Wednesday, July 22, 2015

கிரிக்கெட் வர்ணனை

Image result for michael holding commentating

இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளையோ அல்லது அணியின் தேர்வையோ விமர்சிக்கலாகாது என ஒரு விதிமுறையை போன வாரிய தலைவர் ஸ்ரீனிவாசன் கொண்டு வந்தார். ஸ்ரீனிவாசனுக்கு எதிராய் சர்ச்சைகள் கிளம்பிய போது கிரிக் இன்போ இணையதளம் ஒரு காணொளி விவாதம் ஒளிபரப்பியது. அதில் சஞ்சய் மஞ்சிரேக்கர் பங்கேற்றார். அவர் ஸ்ரீனிவாசனைப் பற்றி உயர்வாய் சில விசயங்கள் சொன்னாலும் கூட விவாதத்தில் பங்கேற்றமைக்காய் சில தொடர்களுக்கு அவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனை அண்யில் இருந்து விலக்கி வைத்தார்கள். இதற்கு ஸ்ரீனிவாசனின் குறுக்கீடு காரணம் என்கிறார்கள். அதே போல முன்னாள் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணமும் பெருத்த லாபம் வரும் வர்ணனை ஒப்பந்தங்களும் அளித்து தனக்கு எதிராய் யாரும் வாய் திறக்காதபடி ஸ்ரீனிவாசன் பார்த்துக் கொண்டார். இன்றும் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அதிகார மையங்களுக்கு கூழை கும்பிடு போடுபவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அவலநிலையை கடுமையாய் விமர்சித்து ஆங்கிலத்தில் முகில் கேசவன் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் இன்னும் வெளிப்படையாய் பேசுவதாய் அவர் கூறுகிறார். இதில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க வர்ணனையாளர்களும் வெளிப்படையாய் தம் கிரிக்கெட் வாரியத்தை கண்டிப்பதோ விமர்சிப்பதோ இல்லை. இங்கிலாந்தின் நசிர் ஹுசென் போன்றவர்கள் விழுந்து விழுந்து தம் நாட்டை புகழ்கிறவர்கள். இவர்களின் ஒருதலைபட்சமான பார்வை அடிப்படையில் எரிச்சலூட்டக் கூடியது. வர்ணனையாளர்கள் மட்டுமல்ல இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் பத்திரிகையாளர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கட்டுரைகள் கூட சார்புநிலை எடுப்பவர்களே. இதில் ஒரு தேசத்தின் வளர்ச்சியை பொறுத்து வித்தியாசம் உள்ளது என்பது ஆர்வமூட்டும் சேதி.
ஒரு நாடு புதிதாய் தோன்றி வளரும் நிலையில் அங்கு தேசியவாதம் உச்சத்தில் இருக்கும் என ஜார்ஜ் ஆர்வெல் எழுதினார். வங்கதேசத்தில் முனு நடந்த ஒரு கால்பந்தாட்டத்தில் அயல்நாட்டு அணி வெல்ல கொந்தளித்த பர்வையாளர்கள் மைதானத்தில் இறங்கி எதிரணியினரின் கால்களை உடைத்தனர் என தான் கண்ட ஒரு ஆட்டம் பற்றி கூறுகிறார். இந்த கோணத்தில் யோசிக்கையில் ஜிம்பாப்வே, வங்கதேசம், நியுசிலாந்த், இலங்கை போன்ற தேசங்களின் வர்ணனையாளர்கள் ஆவேசமாய் ஒவ்வொரு சின்ன விசயத்திலும் தம் அணியை போற்றி புகழ்வது நினைவுக்கு வருகிறது. இந்த பட்டியலில் இலங்கை வர்ணனையாளர்கள் சற்று மேல். தம் அணி தோற்றால் அதை ஒத்துக் கொள்வார்கள். ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகியவற்றின் வரணனையாளர்கள் தோல்வியிலும் தம் அணியே சிறப்பாய் ஆடியதாய் பேசிக் கொண்டிருப்பார்கள். சிலர் தம் அணியின் ஏதாவது ஒரு சுமாரான வீரரை அரைமணிக்கு மேலாய் திரும்ப திரும்ப புகழ்ந்து கொண்டிருப்பார்கள்.
வளர்ந்த தேசங்களான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றின் வர்ணனையாளர்களும் ஒருபக்க சார்பானவர்கள் தாம். ஆனால அவர்கள் தம் அணியை விட அணியின் கலாச்சாரம், திட்டம், போக்கு ஆகியவற்றையே அதிகம் புகழ்வார்கள். ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களுக்கு சுயதம்பட்டம் அதிகம் என்றாலும் சிறப்பான ஆட்டத்தை யார் ஆடினாலும் கொண்டாடுவார்கள். கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக அல்லாமல் அடிதடியாக, மோதலாக, வன்முறையாக பார்ப்பது அவர்களின் பாணி. அதனால் யார் பெரிய ரௌடியோ அவருக்கே அதிக பாராட்டு கிடைக்கும். இங்கிலாந்து வர்ணனையாளர்களைப் பொறுத்த மட்டில் வெற்றியை அடைவதை விட தோல்வியை தவிர்ப்பதும் உழைப்பும் உன்னிப்பான ஆட்டமுமே பாராட்டப்படும். தம் அணி மட்டமாய் ஆடினாலும் துளி கூட கலவரப்படாமல் “நன்றாய் போராடினார்கள் எம் வீரர்கள்” என புன்னகைப்பார்கள். எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்குவார்கள். ஆனால் எப்போதாவது நல்ல அணிக்கு எதிராய் வென்று விட்டாலோ வானுக்கும் மண்ணுமாய் குதிப்பார்கள்.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மே.இ தீவுகள் இவ்விசயத்தில் ஒரே பட்டியலுக்குள் அடங்குவார்கள். இவ்வணியின் வர்ணனையாளர்கள் அணியை விட நட்சத்திரங்களை புகழ்வார்கள். இந்திய வர்ணனையாளர்கள் நம் வீரர்கள் மோசமான ஒரு ஷாட் அடித்து வெளியேறினால் அதைக் கூட கண்டிக்க தயங்குவார்கள். இந்த அம்மாஞ்சித்தனம் காரணமாய் நம் வர்ணனை மிகவும் அலுப்பூட்டக் கூடியதாகி விட்டது. ஆனாலும் சஞ்சய் மஞ்சிரேக்கர், ஹர்ஷா போக்ளே, ஆகாஷ் சோப்ரா, லஷ்மண் சிவராம கிருஷ்ணன் ஆகியோரின் வர்ணனை கூர்மையானது. நான் மிகவும் வெறுக்கும் இந்திய வர்ணனையாளர் கபில் தேவ். அவருடைய மொழிக்குறைபாடு காரணமாய் யோசிப்பதில் 40% தான் பேசுவார். அதிலும் மொண்ணையாய் அர்த்தமற்றதாய் எல்லாருக்கும் தெரிந்த ஏதாவது ஒன்றைத் தான் சொல்லுவார். பந்து வீச்சாளர்கள் ஏன் சரியாய் வீச வில்லை என்று கேட்டால் “அவர்கள் லைன் மற்றும் லெங்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்பார். அவருக்கு அடுத்தபடியாய் ரவிசாஸ்திரி. அவர் தேய்வழக்குகளின் மன்னர். முன்பெல்லாம் யார் நான்கு ஓட்டங்கள் அடித்தால் “went like a tracer bullet” என்பார். நான் காதைப் பொத்திக் கொள்வேன். கவாஸ்கர் ஸ்கூல் வாத்தியார் போல் பேசுவார். திராவிட் மற்றும் லஷ்மணும் அம்மாஞ்சிகள் தாம். யாருக்கும் தொந்தரவில்லாதபடி பேச முயல்வார்கள். அவர்களது அபார தொழில்நுட்ப பார்வையும் பெரும்பாலும் வெளிப்படுவதில்லை. வெங்கடேஷ் பிரசாத்துக்கும் கூர்மையான பார்வை இல்லை.
பாகிஸ்தானில் எனக்கு ரமீஷ் ராஜா பிரியமானவர். அவரது ஆங்கில சரளமும் ஆவேசமான பாணியும் நக்கலும் என்னை கவர்ந்த விசயங்கள். அது போக இனிமையான குரலும் ஸ்டைலான தோற்றமும் கொண்டவர். அவருக்கு வேகவீச்சாளர்களை மிகவும் பிடிக்கும். 130க்குள் வீசுபவர்களைக் கண்டால் கிண்டலடிக்க தொடங்கி விடுவார். ஐ.பி.எல்லில் சைனாமேன் சுழலர் குல்தீப் யாதவ் முதன்முதலில் தோன்றிய போது அவர் மிகவும் உற்சாகமாய் பாராட்டிப் பேசினார். குல்தீப் பாகிஸ்தானில் தோன்றியிருந்தால் இந்நேரம் டெஸ்ட் அணியில் ஆடியிருப்பார். நம் வர்ணணையாளர்கள் பொதுவாய் பந்து வீச்சாளர்களை பொருட்படுத்துவதே இல்லை. பாகிஸ்தானில் கிரிக்கெ வீரர்களிடையே அரசியல் அதிகம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வர்ணனையில் தமக்கு வேண்டாதவர்களுக்கு வேட்டு வைப்பார்கள். மே.இ தீவுகளைப் பொறுத்தமட்டில் நட்சத்திர மதிப்புக்கு இடமில்லை. அவர்கள் தேவையின்றி தம் அணியை தூக்கிப் பிடிப்பதில்லை. மே.இ தீவுகளில் இருந்து இங்கிலாந்தில் குடியேறி இங்கிலாந்துக்காய் வர்ணனை செய்யும் மைக்கேல் ஹோல்டிங்கும் அப்படித் தான். முடிந்தவரை தம் சார்பை காட்டிக் கொள்ளாமலே விமர்சனபூர்வமாய் பேசுவார்கள்.
இப்படி ஒவ்வொரு நாட்டின் பண்பாடு மற்றும் வாரியத்தின் அரசியல் நிலை பொறுத்து வர்ணனை மாறுபடுகிறது. இந்தியாவில் வீரர்கள் நட்சத்திரங்களாய் இருப்பதாலும், வாரியத்திற்கு நெருக்கமானவர்களுக்கு நிறைய அனுகூலங்கள் கிடைக்கும் என்பதாலும் அதற்கேற்றபடி வர்ணனையின் போது சிலர் புகழப்படவும் சிலர் கவனிக்கப்படாமல் போகவும் செய்வார்கள். உதாரணமாய் முன்பு கிடைக்கும் போதெல்லாம் தோனியை புகழ்வார்கள். அவரை விட அதிக ஓட்டமெடுக்கும் மற்றொரு மட்டையாளரை கவனிக்க மாட்டார்கள். மோசமாய் ஆடினாலும் தோனி கேப்டன் கூல் தான். அதே போல் இப்போது கோலியின் ஆவேசத்தை கொண்டாட துவங்கி இருக்கிறார்கள். இதன் பின் ஒரு தெளிவான வணிகப் பார்வையே உள்ளது. நட்சத்திரங்களை முன்னிறுத்தி ஆட்டத்தை விற்பது தான் நோக்கம் . இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியோ ஆட்டத்தின் வியூகங்களோ இரண்டாம் பட்சம் தான்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கிரிக்கெட் வர்ணனை எளிதல்ல. தமிழில் வர்ணனை அளிக்கும் நண்பர் ஒருவர் இதன் சிரமங்களை என்னிடம் கூறினார், என்னிடம் ஒரு ஓவரைப் பார்த்து அதை வர்ணித்து பதிவு செய்யச் சொன்னார். சில நொடிகளுக்குள் ஒரு பந்து விழுந்து அடிக்கப்படுவதை சரியான படி விளக்கி உங்கள் பார்வையையும் அளிக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு தெரியாத ஒன்றை சொல்ல வேண்டும். தடையின்றி பேச வேண்டும். “அழகான புல் ஷாட்” என யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் “மிட் விக்கெட் பவுண்டரி அருகில் இருக்கிறார்” என ஹோல்டிங் உடனே கூட சொல்லி விடுவார். மொத்த மைதானத்தின் களத்தடுப்பு விவரங்களையும் அவர் விரல்நுனியில் வைத்திருப்பார். நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட் செய்வார். வீச்சாளரின் திட்டம் என்னவாக இருக்கும் என ஊகிப்பார். இதையெல்லாம் பொறுமையாய் யோசித்து சொல்லலாம். ஆனால் உடனடியாய் சரியான நேரத்தில் தடுக்காமல் சொல்வது எளிதல்ல.  

No comments: