Friday, August 7, 2015

தோனியின் சரிவும் அதன் அரசியலும்
போன ஆஸ்திரேலிய தொடரின் மத்தியில் தோனி டெஸ்ட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றது நினைவிருக்கும். அது பலரையும் வியப்பூட்டியது. ஓய்வுக்கு இரண்டு காரணங்கள் சொன்னார்கள். ஒன்று அவரது உடற்தகுதி. அடுத்து கோலியால் அணிக்குள் ஏற்பட்டிருக்கும் புகைச்சல். தற்போது வங்கதேசத்துடனான ஒருநாள் தொடரை இந்தியா மிக மோசமாய் இழந்திருக்கும் வேளையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ”வேண்டுமென்றால் ஒருநாள் அணியில் இருந்து தலைவராக பதவி விலகத் தயார்” என அறிவித்தார். இம்முறை தோனி மிக உணர்வுவயப்பட்டு பேசினார். “இந்திய அணியின் எல்லா தாழ்வுகளுக்கும் என்னையே குற்றம் கூறுகிறார்கள். நான் விலகினால் இந்திய அணி உருப்படும் என்றால் நான் தாராளமாய் விலகுகிறேன். சாதாரண வீரராக ஆடுகிறேன். நானாக இப்பதவியை நாடவில்லை. எனக்கு இப்பொறுப்பை அளித்தார்கள். முடிந்தளவு சிறப்பாய் செயலாற்றினேன். இப்போது அவர்கள் இப்பதவியை திரும்பப் பெற்றால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்றார்.
 தோனி கூறுவது சரியா, அவர் பதவி விலக வேண்டுமா என்கிற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும். தோனி ஏன் அப்படி பேசினார் என்பது அதை விட பிரதானமான கேள்வி. ஏனென்றால அவர் என்றுமே தன்னுடைய உணர்வுகளை பொதுவில் அலசி காயப்போடுபவர் அல்ல. தன் முடிவுகளை மீடியாவுடன் விவாதிப்பவர் அல்ல. இதை விட மிக அவமானகரமான தோல்விகளை நிதானமாய் ஏற்றுக் கொண்டவர் அவர். 2011 உலகக்கோப்பை முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய அணி பயணம் மேற்கொண்டு தோனி தலைமையில் 8 டெஸ்டுகளை ஆடி அனைத்தையும் கேவலமான முறையில் இழந்தது. அதே போல் தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்திலும் டெஸ்ட் தொடர்க்ளையும் இழந்தது. சொந்த மண்ணிலேயே இந்திய அணி இங்கிலாந்தால் மட்டம் தட்டப்படது. அப்போதெல்லாம் தோனி 2ஜி ஊழலில் மன்மோகன் சிங் போல் புன்னகைப்பதோடு நிறுத்திக் கொண்டார். தோல்விகளை அவர் அநாயசமாய் தாங்கும் விதம் பாராட்டப்பட்டது. இந்திய அணி இத்தோல்விகளில் இருந்து மீண்டு தொடர்ந்து பல வெற்றிகளை குவித்ததும், உலகக்கோப்பை அரை இறுதி வரை சென்றதும் தோனியின் இந்த நிதானப்போக்கினால் என கோரப்பட்டது.
தோனி ஒரு பனிபொம்மை போல் கூலாக விளங்கினார். ஆனால் பனிபொம்மை உருகாமல் இருப்பதற்கு குளிரான சூழலும் ஒரு காரணம். எட்டு வருடங்களுக்கு மேல் அணித்தலைவராய் இருந்த தோனியின் ஆட்சிக்காலம் அசருதீன், சச்சின், கங்குலி, திராவிட் ஆகியோரின் காலங்களோடு ஒப்பிடுகையில் பாதுகாப்பாய் சிக்கலற்றதாய் தான் இருந்தது. தோனியைத் தவிர பிற தலைவர்கள் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள், தேர்வாளர்கள், அணியின் பயிற்சியாளர் ஆகியோருடனான முரண்பாடுகள் காரணமாய் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தார்கள். ஒரு தொடரை இழந்தாலே ஆளைத் தூக்கி விடும் அளவுக்கு அப்போதெல்லாம் அணித்தலைமை நூலாம்படையில் தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் தோனியுடன் அந்நிலைமை மாறியது. முதலில் தோனி தலைவர் ஆனதுமே தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த T20 உலகக்கோப்பையை வென்றார். அடுத்து மூத்த வீரர்களுடன் சுமூகமான உறவை தக்க வைத்தார். இது அவரை ஆரம்ப கட்டத்தில் ஸ்திரமாக இருக்க உதவியது. அடுத்து ஐ.பி.எல் அறிமுகமானதும் தோனி ஒரு மிகப்பெரும் நட்சத்திரம் ஆனார். சென்னை அணியின் தலைவர் ஆனார். சென்னை அணி முதலாளியான ஸ்ரீனிவாசனுடன் அவரது நெருக்கம் அவரை இந்திய கிரிக்கெட்டின் ஆக அதிகாரம் மிக்க மனிதராக்கியது. தோனி இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் தொடர்களை இழந்ததால் அவரை தலைமையில் இருந்து நீக்க தேர்வுக்குழு தலைவராக இருந்த மொஹிந்தர் அமர்நாத் முடிவெடுத்தார். ஆனால் இம்முடிவு எடுக்கப்பட்ட கூட்டம் முடியும் முன்னரே ஒரு தேர்வரால் ஸ்ரீனிவாசனுக்கு செய்தி சொல்லப்பட அவர் அமர்நாத்தை போனில் அழைத்து முடிவை மாற்றும்படி ஆணையிட்டார். இதைத் தொடர்ந்து அமர்நாத் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. இப்படி தோனி வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவராக மாறினார். அவர் ஆதரவு இருந்தால் எந்த வீரருக்கு அணியில் நீண்ட எதிர்காலம் இருக்கும் எனும் நிலை ஏற்பட வீரர்கள் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டனர். 2011 உலகக்கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வெல்ல தோனி சச்சினை விட பெரிய நட்சத்திரம் ஆனார். 2015 உலகக்கோப்பை வரை அவருக்கு தலைவராக நீடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனிடையே தோனி வெளிநாடுகளில் பல டெஸ்டுகளை இழந்தார். அவர் தலைமை மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராய் ஸ்ரீனிவாசன் நீடிக்கும் வரை தோனி இரும்பு மனிதராகவே இருந்தார். ஐ.பி.எல் சூதாட்ட வழக்கை ஒட்டி ஸ்ரீனிவாசன் தலைவர் பதவியை இழந்ததும் முதன்முதலாய் தோனியின் அதிகார வீச்சு சுருங்கியது.
 அப்போது தான் முதன்முதலாய் தோனியின் விருப்பத்தை மீறி பயிற்சியாளர் பிளட்சருக்கு அதிகாரம் செய்யும் முகமாய் ரவிசாஸ்திரி அணி இயக்குநராக நியமிக்கப்பட்டார். களத்தடுப்பு மற்று பந்து வீச்சு பயிற்சியாளர்கள் நீக்கப்பட்டு இந்தியர்கள் அப்பதவிகளில் நியமிகப்பட்டார்கள். பிளட்சரையும் உடனடியாய் நீக்காமல் தோனியும் நேரடியாய் மட்டம் தட்டாமல் தங்கள் அதிகாரத்தை காட்டுவதற்காய் கிரிக்கெட் வாரியத்தின் புது தலைவரான தால்மியாவின் அவரது குழுவினரும் செய்த காய்நகர்த்தல் இது. இந்நியமனத்தின் பின்னால் தோனிக்கு ஒரு மறைமுக சேதி விடுக்கப்பட்டிருந்தது. தோனி பிளட்சரை ஆதரித்து அறிக்கை விடுத்தார். சாஸ்திரியை மட்டம் தட்டி ஒரு பேட்டியில் “யார் வந்தாலும் நான் தான் அணியின் பாஸ்” என்றும் கூறினார். இப்படியெல்லாம் பேசக் கூடியவரல்ல தோனி. ஆனால் அதிகாரம் தன் வசமிருந்து நழுவதால் ஏற்பட்ட பதற்றம் அவரது நடவடிக்கைகளையும் மாற்றியது.
தோனி காயமுற்றார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் கோலி தலைமை ஏற்று சிறப்பாய் செயலாற்றினார். முதல் ஆட்டத்தில் நாம் தோற்றாலும் அவரது நேர்மறையான, ஆக்ரோசமான பாணி வெகுவாய் பாராட்டப்பட்டது. கோலிக்கு கிடைத்த ஆதரவு தோனியை மேலும் பதற்றமாக்கியது. அவர் இரண்டாவது போட்டியில் ஆடி விட்டு டெஸ்ட் வடிவில் இருந்தே ஓய்வு பெற்றார். அதாவது ஒரு தொடர் பாதியில் இருக்கும் போதே அணியை பாதியில் விட்டு விட்டு போனார். தனது உச்சபட்ச எரிச்சலையும் ஏமாற்றத்தையும் காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாய் தோனி இதனை பயன்படுத்திக் கொண்டார். இதனை அடுத்து தோனி 2015 உலகக்கோப்பையில் இந்தியாவை அரை இறுதி வரை அழைத்து சென்றாலும் கூட அதிகார நிலையில் அவர் திரிசங்கு சொர்க்கத்தில் தான் இருந்தார். கோலி டெஸ்டிலும் தோனி ஒருநாள் மற்றும் T20யிலும் தலைவர்களாய் மாறி அதிகாரத்தை அசௌகரிமாய் பங்கிட்டுக் கொண்டனர்.
நடந்து முடிந்த வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியில் கோலியின் தலைமை வெகுவாய் பாராட்டப்பட்டது. இதை அடுத்து வந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி தோனியின் கீழ் தடுமாற மீடியாவில் ஒப்பீடுகள் செய்யப்பட்டன. தோனியை விட கோலி இன்னும் ஆக்ரோசமாய் தலைமை தாங்குவதாய் கூறப்பட்டது. இன்னொரு புறம் இந்திய அணியின் பயிற்சியாளராய் சென்னை சூப்பர் கிங்ஸின் வீரர் மைக்கேல் ஹஸ்ஸியை நியமிக்குமாறு தோனி கோர அது நிராகரிக்கப்பட்டது. அவரது நண்பரான ஜடேஜா டெஸ்ட் அணியில் இருந்து கோலியால் நீக்கப்பட்டு, தோனியின் எதிர்கோஷ்டியை சேர்ந்த ஹர்பஜன் தேர்வு செய்யப்பட்டார். தோனிக்கு உவப்பற்ற வகையில் ரவிசாஸ்திரியின் அணி இயக்குநர் பொறுப்பும் நீட்டிக்கப்பட்டது. எதிர்காலத்தில் அவர் அணியின் பயிற்சியாளராகவும் மாறக்கூடும் என கூறப்படுகிறது. சாஸ்திரியின் நியமனத்துக்கு கோலியின் ஆதரவு முக்கிய காரணம். இந்த நிலையில் தான் ஒதுக்கப்படுவதாய் தோனி உணர்ந்ததன் வெளிப்பாடு தான் ஓய்வு பெறுவது குறித்த அவரது அறிக்கை.
எப்படி ஒரு குழந்தைக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கக் கூடாதோ அது போல ஒரு அணிக்கு இரு தலைவர்கள் இருப்பதும் நல்லதல்ல. யாருக்கு விசுவாசமாய் இருப்பது என வீரர்கள் குழப்பமடைவார்கள். அணிக்குள் தோனிக்கு தோதான சூழல் இல்லாமல் அவர் நொந்து போயுள்ளதாய் அவரது முன்னாள் பயிற்சியாளர் சமீபத்தில் தெரிவித்தார். எந்த முடிவையும் உடனடியாய் எடுக்காமல் தொடர்ந்து தள்ளிப்போடும் தற்போதைய கிரிக்கெட் வாரியத் தலைமை தான் இச்சிக்கல்களுக்கு முக்கிய காரணம். தோனி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற உடனே அவரை 2015 உலகக்கோப்பையுடன் ஒருநாள் வடிவில் இருந்தும் ஓய்வு பெறுமாறு வாரியத்தலைவர் கூறியிருக்க வேண்டும். அப்போது தான் 2019 உலகக்கோப்பைக்காய் அணியை தயாரிக்க கோலிக்கு முழுக்க 4 வருடங்கள் கிடைக்கும். இப்போதுள்ள நிலையில் தோனி அடுத்த வருடம் நிகழ உள்ள T20 உலகக்கோப்பையுடனோ அல்லது அதற்கு அடுத்த வருடம் நடக்கவுள்ள சேம்பியன்ஸ் கோப்பை தொடருடனோ ஓய்வு பெறக் கூடும் என கூறப்படுகிறது. இது அணிக்குள் மேலும் குழப்பத்தையும் பிரிவினையையும் தோற்றுவிக்கும்.
 குரங்கிடம் எப்போதும் அப்பத்தை பங்கிடக் கொடுக்கக் கூடாது. அதே போல் தோனியிடமும் தலைமையில் இருந்து ஓய்வு பெறும் நாளை தானே முடிவெடுக்கும் அதிகாரத்தை கொடுக்கக் கூடாது. தேர்வுக்குழு தலைவரோ வாரியத்தலைவரோ எடுக்க வேண்டிய முடிவு அது. இந்திய அணி தோனியின் தனிசொத்து அல்ல.
நன்றி: ”வெற்றிவேந்தன்”, ஜூலை 2015

No comments: