Friday, July 24, 2015

கதை வாசிப்பு: ஜெயமோகன் மற்றும் சு.ரா

Image result for ஜெயமோகன்

பல்கலைக்கழகத்தில் பகல் முழுக்க ஆய்வு சார்ந்த பணிகளும் யோசனைகளுமாய் ஆங்கில இலக்கியம் சார்ந்து ஓடும். ஆறு மணிக்கு மேல் நாங்கள் மூன்று நான்கு பேர் சேர்ந்து நவீன தமிழ் சிறுகதைகளை வாசிக்க துவங்குவோம். பெரும்பாலும் எங்கள் நெறியாளரின் அறை தான் இடம். வாசிப்பு உள்ளதென்று சொன்னால் வீட்டுக்கு கிளம்புகிற நண்பர்கள் சிலரும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். போன வாரம் ஜெயமோகன் மற்றும் சு.ராவின் கதைகளை வாசித்தோம். ஜெயமோகனின் நாகம், ஒன்றுமில்லை, பாடலிபுத்திரம், ஆயிரங்கால் மண்டபம், ஜகன்மித்யை ஆகிய கதைகளையும் சு.ராவின் வாழ்வும் வசந்தமும் கதையையும் வாசித்தோம்.


 கடலூரை சேர்ந்த நண்பர் ஒருவர் ”நாகம்” வாசித்தார். அவர் சத்தமாய் படிக்க நாங்கள் கேட்டோம். மொபைலில் பதிவும் பண்ணினோம். அவருக்கு குமரி மாவட்ட வழக்கு தெரியவில்லை என்பதால் தன் ஊர் வழக்கிலேயே படித்தார். அது கேட்க விநோதமாய் இருந்தாலும் இன்னொரு புறம் ஒரு கேள்வியை எனக்குள் தூண்டியது. அதிக பரிச்சயமற்ற வட்டார வழக்கு வாசகர்களால் இப்படித் தான் படிக்கப்படுகிறதா? சொற்களின் அர்த்தம் புரிவது போகட்டும். வட்டார வழக்கின் தொனி தெரியாதவர்கள் கதையின் மனநிலையை தவற விடவும் வாய்ப்புண்டு.

 “நாகம்” ஜெயமோகனின் முக்கியமான கதைகளில் ஒன்று. புள்ளுவன் பாட்டிசைக்கும் குமரி மற்றும் கேரளப்பகுதியை சேர்ந்த, நாகதெய்வத்துடன் இணக்கமான உறவு கொண்ட ஒரு சாதியை சேர்ந்த கன்னிப்பெண் ஒரு நாகத்துடன் உடலுறவு கொள்வது தான் கதை. இச்சாதியினரில் நாகதெய்வத்துடன் கன்னி கூடுவது பற்றி தொன்மக்கதை உள்ளதால் இதை அவ்வகையிலும் படிக்கலாம். Sexual fantasy கதையாகவும் படிக்கலாம். உடலுறவின் போது மனித மனம் ஒரேசமயம் கொள்ளும் எழுச்சியும் அருவருப்பும், விருப்பமும் வெறுப்பும் தான் கதையின் கரு. ஒரு அற்புதமான கிளர்ச்சியை, மன எழுச்சியை தரும் நாகம் பிறகு சாதாரண புழுவாக மாறி சேற்றில் ஊர்ந்து சென்று மறையும் காட்சியும் அதேபோல அபாரமானது. உடலுறவுக்கு பின் வியர்வையில் ஊறிக் கிடந்து பக்கத்தில் உள்ள உடலைப் பார்த்து “இதனுடனா இவ்வளவு இச்சையுடன் முயங்கினோம்?” என வியந்துள்ளோருக்கு இக்கதையின் நிறைய முடிச்சுகள் அவிழ்ந்து கொள்ளும்.

“ஒன்றுமில்லை” ஜெயமோகனின் கதைகளில் அதன் வடிவம் மற்றும் மொழியளவில் வித்தியாசமானது. பொதுவாய் அடர்த்தியான கவித்துவமான கதைமொழியை தொண்ணூறுகளில் ஜெயமோகன் பயன்படுத்தினார். கதாபாத்திரங்களின் உளவியலை நாடகீயமாய் உணர்ச்சிகரமாய் காட்ட முயல்வார். ஆனால் இக்கதையில் வித்தியாசமாய் அவர் ஒரு அடங்கலான நகைமுரண் மிக்க மொழியை பயன்படுத்தி இருப்பார். ஒரு கையில் அசோகமித்திரனும் இன்னொரு கையில் சு.ராவும் அமர்ந்து ”அருள் புரிய” எழுதின கதை போலத் தோன்றும். ஒரு சாதாரண கொழுப்புக்கட்டியை அகற்றுவதற்காய் ஆஸ்பத்திரி செல்லும் ஒரு குடும்பப் பெண், அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட கோளாறினால் தொற்று பரவி, ஜுரம் வந்து, உடல் வில்லென வளைந்து கொடூரமாய் இறந்து போவதை சொல்லும் கதை இது. அப்பெண் ஆஸ்பத்திரிக்கு போவதில் துவங்கி இறுதியில் அவள் சாவது வரை வெவ்வேறு மருத்துவர்கள் அவளுக்கு ஒன்றுமில்லை, விரைவில் குணமாகி விடும் என ஆறுதல் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் அந்த “ஒன்றுமில்லையின்” பொருளும் தொனியும் மாறிக் கொண்டு வரும். இன்றைய மருத்துவம் எப்படி நம் உடலை ஒரு பரிசோதனை வஸ்துவாக எடுத்தாள்கிறது, எப்படி நம்மை அறியாமலே நாம் நமது உடல் மீதான உரிமையை இழக்கிறோம் போன்ற விசயங்களை அதிர்ச்சிகரமாய் தொட்டுக் காட்டும் கதை இது. சில வருடங்களுக்கு முன்பு நான் என் மனைவிக்கு இக்கதையை படித்துக் காட்டினேன். அவளை இக்கதை மிகவும் கவர்ந்தது. அதன் பின் அடிக்கடி ஜெயமோகன் பற்றி பேச்சு வரும் போதெல்லாம் “ஒன்றுமில்லையை” குறிப்பிடுவாள். அவளைப் போல் ஆங்கிலத்தில் அதிகம் வாசிப்பவர்களுக்கும் ஏற்ற கதை இது.

”பாடலிபுத்திரம்” கதையை கல்லூரியில் படிக்கும் போது முதலில் வாசித்தேன். அந்தபுரத்தில் புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் போது கைது செய்யப்படும் மன்னன் நிர்வாணமாய் சிறைக்கு அழைத்து செல்லப்படுவது, நடக்கும் போது அவன் குறி விரைப்பை இழக்காது அசைவது, குளிந்த தரையில் பாதம் பதிகையில் அவன் உணரும் தனிமை, தனக்கு என்ன நேர்கிறது எனப் புரியாத அவனது திகைப்பு ஆகியவற்றை சொல்லும் ஆரம்ப காட்சி என்னை பல வருடங்களுக்கு முன் மயிர்க்கூச்சிட வைத்தது போல் இப்போதும் செய்தது. நண்பர்களும் இப்பகுதியை ரசித்தார்கள். அச்சமும் வன்மமும் அதிகார இச்சையையும் எப்படி ஒரு சுழலாக மாறி அந்நகரத்தையும் அதன் மன்னர்களையும் ஒரே விதிக்கு ஆட்படுத்தி அலைகழிக்கிறது என பேசும் இக்கதையின் மறுபகுதி இட்டாலோ கால்வினோவின் பாணியில் எழுதப்பட்டது.

”ஆயிரங்கால் மண்டபம்” ஜெயமோகனின் கதைகளில் மிகவும் காட்சிபூர்வமானது. ஆசிரியரின் கருத்து முழக்கம் வெளிப்படாதது. தன் உறவு முறை அக்காவின் திருமணம் அன்று ஆயிரங்கால் மண்டபத்து சிலைகளை வேடிக்கை பார்த்து அவற்றுடன் பேசும் செண்பகக்குழல்வாய் மொழி எனும் சுட்டியான, அசட்டு தைரியமும் கற்பனையும் கொண்ட சிறுமி இக்கதையின் ஒரு மறக்க முடியாத பாத்திரம். கதையை வெகுவாக ரசித்த நண்பர் அருள் தனக்கு மகள் பிறந்தால் செண்பகக்குழல்வாய் மொழி எனப் பெயரிடப் போவதாய் சொன்னார். கதையில் அச்சிறுமி பேசிக் கொண்டிருக்கையில் மண்டபத்தில் உள்ள குதிரை வீரர்களும் கின்னரர்களும் உயிர்பெறுகிறார்கள். அவர்கள் போய் கல்யாணப்பெண்ணை தூக்கிப் போய் விடுவார்கள் என அவள் அஞ்சுகிறாள். பிறகு அவர்கள் தனக்கு பிடிக்காத தன் அத்தைகளை போய் அச்சுறுத்த வேண்டும் என ஆசைப்படுகிறாள். கதையின் இறுதியில் மணப்பெண் கிணற்றில் போய் குதிக்கிறாள் என உணர்த்தப்படுகிறது. அவளுக்கு கடுமையான வயிற்றுவலி என செண்பகக்குழல்வாய் மொழி நினைக்கிறாள். அது வயிற்றுவலியா பிடிக்காத வாழ்க்கை திணிக்கப்படும் போது அப்பெண் உணரும் துக்கமா? அக்குழந்தைக்கும் மணப்பெண்ணுக்குமான உறவு தான் கதையில் ரொம்ப முக்கியம். பெண்ணின் வெளிப்படுத்த முடியாத கசப்பும், அச்சமும் கதையின் மையக்கரு. இந்த உணர்வுகளை எப்படியோ தன் ஆழ்மனதில் அச்சிறுமி அறிந்து கொள்கிறாள். தானும் இப்பெண்ணின் தவிப்பை, அடக்குமுறையை அனுபவிக்கப் போகிறவளே என அவளுக்கு. புரிகிறது ஆயிரங்கால் மண்டபத்து சிலைகள் உறைந்து நெகிழ்ந்து உயிர்கொண்டு, மீண்டும் ஏதோ ஒரு பொறியில் கால்மாட்டின விலங்கைப் போல் நகர முடியாது உறைகின்றன. இது ஒரு குறியீடாய் தத்ரூபமாய் கதையில் உருப்பெறுகிறது. இந்த உறைந்த சிலைகள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் இப்பெண்களின் அக உலகம் தான். காற்றின் உறைந்த குதிரைக்கால்கள் அவர்களின் தப்பிக்க முடியாத ஆசைகள் தாம். இதே போன்ற உறைநிலை குறியீடு கொண்ட மற்றொரு கதை “நைனிட்டால்”. அதில் மனம் கசந்து போல் கோடைவாசஸ்தலத்திற்கு செல்லும் திருமண ஜோடி வருவார்கள். ஏரியில் படகில் போவார்கள். ஏரியில் மேல்மட்டம் கடந்து உள்ளே உறைந்து போயுள்ள நீர் பற்றின விவரணைகள் வரும். அது அவர்களின் நெகிழ்ச்சியற்ற மனத்திற்கான குறீயீடாக இருக்கும்.

”ஜகன்மித்யை” ஜெயமோகனுக்கே உரித்த அறிவார்ந்த நக்கலும், கூர்மையான வசனங்களும், நிறைய தகவல்களும், அறிவார்ந்த உரையாடல்களும், உக்கிரமான உணர்ச்சிகரமான மனநிலை சித்தரிப்பும் கொண்ட கதை. இக்கதையை நண்பர்கள் வெகுவாய் ரசித்தார்கள். நண்பர் அருள் ஒவ்வொரு வசனத்துக்கும் அதிர்ந்து சிரித்தது ஒலிநாடாவில் பதிவாகி இருக்கும். கதைவாசிப்பு என்பது கதையை மனதுக்குள் வாசிப்பதில் இருந்து இப்படித் தான் வேறுபடுகிறது. அது ஒரு நிகழ்த்து அனுபவமாகிறது. எப்படி சினிமாவில் சுற்றிலுமுள்ள பார்வையாளர்களின் எதிர்வினை நம் ரசனையனுபவத்தையும் தீர்மானிக்கிறதோ அது போல் சத்தமாய் கூட்டாய் வாசிக்கும் போதும் பிறரது சிரிப்பு, பெருமூச்சு, முனகல்கள் நம் மனநிலையை சட்டென உக்கிரமாக்கி விடுகிறது.

 நீட்சேயின் சாஸ்வத சுழற்சி தத்துவத்தைக் கொண்டு உலகின் எச்சம்பவம் எப்போது நிகழும் என கணிப்பதற்காய் ஒரு புது கோட்பாட்டை உருவாக்கும் ஒரு நம்பூதிரியை பற்றின கதை இது. பொதுவாக கதைகளில் துறைசார்ந்த தகவல்களை சரியாக அளிப்பதற்காய் ஜெயமோகன் நிறைய மெனக்கெடுவார். “ஒன்றுமில்லையில்” என்ன மருத்துவ பிரச்சனை, அறுவை சிகிச்சையில் என்ன பிழை என்றெல்லாம் விவரிப்பார். ”ஜெகன்மித்யையில்” நம்பூதிரியின் கணித சூத்திரங்களைக் கூட நிறையத் தருகிறார். இவை ஒரு வியப்பை ஏற்படுத்தினாலும் கதைக்கு அவசியப்படுவதில்லை. ஜெயமோகன் ஒரு பயில்வானைப் போல் தன் தசைகளை பெருக்கிக் காட்டுவதற்கு மட்டுமே இவை பயன்படுகின்றன. இதைப் படிக்கும் போதே அசோகமித்திரன் இதே கதையை எழுதினால் நம்பூதிரியின் அறிவார்ந்த விவாதங்களை இரண்டே பத்தியில் அழகாய் சுருக்கி இருப்பார் எனத் தோன்றியது. உண்மையில் அவ்வளவு போதும். புத்திசாலியான நம்பூதிரி ஒரு சிந்தனைப்பிழை காரணமாய், மிகையான தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் என கதை துவக்கத்திலேயே நமக்கு புரிகிறது. இதைக் கடந்து ஒரு தாவல் கதைக்கு தேவைப்பட ஜெயமோகன் சற்று நாடகீயமாய் நம்பூதிரியின் அவலச்சாவுடன் முடித்து விடுகிறார். ஆனாலும் பாத்திர அமைப்பு, வசனங்கள், வித்தியாசமான உலகம் என்ற அடிப்படையில் மிக முக்கியமான கதையே.

Image result for சுந்தர ராமசாமி

இம்மூன்று கதைகளையும் மிக அழகாய் வாசித்த நண்பர் டேவிட் தான் சு.ராவின் “வாழ்வும் வசந்தமும்” கதையையும் வாசித்தார். எங்களை மிக அதிகமாய் சிரிக்க வைத்த கதை இது. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமான கதையும் கூட. ஒரு அலுவலகம். அங்குள்ள ஆண்கள். அவ்வழி கடந்து போகும் ஒரு பெண்ணை வேடிக்கை பார்க்கும் சிலர். பிறகு அவர்களின் வாழ்வில் வரும் மாற்றம். இது தான் கதை. ”கோயில் காளையும் உழவு மாடும்” போல வாழ்க்கை பற்றின ஒரு ஒட்டுமொத்தமான தத்துவார்த்த சித்தரிப்பை நுணுக்கமாய் அளிக்கும் சு.ராவின் அரிய கதைகளில் ஒன்று இது. தலைப்பே அழகானது. வாழ்க்கை என்பது காலமாற்றம் போல் உள்ளது. மழைக்காலம் முடிந்து கோடை வந்து பிறகு மீண்டும் பனிக்காலம் போல வாழ்க்கையிலும் ஒவ்வொரு கட்டம் மாற நாமும் அதற்கு ஏற்றபடி நம் நடவடிக்கைகளை நம்பிக்கைகளை ஏற்படுத்துகிறோம். தன்னை ஒரு மன்மதனாய் கருதி வந்த ஒரு ஆண் ஒருநாள் திருமணமாகி சாப்பாட்டு வாளியுடன் அலுவலகத்துக்கு வந்து குமாஸ்தா மாமா எனும் புது அடையாளம் பெற்றவுடன் அவன் பெண்களிடம் நடந்து கொள்ளும் பாணியும் மிக சுலபமாய் மாறுகிறது. இதிலுள்ள பாசாங்கும் அவலமும் முரணும் இக்கதையில் அழகாய் பதிவாகிறது. இது மனிதனின் குற்றமல்ல, வாழ்க்கை எனும் சுழலில் மாட்டிக் கொள்ளும் போது தன் மனநிலையை தீர்மானிக்கும் ஆற்றல் அவனுக்கு இல்லாது ஆகிறது, அவன் வெறும் தோல்பாவையாய் மாறுகிறான் என சு.ரா காட்டுகிறார். இதில் அலுவலக ஊழியர்கள் சாலையில் நடந்து போகும் பெண்ணை ரசிக்கையில் “பார்க்க பார்க்க அவள் அழகின் வட்டி கூடிக் கொண்டே போனது” எனும் வரியை என் நண்பர்கள் புளிப்பு மிட்டாயைப் போல் வாயில் அதக்கி சிலாகித்தார்கள்.

அடுத்த முறை சந்தர்ப்பம் வாய்க்கும் போது மௌனியை வாசிக்கலாம் என இருக்கிறோம்.

No comments: