Thursday, August 6, 2015

மிஷ்கினின் மன உலகம்மிஷ்கினுடன் தனிப்பட்ட முறையில் பேசுகையில் மீடியாவில் உள்ள பிம்பத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மனிதர் என்பதை கவனித்தேன். முதிர்ச்சியானவர். ஆழமான பார்வை உள்ளவர். மிக மிக குறைவாய் பேசுகிறார். நிறைய கவனிக்க விரும்புகிறார். சினிமாவை கோட்பாட்டு ரீதியாய் விளக்குவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. எந்த ஒரு படைப்பையும் பார்க்கும் போது அல்லது வாசிக்கும் போது அதனை உள்வாங்கி தன் கற்பனை மூலம் உருமாற்றி மற்றொன்றாக்க நினைக்கிறார். நம்மூர் புத்திஜீவிகள் சிலர் இதை திருட்டு என தவறாய் புரிந்து கொள்கிறார்கள்.
அதனால் அவர் பல புத்தகங்களை முதல் சில அத்தியாயங்கள் படிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார். அவருக்கு அதில் கிடைக்கும் ஐடியாக்கள், மன ஊக்கம், நிறங்கள், வாசனைகள் போதும். சினிமாவையும் அப்படித்தான் பார்க்கிறார்.  
ஏதாவது ஒரு படத்தின் காட்சியை கவனித்து தன் படைப்புலகின் பகுதியாக்கும் ஒரு ஆவல், குழந்தைத்தனமான வேட்கை அவரிடம் உள்ளது. ஒரு வாசகராக, பார்வையாளராக இலக்கியத்தையோ சினிமாவையோ அவர் பார்ப்பதில்லை. படைப்பாளியாக தன் கதையை உருவாக்கும் முனைப்புடனே பார்க்கிறார். தர்க்கரீதியாய் சிந்திப்பதற்கு முற்றிலும் எதிரானவர். உணர்வுரீதியாய் தான் கவனித்தவற்றை ஆழமாய் நம்புகிறார். அதுவே அவர் உலகம்.

உணர்வுரீதியாய் அவரிடம் தாக்கம் செலுத்திய ஒரு ஷாட் அல்லது காட்சி படிமம் அல்லது ஒரு வரி அவருடையதே என நம்பி விடுவார். இதில் போலித்தனம் இல்லை. அவரது மன அமைப்பு அது. ஒருமுறை மட்டுமே அவரிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அவரது படங்களில் நவீன நாடகங்களின் தாக்கம் உள்ளதென சொன்னேன். அவர் அதை மறுத்து சினிமாவில் அப்படியான பார்வையே தவறு என என்னிடம் விளக்கினார். எதையொன்றும் தனித்தனியாய் பிரித்து பார்க்கக் கூடாது என நினைக்கிறார். வகுக்க முடியாத ஒரு ஒட்டுமொத்த உண்மை என வாழ்க்கையையும் படைப்புலகையும் சினிமாவையும் பார்க்கிறார். அன்று முழுக்க இந்த பார்வையை ஒட்டி அவரிடம் மோதிக் கொண்டு இருந்தேன்.

சில படைப்பாளிகளிடம் மன அலைகழிப்பையும் உக்கிரத்தையும் தன்முனைப்பையும் மிகுதியாக பார்த்திருக்கிறேன். ஆனால் மிஷ்கினிடம் ஒரு புரிதலையும் முதிர்ச்சியின் மென்மையையும் கண்டேன்.

அதே போல புத்தகம் வாசிப்பவர்கள் மீது அவர் கொள்ளும் வியப்பும் மரியாதையும் அச்சரியமானது. நான் எழுத்தாளர்களிடம் கூட வெறும் அகந்தையை தான் பார்த்திருக்கிறேன். மிஷ்கினின் தர்க்கத்துக்கு எதிரான பார்வை அவரது ஜென் ஆர்வத்தினால் தோன்றியதாக இருக்க வேண்டும். ஏனென்றால் தன் பார்வையை வலியுறுத்த அவர் வாதிடுவதில்லை.ஒரு அனுபவத்தை முன்வைக்கிறார். அவ்வளவே!

அறைமுழுக்க புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார். புத்தகங்களோடு இருப்பதும் அவற்றை பார்ப்பதும் தொடுவதும் கூட அவருக்கும் போதும். ஏற்கனவே நான் சொன்னது போல் அவர் ஒரு வாசகராக புத்தக உலகினுள் நுழைவதில்லை. புத்தகங்கள் அவருக்கு அவர் படங்களில் வரும் prop போல. ஏனென்றால் ஜென்னும் நம்மை வாசிப்பதை குறைத்து உணர்வு ரீதியாய் உலககை கவனிக்கவே கேட்கிறது.

வரும் சனிக்கிழமை மாலை கோகலே ஹாலில் அவர் சினிமா பற்றி பேச இருக்கிறார். அது பொதுவாக சினிமா பற்றியதாக அல்லாமல், தன் கலைப்பார்வை மற்றும் படைப்புலகத்தின் உருவாக்கத்திற்கு உலக சினிமாவை எப்படி பயன்பட்டது என்பதாக இருக்கும் என ஊகிக்கிறேன். முடிவில் நாம் சினிமாவை விட அவரைப் பற்றியே அதிகம் தெரிந்து கொள்வோம். அதுவும் ஒரு நல்ல பாடம் தான்.

No comments: