Saturday, July 11, 2015

இரண்டு வகை வாசிப்பு மற்றும் எழுத்து


வாசிப்பை செயலூக்கமுள்ளது (active) மற்றும் செயலற்றது (passive) என பிரிக்கலாம். இன்று மீடியா ஆதிக்கம் காரணமாய் செயலற்ற வாசிப்பு அதிகரித்துள்ளது. அல்லது இப்படியும் பார்க்கலாம். புதிதாய் இணையம் மற்றும் பத்திரிகை மூலமாய் வாசிக்க துவங்கி உள்ளவர்களின் வாசிப்பு செயலற்றதாய் உள்ளது.


ஐ.டியில் பணிபுரிந்து பின்னர் ஒரு முக்கிய சினிமாவில் வில்லனாய் நடித்த ஒரு இளைஞரை சந்தித்தேன். அவர் தான் இயக்குநராக விரும்புவதாய் தெரிவித்தார். எப்படி அதற்காய் தயாரிக்கிறீர்கள் எனக் கேட்டேன். அவர் சொன்னார் “நான் யாரிடமும் உதவி இயக்குநராய் பணி புரியவில்லை. நானாகவே கற்றுக் கொள்கிறேன்”
“எப்படி? சினிமா பற்றின புத்தகங்கள் படிக்கிறீர்களா?”
“நான் புத்தகங்கள் அதிகம் படிக்க மாட்டேன். ஆனால் இணையத்தில் நிறைய வாசிக்கிறேன்”

இணைய வாசகர்கள் சிலரிடம் உரையாடும் போதும் அவர்களின் வாசிப்பும் முகநூல், இணையதளம் என்றே குறுகி இருப்பதை அறிந்தேன். சினிமா பற்றின இணையதளங்கள், வலைப்பூக்கள் மட்டுமே படிப்பவர்கள், தமக்குப் பிடித்த பொதுவான பிளாகர்களை தொடர்பவர்கள், இலக்கிய இணையதளங்கள், சாரு, ஜெ.மோ, எஸ்.ராவை மட்டும் படிப்பவர்கள் என பலவகையினர் இருக்கிறார்கள். ஒரு நண்பர் தான் முகநூலில் மட்டுமே படிப்பதாய் கூறினார். அதற்கு அவர் சொன்ன காரணம் வியப்பூட்டியது. முகநூல் வழி தமிழுடனான தொடர்பை தக்க வைப்பதாய் சொன்னார். அதற்கு தந்தி படித்தாலே போதுமே? இல்லை இணையம் வேறொரு மாயம் செய்கிறது.

நீங்கள் இலக்கியவாதிகளை அவர்களது இணையதளம், முகநூல் பக்கம் ஆகியவை மூலம் பின் தொடர்ந்து படிக்கும் போது இலக்கிய போக்குகள், முக்கியமான கருத்துக்களுடன் பரிச்சயம் கிடைப்பதாய் நம்பத் துவங்குவீர்கள். உதாரணமாய் தினமும் ஒரு இலக்கியவாதியின் தளத்தை திறந்து படிப்பவர்கள் அவரது ஒரு நாவலையோ முக்கியமான கட்டுரை நூலையோ ஜென்மத்தில் வாசிக்காமல் இருப்பார்கள். அவர்கள் அந்த எழுத்தாளனின் ஒரு குறுப்பிட்ட பரிமாணத்தை மட்டுமே பார்க்க விரும்புவார்கள். இதில் வசதி என்னவென்றால் பெரிய பிரயத்தனம் இல்லாமலே தாம் இலக்கிய வாசகர் எனும் சின்ன ஒளிவட்டமும் அவர்களுக்கு கிடைத்து விடும்.

