மோடி எனும் அக்டோபஸ்


Image result for modi 

கேஜ்ரிவாலுக்கும் மத்திய அரசுக்குமான மோதலை கவனித்து வந்திருப்பீர்கள். இன்று நேற்றல்ல ஆரம்பத்தில் இருந்தே தில்லியின் மீது யாருக்கு அதிகாரம் எனும் கேள்வி இருந்து தான் வந்திருக்கிறது. தேசத்தின் தலைநகர் என்பதால் அதன் மீது மத்திய அரசு கட்டுப்பாடு வைத்திருப்பது பாதுகாப்புக்கு நல்லது என சட்டம் அதிகப்படியான அதிகாரத்தை மத்திய அரசுக்கு விட்டு வைத்துள்ளது. அதனால் யார் மத்தியில் இருக்கிறார்களோ அவர்களே தில்லியை ஆள முடியும். தில்லி மாநில அரசு “பன்னீர் செல்வம் அரசாகத்” தான இருக்க முடியும்.
 இதன் விளைவு சட்டம் ஒழுங்கு, அரசு அதிகாரிகளின் குற்றங்கள் ஆகியவற்றை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாமல் போவது. மாநில ஆட்சி மேல் மைய அரசாலும் அதிக கவனம் செலுத்த இயலாது என்பதால் யாரும் பூரணமாய் ஆட்சி பண்ண முடியாது தலையில்லாத முண்டம் மாதிரி தில்லி ஆகி விடுகிறது. ஷீலா தீக்‌ஷித் ஆட்சி மீது தில்லிக்காரர்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தி தான் இளம்பெண்ணின் கொடூர பேருந்து கற்பழிப்பை ஒட்டி பெரும் இளைஞர்கள் போராட்டமாய் வெடித்தது. அதன் பின்னணிக் காரணம் இந்த நீண்ட கால ஆட்சி செயலின்மை தான். ஆம் ஆத்மி முளைவிட்ட மண்ணாக அது ஆனதற்கும் இதுவே காரணம். இப்பிரச்சனைக்கு உண்மையில் சரியான உடனடி தீர்வு ஒன்றில்லை.

கேஜ்ரிவால் செய்வதெல்லாம் மத்திய அரசை சீண்டுவது தான். ஊழல் செய்யும் அதிகாரிகளை கைது செய்யும் உரிமை தனக்கு உண்டு என்கிறார். இல்லை அதற்கு ஆளுநர் அனுமதி வேண்டும் என்கிறது மோடி அரசு. இரு சாராரும் நீதிமன்றத்தில் இது பற்றி மோதுகிறார்கள். ஏற்கனவே தில்லி தேர்தலில் மண்ணைக் கவ்விய பா.ஜ.கவுக்கு இது ஒரு மோசமான பெயரைப் பெற்றுத் தரும் என்பதே உண்மை. மோசமான சட்ட ஒழுங்கு சீர்கேடு மீண்டும் ஒரு உணர்ச்சிகரமான சம்பவம் மூலம் மக்களின் கவனத்துக்கு வந்து போராட்டமாய் வெடிக்கும் என்றால் கேஜ்ரிவல் அதை அடக்காமல் தலைமை தாங்க முயல்வார். ஒட்டுமொத்தமாய் இது மோடியின் மீதான அதிருப்தியாய் உருக்கொள்ளும். அதனால் அரசியல் ரீதியாய் மோடி இப்போது மேற்கொள்ளும் அதிகார மல்யுத்தம் அவருக்கே பாதகமானது. சொல்லப் போனால் காங்கிர்ஸ் மத்தியில் இருக்கும் போது இந்தளவு நேரடியாய் தில்லியை கட்டுப்படுத்த முயலவில்லை.
 ஆனால் மோடியின் மனநிலை சர்வாதிகாரிகளுக்கு உரித்தானது. ஒவ்வொரு அசைவும் தன் விரல் நுனி அழுத்தத்தில் இருக்க வேண்டும் என அவர் நம்புகிறார். தனக்கு எதிரான சிறு சலனமும் நடக்கக் கூடாது. அதற்காய் அவர் முதலில் டி.வி மீடியாவை முழுக்க தன் வசப்படுத்துகிறார். டைம்ஸ் நவ், சி.என்.என் போன்றவை முழுநேர பா.ஜ.க பிரச்சார பீரங்கிகளாகி விட்டன. அடுத்து மத்திய அரசு சிறு பிராந்திய சமூக வானொலிகளை குறி வைத்துள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள ஆயிரக்கணக்கான சமூக வானொலிகளுக்கு மத்திய அரசு ஒரு ஆணையிட்டுள்ளது. இதன் படி இவை இனி மேல் என்ன நிகழ்ச்சியை ஒலிபரப்பும் முன்னாலும் அதன் ஒரு பிரதியை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும். இப்படி பல நூறு மணிநேர நிகழ்ச்சிகளை பதிவு செய்து அனுப்புவது நடைமுறையில் கிட்டத்தட்ட அசாத்தியம் என புலம்புகின்றன வானொலிகள். அது போக இந்நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய பல லட்சம் சி.டிக்களை கேட்டு தகவல்களை தொகுத்து அலசுவதற்காய் பல கோடிகள் செலவிலான ஒரு துறையையே மத்திய அரசு நியமிக்க போகிறது.
மோடியின் நோக்கம் இந்த சமூக வானொலிகள் மூலம் பெரிய ஊடகங்கள் நுழையாத சிறு உள்ளூர் பகுதிகளையும் ஊடுருவ வேண்டும் என்பது. உண்மையில் இந்த ஆணை ஒரு மறைமுக மிரட்டல் தான். இதன் உள்-உத்தரவு இனிமே மோடியை புகழ்ந்தும் அவரது திட்டங்களை பிரச்சாரம் பண்ணியும் தான் சமூக வானொலிகள் இயங்க வேண்டும் என்பது.
 மோடி அரசு பதவி ஏற்றதும் மும்முரமாய் வரலாற்றை இந்துத்துவா கோணத்தில் மாற்றி எழுத செய்த முயற்சிகளை அறிவோம். அது போல் மோடியின் உரையை தொடர்ந்து தேசிய வானொலியில் ஒலிபரப்புவது, பள்ளியில் டி.வி அமைத்து மாணவர்களுக்கு தன் பேச்சு போய் சேருமாறு பார்த்துக் கொண்டது, ஒரு பெரிய துறையை உருவாக்கி டிவிட்டரில் தனது ஒவ்வொரு சொல்லையும் பிரச்சார உத்தியாக மாற்றி அதை உயிரோட்டமாய் வைத்துக் கொள்வது, தன் ஓராண்டு ஆட்சியின் அதிருப்திக் குரல்களை முடக்கும் விதம் டி.வி, செய்தித் தாள், டிவிட்டர் என எங்கும் அதிரடி பிரச்சார அவதாரங்கள் எடுத்து குட்டித்தலைவர்களின் நூறு குரல்களில் ஒரே சமயம் அவர் பேசியது என முழுக்க முழுக்க பிரச்சாரம் மூலமாகவே ஆட்சியையும் நடத்தலாம் என அவர் நம்புகிறார். இதுவும் சர்வாதிகாரிகளின் ஒரு உளவியல் தன்மையே.
 சர்வாதிகாரிகள் தம் பிம்பத்தை தொடர்ந்து மக்கள் மீது திணிப்பதன் மூலம் அதிகாரத்தை தக்க வைப்பவர்கள். அவர்களுக்கு செயல்பாடு முக்கியமே அல்ல. மக்களுக்கு தம் மீதுள்ள பார்வை எப்படி உள்ளது, அதை வேறெப்படி சாதகமாய் அமைக்கலாம் என்பதிலேயே முனைப்பு கொள்வார்கள். சர்வாதிகாரிகள் தம்மை மக்களின் நீட்சியாக சித்தரிப்பார்கள். மக்களின் தேவை என ஒன்றை கட்டமைத்து, அதை தாம் நிறைவேற்றுவதாய் காட்டுவார்கள். ஹிட்லரும் அதைத் தான் செய்தார். மக்களின் வெறுப்பை திரட்டி ஒரு பொது எதிரியை உருவாக்கி அதன் மூலம் சர்வாதிகாரியானார். அப்போது ஒவ்வொரு பிரஜைக்கும் தான் தான் ஹிட்லர் எனும் எண்ணம் உண்டானது. அதுவே சர்வாதிகாரிகளின் வலிமை. இப்போது இந்திய பிரஜைகளில் ஒரு சாரார் தம்மை மோடியாக கற்பித்துக் கொள்கிறார்கள். இதனால் மோடியின் குற்றங்களை அவர்களால் பார்க்க முடியாது போகும். மனிதனின் அடிப்படை இயல்பு தன் குற்றத்தை பார்க்க மறுப்பது தானே. தனது நீட்சியான சர்வாதிகாரியின் குற்றத்தை அவன் எப்படி பார்க்க இயலும்?
