Wednesday, August 26, 2015

”கால்களும்” எம்.பில் பட்ட ஆய்வும்சுயதம்பட்டத்துக்காக அல்ல. சும்மா ஒரு தகவலுக்காய் சொல்கிறேன். என்னுடைய “கால்கள்” நாவலை நாகர்கோயிலில் உள்ள மூன்று கல்லூரிகளில் (ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, முஸ்லீம் ஆர்ட்ஸ் கல்லூரி மற்றும் லஷ்மிபுரம் கலைக்கல்லூரி) மூவர் எம்.பில் படிப்பு ஆய்வுக்காய் எடுத்துக் கொண்டுள்ளனர். மூவரும் பெண்கள். மூவருக்கும் கிட்டத்தட்ட ஒரே குரல், ஒரே வட்டார வழக்கு தொனி. போனில் மூவரும் என்னிடம் அடுத்தடுத்து பேசிய போது ஒருவேளை நம்மிடம் விளையாடுவதற்காய் யாரோ ஒரே ஆள் பல்வேறு பெயர்களில் பேசுகிறாரோ என எனக்கு சந்தேகம் தோன்றியது. ஆனால் வெவ்வேறு பெண்கள் தாம். 


ஊரில் ஆய்வு என்றால் எழுத்தாளனை பேட்டி எடுப்பது ஒரு வழக்கம். சென்னை பக்கமுள்ள கல்லூரிகளில் அந்த வழக்கமில்லை. மூவரும் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார்கள். பெரும்பாலும் ஒரே மாதிரியான கேள்விகள்.
“ஏன் நாவலை எழுதினீர்கள்?”, “விருது கிடைத்ததும் என்ன மாதிரி உணர்ந்தீர்கள்?”, “உங்கள் நாவல் சமூகத்தில் எப்படியான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது?”
வழக்கம் போல் நான் அவர்களுக்கு திருப்தியான பதில் அளிக்கவில்லை. விருது கிடைத்தது என்னை நிம்மதியற்றவனாக ஆக்கியது என்ற போது ஒரு பெண் இதென்ன அபத்தம் என்கிற மாதிரி எதிர்வினை செய்தார். நான் அவருக்கு விளக்கினேன். ஒரு எழுத்தாளனுக்கு அவன் படைப்பு மூலம் கவனம் கிடைப்பதே நல்லது. படைப்பு மூலம் மட்டுமே அவனை பிறர் அறிவது ஆரோக்கியமானது. வேறு எந்த வழியில் வருகிற வெளிச்சமும் செயற்கையானது, அது அவனுக்கு மகிழ்ச்சி அளிக்காது என்றேன்.
மூவரில் லஷ்மிபுரம் கல்லூரி மாணவி நாவலை அங்குலம் அங்குலமாய் வாசித்திருந்தார். நாவலில் உள்ள சில தகவல் பிழைகளை சுட்டிக் காட்டினார். பிரதான பாத்திரமான மது ஒரு கல்லூரி மாணவி. வகுப்பில் அவள் முதலாவதாய் வருவாள் என ஓரிடத்தில் வரும். பிறகு சண்முகம் எனும் ஒரு பாத்திரத்தை ஒரே ஒரு வரியில் குறிப்பிடுவேன். அப்போது அங்கு அவன் தான் வகுப்பில் முதலாவதாய் வரும் மாணவன் என்பேன். அதெப்படி இரண்டு பேர் முதல் மதிப்பெண் வாங்க முடியும் எனக் கேட்டார். உண்மையில் இந்த மதுவும் சண்முகமும் ஒரே ஆள் தான். அதாவது நான் தான் அது. என்னுடைய இரண்டு பக்கங்கள் இருவரும். அதனால் ரெண்டு பேர் பற்றியும் எழுதும் போது என்னையறியாமல் ஒரே மாதிரி வர்ணித்து விட்டேன். இதை இவர் சரியாக கண்டுபிடித்து விட்டார். நாவலில் வருகிற பல உப பாத்திரங்கள் ஊரில் உள்ள நிஜ மனிதர்கள். எழுதும் போது சரளத்துக்காய் நிஜ பெயர்களை பயன்படுத்தினேன். ஆனால் பின்னர் மாற்றி விட்டேன். அப்போதும் ஒரே ஒருவர் பெயரை மாற்ற மறந்து விட்டேன். அதையும் இவர் கண்டுபிடித்து விட்டார். நான் அவரிடம் அப்போது நாவலை கச்சிதமாய் எடிட் செய்ய அவகாசம் கிடைக்கவில்லை என்றேன். “ரசிகன்” நாவலை எட்டு முறையாவது படித்து திருத்தினேன். திருத்துவதில் இமையமும் உதவினார். அந்த சந்தர்ப்பம் “கால்களில்” அமையவில்லை. மேலும் ’உலக பிரசித்தமான’ பொன்னியின் செல்வனில் இல்லாத பிழையா? அதில் ஓரிடத்தில் ஒரு குகைக்குள் சிலர் தீவட்டியை ஏந்திக் கொண்டு முன்னே செல்வார்கள். ஆனால் பின்னால் வந்து கதைசொல்லுகிற ஆளுக்கு தீவட்டி வெளிச்சம் பட சாத்தியமில்லாத இருட்டான பகுதியில் நடப்பதெல்லாம் தெரியும். சுந்தரராமசாமியின் “புளிய மரத்தின் கதை” நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கி ஒரு பிரசித்தமான பதிப்பகம் மூலம் வெளியிட்டார்கள். அதில் கோயில் கொடையை umbrella என அபத்தமாய் மொழியாக்கி இருந்தார்கள். இமையத்தின் “பெத்தவன்” நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கி ஆக்ஸ்பர்ட் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் உள்ள பிழைகளைப் பார்த்தால் சிரிப்பு வரும். பொம்பளைங்க என்பதை girls என மொழியாக்கி இருப்பார். பம்புசெட்டை garage என போட்டிருப்பார். இப்படி மாதம் லட்சங்களில் சம்பளம் வாங்கும் எடிட்டர்கள் கொண்ட பெரும்பதிப்பகங்களே பிழைகளை செய்யும் போது தமிழில் ஒரு நாவலில் சில பிழைகள் வருவது தவிர்க்க இயலாதது தான். ஏனென்றால் இங்கு காப்பி எடிட்டர் என்று ஒருவர் நாவலில் வேலை செய்ய இருப்பதில்லை. போன முறை உயிர்மையின் சில நாவல்களை இமையத்தின் உதவியுடன் செம்மைப்படுத்தினார்கள். அது ஒரு நல்ல துவக்கம்.
அந்த மாணவி என்னிடம் என் நாவலில் எத்தனை ஊனமுற்றவர்கள் வருகிறார்கள் எனக் கேட்டார். நான் ஒரு நிமிடம் குழம்பிப் போனேன். இரண்டு பேர் என்றேன். அவர் இல்லை முப்பத்தைந்துக்கு மேல் ஊனமுற்றவர்கள் வருகிறார்கள் என்றார். என்னால் நம்ப இயலவில்லை. அவர் தான் கராறாய் குறிப்பெடுத்து உறுதிப்படுத்தியதாய் சொன்னார். அவரிடம் பேச ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் எனக்கு பதற்றமாகி விட்டது. முப்பத்தைந்து ஊனமுற்றவர்கள் இருந்தால் என் நாவல் எப்படி இருக்கும் என்றே என்னால் கற்பனை பண்ண முடியவில்லை. ஆனால் அவர் சின்ன பாத்திரங்களின் சில எளிய உடல் குறைபாடுகளை அவ்வாறு மொத்தமாய் குறிப்பிடுகிறார் என ஊகித்துக் கொண்டேன். எப்படியோ நாவலை மிகவும் கவனித்து படித்திருக்கிறாரே என மகிழ்ச்சியாய் இருந்தது. ”கால்கள்” நாவலில் ஒரு பரீட்சை வைத்தால் அவர் ஜெயித்து விடுவார். நான் தோற்று விடுவேன்.

No comments: