Friday, August 21, 2015

கருணையும் சமூகமும்என்னுடைய தோழி என்னிடம் ஹைதராபாதில் உள்ள ஒரு கசாப்பு தொழிற்சாலை பற்றி சொன்னாள். அங்கு சட்டவிரோதமாய் கறி வெட்டப்படுவதால் அதைக் கண்டித்து மிருக உரிமைப் போராளிகள் போராடுகிறார்கள். அப்படி என்னதான் தவறு நடக்கிறது? மாடுகள் பல லாரிகளிலாய் நெருக்கி அடைக்கப்பட்டு தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகின்றன. வருகிற வழியிலேயே நெரிசல் தாங்காமல் சில செத்து விடும். மிச்ச மாடுகளை இறக்கினவுடன் ஒருவர் கோடாலியால் அடித்து கால்களை உடைத்து விடுவார்கள். ஏன்? அங்கு கொண்டு வரப்படும் மாடுகள் ஆரோக்கியமானவை. ஆனால் ஆரோக்கியமற்ற வயதான மாடுகளைத் தான் கசாப்பு செய்ய வேண்டும் என்பது விதிமுறை. இவ்விதிமுறையை வளைக்கும் பொருட்டு மாடுகள் ஊனமாக்கப்படுகின்றன. ஊனமானதும் ஒரு அரசு மருத்துவ அதிகாரி வந்து அவை கசாப்புக்கு தகுதியானவை தான் என சான்றிதழ் அளிப்பார்.
 அடுத்து இம்மாடுகள் தொழிற்சாலைக்குள் தானியங்கி பெல்ட்டில் வைத்து தள்ளிக் கொண்டு செல்ல கொதிக்கும் நீர் அவற்றின் மீது பீய்ச்சியடிக்கப்படுகிறது. கசாப்பு செய்தவுடன் மாடுகளின் தோல் இறுகி விடும். இறுகினால் தோலை பதனப்படுத்தி கைப்பை போன்ற பொருட்கள் செய்ய பயன்படுத்த முடியாது. இறுதியில் அவை ஒரு பெரும் சுத்தியால் மண்டை உடைக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. இவை அனுபவிக்கும் வேதனையும் கொடுமையும் பீதியும் நிர்கதியும் மனிதர்கள் எங்காவது அனுபவிக்கிறார்களா? எந்த குற்றமும் செய்யாத பிராணிகளை இவ்வாறு வதைக்கலாமா? இக்கேள்விகளை தோழி என்னிடம் கேட்டாள்.


நான் சொன்னேன். நிச்சயம் தவறே. பிராணிகளை வதைக்காமல் வேண்டுமென்றால் கசாப்பு பண்ணலாம். அவள் கேட்டாள்: “ஏன் கசாப்பு செய்யாமல் விடக் கூடாதா? உன்னுடைய தட்டில் இருக்கும் சுவையான மாட்டுக்கறி அல்லது சிக்கன் வறுவல் ஒரு உயிரின் வேதனையின் வடிவம் என நீ உணர மாட்டாயா? உனக்கு குற்றவுணர்வு தோன்றாதா?”
நான் சொன்னேன் “எனக்கும் சாப்பிடும் போது குற்றவுணர்வு சற்றும் தோன்றாது. அது அடிப்படையான மனித இயல்பு. பல அநீதிகள் நிகழ அனுமதித்து அதனால் பயன்பெற்றுத் தான் மனிதர்கள் வாழ்கிறார்கள், வளர்கிறார்கள். சில குறிப்பிட்ட அநீதிகளைக் கண்டு கண்மூடுவதே மனித இயல்பு. இந்த இயல்பு தான் மனிதனை பைத்தியம் பிடிக்காமல் நிம்மதியாய் வாழச் செய்கிறது”.
என் தரப்பை நான் அவளுக்கு விளக்கினேன். சில அநீதிகளை பட்டியலிட்டேன். அவை மாடுகளின் வதைக்கு சமானம் அல்லவென்றாலும் அவையும் அநீதிகளே.
ஏஸி காரில் போகிறீர்கள். அப்போது நடைபாதையில் கிடந்து சமைத்து உண்ணும் மனிதர்களைக் கண்டு குற்றவுணர்வு அடைய மாட்டீர்கள். வெயிலில் வதங்கியும் நெரிசலில் பிதுங்கியும் பைக்கிலும் பேருந்திலும் பயணிப்பவர்கள் பற்றி வருந்த மாட்டீர்கள். ஒருமுறை அன்னைத் தெரசா கொல்கொத்தாவின் தெருவொன்றில் நோயுற்று படுத்திருந்த ஒரு மூதாட்டியைக் கண்டார். உடம்பெல்லாம் புண்கள் திறந்திருக்க ஈக்கள் மொய்த்தன. எறும்புகள் அவரது தேகத்தில் ஊர்ந்து போய் கடித்தன. அவருக்கு சொரணையே இல்லை. மயக்கம். சில நாட்களாகவே நடைபாதை ஓரமாய் படுத்திருக்கிறார். மக்கள் அவரை கடந்து போனபடி இருக்கிறார்கள். யாரும் அவரை கவனிக்கவோ உதவ முனையவோ இல்லை. எல்லாரும் நல்லவர்கள் தாம். சிலருக்கு நேரமும் உள்ளது. ஆனால் அவலமும் துன்பமும் உருவெடுத்து முன் வந்தால் அவர்கள் கண்மூடிக் கொள்வார்கள். அது தரும் நெருக்கடியும் கசப்பும் அவர்களுக்கு ஒவ்வாது. இதுவே அழகிய இளம் பெண் மயக்கமாய் ஆடை கலைந்து தெருவில் கிடந்தால் அவளைப் பார்க்க ஒரு கூட்டமே கூடும். சிலர் உதவக் கூட முன்வருவார்கள். இது மனித இயல்பு. அன்னைத் தெரசா இம்மூதாட்டியை கண்டவுடன் ஒரு ரிக்‌ஷாவில் வைத்து அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்கிறார். அங்கு அனாதைக் கிழவி என கருதி அவரை சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள மறுத்தனர். தெரசா அவர்கள் சிகிச்சைக்கு மூதாட்டியை எடுத்துக் கொள்ளூம் வரை தான் அவ்விடத்தில் இருந்து நகரப்போவதில்லை என்று விட்டு உட்கார்ந்து கொண்டார். ஒரு கட்டத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டனர். சில நாட்களில் அம்மூதாட்டி உடல் தேறி நன்றாக பேசும் நிலைக்கு வந்தார். இதனால் தெரசா மேலானவர் என்றும் மூதாட்டியை கவனிக்காத தெருவாசிகளும் வழிப்போக்கர்களும் கீழானவர்கள் என்றும் நான் கூறவில்லை. மனிதர்களின் துன்பம் மற்றும் அவலத்தை கவனித்து சேவை செய்யும் வண்ணம் தெரசா போன்றவர்கள் மனதளவில் மதத்தால் தயார் செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சேவை வழி தான் கடவுளை அடைய இயலும் என அவர் தீர்க்கமாய் நம்பினார். சீழிலும் குருதியிலும் தான் அவர் கர்த்தர் பரிந்துரைத்த மீட்பை கண்டார். ஒருவேளை ஒரு தொழிற்சாலை ஊழியர்களின் வேலை சம்மந்தப்பட்ட பொருளாதார பிரச்சனைகள் அன்னைத் தெரசாவின் கவனத்தை ஈர்க்காது. அவர்களை நினைத்து அவர் இரங்கப் போவதில்லை. ஆனால் அந்த இடத்தில் ஒரு தொழிற்சங்க போராளி அவர்களுக்காய் போராட முனைவார். அதேநேரம் இதே போராளி குஷ்டரோகி பற்றி சிந்தித்து கண்ணீர் மல்க மாட்டார்.
நம்முடைய மன அமைப்பு சிலவகை பிரச்சனைகளைக் கண்டு வருத்தம் கொள்ளவும் வேறு சில பிரச்சனைகளை பொருட்படுத்தாமல் விடும் படியும் இருக்கிறது. சாதிக் கொடுமைகளைப் பற்றி நிறைய பேசுகிறோம், படிக்கிறோம். நம்முடைய சாதியின் பண்பாடு, சடங்கு மற்றும் சாதி அடிப்படையிலான நம் உறவுகள் ஆகியவற்றை ஒவ்வொருவரும் தக்க வைக்கிறோம். இதன் மூலம் மறைமுகமாய் சாதி அமைப்பை ஆதரிக்கிறோம். இச்சாதி அமைப்போ அதை மீறுகிற இளவரசன் திவ்யாக்களை கொடூரமாய் கழுத்தை நெரிக்கிற போது நம்மில் கணிசமானோர் அதில் நமக்கு பங்கில்லை என நினைக்கிறோம். நாம் சாதி வெறியர்கள் இல்லை தாம். ஆனால் சாதி பங்கேற்பாளர்கள். நமக்கு சாதியினால் விளையும் நன்மைகளை கருதி ஒட்டுமொத்தமாய் அதன் அநீதிகளை பார்க்க மறுக்கிறோம்.
 மீண்டும் சொல்கிறேன். சாதிச் சடங்குகளை பின்பற்றுகிறவர்களோ சாதிக்குள் மணம் முடிக்கிறவர்களோ கெட்டவர்கள் அல்ல. அவர்களின் மன அமைப்பு சாதியின் தீமை பற்றி குற்றவுணர்வு கொள்ளாது இருக்கிறது. அவர்களே முயன்றாலும் சாதி குறித்து அவர்களால் உண்மையாய் குற்றவுணர்வு கொள்ள இயலாது. ஏனெனில் சாதியை தவிர்த்து அவர்களால் வாழ இயலாது. ஏனெனில் குற்றவுணர்வு கொள்ளுதல் அவர்களுக்கு பல சிக்கல்களை உண்டு பண்ணும். அதனால் அவர்களின் மனமே சாதிக் கொடுமைகளைக் கண்டு கண்மூடிக் கொள்கிறது. அதன் மூலம் உள்முரண்பாட்டை தவிர்க்கிறது. நிம்மதி அளிக்கிறது. பைத்தியம் பிடிக்காமல் காப்பாற்றுகிறது. (பெரியார் செயல்படவில்லையா எனக் கேட்காதீர்கள். அது வேறு விவாதம்)
இறுதியாய், நம் சமூகத்தில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வை எடுத்துக் கொள்வோம். இந்த ஏற்றத்தாழ்வு ஒரு விதத்தில் செயற்கையாய் ஏற்படுத்தப்பட்டது என்பது என் நம்பிக்கை. நீங்கள் மாதம் ஒரு லட்சம் சம்பளம் பெறுகிறவர் என வைத்துக் கொள்வோம். உங்கள் அலுவலகத்தில் உங்கள் சம்பளத்தில் பத்தில் ஒரு மடங்கு பெறுகிறவர்கள் இருப்பார்கள். அவர்கள் உங்களை விட தகுதி, திறமையில் குறைந்தவர்களாய் இருக்கும் அவசியம் இல்லை. பல நிறுவனங்களில் இப்படி குறைவாய் வாங்குகிறவர்கள் தாம் மிக அதிகமாய் வேலை செய்கிறவர்களாக, திறமையானவர்களாக இருக்கிறார்கள். ஏன் அதிகமாய் உழைக்கிறவர்களுக்கு குறைவாகவும், அவர்களை மேய்க்கும் எளிய வேலை செய்யும் ஒரு மேலாளருக்கு அவர்களை விட ஐந்து அல்லது பத்து மடங்கு சம்பளம் கொடுக்கிறார்கள்? ஒருவர் செய்கிற வேலையின் பொருளாதார மதிப்பைப் பொறுத்து தான் ஊதியம் தீர்மானமாகிறது என்றால் அதிகமாய் உற்பத்தி செய்கிறவனுக்கோ அல்லது முதலீடு செய்கிறவனுக்கோ அல்லவா அதிக சம்பளம் போக வேண்டும்? ஏன் நடுவில் இருக்கிற மேலாளர்கள் இவ்வ்ளவு வாங்குகிறார்கள்?
 ஒரே காரணம் அவர் கூடுதலாக வாங்கினால் தான் குறைவாக வாங்கும் கீழ்நிலை பணியாளர்கள் அவரை மதிப்பார்கள் என்பது. அதே போல் அவர்களின் சம்பளத்தை மேலாளர் அளவுக்கு ஓரளவுக்கு சமமாய் உயர்த்திப் பாருங்கள். மேலாளர் பதற்றமாகி விடுவார். அவருக்கு சுலபமாய் வேலை பார்க்க இயலாது போகும். சிங்கப்பூரில் பரோட்டா மாஸ்டர்களாக வேலை செய்கிற இந்தியர்ககள் லட்சக்கணக்கில் நம்மூர் மென்பொருள் பொறியாளர்கள் அளவுக்கு சம்பாதிக்கிறார்கள். இதே ஊதியத்தை இந்தியாவில் உள்ள பரோட்டா மாஸ்டர்களுக்கு கொடுத்தால் எப்படியான சமூக குழப்பங்கள் விளையும் என யோசித்துப் பாருங்கள்? பல வேலையிடங்களில் அதிகாரத்தை, படிநிலையை தக்க வைக்கும் பொருட்டு தான் மேல்நிலை ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தரப்படுகிறது. அவர்கள் கூடுதலான வசதிகளுடன் வாழ்க்கைத்தரத்துடன் வாழ்கிறார்கள். நல்ல வீட்டில் வாழ்ந்து காரில் பயணித்து தாராளமாய் செலவு செய்கிறார்கள். அவர்களின் செழிப்பை காணும் கீழ்நிலை சமூக மக்கள் அவர்களுக்கு மதிப்பளித்து அடிபணிகிறார்கள்.
 பொருளாதார மேம்பாடு எப்போதும் இவ்வாறு மட்டும் அமைவதில்லை தான். ஆனால் சிலரது பொருளாதார மேல்நிலைக்கு இப்படி வெறும் குறியீட்டு காரணம் மட்டும் உள்ளதும் உண்மை தான். அதாவது ஒருவர் சாலையில் செருப்பின்றி நடந்து போனால் தான் நீங்கள் காரில் போக முடியும். அவர் உங்கள் அளவுக்கு திறமையானவராகவும், உழைப்பாளியாகவும் இருக்கலாம். ஆனாலும் அவரும் நீங்களும் ஒரே சமூக நிலையில் இருக்க இயலாது. அப்படி உங்கள் இடத்திற்கு அவர் வருவதானால் மற்றொருவர் அவருக்கு பதிலாக சாலையில் செருப்பின்றி நடக்க வேண்டும்.