ஊழல், கறுப்புப்பணம், தொழில் உற்பத்தி ஆகியவை பற்றின மோடியின் பார்வையை கவனியுங்கள். எப்போதும் அவர் இவை அரசின் பணி அல்ல மக்களின் கடமை எனக் கூறுகிறார். அதாவது மக்கள் ஒழுக்கமாய் இருக்க வேண்டும். அதே போல் ஊழியர்களும் ஒழுக்கமாய் பணி செய்ய வேண்டும். மக்கள் தெருவைக் கூட்டி சுத்தம் செய்ய வேண்டும். மக்களே ஆளுக்கொரு கழிப்பறை கட்டி அதை உபயோகப்படுத்த வேண்டும். மக்களே கறுப்புப்பணம் ஒழிவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். மக்களே தொழில் உற்பத்தியையும் பெருக்க வேண்டும். அப்படியென்றால் அரசு தான் எதற்கு என நீங்கள் கேட்கக் கூடாது. மோடி தனது பிரஜைகளை தனது பிரதிபிம்பங்களாகப் பார்க்கிறார். தான் இப்படி சொல்லும் போது மக்கள் இதையே கிளிப்பிள்ளைகள் போல் “ஆமாம் நாங்கள் எங்களையே சரி பண்ணினால் தேசம் சரியாகி விடும்” என கூற வேண்டும் என எதிர்பார்க்கிறார். இந்த தந்திரத்துக்கு பலியாகிற மக்கள் என்றுமே மோடியை விமர்சிக்க மாட்டார்கள். ஜெர்மனியில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது ஹிட்லர் பதவிக்கு வருகிறார். அவர் பொருளாதார மேம்பாட்டை விட யூத வெறுப்பை அறுவடை செய்வது, யுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் தேசியவாத எழுச்சியை உருவாக்கி மக்களுக்கு தமக்கு சாதகமான, தாமே பங்கெடுக்கிற ஆட்சி நடப்பது போல் ஒரு தோற்றமயக்கத்தை உருவாக்குவது ஆகியவற்றில் தான் முனைப்பு காட்டினார். சர்வாதிகாரிகளுக்கு என்றுமே ஆட்சி செய்வதில் ஆர்வம் குறைவு தான். தம்மை பலமடங்காய் பெருக்கிக் கொள்வதில் தான் முனைப்பு அதிகம்.
இப்போது மோடி அரசாங்கம் இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரும் திட்டம் தீட்டியிருக்கிறது. 29-5-15ஆம் அன்றைய ஆங்கில ஹிந்து நடுப்பக்கத்தில் இதை கடுமையாய் விமர்சித்து ரொமிலா தாப்பர் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அரசின் இந்த திட்டம் கல்வித்தரத்தை மேம்படுத்த என மேம்போக்காய் கூறப்பட்டாலும் உண்மையான இலக்கு இந்தியாவின் உயர்கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுவது அனைத்தும் மோடிக்கு சாதகமாய் இருக்க வேண்டும் என்பது தான். உதாரணமாய் ஜவஹர்லால் நேரு பல்கலையை எடுத்துக் கொண்டால் அங்கு பா.ஜ.க மாணவர் அணியை விட இடதுசாரி அணிகளே வலுவாக உள்ளன. இந்த பாடத்திட்ட மாற்றம் மூலம் மொத்த ஜெ.என்.யுவையும் மோடி தன் பிரச்சார களமாய் மாற்ற இயலும். சமீபமாய் நடந்த சம்பவம் இது. சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் மாணவர் பேரவை மோடிக்கு எதிராய் சில சுவரொட்டிகள் ஒட்டினதற்கு புகார் தெரிவித்து ஒருவர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப, மத்திய அரசு உடனடியாய் இதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கல்லூரி முதல்வருக்கு ஆணை இடுகிறது. அப்பேரவை அதிகாரபூர்வமாய் தடை செய்யப்படுகிறது.
இந்தியா முழுக்க பல்கலைக்கழகங்கள் தன்னிறைவுடன் தம் போக்கில் அரசியல் சுதந்திரத்துடன் இயங்குவது மோடியின் உள்ளங்கையில் நமைச்சலை ஏற்படுத்துகிறது. எப்படியாவது இந்தியாவின் அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் எந்த ஆசிரியர் எதைப் பேச வேண்டும், எந்த மாணவர் எதைச் செய்ய வேண்டும் என்பதில் ஒரு கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டு வர ஆசைப்படுகிறார். இது நடைமுறையில் முழுக்க சாத்தியமில்லை என்றாலும் அப்படியொரு கட்டுப்பாடு இருப்பதாய் பிரமையை ஏற்படுத்தினாலே மோடி வென்று விடுவார். எங்கும் அவரது கண்காணிப்பு கேமரா இயங்குவதாய் ஒரு அச்சம் தோன்ற அனைவரும் வாயை மூடிக் கொள்வார்கள். அடுத்த சில வருடங்களிலும் இதற்கான முயற்சிகளைத் தான் மோடி அதிகம் செய்யப் போகிறார். பொருளாதார முன்னேற்றத்தை விட centralization இல் தான் அவருக்கு முனைப்பு அதிகம்.

 நன்றி: வெற்றிவேந்தன், ஜூன் 2015

Comments

King Viswa said…
ஐயன்மீர்,

அது ஆக்டபஸ். அக்டோபஸ் அல்ல.
This comment has been removed by the author.
கிங் விஸ்வா நீங்கள் கூறியிருப்பது அமெரிக்க உச்சரிப்பு. அது கூட தப்பு தான். ɑːஎன்பது அ அல்ல. தமிழ் அ வெளிவாயில் இருந்து காற்று வெடிப்பது போன்ற ஓசையுடன் கூறப்படுவது. ஆனால் ɑːஉள்வாயில் இருந்து வெளிப்படுவது. அவுக்கும் ஒவுக்கும் இடைப்பட்டது. அடுத்து ‘ட-பஸ்’ அல்ல tə-pəs. ə எனும் phonetic குறியீடு என்பது டவின் ட் + அ வில் வரும் அ அல்ல. அது எவுக்கும் இக்கும் இடைப்பட்ட ஓசை. சரி இங்கிலாந்து ஆங்கில உச்சரிப்பு ɒk.tə.pəs. இதன் துவக்க ஓசையான ɒ ஒ அல்ல. அது கால் மாத்திரை ஒ. நீங்கள் குறிப்பிடும் ஆக்டபஸ் ’ə’ மற்றும் ’ə’ ஆகிய ஓசைகளில் அபத்தமாய் ஒலிக்கிறது. இச்சொல்லை மட்டுமல்ல எந்த ஆங்கிலச்சொல்லையும் சரிவர தமிழில் உச்சரிக்க இயலாது. இதில் ஓரளவுக்கு நெருக்கமான உச்சரிப்பு கூட கிடையாது. பிழையென்றால் பிழையே. ஆக தமிழில் இதுவரை எப்படி உச்சரிக்கப்பட்டு வருகிறதோ அப்படியே எழுத வேண்டியதாகிறது. உதாரணமாய் நீண்ட காலமாய் தமிழ் நவீன கவிதையில் அக்டோபஸ் என்றே கூறப்படுகிறது. கிரிக்கெட் கூட தவறான உச்சரிப்பு தான். க்ரிக்கெட் என எழுதினாலும் தவறு தான். மொழியில் தொடர்ந்து புழங்கி வரும் எனக்கு இதெல்லாம் புரியும். அந்த தெளிவுடனே செய்கிறேன். மேலும் நான் phoneticsஐ முறையாக படித்தவன். அரைகுறை ஞானத்துடன் விமர்சிக்கும் முன் சற்றே யோசியுங்கள். உங்களையே நீங்கள் முட்டாள் ஆக்குவதற்கு இதைவிட சிறந்த வழிகள் உள்ளனவே! மேலும் மோடி பற்றின ஒரு தீவிரமான அரசியல் கட்டுரைக்கு சம்மந்தமில்லாத உச்சரிப்பு பற்றின கேள்வியை எழுப்புவதன் வழி என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்? சரி இவ்வளவு பேசி விட்டோம் ˌdʒaɪˈɡæn.tɪk என்பதை எப்படி ஆங்கிலத்தில் உச்சரிக்க வேண்டும் என சொல்லுங்கள் பார்ப்போம், உங்கள் ஆங்கில அறிவை நான் மெச்சுவதற்கான சந்தர்ப்பமாக அது அமையட்டும் :)