முபீதா நாசரின் “நாற்பத்தியொரு இரவுகள்”


முபீதா நாசரின் “நாற்பத்தியொரு இரவுகள்” சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் நேற்று எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிறிஸ்டியன் மீடியா செண்டரில் நடந்தது. ச.சண்முகநாதன் மற்றும் கவிஞர் நட.சிவகுமார் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். நான், எழுத்தாளர் அஜயன் பாலா உள்ளிட்ட பலர் பேசினர். முபீதா நாசரை எனக்கு அவர் புத்தகம் வாசிக்கும் போது தெரியாது. ஆனால் கூட்டம் அன்று அவரைப் பார்த்ததும் முகம் மிக பரிச்சயமாய் பட்டது. யார் இவர் என யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு சட்டென தெளிவானது. அவரை நான் முன்பு பலமுறை தக்கலையில் உள்ள ஆட்டோ நிறுத்ததில் ஓட்டுநராய் பார்த்திருக்கிறேன். ஒருவேளை அவர் ஆட்டோவில் பயணித்திருக்கவும் கூடும்.

 நாசர் பல வருடங்களாய் ராணி, கல்கி போன்ற வணிக பத்திரிகைகளில் கதை எழுதி வந்தவர். இப்போது இத்தொகுப்பு மூலம் தீவிர இலக்கியம் நோக்கி நகர்ந்துள்ளார். குமரி மாவட்ட வாழ்க்கை, குறிப்பாய் இஸ்லாமிய மக்களின் நிலை, சார்ந்து பல துல்லியமான சித்திரங்க்ள் இவரது புனைவில் விரவி உள்ளன. ஒரு சிறுகதைக்குள் பல பாத்திரங்களை சட்சட்டென அவர் உருவாக்கி கைவிட்டு போவதில் சில சிக்கல்கள் உள்ளன என்றாலும், அவரது வடிவ போதத்தின் குறைகளைக் கடந்து தமிழுக்கு புதிதான பாத்திரங்களுக்காகவே இத்தொகுப்பை படித்துப் பார்க்கலாம். குமரி மாவட்ட வாழ்க்கை பரிச்சயமில்லாதவர்களுக்கு இதிலுள்ள வாழ்க்கைப்பதிவுகள் நிச்சயம் ஆர்வமூட்டும். உதாரணமாய் “குழிவெட்டுக்குருவி” எனும் கதையில் ஒரு நாவிதன் வருகிறார். அவர் வேறு ஊரில் இருந்து வந்து வீடுகளுக்கு சென்று முடிவெட்டுகிறவர். ஆனால் ஊர் ஜமாத் அங்கு செயல்படுவதற்கு வேறு ஒரு நாவிதருக்கு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் பழைய ஆள் குடிகாரர். பெரும்பாலான நாட்களில் வேலை செய்ய மாட்டார். புது நாவிதன் எங்காவது சென்று வேலை பார்த்தால் பழைய ஆள் போய் கலாட்டா செய்து பணத்தை பிடுங்கிக் கொள்வார். அவரது தோற்றமும் ஒரு திணுசானது. கையில் பைக்கு பதில் ஒரு சூட்கேஸ் வைத்திருப்பார். அதனுள் அவரது கத்தி, கத்திர்க்கோல் ஆகிய பொருட்கள் இருக்கும்.
இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை “நாயர் ஓட்டல்”. அவனது விடிகாலை துவங்கி இரவு வரையிலான பல வேலைகள், இரவு மீதமாகும் உணவை வீட்டில் எடுத்துப் போவதற்காக காலையில் வரும் போதே ஒரு அலுமினிய வாளியை ஏந்தியவாறு கர்நாடக சங்கீதம் முனகியபடி வரும் ஓட்டல் முதலாளியின் சித்தரிப்பு என இக்கதையில் அங்கு வேலை பார்க்கிற கதைசொல்லியின் பார்வையில் இருந்து நுணுக்கமான விபரங்கள் பல வருகின்றன. கதைசொல்லி ஒரு எழுத்தாளன். அவனுக்கு முதலில் தன் கூட பள்ளியில் படித்தவர்கள் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என கவலை ஏற்படுகிறது. அவர்கள் கல்லூரிக்கு போகும் பேருந்து அவ்வழி போகும் போது ஓட்டலுக்குள் ஓடி ஒளிகிறான். அடுத்து அவனது கதைகள் பிரசுரமாக துவங்க ஓட்டல் எச்சிலை வாளியில் சுமந்து நடப்பது சங்கடமாகிறது. அவன் எங்கு சிறு வேலைக்கு போனாலும் அவனது எழுத்தாள தகுதியை சுட்டிக்காட்டி நிராகரித்து விடுகிறார்கள். அதாவது எழுத்தாளனாய் இருப்பது சமூகத்தில் உயர் அங்கீகாரம் உள்ள சங்கதி என்றாலும் வேலையிடத்தில் உயரதிகாரிகள், முதலாளிகளுக்கு அது எரிச்சலூட்டக் கூடியதாக இருக்கும். கீழ்நிலை வேலை செய்யும் எழுத்தாளன் சமூகத்துக்கு உள்ளும் இல்லாமல் வெளியிலும் இல்லாமல் தவிக்க நேர்கிறது. எனக்கும் இத்தகைய அனுபவம் நேர்ந்துள்ளது. நான் எழுதுவது, என் முகம் டி.வியில் தோன்றுவது என் உயரதிகாரியை கடுமையாய் எரிச்சல்படுத்த மறைமுகமாய் நிறைய தொநதரவுகள் தர ஆரம்பித்தார். என்னை அவமானப்படுத்துவதில் தனி கிளர்ச்சி கொண்டார். இனிமேல் வேலைக்கு போகும் இடத்தில் என் எழுத்தாள முகத்தை மறைத்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளேன். அதாவது நீங்கள் பணக்காரராகவோ, சொந்த தொழில் செய்பவராகவோ, உயர்பதவியில், அரசு வேலையில் உள்ளவராகவோ இருந்தால் எழுத்தாள அந்தஸ்தின் தாக்கம் நேர்மறையாய் இருக்கும். இல்லாவிட்டால் அது உட்காருகிற இடத்தில் குத்திய வேல் தான்.

”நாற்பத்தியொரு இரவுகள்” தொகுப்பை கீற்று வெளியீட்டகம் பதிப்புத்துள்ள்ளது.

Comments