Wednesday, July 22, 2015

இணைய ஷாப்பிங்கும் போர்ன் போதையும் -


இணையத்தில் பொருள் வாங்குவதும் மால்களிலும் தி.நகர் தெருக்களிலும் அலைந்து பேரம் பேசாமலும் பேசியும் வாங்குவதும் வேறுவேறா? ஏன் கேட்கிறேன் என்றால் இணைய ஷாப்பிங் ஒரு தொற்று வியாதி என்றும், வாடிக்கையாளர்களை மாட்ட வைத்து நிரந்தர கடனாளிகளாக்கும் கார்ப்பரேட் சதி என்றும் சமீபமாய் அதிகம் விமர்சிக்கப்படுகிறது.

 நான் கல்லூரியில் படிப்பதற்காய் சென்னைக்கு கிளம்பும் வேளையில் ஒரு மூத்த எழுத்தாளர் என்னை இது போலத் தான் எச்சரித்தார். அது தொண்ணூறுகளின் பிற்பகுதி. இணையம் ஒரு நிர்வாணக் கடற்கரை போல் திறந்து விரிந்திருந்தது. இணையத்தில் சிக்கி இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று முந்தின தலைமுறையினரிடத்து பீதி உண்டானது. மூத்த இலக்கியவாதி என்னிடம் தனக்குத் தெரிந்த ஒரு இளைஞர் சென்னைக்கு படிக்க சென்றதாகவும் அவர் தினமும் பன்னிரெண்டு மணிநேரத்துக்கு மேல் இணையத்தில் பாலியல் தளங்களை பார்க்க செலவிட்டு, நேரத்தையும் பணத்தையும் வீணடித்து நாசமாய் போனதாயும் சொன்னார். அவர் சொன்ன போது ஒருவர் 12 மணிநேரத்துக்கு மேல் பாலியல் காட்சிகளைப் பார்க்க செலவழித்து விளங்காமல் போனது சாத்தியம் தான் எனத் தோன்றினாலும் சென்னைக்கு வந்து விடுதியில் தங்கி படிக்கத் தொடங்கிய பின் வெறுமனே இணையத்தில் பல மணிநேரங்கள் செலவழித்து ஒருவர் எப்படி தன்னை கெடுத்துக் கொள்ள முடியும் என எனக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் போர்ன் தளங்களுக்கு போகாதவர்களும் வேறுவகைகளில் தம் நேரத்தை வீணடித்தபடித் தான் இருந்தார்கள். இணைய ஷாப்பிங் ஆபத்து பற்றிய பீதிக்கும் இது பொருந்தும்.
இவ்வாறு நம்மை எச்சரிப்பவர்களிடம் ஒரு தீவிரமான ஒழுக்க மனநிலை செயல்படுகிறது. பொதுவான போர்ன் போதை பற்றி போதிப்பவர்கள் கோடிக்கணக்கான போர்ன் தளங்கள், அவற்றில் வீணாகும் ஆயிரம் கோடி மணிநேரங்கள், அது நம் மூளை நரம்புகளை நிரந்தரமாய் மாற்றி அமைத்து நம்மை நோயாளியாக்குவது, அதனால் நான் அன்றாட ஆரோக்கிய வாழ்வுக்கு மீள முடியாதது பற்றி நிறைய புள்ளிவிபரங்கள் கூறுவார்கள். இணையஷாப்பிங் பற்றி பேசி ஆவி விரட்டுபவர்களூம் இது போல் அடிக்‌ஷன் பற்றி நூற்றுகணக்கான பக்கங்கள் புள்ளிவிபரங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் எதுவுமே அன்றாட வாழ்வை இவ்ரகள் பீதி கிளப்புவது போல் பாதிப்பதோ மாற்றுவதோ இல்லை.
ஒரு பக்கம் போர்ன் பக்கங்களில் உலவியபடியே சகஜ வாழ்வில் இயல்பாய் பெண்களை நாடி காதலித்து மணம் புரிந்து வாழ்கிறவர்களும் கணிசமாய் இருக்கிறார்கள். எப்படி காட்பாதர் படத்தில் மைக்கேல் கோர்லியானோ தன் அடி ஆட்களை ஏவி தன் எதிரிகளை – தன் சகோதரையும் சேர்த்து – கூட்டாக கொல்லும் வேளையில் ஒரு தேவாலயத்தில் அமர்ந்து தன் சகோதரனின் பையனுக்கு ஞானஸ்தானம் வழங்கும் சடங்கில் பங்கேற்றபடி இருப்பானோ அது போலத் தான் போர்ன், இணைய ஷாப்பிங் போன்ற போதைகளில் ஈடுபடுகிறவர்களூம் அதன் தடயம் சற்றும் இல்லாமல் இயல்பு வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். போதகர்கள் முத்திரை குத்துவது போல் இவர்கள் எல்லாரும் வியாதிஸ்கர்கள் அல்ல. இந்த விமர்சகர்களின் உண்மையான நோக்கம் ஒழுக்க போதனை மூலம் சில அப்பாவி ஆடுகளைப் பிடித்து மணி கட்டி ஒடுக்குவது தானோ என சந்தேகம் எனக்கு உள்ளது.
ஒவ்வொரு பத்து வருடங்களிலும் ஒரு புது அறிமுகம், ஒரு புது மோஸ்தர் தீயாக பரவும்போதும் இப்படியான “ஐயோ உலகம் அழியப் போகிறதே” எனும் பீதி பிரச்சாரங்கள் கிளம்பும். ஆனால் மக்கள் ஒரு பக்கம் இதன் சாதகங்களை மட்டும் உள்வாங்கி தம் அன்றாட வாழ்வு அதிகம் பாதிக்கபடாத வகையில் அமைத்துக் கொள்கிறார்கள். எல்லா விசயங்களையும் போல இணைய ஷாப்பிங்கிலும் தீவிரமான எதிர்நிலைக்கு சென்று கடுமையாய் பாதிக்கப்பட்டு மன அழுத்ததுக்கு கடனுக்கு ஆளாகிறவர்கள் இருப்பார்கள். OLX போன்ற இணையதளங்களில் சுலபலமாய் ஆயிரக்கணக்கில் பணத்தை ஏமாந்து இழக்கிறவர்கள் பற்றி செய்திகள் வருகின்றன. இதெல்லாம் தவிர்க்க முடியாத அம்சங்கள். ஆனால் இதுவே பொதுவான மக்கள் நிலை அல்ல.
இணைய ஷாப்பிங் வாழ்க்கையில் அலைச்சலை குறைத்துள்ளது. புதுவிதமான வணிகத்தை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளது. இது உருவாக்கும் போட்டி காரணமாய் குறும்பேசி உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் குறைவான விலையில் வாங்கக் கிடைக்கின்றன. முன்பு நீங்கள் ஒரு மொபைல் வாங்கச் சென்றால் கடைக்காரரின் விற்பனைத் தேவையை ஒட்டியே அவர் தருகிற பிராண்ட் மொபைலைத் தான் வாங்க வேண்டி வரும். நாம் ஒன்றை எதிர்பார்த்து சென்று அவர்கள் நம்மிடம் திணிக்கிற மோபைலை வாங்கி வர நேரும். ஆனால் இன்று விற்பனையில் சுணங்கியுள்ள பிராண்டாக பார்த்து 50% குறைவான விலையில் வாங்க முடிகிறது. அது மட்டுமல்ல வீட்டுக்கு தேவையான பல பொருட்களை வீட்டிலிருந்தபடியே அல்லது ஒரு மொபைல் ஆப்பின் வழியே பயணத்தில் இருக்கும்போதே நொடிகளில் வாங்க முடிவது ஒரு பெரிய சௌகரியம் தான். புத்தகங்கள் வாங்குவதற்கு நடையாய் நடந்தவர்கள், நண்பர்களுக்கு தபால் அனுப்பி அஞ்சல் வழியாய் பெற்றவர்களுக்கு இப்போதுள்ள இணைய வணிகம் ஒரு வரம் அல்லவா! என்னுடைய முனைவர் பட்ட ஆய்வின் நெறியாளர் தான் ஆய்வு செய்த காலத்தில் துணைநூல் பட்டியலில் சேர்ப்பதற்கான ஒரு முக்கியமான நூலின் விபரங்களை தொலைத்து விட்டு அதை கண்டுபிடிப்பதற்காய் தில்லி வரை ரயிலில் சென்று நூலகம் சென்று பார்த்து வந்த கதைகளை சொல்வார். இப்போது ஆய்வு மாணவர்கள் தேவையான நூல்களை இணையம் வழி வாங்கிக் கொள்கிறார்கள். பயண அலைச்சலை மிச்சம் பிடிக்கிறார்கள்.
கடந்த வருடம் அமேசான் இணையதளம் தீபாவளியை ஒட்டி பிரம்மாண்ட கழிவுகளை தருவதாய் டி.வி, செய்தித்தாள்கள் எங்கும் பரவலாய் விளம்பரம் செய்தது. விளைவாய் குறிப்பிட்ட நாள் விடிகாலையிலேயே கோடிக்கணக்கான பேர் காலை ஆறுமணியில் இருந்தே கணினியை திறந்து வைத்து மலிவு பொருட்களை பொறுக்க காத்திருந்தனர். அரைமணியில் மலிவு பொருட்கள் காலியாகின. அதன் பிறகும் கூட பல பொருட்கள் 30-40% கழிவில் கிடைத்தன. அலுவலகங்களில் ஊழியர்கள் ஆளாளுக்கு அமேசான் இணையதள வாசலில் பழிகிடக்க வேலை முடங்கியது. நேரத்துக்கு பொருட்களை கொண்டு சேர்க்க முடியாமல் ஆமேசானின் குரியர் சேவையாட்கள் திணறினர். அமேசான் ஏற்படுத்திய பரபரப்பு அடங்க சில நாட்கள் பிடித்தது. நானும் 5000 ரூபாய் கழிவுக்கு ஒரு மொபைல் வாங்கினேன். அதைப் பற்றி எந்த வருத்தமும் இன்றளவும் எனக்கு இல்லை. தொடர்ந்து இணையத்தில் விற்பனைக்கான பொருட்களை வேடிக்கை பார்க்கிறவன் என்கிறவன் எனும் நிலையில் அவை ஏற்படுத்தும் வசீகரத்தையும் மயக்கத்தையும் உணர்கிறேன். இணையம் மட்டுமே இவ்வாறு பொருட்களை பொருட்களுக்காய் அன்றி வாங்கும் குறுகுறுப்புக்காய் வாங்க தூண்டுகிறது என்று சொல்ல முடியாது. அடிப்படையில் சந்தையில் பொருட்களை வாங்கும் தூண்டுதல் என்பதே இந்த வசீகரத்தின் அடிப்படையிலானது தான். இணையம் இத்தூண்டுதலை அதிகமாய் முடுக்கி விடுகிறது எனலாம்.
நம்முன் உள்ள கேள்வி எப்படி பார்த்ததை எல்லாம் ஒரு மௌஸ் சொடுக்கில் வாங்கி சேர்க்கும் ஆவேசத்தை மட்டுப்படுத்துவது என்பதுதான். இரண்டு விடைகள் உள்ளன. 1) நிறைய ஆய்வு செய்யுங்கள். அமேசான் போன்ற தளங்களில் பொருட்களின் தரம், கொரியர் சேவை, விலையின் நியாயம் பற்றி நிறைய வாடிக்கையாளர் மதிப்புரைகள் படிக்க கிடைக்கின்றன. ஒரே பிராண்ட் பற்றி பல மதிப்புரைகளை தருவதை முழுவேலையாக கொள்ளும் பிற இணையதளங்களும் உள்ளன. யூடியூப் இணையத்தில் இதே போன்ற மதிப்புரை காணொளிகள் ஏராளமாய் கிடைக்கின்றன. நான் ஒரு பொருளை வாங்கும் முன் இந்த மதிப்புரைகள் வாசிப்பதை ரொம்ப சீரியசாய் எடுத்துக் கொள்வேன். பல மணிநேரங்கள் அதைப் பற்றி அலசி தெரிந்து கொள்ள எடுத்துக் கொள்வேன். என்னுடைய டேப்லெட் ஒன்றை வாங்குவதற்காய் நிறைய படித்து அலசி யோசிக்க ஒரு வாரத்திற்கு மேல் எடுத்துக் கொண்டேன். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் இல்லை எனத் தோன்றும் போது சென்று வாங்குவேன். இது என் வழக்கம். இதன் மூலம் ஆரம்ப கட்ட பரபரப்பில் ஒரு பொருளை வாங்கும் சறுக்கலை தவிர்க்கலாம். இது ஒரு பெண்ணைப் பார்த்து கடற்கரை, காபிஷாப், திரையரங்கு என சுற்றி, சில மாதங்கள் முடிந்தால் கூட வாழ்ந்து திருமணம் பற்றி முடிவெடுப்பது போன்றது இந்த யுக்தி. ஏமாற்றமடையவும் மாட்டிக் கொள்ளவும் வாய்ப்பு 50% குறைவு.
2) இந்த தீர்வு பற்றிப் படித்ததும் உங்களுக்கு கொஞ்சம் சிரிப்பு வரலாம். ஆனால் உண்மை. அதாவது குறைவாக சம்பாதிப்பது. மாதம் ஒரு லட்சம் போல் சம்பாதித்தால் அதில் ஒரு பகுதியை ஆன்லைனில் கரைக்க தோன்றுவதை தவிர்க்க முடியாது. சுருக்கி செலவழித்து பணத்தை சேர்த்து வைக்கும் காலகட்டத்தில் நாம் இன்று வாழவில்லை. நிறைய சம்பாதித்தால் நிறைய செலவழிக்க வேண்டும் என்பது இன்றைய உளவியல். நிறைய செலவழிக்கும் போது ஒரு வெறுமை தோன்றும். இது மன அழுத்தம் நோக்கி கூட நம்மைத் தள்ளலாம். குறைவாய் சம்பாதித்தால் பொருளாதார நெருக்கடி இருக்கும் என்றாலும் வெறுமை இராது. மேலும் பணமிருந்தால் தானே ஆன்லைன் ஷாப்பிங் அடிக்‌ஷன் வரும். இத்தனை வருடங்களில் இணையத்தில் பணத்தை இழந்து விடுவேனோ என நான் கவலைப்பட்டதே இல்லை. பணமிருந்தால் தானே இழப்பதற்கு. அதனால் நிம்மதி வேண்டுமென்றால் குறைவாய் சம்பாதியுங்கள்.
இறுதியாக: இணையத்தில் பொருள் வாங்குவதை ஒரு சோம்பலான செயலாக பார்த்து குற்றம் கூறுவதை நிறுத்துங்கள். சோம்பேறிகளை ஒழுக்கத்தராசில் வைத்து மதிப்பிட வேண்டியதில்லை. நிறைய சுறுசுறுப்பாய் வேலை செய்யும் போது ஏற்படும் அலுப்பும் வெறுமையும் தான் உங்களை சோம்பலை நோக்கி தள்ளுகிறது. அதுவே தான் ஷாப்பிங் செய்யவும் தூண்டுகிறது. பிரச்சனை ஷாப்பிங்கில் இல்லை. ஓய்வு ஒழிவற்ற வேலையில் இருக்கிறது. வேலையை குறையுங்கள்.

போர்ன் பார்ப்பதால் மனிதர்களுக்கு புணர்ச்சியில் ஆர்வம் போனதாய் கூற முடியாது. ஆனால் நிர்வாணம் மீது உள்ள கிளுகிளுப்பு குறைந்துள்ளது. இணைய ஷாப்பிங்கும் பணத்தை செலவழிப்பதன் மீதுள்ள கிளுகிளுப்பை, புதுமையை குறைத்துள்ளது. அவ்வளவு தான்!

1 comment:

jk22384 said...

It is a kind of OCD to buy online, because you have the feeling that you get what you want without going out of your house. It is in fact a continuation of your childhood obsessive behaviour. This is a replica of old time street hawkers who came to your house to supply your wants. Only difference is you buy via computer or mobile.

Jayakumar