Tuesday, June 9, 2015

கல்வி கோழிப்பண்ணைகள்


தனியார் பள்ளிகளின் முறைகேடான கட்டண வசூலை கண்டித்து SFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் இன்று தமிழகத்தின் பல இடங்களில் நடத்தி உள்ள போராட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அடுத்த கட்டமாய் இத்தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடி உண்மையை புரிய வைக்க வேண்டும். அதிகப்படியான கட்டணம் செலுத்துவது ஒருவித சமூக அநீதி எனும் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தினாலே இப்போராட்டம் பெரும் வெற்றியை அடைந்து விடும். கல்விக் கோழிப்பண்ணைகள் ஐ.ஐ.டியை விட ஆபத்தானவை.

எனக்குத் தெரிந்த நுண்ணுணர்வும் தெளிவான சிந்தனையும் கொண்ட பெற்றோர்களே கூட தம் பிள்ளைகளை லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். பிள்ளைகளுக்கு முடிந்தவரை தம்மால் முடிந்த சிறப்பான வசதிகளை செய்து தர வேண்டும் எனும் பரிதவிப்பு அனைத்து தட்டு பெற்றோர்களுக்கும் வந்து விட்டது. சிறந்த உடை, சிறந்த உணவு, சிறந்த சூழல் போல சிறந்த கல்வியும் வாங்கக்கூடியது என நம்புகிறார்கள். நல்ல வசதிமிக்க பள்ளிக்கூடங்கள் தேவை தான். ஆனால் இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடத்து பேசும் போது அவர்களுக்கு ஒன்றும் விசேச திறன்களோ புத்திசாலித்தனமோ இல்லை எனத் தோன்றுகிறது. இன்றைய வாழ்க்கை நிலையை போட்டி மிகுந்ததாய் கற்பனை பண்ணி அதற்கு தோதாய் தம் பிள்ளைகளை பெற்றோர் உருவாக்க நினைப்பதும் இக்குழப்பத்துக்கு காரணம்.
எல்லோரும் இவ்வாறு பந்தயக் குதிரைகளை உருவாக்க நினைப்பதும் இல்லை. என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கான பள்ளியை எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதைக் கூறினார். அவர் ஒரு பள்ளிக்கு சென்று விசாரிக்கிறார். அங்குள்ள மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுதந்திரமாய் இருப்பதை பார்க்கிறார். தன் மகன் அப்படி மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதற்காய் அப்பள்ளியை தேர்ந்தெடுத்ததை சொல்கிறார். ஒருவர் தன் மகனின் புத்திசாலித்தனத்துக்காய் லட்சக்கணக்கில் செலவழிக்க இன்னொருவர் மகிழ்ச்சிக்காய் அதே போல் செலவழிக்கிறார். சுதந்திரமும் மகிழ்ச்சியும் வாழ்வில் இயல்பாகவே கிடைப்பது. அதற்கு ஏன் லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும்?
சரி புத்திசாலித்தனம், திறமை? நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்க சென்னைக்கு வந்து தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் படித்தேன். அங்கு வெளிநாட்டில், உயர்தர கான்வெண்டுகளில் படித்த மாணவர்களுடன் போட்டியிட்டேன். என்னுடன் ஆங்கிலத்தை தாய்மொழியாய் கொண்டவர்கள் கூட படித்தார்கள். நான் தொடர்ந்து முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வாங்கினேன். இத்தனைக்கும் இளங்கலை முதல் வருடம் படிக்கும் போது எனக்கு ஆங்கிலத்தில் ஒரு வரி தப்பில்லாமல் எழுதத் தெரியாது. ஏன் மிகச்சிறந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயின்றவர்கள் என்னளவு சோபிக்கவில்லை? இயற்கையான திறமையா? இல்லை. நான் மிக மிக சாதாரண மாணவன்.
 ஒரே காரணம் தான். நான் சூழலுடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தேன். இது டார்வினின் பரிமாணவியல் விதி தான். ஒரு சவாலை ஏற்றுக் கொண்டு போராடினால் மட்டுமே திறமை வளரும். இது உள்ளார்ந்த ஆர்வமாய் இயல்பாய் தோன்ற வேண்டும். பள்ளி, கல்லூரியில் உள்ள கடுமையான தேர்வுகள் உதவாது. சிறந்த திறமையான மாணவர்களுடன் உங்கள் பிள்ளைகள் படிப்பதலே அவர்கள் திறமையானவர்களாகப் போவதில்லை. இது ஒருவருடைய ஆளுமை சம்மந்தப்பட்டது. சூழலின் அழுத்தம், போராடினால் ஒழிய நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள் எனும் பயம் இது தான் ஒருவரை அடுத்த நிலைக்கு உயர்த்துகிறது. திறமையை இரட்டிப்பாக்குகிறது. இச்சூழலை செயற்கையாய் உருவாக்க இயலாது. சிறு வயதில் இருந்தே தன்னை சிரமமான விசயங்களை செய்து நிரூபிக்கும்படி ஒரு குழந்தையை தூண்டலாம். ஆனால் தூண்டப்படும் அளவுக்கு அக்குழந்தையின் மன இயல்பு இருக்க வேண்டும்.
அடுத்து பத்து பன்னிரெண்டு வயதுக்குள் சிறந்த பயிற்சிகள் அளித்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளும் அளவு நம் குழந்தைகளுக்கு மூளை முதிர்ச்சி இருக்குமா என ஐயம் உள்ளது. ஆரம்ப நிலைக் கல்வி மிக முக்கியம் என கூறப்பட்டாலும் அடிப்படை பயிற்சியே போதுமெனத் தோன்றுகிறது.
ஆதாரமாய் எனக்கு மற்றொரு கேள்வி உள்ளது. குழந்தைகள் அதிகம் கற்பது பள்ளியிலா குடும்பச் சூழலிலா? (மதிப்பெண் வாங்கும் எந்திரமாய் அவர்களை மாற்றுவது பற்றி கேட்கவில்லை) குடும்பச் சூழலில் தான் என்பது என் நம்பிக்கை. குழந்தைகள் நமக்கே அறியாமல் நம்மை கவனித்து கற்கின்றன. பெற்றோர்கள் அவர்களுடன் நிறைய நேரம் செலவழித்து நிறைய உரையாடுவது தான் சிறந்த கல்விப் பயிற்சி. பெற்றோர்களுக்கு அதற்கான நேரமோ தகுதியோ மனப்பாங்கோ இல்லாவிட்டால் அவ்விடத்தை ஒரு ஆசிரியரால் எடுத்துக் கொள்ள இயலாது. 
சின்ன வயதில் அப்பா என்னிடம் மணிக்கணக்கில் பேசுவார், மாலையில் போதையேறின பின் அவருடைய பிரதான பொழுதுபோக்கு நான் தான் (அப்போது கேபிள் டிவி இல்லை). என்னிடம் அண்ணா, பெரியார் பற்றி பேசுவார். உன்னால் அண்ணாவைப் போன்று ஒரு வரி பேச முடிந்தால் வேறு ஒன்றும் தேவையில்லை என்பார். இன்று நான் அண்ணாவாக இல்லை என்றாலும் ஒரு எளிய எழுத்தாளன் ஆகியிருக்கிறேன். பத்து வயதுக்கு பிறகு அப்பாவின் போதை சலம்பல்களை கேட்பதை தவிர்த்தேன். பள்ளி, கல்லூரியில் எனக்கு நிறைய நல்ல ஆசிரியர்கள் வாய்த்தார்கள். அவர்கள் என்னிடம் நிறைய பேசினார்கள். கற்பித்தார்கள். ஆனால் அவை எதுவும் அப்பாவின் சொற்கள் போல் என் மனதின் ஆழத்தில் போய் தைக்கவில்லை. அவரது அந்த உளறல்களை கேட்காவில்லால் நான் மற்றொரு மனிதனாகி இருப்பேன்.
தேசிய விருது வாங்கின உத்தரா உன்னிக்கிருஷ்ணனை எடுத்துக் கொள்ளுங்கள். சதா இசை புழங்கும் வீட்டுச்சூழல் தான் அக்குழந்தையின் உள்ளார்ந்த திறனை தூண்டி சோபிக்க செய்துள்ளது. அதே போன்ற இசைச்சூழல் வேறு பத்து குழந்தைகளுக்கு கிடைத்தால் அவர்களில் நால்வராவது நிச்சயம் இசையில் சிறப்பாய் வெளிப்படுவார்கள். ஆனால் ஒரு பாட்டு வாத்தியாரிடம் மாலை வகுப்புக்கு அனுப்புவது இதற்கு பரிகாரமாகாது.
தமிழின் சிறந்த எழுத்தாளர்கள் இருபது பேரிடம் சென்று அவர்களுக்கு எப்படி மொழியில் ஈடுபாடு வந்ததென கேளுங்கள். பெரும்பாலானோர் பள்ளியை காரணம் சொல்ல மாட்டார்கள். விஷ்வநாதன் ஆனந்தை அவரது அம்மா எவ்வாறு சிறுக சிறுக பயிற்சி அளித்து உருவாக்கினார் என அறிவீர்கள். பெற்றோருக்கு எது தெரியுமோ, எதில் ஆர்வம் அதிகமோ அதை பிள்ளைகளுக்கு கடத்தி விட்டால் போதும். அதை வைத்து அவர்கள் தம்மை மேலெடுப்பார்கள். நீங்கள் சினிமா வெறியர் என்றால் பிள்ளையை கைப்பிடித்து திரையரங்குகளுக்கு அழைத்து செல்லுங்கள். சேர்ந்து டிவி பாருங்கள். அது பற்றி தொடர்ந்து பேசுங்கள். முக்கியமாய் பிள்ளைகளுக்கு ஏற்றபடி நீங்களும் குழந்தைகள் போல் நடக்காமல், பிள்ளைகளை வளர்ந்தோர் போல் நடத்துங்கள். சரிசமமாய் உரையாடுங்கள். அது ஒரு பொறியைத் தூண்டலாம். வளர்ந்து பல்வேறு விசயங்களைக் கற்று வேலை செய்து தனிப்பட்ட வாழ்வில் பல இழப்புகளை சந்தித்து நிலைப்பெற்ற பின் அவனுக்கு ஒளிகாட்டக் கூடியதாய் அந்த இளவயது தருணங்கள் தாம் இருக்கும். ஆரம்பப்பள்ளியிலோ மேல்நிலைப்பள்ளியிலோ ஆசிரியர் கற்பித்த இலக்கணமோ இயல்பியலோ அல்ல.

 பள்ளிக்கூடங்கள் தகவல்களை கற்பிக்கலாம். ஆனால் நம்பிக்கைகளை விதைக்க முடியாது. நம்பிக்கைகள் தாம் வலுவான ஆளுமை கொண்ட மனிதர்களை உருவாக்குகின்றன.