Friday, July 24, 2015

ஓரினச்சேர்க்கையும் இன்றைய விவாதமும்


ஓரினச்சேர்க்கை பற்றின ஜெயமோகனின் பழைய கட்டுரை ஒன்றை படித்த போது அவர் பாலினம் (sex) மற்றும் பாலியலுக்கு (gender) இடையிலான வித்தியாசம் இப்பிரச்சனையை எந்தளவுக்கு தீர்மானிக்கிறது என்பதை கவனிக்கத் தவறி விட்டார் எனத் தோன்றியது.

அதற்கு முன் வேறொரு விசயம். சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ள ஆண்மை பிம்பம் தான் ஓரினச்சேர்க்கையை ஒரு தவறான நடத்தையாக பார்க்க காரணம் என கூறுகிறார். எனக்கு இதை விட குழந்தைப்பேறு மிக முக்கிய காரணம் எனப் படுகிறது. ஓரினச்சேர்க்கை மட்டுமல்ல ஆசனவழிப்புணர்தல், சுயமைதுனம் கூட உலகெங்கிலும் ஆதிகாலம் முதற்கொண்டே கடுமையான ஒழுக்க சாடலுக்கு ஆளாகி வந்துள்ள பழக்கங்கள். காரணம் இவை விந்தை வீணடிப்பவை என்பது தான். பழங்காலத்தில் மனிதனின் பிரதான சம்பாத்தியமே குழந்தை செல்வம் தான். அதனால் ஓரினச்சேர்க்கை அதற்கு பெரும் தடையாக இருந்திருக்க வேண்டும். இன்றும் தன் மகனோ மகளோ ஓரினச்சேர்க்கையாளர் என அறியும் பெற்றோருக்கு ஏற்படும் முதல் பயம் சந்ததி தொடர்ச்சியின்றி போகுமே என்பது தானே! (அறிவியல் இதற்கு தீர்வுகள் கண்டாலும் கூட)

நாம் முதலில் சொன்ன விசயத்துக்கு வருவோம். ஒருவன் ஆண் உடலுடன் பிறந்து பௌதிகமாய் ஆணாய் இருப்பது அவனது பாலினம் (sex). அது மாறாதது. ஆனால் அதுவே அவனது பால் அடையாளமோ உடலுறவு விருப்பத் தேர்வைத் தீர்மானிப்பதாகவோ இருக்காது. அவனது பால் அடையாளம் அவனது பாலியல் (gender). இன்றைய உடல் விவாதங்கள், ஆண்மை ஆய்வுகள் (masculinity studies) ஆகியவை இந்த வித்தியாசத்தை ஒட்டித் தான் இருக்கின்றன. பெண்ணியம் கூட இந்த மையக்கோட்டை ஒட்டியே மறுவரைவு செய்யப்படுகிறது.

 எளிதாக சொல்வதானால் ஒரு ஆண் தனக்குள் பெண்ணின் மனதுடன், பால் ஆசைகளுடன் இருக்கலாம். அவன் ஒரு ஆணுடன் கூடும் போது ஆணுடலில் உள்ள பெண்ணாக இருக்கிறான். பிறகு அவன் ஒரு பெண்ணுடன் கூட போது ஆண் உடலில் உள்ள ஆணாக இருக்கிறான். இதுவே பெண்களுக்கும் பொருந்தும். ஓரினச்சேக்கையாளப் பெண்கள் இருவர் சேரும் போது அவர்கள் இரு பெண்கள் அல்ல. ஆணும் பெண்ணுமே. இப்போது ஆணாதிக்கம் பற்றி ஒரு பெண் பேசும் போது ஆண் வடிவில் இருக்கும் ஆணை சொல்கிறாரா அல்லது பெண் வடிவில் உள்ள ஆணைச் சொல்கிறாரா? இன்றைய பின்நவீனத்துவ விவாதங்களில் பாலியல் என்பது தற்காலிகமானதாய் அல்லது பாலினத்தோடு தொடர்பற்றதாய் பார்க்கப்படுகிறது. ஆண் உடலுக்குள் ஆண் மட்டுமே இருப்பான், இருக்க முடியும் எனும் பத்தொன்பதாம் நூற்றாண்டு சிந்தனை தான் ஓரினச்சேர்க்கையை கடுமையாய் எதிர்க்க செய்கிறது. இதுவே தான் திருநங்கைகளை வெறுக்க செய்கிறது. பெண்மை கொண்ட ஆணையும் ஆண்மை மிகுந்த பெண்ணையும் கேலி செய்ய வைக்கிறது. ஆனால் இந்த இறுக்கமான பார்வை நகரமய சூழலில் மெல்ல மெல்ல நெகிழ்ந்து வருகிறது. ஜெயமோகன் இதை ஒரு நிலப்பிரபுத்துவ மனநிலை ஏற்படுத்தும் பிரச்சனையாக பார்க்கிறார். ஆனால் அது உண்மை என்றால் முதலாளித்துவம் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் (சில மாகாணங்களில் சட்டபூர்வமாய் ஏற்கப்பட்டாலும் கூட) ஏன் ஓரின உறவு கடும் கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாக வேண்டும்?


உடலையும் வாழ்நிலையும் ஒன்றோடு ஒன்று பொருத்தமானதாய் பார்க்கிற பார்வை நீங்கி உடலுக்கும் செயலுக்கும் நெகிழ்வான தொடர்பே உள்ளது என சமூகம் சிந்திக்கிற காலத்தில் ஓரினச்சேர்க்கை இயல்பானதாய் ஏற்கப்படும். அதற்கு பெரும் புரட்சி ஏதும் அவசியமில்லை என நினைக்கிறேன். நாம் மெல்ல மெல்ல அக்காலத்தை நோக்கியே நகர்ந்து வருகிறோம். அடுத்த ஒரு நூற்றாண்டில் மனிதர்கள் திருமணம் செய்வது வெகுவாய் குறையும். தற்காலிகமாய் மட்டும் சேர்ந்து வாழ்வார்கள். குழந்தை வளர்ப்பதற்கு வேறு ஏற்பாடுகள் தோன்றும். ஆண்மைக்குறைபாடு அதிகரித்து குழந்தைப்பேறும் குறையும். ஒருவனை தன் உடலால் மட்டுமே ஆண் என அழைக்க மாட்டார்கள். அன்று துணை மட்டுமே முக்கியமாய் இருக்கும். துணையின் பால்நிலை அல்ல. 

No comments: