Wednesday, August 26, 2015

நண்பர் எச்.பீர் முஹம்மதுநண்பர் எச்.பீர் முஹம்மதை முதலில் நான் 15 வயதில் தக்கலையில் நண்பர் முஸ்தபாவின் புத்தகக் கடையில் வைத்து சந்தித்தேன். அவரைப் பற்றின முதல் நினைவே கையில் ஒரு ஆயிரம் பக்க ஆங்கில கட்டுரை நூலோடு அவர் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது தான். வெட்டி அரட்டையில் நேரம் வீணடிக்காமல் வாசிப்பில் தன்னை தொலைத்து விடுபவராக இருந்தார். தக்கலை கலை இலக்கிய பெருமன்றத்தில் பலருக்கும் அவர் மீது மிகுந்த வியப்பு இருந்தது. நிறைய படிப்பதானாலோ என்னவோ அன்று அவர் பேசும் போது புரிந்து கொள்ள சற்று குழப்பமாக இருக்கும் (ஆனால் இன்று அப்படி இல்லை). எங்கள் மன்றத்தில் அப்போது தமிழில் வெளிவருகிற கோட்பாட்டு நூல்களை, நவீன இலக்கியத்தை படிப்பவர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் கணிசமாய் ஆங்கிலம் வழி மேற்குலக அறிவியக்கங்களை அறிய முயல்பவராக பீர் மட்டுமே இருந்தார்.

 பீருக்கு அறிவு தான் முக்கியம். எங்கு கிடைத்தாலும் நாடி செல்வார். எப்போதும் போல் ஜெயமோகன் எங்கள் அமைப்புக்கு எதிர்முகாம் தான். ஜெயமோகனின் அரசியலுடன் முரண்பட்டாலும் பீர் ஜெயமோகனை சந்தித்து தத்துவம் பற்றி பேசுவார். புத்தகங்கள் வாங்கி வருவார். ஒருமுறை நண்பர் முஸ்தபாவுடன் அவர் பாலியல் ரகசியங்கள் பற்றி அறிவார்ந்த விவாதம் ஒன்று செய்து கொண்டிருப்பதை கவனித்தேன். எதையும் அனுபவ ரீதியாய் அல்லாமல் அறிவு மூலம் கண்டுபிடிக்கலாம் எனும் அபார தன்னம்பிக்கை அவருக்கு இருந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவர் அண்ணன் வெளிநாட்டில் இருந்து அவர் படிப்புக்கு அனுப்பின பணத்தை பூராவும் ஆங்கில கோட்பாட்டு நூல்கள் வாங்க செலவழித்து விட்டார். ஊருக்கு வந்து மூட்டை மூட்டையாய் தம்பி வாங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்ததும் அவருக்கு மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. புத்தகங்களை காப்பாற்றுவதற்காய் அவர் மூட்டை கட்டி நண்பர் என்.டி. ராஜ்குமாரின் வீட்டை கொண்டு வைத்ததாய் அறிந்து கொண்டேன். (இது பற்றின குறிப்பு ஒன்று என் “ரசிகன்” நாவலில் வருகிறது) பிறகு அவருக்கு உடனடியாய் வேலையை அடைந்து தன்னை ஸ்திரப்படுத்தும் நெருக்கடி ஏற்பட்டது. நான் அப்போது ஒரு சின்ன நிறுவனத்தில் கணினி படித்து வந்தேன். பீர் என்னை அழைத்து அங்கே வேலை கிடைக்குமா என கேட்க சொல்வார். தினமும் போன் செய்வார். அவருக்கு என்னால் உதவ இயலவில்லை. எனக்கு அது குறித்து மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. பிறகு அவர் வெளிநாட்டிற்கு வேலை சென்றார். பொருளாதார ரீதியாய் நிலைப்பெற்றார். அதேவேளை தொடர்ந்து நிறைய எழுதவும் செய்தார். அவரது கட்டுரைகளை தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். 15 வருடங்களுக்கு முன் ஜெயமோகனிடம் பேசும் போது அவர் ஒன்று சொன்னார் “பீரின் மொழி சற்று சிக்கலாய் உள்ளது. அதன் காரணம் அவர் தத்துவம் பற்றி எழுத முயல்பதே. தத்துவம் பற்றி எழுதுபவர்கள் அனைவருக்கும் ஆரம்பத்தில் நிறைய மொழிச்சிக்கல்கள் ஏற்படும். விரைவில் தெளிவான மொழியை பெற்று விடுவார்”. இன்று பீரின் மொழி வெகுவாய் மாறி விட்டது. ஊரில் கூச்ச சுபாவமான அறிவுஜீவியாய் இருந்தவர் இன்று சமூக வலைதளஙளில், மீடியாவில் எழுதுகிறவராய், டிவி விவாதங்களில் கலந்து கொள்கிறவராய் மாறி இருக்கிறார். தமிழகத்தில் அறிவுஜீவியாய் இருப்பது மரணக்கிணற்றில் பைக் ஓட்டுவது போன்ற காரியம். பீர் என்றுமே எனக்கு ஒரு ஊக்கமாய் இருந்திருக்கிறார். அவரது கட்டுரைத் தொகுப்பான ”நீண்ட சுவர்களின் வெளியே” வெளியாகும் இந்த வேளைகளை இந்நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வது அந்த ஊக்கத்தை பலமடங்காக்கத் தான்.

No comments: