Friday, July 10, 2015

ஜெயலலிதாவின் உடல்நிலை


ஜெயலலிதாவுக்கு கல்லீரல் கோளாறு, சிகிச்சைக்காய் வெளிநாடு செல்கிறார் என படித்தேன். கடுமையான முட்டி வலி ஏற்படுகிறது என போட்டிருந்தார்கள். சற்று மோசமான நிலையில் தான் அத்தகைய அறிகுறி தோன்றும் என நினைக்கிறேன். ஆனால் இதனால் உடனடி அரசியல் மாற்றங்கள் வரும் என நான் நினைக்கவில்லை. இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. மோசமான உடல் நிலை என்றாலும் கூட செலவு செய்து மீண்டு வந்து விடுவார்கள். 2006இல் நான் மாலைமலரில் வேலை செய்த போது ஒரு மூத்த சப் எடிட்டர் கடுமையான திமுக எதிர்ப்பாளர். அப்போது கலைஞரின் உடல் நிலை மோசமாய் இருந்தது. தேர்தல் நெருங்கி வந்தது. அதற்கு முன்பா பின்பா கலைஞர் காலமெய்துவார் என தினமும் அலுவலகத்தில் விவாதம் நடக்கும். திமுக ஆட்சியில் அப்படி நடந்தால் தடபுடலாய் அவருக்கு கடற்கரையில் சிலையெல்லாம் வைப்பார்கள் என்பதால் அதற்கு முன்னரே சம்பவம் நடக்க வேண்டும் என அவர் ஆவெசமாய் சொல்லுவார். ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன. அதிகாரபூர்வமாய் தாத்தாவாகி விட்ட தன் மகனையே கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார் கலைஞர். மேடையில் நா குழறினாலும் நக்கலும் கூர்மையும் போகவில்லை. இன்னும் நான்கு வருடங்கள் எப்படியாவது ஆட்சி செய்து விடுவார் என நினைக்கிறேன். நம் உடம்புக்குள் ஒரு கடிகாரம் ஓடுகிறது. அதை யாராலும் பார்க்க முடியாது. அதனால் ஒருவரது ஆயுள் பற்றி ஊகிப்பது பல சமயம் நம்மையே முட்டாளாக்கக் கூடியது.இந்த ஆட்சியில் ஜெயலலிதா பெரும்பாலும் ஆட்சி செய்யவில்லை. ஓய்வு, சிகிச்சை, வழக்கு, சிறை என பரபரப்பாய் இருந்தார். ஆனாலும் தமிழகம் ஆட்டொமெட்டிக் எந்திரம் போல் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. முக்கியமான திட்டங்கள் பற்றின முடிவுகள் தள்ளிப் போடப்படுகின்றன; நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் அன்றாட வாழ்வில் எந்த சலனமும் இல்லை. முன்பு எம்.ஜி.ஆர் இரண்டு வருடங்கள் நோய் முற்றி செயலற்று இருந்த நிலையிலும் முதலமைச்சராய் இருந்தார் எனப் படித்தேன். இதையெல்லாம் நாம் தான் அனுமதிக்கிறோம். இந்திய வாக்காளர்கள் செண்டிமெண்ட் பார்க்கிறவர்கள். முதுமையை மதிக்கிறவர்கள். அவர்களுக்கு ஆரோக்கியமான துடிப்பான நிர்வாகியை விட முதிர்ச்சியான நிதானமான ஆட்சியாளர் வேண்டும். அதனால் முழுமையாக குணமடையாத நிலையிலும் மீண்டும் அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவே தேர்ந்தெடுக்கப்படலாம். அதற்கு அடுத்தாற் போல் கலைஞர் சக்கர நாற்காலியில் இருந்தபடியே ஆட்சி செய்யலாம். இதெல்லாம் நம்மூருக்கு சகஜம் தான்ஜெயலலிதா தன் உடல்நிலையை ரகசியமாய் வைத்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல, அவர் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் என கலைஞர் சமீபமாய் மேடையில் பேசினது கூட வெறும் நக்கல் தான், வம்புக்கு இழுக்கும் அவரது விளையாட்டு தான். உடல்நிலைக்கும் தமிழக முதலமைச்சராய் இருப்பதற்கும் பெரிய சம்மந்தம் இல்லை என அவர் நன்றாய் அறிவார்.

No comments: