Monday, June 29, 2015

குடல் கிருமிகளால் ஆட்டுவிக்கப்படும் மனித மூளை


நியு யார்க் டைம்ஸில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை படித்தேன். நம்முடைய குடலில் இருக்கும் கிருமிகள் நம் மனநிலையை, மூளையின் செயல்பாட்டை தீர்மானிக்க கூடும் என சில ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. பேக்டீரியா சில நரம்பணு ரசாயனங்களை ரத்தம் வழி மூளைக்கு அனுப்பி தேவையான சமிஞைகளை உருவாக்கி நம் நடத்தையை தீர்மானிக்க முடியும். ஆட்டிஸம் போன்ற வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடலில் உள்ள கிருமிகளை மாற்றும் சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.


இப்போதைக்கு ஆய்வை எலிகளிலும் குரங்குகளிலுமே செய்து வருகிறார்கள். மன அழுத்தத்தை தூண்டும் ரசாயனங்களை சுரக்கும் கிருமிகளும், அதைத் தடுக்கும் ரசாயனங்களை சுரக்கும் கிருமிகளும் உள்ளன. இவற்றை எலிகளில் செலுத்தி நடத்தை மாற்றங்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு என்னவென்றால் ஒரு கூண்டில் உள்ள எலியின் அருகே வியாதி தொற்றிய புது எலியை விடும் போது முதல் எலியின் உடலில் தற்காப்பு சக்தி உயர்கிறது. ஆனால் இதன் விளைவாக அதற்கு வியாதி எளிதில் தொற்றிக் கொள்கிறது. இது நம் தற்காப்பு சக்தி குடலில் உள்ள கிருமிகளை அழிப்பதனால் இருக்கலாம். பொதுவாக நமக்கு சீக்கு வரும் போது மனம் சோர்வடைவதை கவனிக்கலாம். இது சீக்கின் போது இக்கிருமிகளின் எண்ணிக்கை மிகுவதனாலோ குறைவதனாலோ இருக்கலாம். அதே போல மனம் சோர்வடையும் போது நோய்த்தொற்று எளிதில் ஏற்படும். இது குடலில் மனச்சோர்வை தடுக்கும் நல்ல கிருமிகள் இல்லாமல் ஆகி விட்டால், அதனால் நம் செரிமானம், உடலின் வேதியல் சமநிலை ஆகின சீரற்று போய் மனமும் உடலும் பலவீனமாய் எளிதில் நோய்க்கு அடிமையாகலாம் என்பதைக் காட்டுகிறது.

மனிதனின் பாலுறுப்புகளில் தோன்றும் சில வைரஸ்கள் அதிகமான உடலுறவு இசையை தூண்டி அதன் மூலமாய் பிற உடல்களுக்கு பரவும் என முன்னர் படித்திருக்கிறேன். நம் உடலில் உள்ள மரபணுக்கள் அடிப்படையில் நுண்ணுயிர்களில் இருந்து நாம் பெற்றவை என்றும் ஒரு கோட்பாடு உண்டு. எதை சாப்பிடுகிறோமோ அதுவாக ஆகிறோம் என்பது இந்திய பாரம்பரிய நம்பிக்கை. குண்டானவர்கள் களங்கம்ற்றவர்கள் என்றும், ஒல்லியனவர்கள் சூழ்ச்சியாளர்கள் என்றும் ஷேக்ஸ்பியரின் ஜுலியஸ் சீஸரில் ஒரு பாத்திரம் சொல்கிறது. சைவ உணவாளர்கள் சூழ்ச்சியாளர்கள் அல்லது சமூகத்தில் இருந்து விலகி நிற்கும் மேட்டிமைவாதிகள் என சில நண்பர்கள் என்னிடம் கூறி இருக்கிறார்கள். இவை எல்லாம் முன்னெண்ணங்கள் (prejudices). நம் சூழலும் அதற்கு நாம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பதும் நம் குணம் மற்றும் நடத்தையை நிச்சயம் தீர்மானிக்கிறது. உதாரணமாய், சைவ உணவு உட்கொள்ளும் பிராமணர்கள், சைவவேளாளர்கள், ஜெயின் சமூகத்தினர் ஆகியோரிடம் முற்றிலும் வேறுபட்ட நடத்தைகளை கண்டிருக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் நல்ல மனநிலைக்கான உளவியல் மருந்தாக உணவுகள் பரிந்துரைக்கப்பட சாத்தியமுண்டு என்றாலும் அது எந்தளவுக்கு உதவும் எனத் தெரியவில்லை.


இன்னொரு மருத்துவ சாத்தியம் மனச்சோர்வு கொண்டோரின் குடலில் உள்ள கிருமிகளை மாற்றுவது. இப்போதைக்கு இது சிக்கலானதாக இருக்கிறது. 35 வருடங்களுக்கு மேலாய் நடந்து வரும் ஆய்வு இது. இப்போது தான் தகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

No comments: