்துறைக்குள் பரப்பியதாக சொல்லப்படுவது உண்மையா? இதுல உங்க பங்கு என்ன?
அதிகாரி: எங்க பக்கமும் ஒரு சின்ன தப்பு நடந்திருக்கு. எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகளில் நாங்கள் காவல்துறையினர் தான் ரொம்ப கவனமா இருக்கணும்.

காட்சி 6
அதிகாரியின் வீடு. ஹாலில் வீட்டுக்காரம்மா சோபாவில் இருந்தபடி அழுது கொண்டிருக்கிறார். அழைப்பு மணி அடிக்கிறது. எழுந்து போய் முகத்தை துடைத்து விட்டு ஓட்டை வழி பார்க்கிறார். சுடிதார் அணிந்த ஒரு கல்லூரி மாணவி நிற்கிறாள். கையில் சில புத்தகங்கள் வைத்திருக்கிறாள். கதவைத் திறக்கிறார்.
கல்லூரி மாணவி: ஹலோ ஆண்டி
வீட்டுக்காரம்மா புன்னகைக்கிறார்.
கல்லூரி மாணவி: என் பேரு கார்த்திகா ஆண்டி. நான் கவிதாவோட கிளாஸ் மேட்.
வீட்டுக்காரம்மாவின் முகத்தில் பரிச்சய பாவம் தோன்ற சிரிக்கிறார்.
வீட்டுக்காரம்மா: ஆமா உன்னை பத்தி அவ சொல்லி இருக்கா. உங்க அப்பா கூட ஏதோ ஆடிட்டர்னு சொன்னா.
கல்லூரி மாணவி: ஆமா ஆண்டி. நாங்க பக்கத்துல புளூ வேலி அப்பார்ட்மெண்ட்ஸில தான் இருக்கோம். இது கவிதாவோட புக்ஸ். அவ இல்லியா?
வீட்டுக்காரம்மா: ஐயோ இப்பத் தாம்மா வெளியே போனா. இங்கே ரொம்ப களேபரமா இருந்திச்சா அதான் கோவிச்சிட்டு பைக் எடுத்து வெளியே போயிட்டா. நீ கேள்விப்பட்டிருப்பியே?
கல்லூரி மாணவி: இல்லியே ஆண்டி. என்ன?
வீட்டுக்காரம்மா: டி.வி பார்க்கலியாம்மா நீ? நியூஸ்ல ஒரு திருடியை அரெஸ்ட் பண்ணினது, ஒரு வீட்டுப் பொம்பளை தைரியமா போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுத்தது பத்தி காட்டினாங்களே அதை நீ பார்க்கல?
கல்லூரி மாணவி: இல்லியே ஆண்டி.
வீட்டுக்காரம்மா: அதுவும் நல்லது தான். எல்லாம் வீணாப் போச்சு. நல்லவங்களை பார்த்தா கெட்டவங்களா தெரியுது. கெட்டவங்களைப் பார்த்தா நல்லவங்களா தெரியுது. நாமளா துணிஞ்சு ஏதாவது நல்லது பண்ண நினைச்சா அதுவே நமக்கு பாதகமா போயிடுது. அதாம்மா இந்த நகரத்துல பெரிய தப்பு ஏதாவது கண்ணு முன்னாடி நடந்தா கூட யாரும் கண்டுக்காம போயிடுறாங்க. எதுக்கு வம்புன்னு நினைக்கிறாங்க. அதுவும் சரி தான். நானும் சந்தேகம் தோணினதும் எதுக்கு வம்புன்னு கதவை திறக்காமலே விட்டுருக்கணும். எனக்கு தேவையா சொல்லு?
கல்லூரி மாணவி: நீஙக் என்ன சொல்றீங்கன்னே புரியல ஆண்டி.
வீட்டுக்காரம்மா: சாரிம்மா. நான் இப்பிடித் தான் லொடலொடன்னு பேசுவேன். எதை சொல்லக் கூடாதோ அதை சொல்லுவேன். எதை சொல்லணுமே அதை சொல்ல மறந்திடுவேன். நீ உள்ளே வாம்மா
கல்லூரி மாணவி: இல்ல வேண்டாம் ஆண்டி. ஆக்சுவலி நான் இப்போ தான் லைப்ரரியில இருந்து வரேன். இது உங்க பொண்ணோட கார்டில எடுத்த புக்ஸ் கொடுத்திட்டு போலாமுன்னு வந்தேன். லேட்டாச்சு நான் வீட்டுக்கு கிளம்பிறேன். நீங்களே கவிதா கிட்ட கொடுத்திடுறீங்களா?
வீட்டுக்காரம்மா: உன்னை பத்தி என் பொண்ணு நிறைய சொல்லி இருக்காம்மா. உன்னை உள்ளே கூப்பிடாம அனுப்பிட்டேன்னு தெரிஞ்சா என்னை திட்டுவா. உள்ளே வாம்மா.
கேட் திறக்கப்பட கல்லூரி மாணவி உள்ளே நுழைகிறாள்.
வீட்டுக்காரம்மா: உட்காரும்மா
உட்காருகிறாள். அவள் அருகே சோபாவில் வீட்டுக்காரம்மாவும் உட்காருகிறார். அப்பெண்ணின் முகவாயைத் தொட்டு சொல்கிறார்: உன்னைப் பார்க்கிறதுக்கு அப்பிடியே என் தங்கச்சி பொண்ணு மாதிரியே இருக்கும்மா
கல்லூரி மாணவி வெட்கப்பட்டுக் கொண்டே: அப்பிடியா ஆண்டி
வீட்டுக்காரம்மா: உங்க சொந்த ஊரு எதும்மா?
கல்லூரி மாணவி: திருநெல்வேலி பக்கம்
வீட்டுக்காரம்மா: அங்கே எங்கே?
கல்லூரி மாணவி: சங்கரங்கோயில் பக்கமா
வீட்டுக்காரம்மா: எங்க குடும்ப வீடு கூட அந்த பக்கம் தாம்மா. உங்க அப்பா குடும்பம் அங்கே தான் இருக்குதா?
கல்லூரி மாணவி: ஆமாம் ஆண்டி. எங்க அப்பாவோட ஊரு அது. எங்க தாத்தா பேரு ராகவன். அவர் அங்கே போஸ்ட் மாஸ்டரா இருந்தார்.
வீட்டுக்காரம்மா: ராகவன்கிற் பேரு கேள்விப்பட்டா மாதிரி தான் இருக்கு. நீ எங்க ஆளுங்கங்கிறது முகராசி பார்த்தாலே தெரிதும்மா
கல்லூரி மாணவி வெட்கப்படுகிறாள்.
வீட்டுக்காரம்மா: பேரு என்னம்மா சொன்னே?
கல்லூரி மாணவி: கார்த்திகா.
வீட்டுக்காரம்மா: ஓ சரி. ஏம்மா நீ கவிதாவுக்கு நல்ல பிரண்டு தானே.
கார்த்திகா: ஆமா ஆண்டி. ஏன் கேட்குறீங்க?
வீட்டுக்காரம்மா: நீ அவளை கொஞ்சம் அட்வைஸ் பண்ணக் கூடாதாம்மா. நான் எது சொன்னாலும் கேட்கிறதுல்ல. எதுத்து எதுத்து பேசுறா. சாயந்தரம் வீட்டுக்கு வந்ததும் உட்கார்ந்து படிக்கிறதுல்ல. போனை தூக்கிக்கிட்டு மொட்டை மாடிக்கு போயிடுறா. அங்கே போய் பார்த்தா யார் கிட்டயோ அப்பிடி அரட்டை. நான் பக்கத்துல போனா கட் பண்ணிடுறா. பெத்த அம்மாவுக்கு தெரியக் கூடாத என்ன விசயம் அவ போன்ல பேசணும் சொல்லு?
கார்த்திகா: எனக்கு தெரியல ஆண்டி. ஆனா அவ நல்ல பொண்ணு ஆண்டி. கிளாசில எங்க்ளுக்கு எல்லாருக்கும் அவளை ரொம்ப பிடிக்கும். புரொபஸர்ஸுக்கும் அவ பெட் தான்.
வீட்டுக்காரம்மா: அதெல்லாம் சரி தாம்மா. சமர்த்து தான். ஆனால் சொல்பேச்சு கேட்கணுமே. இப்போ உன்னை பாரேன் எவ்வளவு அழகா துப்பட்டாவால கவர் பண்ணி இருக்க. பார்க்க டீஸெண்டா இருக்கு. அவளைக் கேட்டேன்னா துப்பட்டாவை கழுத்தில சுத்திக்கிட்டு போகிறா. பார்க்கிறவங்க தப்பா தானே நினைப்பாங்க சொல்லு. ஒரு அம்மாவான எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் யோசிச்சு பாரு?
கார்த்திகா: அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஆண்டி. உங்களைப் பத்தி ரொம்ப பிரியமா பேசுவா.
வீட்டுக்காரம்மா: நிஜமாவா? என்னவோம்மா நான் சொல்றது எதுவும் கேட்கிறதுல்லே. எரிஞ்சு எரிஞ்சு விழறா. இந்த வீட்டுல நான் வெறும் ஒரு வேலைக்காரி தானே. நான் சொல்றது யாரும் மதிக்கிறதில்ல. அவ அப்பாவும் எப்பவும் வேலை வேலைன்னு இருக்கிறார். பொண்ணு எப்போ வரா என்ன பண்றான்னு அவரும் கவனிக்கிறதில்ல.
கார்த்திகா: அவள் நல்ல பொண்ணு ஆண்டி. நீங்க கவலைப்படாதீங்க
வீட்டுக்காரம்மா: அதில்லமா… உங்க கிளாஸில கார்த்திக்குனு ஒரு பையன் இருக்கானா?
கார்த்திகா: ஆமா ஆண்டி
வீட்டுக்காரம்மா: அவனே தாம்மா. எப்பவும் போன்ல அவன் கூடத் தான் பேச்சு. அன்னிக்கு ஒருநாள் அவன் அவளை பைக்கில கொண்டு வந்து டிராப் பண்றான். இவ அப்பா கிட்ட சொன்னா அது பெரிய பிரச்சனை ஆயிடும். நான் அம்மா இல்ல. என் பொண்ணை எப்பிடி மாட்டி விட முடியும்? அதுக்குன்னு அவள் தப்பு செய்யும் போது பார்த்திக்கிட்டு இருக்க முடியுமா? நீ தாம்மா அவ கிட்ட பேசணும். நீ அட்வைஸ் பண்ணினா அவ கேட்பா.
கார்த்திகா: சரி ஆண்டி நான் சொல்றேன்
வீட்டுக்காரம்மா: எதாவது சாப்பிடிறியாம்மா? ஜூஸ் எடுத்தாரவா?
கார்த்திகா: சரி ஆண்டி. எனக்கு லேட்டாகுது ஆண்டி. வீட்டில அம்மா தேடிக் கிட்டு இருப்பாங்க
வீட்டுக்காரம்மா: எவ்வளவு பொறுப்பா இருக்கே பாரு. என் பொண்ணும் இருக்கிறாளே. பைக்கை தூக்கிக்கிட்டு அவ பாட்டுக்கு கிளம்பியாச்சு. என்னை கூப்பிட்டு எங்க போயிருக்கிறா எப்போ வருவான்னு ஒரு வார்த்தை சொல்லலாமில்ல. ம்ஹும்
கார்த்திகா: ஆண்டி நான் ஒண்ணு சொல்லவா
வீட்டுக்காரம்மா: தாராளமா சொல்லுமா
கார்த்திகா: அவளுக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுக்காதீங்க. போனை புடுங்கி வச்சிருங்க. எங்க அம்மா எனக்கு போன் வாங்கி தரல. பைக்கும் இல்ல. பஸ்ல தான் போய் வரேன். எங்க அம்மா ரொம்ப ஸ்டிரிக்ட். ஆனா கவிதாவை நீங்க ரொம்ப லூஸா விட்டுடறீங்க ஆண்டி. அதான் தப்பு. உங்களை அட்வைஸ் பண்ணிற வயசு எனக்கு இல்ல. தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க
வீட்டுக்காரம்மா: நீ சரியா தான் சொல்றேம்மா. இனிமே அவ கிட்ட ஸ்டிரிக்டாவே இருக்கேன். இந்த வயசிலேயே எவ்வளவு முதிர்ச்சியா பேசுறே. நீ என் சொந்த பொண்ணு மாதிரிம்மா. இரு. இதோ வந்திடறேன்.
வீட்டுக்காரம்மா எழுந்து உள்ளே இருக்கிற சமையலறை நோக்கி செல்கிறாள். கார்த்திகா சுற்று முற்றும் பார்க்கிறாள். எழுந்து வாசல் நோக்கி போகிறாள்.

ஜூஸ் கோப்பையுடன் ஹாலுக்கு வரும் வீட்டுக்காரம்மா கார்த்திகா அங்கில்லை என கவனிக்கிறார். வாசற்கதவு திறந்து கிடக்கிறது. அருகே செல்ல கேட்டும் திறந்து கிடப்பதை கவனிக்கிறார். கார்த்திகா உள்ளே வந்த பின் தான் இரண்டையும் பூட்டியது நினைவில் வருகிறது. அவர் திகைத்து நிற்க பின்னிருந்து கார்த்திகாவின் கை அவர் மூக்கை ஒரு துணியால் பொத்திட அவள் தன் இன்னொரு கையால் அவரது கழுத்தை இறுக்குகிறாள். அவர் மயங்கி சரிகிறார். ஜூஸ் கோப்பை நழுவி விழுந்து நொறுங்குகிறது.
பின்னிருந்து சில ஆண்கள் வந்து அவர் கைகால்களை கட்டி போட்டு வாயை துணியால் கட்டுகிறார்கள். பிறகு அவர்கள் சேர்ந்து வீட்டை கொள்ளையடிக்க துவங்குகிறார்கள்.

2 comments:

Jana said...

மிக விறுவிறுப்பாக சென்றது அபிலாஷ்.. ஆனா முடிவு யூகிக்க கூடியதாகவே கடைசி வரை இருந்தது.. அப்படி இருக்காது இருக்காது என்று கடைசி வரை படிக்க வைத்ததே இப்புனைவின் வெற்றின்னு நினைக்கிறேன்.. good one...

அ.சந்தர் சிங். said...

நல்ல கதை.