கல்லூரிப் பேராசிரியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். மாதம் 70,000, 80,000 கூட சம்பாதிக்கிறார்கள். மிக மிக குறைவான வேலை. நிறைய ஓய்வு நேரம். அதை வெட்டி அரட்டையிலும் அரசியலிலும் வீணடிப்பார்கள். திறமை என்று எடுத்துக் கொண்டால் அவர்கள் உங்களையும் என்னையும் விட எவ்விவத்திலும் மேல் அல்ல. அவர்களுக்கு இவ்வளவு அதிகமான சம்பளம் அளிப்பதற்கு அரசு கூறும் காரணம் தகுதி. தகுதியான ஆசிரியர்கள் உயர்வான சம்பளம் தந்தால் தான் வேலைக்கு வருவார்களா என்றால் அது உண்மை அல்ல. கற்பித்தல் ஒரு சேவை. அதை மனதார நேசிக்கிறவர்கள் தாம் சிறந்த ஆசிரியர்கள். நிறைய பணம் கிடைக்கிறதென்று அத்தொழிலை நோக்கி ஈர்க்கப்படுகிறவன் சிறந்த ஆசிரியனாக இருக்க எந்த அவசியமும் இல்லை. பெரும்பாலும் மிதமிஞ்சிய பணமும் வசதியும் தவறாகத் தான் பயன்படுகின்றன. தவறான ஆட்கள் தாம் அதை பயன்படுத்துவார்கள். அ.ராமசாமி செம்மொழி ஆய்வு அரங்குகளில் கட்டுரை படிக்கிறவர்கள் பற்றி தன் இணையதளத்தில் எழுதியுள்ள ஒரு பதிவில் பணத்துக்காய் பல ஆசிரியர்கள் குப்பையான தட்டையான ஆய்வுகளை தொடர்ந்து சமர்ப்பிப்பதை, இவர்கள் வருடத்திற்கு ஐநூறூக்கு மேல் தரமற்ற ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வாசிப்பதை குறிப்பிடுகிறார். உள்ளார்ந்த விருப்பமும் லட்சியமும் தான் ஒரு நல்ல ஆசிரியரை உருவாக்கும். இதை நம் அரசு அறியாமல் இல்லை. ஆனால் ஆசிரியர்களுக்கு மிகுதியான ஊதியத்தை அரசு வழங்குவதன் நோக்கம் வேறு.
நான் முன்பு ஒரு கல்லூரியில் தற்காலிக ஆசிரியராக பணி செய்தேன். ஒரு குறுப்பிட்ட வகுப்பில் நிறைய மார்வாரிப் பையன்கள் படித்தார்கள். அவர்கள் என்னிடம் என் சம்பளத்தைப் பற்றி விசாரிப்பார்கள். அவர்களுக்கு தம் பாக்கெட் செலவுக்காக மொபைல் போன்களை கல்லூரிக்கு கொண்டு வந்து விற்கிற வழக்கம் உண்டு. “உங்க சம்பளத்தை நான் ரெண்டே நாளில மொபைல் போன் வித்தே சம்பாதிச்சிருவேன் சார்” என ஒரு மார்வாரிப் பையன் என்னிடம் நேரடியாகவே சொன்னான். திறமையும் சாமர்த்தியமும் கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே இந்த பண ருசி கண்ட மாணவர்களை கட்டுப்படுத்த முடியும். அவர்கள் சொற்ப சம்பளம் வாங்கும் ஆசிரியர்களை சிறிதும் பொருட்படுத்த மாட்டார்கள். இதனால் அவர்களை விட மிகுந்த திறமை கொண்டவர்களாகவோ அதிக பணம் வாய்த்தவர்களாவோ ஆசிரியர் இருந்து அதை இம்மாணவர்கள் ஏற்க வேண்டும். ஆனால் எல்லா ஆசிரியர்களும் பெரும் திறமைசாலிகள் அல்ல. அதனாலே இம்மாணவர்களை விட ஆசிரியர்களை பணக்காரர்கள் ஆக்கும் பொறுப்பை அரசு மேற்கொள்கிறது. ஏழை மாணவர்களிடத்தும் இதே உளவியல் தான் செயல்படுகிறது. ஆசிரியரின் கல்வித் தகுதி மட்டுமல்ல பணத்தகுதியும் தான் மாணவர்களை அடிபணிய வைக்கிறது.
ஆசிரியர்கள் வசதியாக வாழ வேண்டாம் என நான் கூறவில்லை. அந்த வசதி பெறாத சாமான்யர்களின் பார்வையில் இருந்து இவ்வசதியின் காரணத்தை யோசிக்கிறேன். செய்கிற வேலைக்கு மிகுதியாய் சம்பளம் வாங்குகிறோமே, நம்மை விட கடுமையாய் உழைக்கிறவர்கள் குறைவாய் சம்பாதித்து அவதிப்படுகிறார்களே என எண்ணி இந்த கல்லூரி ஆசிரியர்கள் குற்றவுணர்வு கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள். அப்படி குற்றவுணர்வு கொண்டால் அவர்கள் வேலை செய்யவோ சமூக அந்தஸ்தை அனுபவிக்கவோ இயலாது. அவர்களை பொறுத்தமட்டில் தம் வாழ்நிலை நீதியின் பாலானது. சரி தான். ஆனால் அந்நீதிக்கு பின்னால் பலரது அநீதியின் பிரம்மாண்ட நிழல் இருக்கிறது. நாம் சாப்பிடும் சிக்கன், மட்டன், பீப் உணவுக்கு பின்னால் ஏராளமான மிருகங்களின் ரத்தமும், வலியும், அநீதியும் இருப்பது போன்றது தான் இதுவும்.
கிரேக்க தத்துவமும் பண்பாடும் செழித்து ஓங்கியதற்கு அந்நாட்டில் அடிமைகள் கட்டாயமாய் வேலை வாங்கப்பட்டு வதைக்கப்பட்டதும் ஒரு மறைமுக காரணம் என்பார்கள். அமெரிக்காவின் பொருளாதார எழுச்சிக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாய் கறுப்பின அடிமைகள் அங்குள்ள வய்லகளிலும் சுரங்கங்களிலும் சாலை அமைப்பு வேலைகளிலும் மாடுகளை விட அதிகம் கொடுமைகள் அனுபவித்து இலவசமாய் வேலை பார்த்தது ஒரு முக்கிய காரணம். இதற்காய் சாக்ரெட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில்கள் குற்றவுணர்வு அடைந்தர்களா? அமெரிக்க சிந்தனையாளர்களும் ஆளுமைகளும் தமது நாட்டின் வளத்தை முழுக்க கறுப்பர்களுக்கு திரும்ப அளித்தார்களா? சமகாலத்தில் அமெரிக்க பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் பொருட்டு தான் எண்ணெய் வளப்போர்கள் ஈரான், ஈராக்கில் நடந்தன. பல அப்பாவி உயிர்கள் பறிபோயின. இதற்காய் சாமான்ய அமெரிக்கர்கள் குற்றவுணர்வு கொண்டனரா? அவர்களூக்கும் இரக்கம், அன்பு உண்டு. ஆனால் அது சில சந்தர்பங்கங்களில் செயலிழந்து விடும்.
அன்பு, இரக்கம், கருணை ஆகிய உணர்ச்சிகள் எப்போதும் எங்கும் செயல்படக் கூடியவை அல்ல. அவை conditional ஆனவை. எல்லா சந்தர்பங்களிலும் கருணை காட்டாததனால் தான் மனித குலமும், பல்வேறு மனித சமூகங்களும் இன்றுள்ள நாகரிக, பொருளாதார வளர்ச்சி அடைந்து தம்மை தக்க வைத்துள்ளன. நம்முடைய மதங்களும், இதிகாசங்களும், இலக்கியமும், தாயுமானவர்களும் வலியுறுத்தும் கருணை வெறும் லட்சியம் மட்டுமே. நடைமுறையில் அதற்கு பயன்மதிப்பில்லை. எல்லாரிடத்தும் எல்லா சந்தர்பங்களிலும் கருணை காட்டினால் நாம் எல்லாரும் மனம் சிதறி பைத்தியம் பிடித்து தெருவில் ஓட வேண்டியது தான்.
நன்றி: அம்ருதா, ஜூலை 2015

2 comments:

Nachiappan Narayanan said...

u r corrct . u r arugment always new;(newhinking, new posblites)

sri said...

Your Articles marvelous and wonderful keep go

God bless you
regards
sri from Germany