Wednesday, August 26, 2015

சுஜாதாவின் “விருப்பமற்ற திருப்பங்கள்”Image result for சுஜாதா

இன்று ஒரு வேலையை முடித்து விட்டு கோட்டூர்புரம் வழியாக திரும்பிக் கொண்டிருந்தேன். களைப்பு, கசப்பு, லேசாய் பின்மண்டையில் குடைச்சலாய் ஒரு வலி. கொஞ்ச நேரம் படிப்போம் என அண்ணா நூலகம் போனேன். மூடுவதற்கு ஒரு மணிநேரம் இருந்தது. அதற்குள் படிக்க தோதாய் சுஜாதா நாவல் ஒன்றை எடுத்தேன். தலைப்பு என்னை கவர்ந்தது “விருப்பமற்ற திருப்பங்கள்”. ஒருமாதிரி ஆங்கில சாயல் தொனிக்கிறது. ஆங்கிலத்தில் இன்னும் நளினமாய் இருக்கும். Unwanted Twists. எவ்வளவு அழகாய் உள்ளதல்லவா!

கீழ்மத்திய வர்க்கத்தை சேர்ந்த ஒருவன் – அப்பாவியான நன்றாய் படித்து மேலே வர வேண்டியவன் – எப்படி சந்தர்ப்பவசமாய் குற்றவாளியாகிறான் என்பது கதையின் ஒற்றை வரி. அந்த ஆளே கதை சொல்வதாய் அமைந்திருக்கிறது. புனைவில் சுஜாதாவின் முக்கிய பலவீனம் வட்டார வழக்கு. அவருக்கு பிராமண பாஷை தவிர பெரும்பாலும் வேறு வழக்குகள் வராது. சென்னைத் தமிழை ஓரளவுக்கு சமாளிப்பார். ஆனால் வசனங்களீல் அவர் கொண்டு வரும் அன்றாட வாழ்க்கை பற்றின சின்ன சின்ன குறிப்புகள் மூலம் இக்குறையை ஓரளவுக்கு நிவர்த்தி பண்ணி விடுவார். இதிலும் பிரதான பாத்திரம் பேசும் போது அங்கங்கே ஸ்ரீரங்கத்து அம்பி எட்டிப் பார்க்கிறார்.
ஒரு சின்ன விசயம், அது மட்டும் வேறு மாதிரி நடந்திருந்தால் வாழ்க்கை வேறாய் இருந்திருக்கும் என நமக்குத் தோன்றும். இந்நாவலின் கதைசொல்லி பரீட்சையின் போது ஒரு நண்பனுக்கு சொல்லித் தர ஒரு துண்டித்தாளில் ஒரு கணக்கை எழுதுகிறான். பிறகு அதை எதேச்சையாய் சட்டைப்பையில் போட்டுக் கொள்ள பரீட்சை ஹாலில் மாட்டிக் கொண்டு ஒருவருடம் தடை செய்யப்படுகிறான். அடுத்தடுத்து விபத்துகளில் அவன் தன் அம்மாவை இழந்து, ஒரு குற்றவாளிக் குழுவில் இணைந்து தவிர்க்க இயலாத போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி குற்றத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கிறான். அவன் நண்பர்கள் அவன் வேலையாளாய் இருக்கும் வீட்டில் கொள்ளையடிக்க முடிவெடுக்கிறார்கள். ஒவ்வொரு முறை அவன் குற்றம் பற்றி தன் முதலாளியம்மாவிடமும் அவர் மகளிடமும் சொல்ல முனையும் போது ஏதோ ஒரு தடை வருகிறது. கொள்ளையின் போது அம்மாவும் மகளும் அங்கு இல்லாமல் இருந்தால் அவர்கள் கொல்லப்படுவதில் இருந்து தப்பிக்கலாம் என நினைக்கிறான். அவர்கள் சினிமாவுக்கு போகும் போது வந்து கொள்ளையடிப்பதற்கு நண்பர்களுக்கு தகவல் சொல்கிறான். அப்போது கூட ஒரு திருப்பம். அவனிடம் அடிக்கடி கிளுகிளுப்பாய் பேசும் வேலைக்கார பெண்ணிடம் அவன் அன்று உறவு கொள்ள கேட்கிறான். அவள் எதிர்பாராத விதமாய் பத்தினி வேடம் போடுகிறாள். தன் கணவனிடம் புகார் சொல்லி அவனை அடுத்த நாள் பிரச்சனையில் மாட்டி விடப் போவதாய் மிரட்டுகிறாள். அவனுக்கு உடனடியாய் தன் நண்பர்களை வரவழைத்து கொள்ளையை முடித்து அந்த இடத்தில் இருந்து தப்பிக்கும் நெருக்கடி பிறக்கிறது. நண்பர்கள் வந்து கொள்ளையடிக்கும் போது அம்மாவும் மகளும் சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்புகிறார்கள். வேறுவழியின்றி அவன் நண்பர்கள் இருவரையும் கொல்கிறார்கள். இப்படி அவன் என்ன தான் முயன்றாலும் ஒன்றுக்கு பின் ஒன்றாய் திருப்பங்கள் நேர்ந்து குற்றத்தில் இருந்து தப்பிக்க முடியாதபடி ஆகிறது. ஒருவேளை இது தான் அவர்கள் மற்றும் தனது விதியோ என நினைக்கிறான். இந்த இடம் எனக்கு “குற்றமும் தண்டனையும்” நாவலில் ரஸ்கோல் நிக்கோவ் வட்டிக்கடை முதலாளியம்மாவை கொல்லுவதற்கு திட்டமிட்டு பின் சந்தர்ப்பவசமாய் அதை தவிர்க்க முடியாமல் நடத்தும்படி அமைவதாய் வரும் காட்சிகளை நினைவுக்கு கொண்டு வந்தன. ஒரு காட்சியில் ரஸ்கோல் நிக்கோவ் அவளை கொல்ல வேண்டாம் என முடிவெடுத்து மனம் போன போக்கில் நடப்பான். ஆனால் அவன் எதிர்பாராமல் வட்டிக்கடை முதலாளியம்மாவின் வீட்டு முன் போய் நின்றிருப்பான். தன் விதி தன்னை அங்கு கொண்டு சேர்த்ததோ என நினைப்பான். என்ன தான் அவன் முயன்றாலும் ஏதோ ஒரு சக்தி அவனை அந்த கொலை செய்ய வைத்து விடும். ஆனால் ஒப்பீட்டளவில் பார்த்தால் “குற்றமும் தண்டனையும்” நாவலில் தத்துவ, உளவியல் வீச்சு சுஜாதாவின் இந்நாவலில் இல்லை.
இன்னும் கொஞ்சம் அவர் மெனக்கெட்டிருந்தால் அபாரமாய் வந்திருக்க வேண்டிய நாவல் இது. அவரது பெரும்பாலான நாவல்கள் தொடர்கதைகளாய் எழுதப்பட்டவை என்பதால் group orgy போல ஒரே நேரத்தில் நான்கைந்து கதைகளை எழுதிக் கொண்டிருப்பாராம். அதனால் போதுமான கவனத்தையும் அவரால் கதைக்கு அளிக்க முடிவதில்லை.
இது போன்று கீழ்மட்டத்தில் இருந்து வருகிற ஆட்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்களாக இருப்பார்கள். ஆனால் சுஜாதாவின் மொழி உணர்ச்சியை சுலபத்தில் காட்டாத நவநாகரிக மத்தியவர்க்க மனதுக்கு பொருத்தமானது. கீழ்த்தட்டு கதைசொல்லிக்கு சுஜாதாவின் வழக்கமான அடங்கலான தொனி உதவவில்லை. அது போல அவன் தான் குற்றத்தை வேண்டுமென்றே செய்யவில்லை என தொடர்ந்து வற்புறுத்தும் இடங்களில் ஒரு நகைமுரணை கொண்டு வந்திருக்கலாம். இவையெல்லாம் நாவலை இன்னும் அடர்த்தியாக்கி இருக்கும்.
கதைசொல்லி தன் நண்பர்கள் உத்தேசிக்கும் கொள்ளை ஒரு குற்றம் என நினைத்தாலும் நண்பர்கள் அவனுக்கு அறிமுகப்படுத்துகிற கஞ்சா போதைக்காக அவன் வேறுவழியின்றி அக்குற்றத்துக்கு உதவுவதாய் சுஜாதா சித்தரிக்கிறார். இது நம்பும்படியாய் இல்லை. கஞ்சா வேண்டுமென்றால் நகரத்தில் அதை அடைய எவ்வளவோ இடங்கள் உள்ளன. அதற்காய் அவன் ஒரு பெரிய குற்றம் செய்ய வேண்டியதில்லை. இதற்கு பதிலாய் அவன் வேலை செய்கிற அந்த பணக்கார வீட்டில் அவன் அடையும் ஏமாற்றங்கள், அவமானங்கள், எரிச்சல்கள், வாழ்க்கை நெருக்கடிகள் அவனை எப்படி குற்றத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு நகர்த்துகின்றன என காட்டி இருக்கலாம்.
பகவான் இந்த நாவலில் மிகவும் சுவாரஸ்யமான பாத்திரம். அவன் ஒரு இடதுசாரி. அறிவுஜீவி. முதலாளித்துவ எதிர்ப்பு என்பது தான் அவன் செய்கிற குற்றத்தின் முகாந்திரம். சோற்றுக்கு வழியில்லாமல் எளிய மக்கள் தவிக்கிற போது சினிமா, முகக்களிம்பு, ஆடம்பரம், உயர்தர உணவு, விலைமதிப்பான ஆடை, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்காய் சில பணக்காரர்கள் பணத்தை அள்ளி இறைப்பது நியாயமா என கேட்கிறான். மிகுதியாய் பணம் இருக்கிற இடத்தில் இருந்து எடுத்து பணம் சற்றும் இல்லாத அடித்தட்டு மக்கள் வாழ்கையை அனுபவிப்பதற்கு பயன்படுத்தப் போகிறோம். அதில் என்ன தவறு எனக் கேட்கிறான். இவை எல்லாம் நியாயமான கேள்விகளாய் பட்டாலும் முழுக்க நியாயமல்ல. ஒரு கட்டத்தில் பகவான் தான் இந்த கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு என்ன செய்ய திட்டமிட்டுள்ளான் என விவரிக்கிறான். அவன் உலகம் முழுக்க பயணித்து புதுவிதமான உணவுகள், பெண்கள், அனுபவங்கள் ஆகியவற்றை அடையப் போகிறான். வாழ்க்கை குறுகியது. அது முடிவதற்குள் ஆசைப்படுவதை எல்லாம் அடைந்து விட வேண்டும் என்கிறான். ஆனால் இதையே தானே ஒரு பணக்காரனும் எண்ணி பகட்டாய் வாழ்கிறான். சோஷலிசத்தின் பெயரில் பணக்காரனிடம் இருந்து கொள்ளையடிப்பவனும் பணக்காரனின் இதே மனநிலையில் தான் இருக்கிறான் எனும் பகடியை ரசித்தேன். இதை சிலாகிக்கிற அதேவேளை இடதுசாரி சிந்தனை என்பதை பணக்காரனிடம் இருந்து பிடுங்கி ஏழைக்கு அளிப்பதல்ல என்பதையும் சொல்ல வேண்டும். சோஷலிஸம் மானிட சமத்துவத்தை கோரும் அறம் சார்ந்த சித்தாந்தம் தான். அது கொள்ளையடிக்கவோ கொலை செய்யவோ கோரவில்லை.