இதை விட மோசம் முகநூல் நிலைத்தகவல்களை மட்டும் படிப்பவர்கள். இவர்கள் அதைத் தாண்டி அக்கருத்தின் நீள அகலத்தை அறிய முயல மாட்டார்கள். நீங்கள் ஒரு இலக்கிய பத்திரிகையை இது போல் மேம்போக்காய் படிக்க இயலாது. இணையதளங்கள் மெல்ல இலக்கிய பத்திரிகைகளின் இடத்தை ஆக்கிரமிப்பதன் ஆபத்து இது தான்.
இப்போது இரண்டு வகை வாசிப்புகளின் வித்தியாசத்தைப் பார்ப்போம். செயலூக்கமான வாசிப்பு வாசகனின் பங்களிப்பை கோருகிறது. அதிலுள்ள கருத்துக்களோடு நீங்கள் மோதி அது சரியா, ஏன் சரி என கேட்க வேண்டும். அவ்வாசிப்பு உங்களுக்கு எதுவும் கரண்டியில் ஊட்டாது. அது ஜிம்மில் போய் எடை தூக்குவது போன்ற பயிற்சி. இவ்வகை வாசிப்பு உங்கள் மூளைத்திறனை, தர்க்கத்தை வளர்க்கும். புது சொற்களைத் தரும். ஒரு புனைவை உங்கள் கற்பனை கொண்டு விரித்து படிக்கும் போது எழுத்தாளனின் கற்பனையுடன் பங்கு கொள்கிறீர்கள். அது உங்கள் மூளையின் கற்பனை நரம்பு திசுக்களை வலுப்படுத்துகிறது.
செயலற்ற வாசிப்பு உங்களை மயக்கம் தந்து அறுவைசிகிச்சை மேஜையில் கிடத்தப்பட்டவரைப் போல் வைக்கும். அது உங்களுக்கு தகவல்களையும் உணர்ச்சிகளையும் ஊட்டும். சோடா உப்பிட்ட சோற்றைப் போல வயிறு நிரம்பின உணர்வைத் தரும். ஆனால் அதுவெறும் வாயு தான்.

இணையத்தில் வாசிப்பதற்கு நிறைய கொட்டிக் கிடக்கின்றன. மிக கவனமாய் இலக்கிய புனைவுகள், தத்துவ கட்டுரைகள் என தேடி வாசித்தால் ஒழிய செயலற்ற வாசிப்பில் சென்று விழுவதற்கான சாத்தியம் இங்கு அதிகம். மணிக்கணக்காய் முகநூல் பதிவுகளையும் அதன் வழி கிடைக்கும் தொடுப்புகளை கிளிக்கி பல செய்திக் கட்டுரைகளையும் வாசித்துக் கொண்டிருப்பவர்களை பார்த்திருக்கிறேன். வாசிப்பின் முடிவில் அவர்களுக்கு ஒரு எளிய கிளர்ச்சியும் நிறைய களைப்புமே காத்திருக்கும். அதில் கிடைத்த கொஞ்சம் தகவல்களை பிறருடனான அரட்டையில் பயன்படுத்துவார்கள். நான் தனிப்பட்ட முறையில் செய்திக்கட்டுரைகளின் ரசிகன். விட்டால் மணிக்கணக்காய் இக்கட்டுரைகளில் மேய்வேன். நானாகவே முனைந்து என்னை கட்டுப்படுத்துவேன். ஏனென்றால் வாசிப்பின் முடிவில் எஞ்சுவது வெறுமை மட்டும் தான்.

ஏன் சிரமப்பட்டு வாசிக்க வேண்டும் என சிலர் கேட்பார்கள். உலகில் எல்லா சிறந்த விசயங்களும் ஆரம்ப கட்ட சிரமத்துடன் தான் கிடைக்கும். காதல், வேலை, கலை, வியாபாரத்தில் வெற்றி, புது மொழியை, பண்பாட்டை கற்பது, ஒரு விளையாட்டை பரிச்சயம் கொள்வது என. ஒரு பெண்ணுடனான உடல் நெருக்கம் சில நிமிடங்கள் போதுமென்றால் மிக எளிதான வழிகள் உள்ளன. ஆனால் இருந்தும் கூட வருடக்கணக்காய் பின் தொடர்ந்து ஏன் போராடி ஒரு பெண்ணை நெருங்கி பல பிரச்சனைகளைக் கடந்து அவளை அடைகிறோம். அதன் வழி நமக்குக் கிடைக்கும் அனுபவம் ஆயிரம் மடங்கு அதிக ஆழமுள்ளது, கிளர்ச்சியானது என்பதால் தான். செயலூக்கமான சிரமமான வாசிப்பும் அப்படித் தான்.

நான் நிறைய சுயமுன்னேற்ற நூல்களை படித்திருக்கிறேன். அவை எதுவும் தராத தீர்வுகளை எனக்கு தத்துவ, உளவியல் நூல்கள் தந்துள்ளன. சட்டென என்னைச் சூழ்ந்துள்ள இருள் விலகி விடும். சமீபமாய் மிகவும் கசப்பில் இருந்த போது சார்த்தரின் Existentialism and Human Emotions எனும் நூலைப் படித்தேன். மிகச்சின்ன நூல். 50 பக்கங்களே. அங்கங்கே சொன்னதையே திரும்ப சொல்லுகிறார் என்றாலும் சிக்கலான விசயங்களை மிக எளிதாய் புரிய வைக்கிற மொழி சார்த்தருடையது. ஒரு கட்டத்தில் அவர் சொன்ன ஒரு கருத்து நான் அதுவரை வாழ்க்கையை தப்பாய் புரிந்து கொண்டிருக்கிறேன் என விளங்க வைத்தது. கண்ணைக் கட்டியிருந்த ஒரு கருந்துணியை யாரோ அவிழ்த்தது போல் இருந்தது. உண்மையில் இதை ஒரு மாற்றுக்கருத்து செய்ய முடியாது. 

சுயமுன்னேற்ற நூல்கள் நம்மை மாற்றி யோசிக்க வைக்க தூண்டும். ஆனால் சார்த்தர் போன்றவர்கள் கருத்தின் பின்னுள்ள தர்க்க வலையை கலைப்பார்கள். நம் யோசனையின் கட்டமைப்பை புரிந்து கொள்ள உதவுவார்கள். மொத்த தர்க்க முறையையும் திரும்ப கட்டியெழுப்புவார்கள். அன்றாட வாழ்வின் குழப்பஙக்ள், அறச்சிக்கல்களில் இருந்து விடுவிக்க இது உதவும். இதை ஒரு பத்திரிகைக்கட்டுரையோ இணையக்கட்டுரையோ ஒருபோதும் செய்யாது. எத்தனை நூறு பத்திரிகைக் கட்டுரைகள் படித்தாலும் அவை மேலோட்டமான பிரச்சனைகளுக்கு மட்டுமே விடை தரும். உள்ளார்ந்த சிக்கல்கள் அப்படியே இருக்கும்.
தொண்ணூறுகளின் துவக்கத்தில் வந்த இலக்கிய பத்திரிகை கட்டுரைகளுக்கும் இன்றுள்ளவைகளூக்குமே பெரிய வித்தியாசமொன்று உள்ளது. அன்று எழுத்தாளர்கள் பலதுறைகள் சார்ந்து படித்து வித்தியாசமான பார்வையில் எழுத முயன்றார்கள். புது சிந்தனையாளர்களை அறிமுகப்படுத்த எத்தனித்தார்கள். இன்றைய கட்டுரைகள் நான்கைந்து வகையறாக்களுக்குள் அடங்குபவை மட்டுமே. அம்மாதத்தில் வெளியான இரண்டு படங்களை முக்கியமான கலைமுயற்சிகளாய் நிறுவுபவை மற்றும் அம்மாத அரசியல் சமூக சர்ச்சைகளைப் பற்றின தகவல் தொகுப்புகள். காலச்சுவடு, தீராநதி போன்ற முழுதீவிர பத்திரிகைகளில் கூடுதலாய் ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் எல்லா பத்திரிகைகளிலும் ஒரு எந்திரத்தன்மை அதிகரித்து விட்டது. எதிர்பாராத விசயங்கள் எதுவும் இல்லை. புது சிந்தனைகளின் வரவு நின்று விட்டது.

 இதற்கு இணையமும் டிவியும் இன்றைய இலக்கிய, நடுநிலை பத்திரிகைகள் மீது செலுத்தும் தாக்கமும், தகவல்களுக்கு நாம் கொடுக்கும் கூடுதலான முக்கியத்துவமும் ஒரு காரணமாய் இருக்கலாம். பழைய “நிறப்பிரிகையின்” பிரதிகளை இன்று எடுத்து சும்மா புரட்டினாலே பிரமிப்பு ஏற்படும். அவ்வளவு புது அறிமுகங்கள், மாற்று கண்ணோட்டங்கள். தொண்ணூறுகளில் வந்த காலச்சுவடில் தூக்குத்தண்டனையை ஒட்டி வந்த விவாதக்கட்டுரைகள் எப்படி ஒரு அலையை கிளப்பின! இன்று நீங்கள் ஒரு பிரச்சனையை ஒட்டி அத்தகைய கட்டுரைகளை வரவழைக்க பார்த்தாலும் கூட எல்லாரும் ஏற்கனவே தெரிந்த கருத்துக்கள், தகவல்களை திரட்டி கட்டுரையாய் தந்து விக்கிபீடியா வேலை செய்வதுடன் முடித்துக் கொள்வார்கள்.


இப்போதெல்லாம் முகநூலில் ஒரு நாவலோ கதையோ நன்றாக இருக்கிறது என எழுதினால் அதற்கு லிங்க் கொடுங்கள் என்கிறார்கள். அதைத் தேடி புத்தகமாய் வாசித்தால் தான் என்ன? 

No comments: