Wednesday, July 29, 2015

யாகூப் மேமனை கர்த்தர் ஆக்காதீர்கள்


RAW அமைப்பின் முன்னாள் தலைவரனா ராமனின் கட்டுரை ஒன்றை சமீபமாய் ரீடிப் இணையதளம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் யாகூப் மேமனுக்கு தூக்குத்தண்டனை அளிப்பது நியாயமல்ல என அவர் தெரிவித்திருந்தார். இந்த ஒற்றைத்தகவலை வைத்துக் கொண்டு இன்று மீடியாவில் யாகூப் அப்பாவி என ஆளாளுக்கு சித்தரிக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் பேஸ்புக்கில் அவர் செகுவெரா அளவுக்கு உயர்த்தி விடுவார்களோ என பயமாக இருக்கிறது.

ராமன் தன் கட்டுரையில் குண்டுவெடிப்பில் யாகூப்பின் பங்கை மறுக்கவில்லை. அவர் நிச்சயம் குற்றவாளி தான் என்கிறார். அதாவது பேரறிவாளன் போல் அவர் சதியாலோசனையில் ஓரமாய் நின்று பங்காற்றியவர் அல்ல. யாகூப் மூன்று பிரதான குற்றங்கள் செய்தார். 1) குண்டுவெடிப்புக்கான பணத்தையும் வாகனங்களையும் ஏற்பாடு செய்தார். 2) பாகிஸ்தானுக்கு சென்று இதற்காய் பயிற்சி பெற சென்ற குற்றவாளிகளும் விமான டிக்கெட் ஏற்பாடு பண்ணினார். 3) கிரனேட் உள்ளிட்ட ஆயுதங்களை திரட்டி வாகனங்களுடன் அளித்தார். அதற்காகத் தான் அவரை கைது பண்ணினார்கள். குண்டுவெடிக்கப் போவது அவருக்கு நிச்சயம் தெரிந்திருந்தது. அதனாலே மீதமுள்ள மொத்த மேமன் குடும்பத்துடன் அவர் துபாய்க்கு முன்கூட்டியே பறந்தார். குண்டுவெடிப்புக்கு பின் துபாய் அரசாங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாய் மேமன் குடும்பத்தினர் பின்னர் பாகிஸ்தானுக்கு புறப்பட்டார்கள். அங்கு ஐ.எஸ்.ஐயின் பராமரிப்பில் இருந்தார்கள். ஆனால் ஐ.எஸ்.ஐயுடன் யாகுபும் பிற மேமன் குடும்பத்தினரும் சௌகரியமான உறவில் இல்லை. சிக்கல்கள் தோன்றுகின்றன. அப்போது நம்முடைய புலனாய்வு அதிகாரிகள் யாகுபுடன் சமரச பேச்சுவார்த்தை ஆரம்பிக்கிறார்கள். இந்தியாவுக்கு வந்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதாய் வாக்களிக்கிறார்கள். அதை நம்பி போதிய ஆதாரங்களுடன் யாகூப் நேப்பாள் போய் கைதாகிறார். அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருகிறார்கள். இதை ரா அமைப்பினர் மிகத் திறமையாய் கையாள்கிறார்கள். அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் மகிழ்ச்சியடைகிறார். ஆனால் ராமனைப் பொறுத்தமட்டில் பிறகு தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் யாகுபையும் பிறரையும் சிறையில் தள்ளி கடும் தண்டனைகள் அளிக்கிறார்கள். யாகுபுக்கு தூக்குத்தண்டனை கிடைக்கிறது. ஒருவரை இப்படி அழைத்து வந்து ஏமாற்றுவது அறமற்ற செயல் என்கிறார் ராமன். அதாவது அவரது துறையின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் குற்றவாளிகளுடன் சமரசம் மூலம் கைது செய்த பின் நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது. திருட்டுத்தனத்திலும் ஒரு நேர்மை வேண்டுமல்லவா என்று மட்டுமே ராமன் கேட்கிறார்.
இவ்வழக்கில் யாகூப்புக்கு எதிரான சாட்சியங்கள் பலவீனமானவை, மரண தண்டனைக்கு ஏற்றபடி வழக்கு வலுவாய் இல்லை என முன்னாள் நீதிபதி மார்கெண்டேய கட்ஜு சொல்கிறார். இது பெரும்பாலான தீவிரவாத வழக்குகளுக்கும் பொருந்தும். இவ்விசயத்தில் நீதிமன்றம் புலனாய்வு அதிகாரிகளை நம்பி தீர்ப்பளிக்கின்றன. ஏனென்றால் தீவிரவாத குழுக்கள் எந்த தடயமும் விட்டு வைக்காமல் மிகவும் தந்திரமாய் செயல்படுபவை. அஜ்மல் கசாப் வழக்கில் போல் மிக அரிதாவே நேரடியான ஆதாரங்கள் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கும். கராறான உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் தண்டனை அளிக்கக் கூடாது என்றால் 99% தீவிரவாதிகளையும் வெளியே விட்டு விட வேண்டியது தான். இதனால் சில நிரபதராதிகள் பாதிக்கப்படலாம். அவர்களுக்காய் போராடுவது சிவில் அமைப்புகளின் வேலை. ஆனால் இந்த நடைமுறை சிக்கலை நாம் மறுக்க இயலாது.
யாகூப் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்பது நியாயமான வாதம். எப்படியும் மரண தண்டனை கூடாது என்பது என் வாதம். கசாப்பை கூட நாம் தூக்கிலிட்டிருக்கக் கூடாது. அந்த உரிமை நமக்கில்லை. ஆனால் இத்தண்டனை அளிக்கப்பட்டாதாலே யாகூப்பை நிரபராதி, பலிகடா என்றெல்லாம் வர்ணிப்பது அசட்டுத்தனம்.
”பிளேக் பிரைடே” நூல் எழுதிய ஹுசைன் செய்தியின் சமீபத்திய கட்டுரை அப்படித் தான் இருந்தது. யாகூப் தன் அண்ணன் டைகர் மேமனுக்கு எதிரானவர். அண்ணனின் குற்றத்துக்கு தண்டனை வாங்கி அளிக்கவே அவர் நிறைய ஆதாரங்களுடன் இந்திய புலனாய்வு அமைப்பிடம் சரணடைந்தார் என ஹுசெய்ன் செய்தி எழுதுவது நம்பத் தகுந்ததாய் இல்லை.
யாகூப் சிறுபான்மை மதத்தவர் என்பதால் பா.ஜ.கவால் குறிவைக்கப்படுகிறார். தேசியவாத நற்பெயருக்காய் மோடி யாகூப்பை கொல்லப் பார்க்கிறார் என்பதில் ஓரளவு உண்மை உண்டு என்றாலும் பொய் தீவிரவாத குற்றங்கள் சுமத்தப்பட்டு ஜெயிலில் வாடும் பிற கீழ்த்தட்டு இஸ்லாமிய இளைஞர்களை போன்றவரல்ல யாகூப். அவர் பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். அவரது அண்ணன் கடத்தல்காரர். நிழலுலக தாதா. பாகிஸ்தானுக்கு தப்பி செல்லும் முன் அவரது வீட்டு காரேஜில் பதுக்கி இருந்த தங்க நகைகள் மற்றும் வைரங்களின் மதிப்பே கோடிக்கணக்கில் இருக்கும். கைதான பின் 22 வருடங்களில் 13 வருடங்கள் மட்டுமே அவர் சிறையில் இருந்திருக்கிறார். அதுவும் விலையுயர்ந்த ஆடைகள் அணிந்து மிகவும் ஸ்டைலாக ஜெயிலில் வாழ்ந்திருக்கிறார். அவரது வக்கீல்கள் சாட்சிகளை மிரட்டுவதாய் நீதிபதி ஜெ.என் பட்டேல் நேரடியாகவே கண்டித்தார். இப்படி பணபலமும் ஆள்பலமும் மிக்க ஒரு குற்றவாளிக்காய் தான் இன்று நமது மனித உரிமை ஆதரவாளர்கள் கொடி தூக்க வேண்டுமா?
அண்ணனுக்கு எதிராய் சாட்சி அளிக்க விரும்பினால் ஏன் யாகூப் குண்டுகள் வெடிப்பது வரை காத்திருந்திருக்க வேண்டும்? முன்பே அண்ணனின் நிழலுலக நடவடிக்கைகளை ஆதாரங்களோடு வெளிப்படுத்தி இருந்தால் எத்தனையோ மக்கள் காப்பாற்றப்படிருப்பார்களே? தவறான வழியில் சம்பாதித்த கொழுத்த ஒரு குற்றவாளியை சிறுபான்மையினர் எனச் சொல்லி ஆதரிப்பது உண்மையாகவே ஒடுக்கப்படும் சிறுபான்மையினருக்கே அவமானம். யாகூப் மேமனை மெனக்கெட்டு ஆதரித்து பேசிய சல்மான் கான் அவரைப் போன்ற ஒரு மேற்தட்டு சிறுபான்மை ஆள் தான். ஒருவரின் சமூகத்தட்டு, பின்னணி, சமூக செல்வாக்கு ஆகியவற்றை கணக்கில் கொண்டே நாம் யார் சிறுபான்மையினர் என தீர்மானிக்க வேண்டும். சமீபத்தில் தில்லியின் பல்கலைக்கழக குழு ஒன்று வெளியிட்ட புள்ளி விபரத்தில் தூக்கிலிடப்படும் குற்றவாளிகள் பலரும் ஏழைகள் மற்றும் தலித்துகள் என தெரிவித்தது. ஏனென்றால் அவர்களுக்கு வழக்காட பணமோ சட்ட அறிவோ குறைவு. ஆனால் இந்த வகைமைக்குள் நாம் யாகூப்பை கொண்டு வர முடியாது. அவர் 22 வருடங்களுக்கு மேலாக எப்படி மறுமுறையீடுகள் மூலம் தொடர்ந்து வழக்காடி தண்டனையை தாமதப்படுத்தினார்? அதற்கான பணவசதியும் பின்னணியும் அவருக்கு உள்ளதால் தான். அந்த பணம் எங்கிருந்து வந்தது?
யாகூப்பை மட்டுமல்ல எந்த குற்றவாளையும் கொல்வதற்கு இந்த தேசத்திற்கு உரிமை இல்லை. அது அறமல்ல. மரண தண்டனை குற்றங்களை குறைக்கும் என்பதே ஆதாரமற்ற ஒரு போலி நம்பிக்கை. ஆனால் அதேவேளை யாகூப்பை ஒரு சிறுபான்மை போராளியாக இந்த சந்தர்பத்தில் சித்தரிக்காதீர்கள்? அவர் இந்த சமூகத்துக்காக என்ன செய்து விட்டார்?

யாகூப் மேமனின் அண்ணன் டைகர் மேமன் கூட தன் சமூகத்துக்கு மக்கள் அயோத்தியா தாக்குதலில் பாதிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் முகமாய் குண்டுவெடிப்புக்கு ஏற்பாடு செய்யவில்லை. குண்டுவெடிப்பில் பங்கேற்ற எளிய மனிதர்கள் பலருக்கும் அவ்வாறு பெரும்பான்மை இந்துக்கள் மற்றும் பா.ஜ.க மேல் அப்படியான வெறுப்பும் பழிவாங்கும் வெறியும் இருந்தது. ஆனால் டைகர் மேமனுக்கு இல்லை. மும்பை கலவரத்தில் மேமனின் பல வணிக ஸ்பாதனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்துக்கு பழிவாங்கவே அவர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டார் என்று தன் “பிளேக் பிரைடே” நூலில் சொல்கிறார் ஹுசைன் செய்தி. மேமன்களிடம் இருந்தது சமூக கோபம் கூட அல்ல. தீவிரவாதம் தவறு என்றாலும் கலவரத்தில் தன் சமூகம் சூறையாடப்பட்டு கொல்லப்பட்டது, மதசின்னங்கள் அழிக்கப்பட்டது பற்றி இஸ்லாமியர் அடைந்திருக்கக் கூடிய கோபத்தில் கூட சிறிது நியாயம் உள்ளது. அதை நாம் நிச்சயம் புரிந்து கொள்ளலாம். ஆனால் தன் சொத்து அழிக்கப்பட்டதற்கான வெறும் பழிவாங்கும் உணர்வு மட்டுமே மேமன்களைத் தூண்டியது. அதற்காக 257 பேர் கொல்லப்பட்டார்கள். 700 பேர் காயமுற்றார்கள்.

1 comment:

Hamaascom Alim said...

நண்பரே... உங்கள் கருத்து சரியாக இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம். அப்படியானால் பல்வேறு குண்டுவெடிப்பை நிகழ்தியது நாங்கள் தான் என ஒத்துக்கொண்ட அசிமானந்தா, பிரக்கியா சிங் போன்றவர்களுக்கு தூக்கு வழங்க தயங்குவது ஏன்? ஏனென்றால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல.... ஏனிந்த பாகுபாடு... இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் அடுத்த 5 நிமிடங்களில் முஸ்லிம்கள் பெயரில் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து முஸ்லிம்களை கேவலப்படுத்துவதும். பிறகு அதில் சம்மந்தப்பட்டவர்கள் அதாவது அசிமானந்தா போன்றோர் கைது செய்யப்ப்பட்டால் அதை மூடி மறைப்பதும் என்ன நியாயம். உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற தோரணையில் பேசுவதை நிருத்துங்கள். நியாயத்தை பேச முடியாவிட்டால் பயந்தால் ஒதுங்கி போங்கள்.