Tuesday, June 30, 2015

உடலைக் காப்பாற்றுவது எப்படி?


நம் உடலை நம்மிடம் இருந்து காப்பாற்றுவது பற்றி நிறைய டயட் டிப்ஸ், உடற்பயிற்சி அறிவுரைகள், உடல் எடை குறைக்கும் மருந்து பரிந்துரைகள் என விளையாட்டு பொம்மைகளால் சூழப்பட்ட குழந்தை போல ஆகி விட்டோம். வேறெந்த காலத்திலும் மனிதன் தன் ஆயுள், ஆரோக்கியம், உடல் தோற்றம் பற்றி இவ்வளவு அக்கறைப்பட்டிருப்பானா என்பது சந்தேகம். ஆனால் உடல் ஆரோக்கியம் என்பது இதற்கு எல்லாம் அப்பாற்பட்டதாக இருக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கும் நோய்கள், அது சம்மந்தமான வலிகள் வருகின்றன. யோகா மாஸ்டர்களும் கூட சின்ன உபாதைகளால் கடும் அவதிப்படுகிறார்கள். உடற்பயிற்சி, நல்ல உணவு, கட்டுப்பாடான வாழ்க்கை ஆகியவை நம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்பது மட்டுமே இப்போதைக்கு உண்மை. உடல் வலுவாக, சுலபமாக, அலுப்பின்றி உணரும் போது ஒரு விடுதலை உணர்வு கிடைக்கும் அல்லவா அது தான் ஒரே பலன்.


பல சமயங்களில் இந்த டயட் நிபுணர்கள், எடை குறைக்கும் மருந்து உபகரண நிறுவனங்கள், அவற்றின் விளம்பரங்கள் ஆகியவை மனிதனை குறி வைத்து தம் சம்பாத்தியத்துக்காக சுரண்டுகின்றன என சொல்லப்படுகிறது. எளிதில் புரிய வரும் உண்மை இது. ஆனால் இது பாதி உண்மை தான். மனிதன் என்ன அவ்வளவு முட்டாளா? தன் உடல் பற்றி தனியார் நிறுவனங்களும், மருத்துவ நிபுணர்களும் கூறும் அத்தனை பரிந்துரைகளையும் யோசிக்காமல் நம்ப அவன் என்ன அடிமுட்டாளா? இல்லை. நாம் எல்லாரும் புத்திசாலிகள் தாம். ஒரு நவீன உடற்பயிற்சி நிலையம் ஒரு வருட சந்தாவாக 25000 வாங்கி உங்களை சேர்க்க அழைக்கும் போது அதில் வியாபார நோக்கும் உண்டென அறிவீர்கள் தாம். உங்களால் தினசரி சென்று உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகலாம் என்பதையும் அறிவீர்கள். உடல் பருமன் குறைப்பதற்கான மருந்துகளும் கூட மற்றொரு விதத்தில் ஆரோக்கியத்துக்கு கேடு என்பதையும் அறிவீர்கள். தொடர்ந்து நம் உடல் குறித்த புது நோய் அறிகுறிகளை கண்டுபிடித்து சொல்லி மருந்து நிறுவனங்கள் பீதியை கிளப்பி லாபம் அறுவடை செய்கிறார்கள் என்பதையும் அறிவீர்கள். உடல்நல சந்தை என்பதே ஒரு கட்டுவிக்கப்பட்ட மாயை என கணிசமான மக்கள் அறிவார்கள். ஆனாலும் நாமாகவே போய் இந்த பீதி கலாச்சாரத்தில் மாட்டிக் கொள்கிறோம். இதற்கு காரணம் நமது புத்திசாலித்தனம். வேறெப்போதையும் விட நாம் இன்று அதிக புத்திசாலிகளாய் இருக்கிறோம். இன்று சாதாரண செய்தித் தாள், பத்திரிகைகளில் வரும் மருத்துவக் கட்டுரைகளை நம் முந்தைய தலைமுறையினர் இவ்வளவு எளிதாய் புரிந்து உள்வாங்கி இருப்பார்களா என்பது சந்தேகமே. முன்னெப்போதையும் விட உடல் குறித்த அறிவு, பிரக்ஞை, கவனம் இன்று பன்மடங்க்கு ஆகியிருக்கிறது. இது நன்மையை விட அதிகம் தீமையே ஏற்படுத்தி உள்ளது.
மனித உடலுக்கு என்று ஒரு ஆயுள் கடிகாரம் உள்ளது என ஒரு அறிவியல் கோட்பாடு சொல்கிறது. நாம் எவ்வளவு காலம் வாழ வேண்டும் என நம் உடல் தீர்மானிக்கிறது. நாம் எதற்காக வாழ்கிறோம்? சாப்பிட்டு, ஊர் சுற்றி, குடித்து கும்மாளமிட்டு, வேலை செய்து போராடி பொருளும் அதிகாரமும் சந்தித்து மகிழ்ச்சியாக இருக்கவா? அறிவையும் அனுபவங்களையும் பெறவா? உண்மையயை, கடவுளை அறியவா? அல்ல. ஒரே காரணம் தான். அது வம்ச விருத்தி. இப்படித் தான் நம் உடல் புரிந்து வைத்திருக்கிறது. அதனால் தான் மிகக்குறைவாய் உணவு அருந்தும், வற்றலும் தொற்றலுமாய் இருக்கிறவர்கள் அதிக காலம் வாழ்வார்கள் என்கிறது ஒரு அறிவியல் ஆய்வு. அதெப்படி நேர்மாறாக அல்லவா சொல்லித் தந்திருக்கிறார்கள்? நன்றாக சத்துணவை உண்கிறவர்கள் தாம் அதிக ஆயுள் பெறுவார்கள் என்று. ஆனால் பட்டினி ஆயுளை நீட்டிக்கிறது என்பதுவும் உண்மை தான். உணவு மிகக் குறைவாக உண்ணும் போது உடல் நாம் பஞ்ச காலத்தில் இருப்பதாக கருதுகிறது. அப்போது மனிதனுக்கு இணையை அடைந்து குழந்தை பெறுவது சாத்தியமில்லை, நீண்ட காலம் பஞ்சத்தில் வாழும் மனிதனுக்கு ஒரு துணையை தேடி அடைய நீண்ட காலம் எடுக்கும். அதனால் அவன் நீண்ட காலம் வாழ வேண்டும் என உடல் தீர்மானிக்கிறது.
சுமார் முப்பது வயதில் இருந்தே உடல் மெல்ல மெல்ல தன்னை சுயமாக அழித்துக் கொள்ள தொடங்குகிறது. செல்கள் புதுப்பிக்கப்படுவது குறைகிறது. உள்ளுறுப்புகள், தசைகள், எலும்பு ஆகியன திட்டமிட்டு பலவீனமாக்கப் படுகின்றன. இதனால் தான் நாற்பதுக்கு பிறகு நோய்கள் வருவது அதிகமாகிறது. களைப்பும் அலுப்பும் அதிகமாகிறது. மரணம் என்பது உடலின் ஒரு தற்கொலை தான். உடல் நினைத்தால் “வயதாகும்” வயதில் செல்களை தொடர்ந்து புதுப்பித்து நம்மை “இளமையாக்க” முடியும். உடல் அதை செய்யும். உணவு பற்றாக்குறையின் போது மட்டும்.
சரி அப்படி என்றால் பிரம்மசாரிகள் நீண்ட காலம் வாழ்வார்களா? இதற்கு இப்போதைக்கு தெளிவான விடை இல்லை. அடிக்கடி உடலுறவு கொள்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என ஒரு ஆய்வு சொல்கிறது. டெஸ்டோர்டிரோன் எனும் ஆண்களின் ஹார்மோன் செக்ஸின் போது அதிகமாகிறது டெஸ்டோர்டிரோன் அதிகமாய் சுரக்கும் ஆண்களில் ஆயுள் குறைவு என்றும் ஒரு புள்ளி விபரம் சொல்க்றது. இது இத்தகைய ஆண்கள் அதிக ரிஸ்க் எடுப்பவர்களாக, வன்முறையாளர்களாக இருப்பதனால இருக்கலாம். இரண்டு அவதானிப்புகள் இங்கு முக்கியம்.
ஒன்று உணவு உட்கொள்ளும் சாத்தியம் இன்று வேறெந்த காலத்திலும் விட அதிகமாகி உள்ளது. அதாவது சேரிவாசிகளுக்கு கூட நகரங்களில் உணவுப் பற்றாக்குறை இல்லை. அதாவது கிராமத்து ஏழைகளுடன் ஒப்பிடுகையில். மத்திய, உயர்தட்டினரோ மிதமிஞ்சிய உணவை உண்டு செரிக்க முடியாமல் தவிக்கிறார்கள். எண்பதுகளை விட இன்று ஆண்கள் திருமணம் செய்யும் வயதும் குறைந்துள்ளது. எனக்குத் தெரிந்தே 25-27க்குள் மணம் முடிந்த தகப்பனாகிய பல நண்பர்கள் உள்ளனர். இரண்டுக்கும் இன்றுள்ள பொருளாதார வளம் முக்கிய காரணம். இதன் அடுத்த விளைவாகத் தான் இன்று 40-45க்குள் மரணமடைகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒப்பீட்டளவில் நம் தாத்தா, அப்பாக்களின் தலைமுறையை விட நாம் 30-40 வருடங்கள் குறைவாகவே வாழ்கிறோம் என்பதை நிதர்சனத்திலேயே பார்க்கிறோம். இதை அறிய நமக்கு எந்த புள்ளிவிபரமும் தேவையில்லை. இத்தனைக்கும் நம் தாத்தா, அப்பாக்கள் நம்மளவுக்கு கூட ஆரோக்கிய அக்கறைகள் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் மாசுபடாத உணவை உண்டு காற்றை சுவாசித்தார்கள் என்பதை காரணமாக சொல்லலாம். ஆனால் சதா குடித்து புகைபிடித்து, அலட்சியமாய் உணவை உண்டு வாழ்ந்தவர்கள் கூட அந்த தலைமுறையில் இருந்தார்கள். அவர்கள் எப்படி நீண்ட காலம் வாழ்ந்தார்கள்? தேவையான உணவும், அதன் மூலம் குழந்தை பெறும் சாத்தியங்களும் மிக இளமையிலேயே நம் தலைமுறை பெறுகையில் நம் ஆயுளும் குறைகிறது. ஜென்ம லட்சியமான வம்ச விருத்தியை அடைந்த பின், செய்ய வேண்டியதையெல்லாம் நாற்பதுக்குள் செய்து முடித்த பின் நீ ஏன் அதற்கு மேல் வாழ வேண்டும் என நம் உடல் கேட்கிறதோ?
2001இல் மைக்கேல் ரோஸ் எனும் ஆய்வாளர் கலிபோர்னியா பல்கலையில் பழப்பூச்சிகளைக் கொண்டு ஒரு வித்தியாசமான ஆய்வு செய்தார். பொதுவாக இப்பூச்சிகள் பாலியல் முதிர்ச்சி பெற்றவுடனே உடலுறவு கொள்ளத் துவங்கி விடும். ரோஸ் இந்த பூச்சிகளை அவை சற்று வயதாகி முதிர்வதை வரை தனிமைப்படுத்தினார். முதிய வயதில் இப்பூச்சிகளை உடலுறவுக்கு அனுமதித்தார். இப்பூச்சிகளின் ஆயுட்காலம் சில நாட்களே என்பதால் பல தலைமுறைகளை ’இந்த முதிர்ந்த-பின்-மட்டும்தான்-செக்ஸ்’ எனும் ஒழுக்கத்துக்கு உட்படுத்தினார். விளைவாக பழப்பூச்சிகளின் ஆயுட்காலம் இரட்டிப்பானது. அதாவது வழக்கமான பழப்பூச்சியின் ஆயுள் 50 நாட்கள் என்றால் ஆய்வகத்தில் இப்பூச்சிகள் 100 நாட்கள் வாழ்ந்தன. அதுவும் இறுதிக் காலம் வரை துடிதுடிப்பாக உடலுறவு கொண்டு ஜம்மென வாழ்ந்தன என்கிறார். நாம் குழந்தை பெறுவதை அல்லது பெறுவதற்கான சாத்தியங்களை பயன்படுத்துவதை உடல் எப்படியோ அறிந்து அதற்கு ஏற்றபடி நம் ஆயுளை குறைத்தோ நீட்டிக்கவோ செய்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
நம் ஆயுள் நம் கைவசம் இல்லை என்றால் நாம் அதைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறையும் ஆவலாதியும் கொள்ள வேண்டும்? உண்மையில் நீண்ட காலம் வாழ வேண்டும் என ஆசையினால் ஆரோக்கிய சந்தை பிம்பங்களில் மாட்டிக் கொள்கிறோமா அல்லது எப்படி வாழ்கிறோம் எனும் மிதமிஞ்சிய பிரக்ஞை நம்மை இவ்வாறான ஆரோக்கிய கவலைகளில் தள்ளுகிறதா? நம் உடலை மிக அதிகமாய் மீடியா மூலம் திரும்ப திரும்ப பார்க்கிற காலத்தில் வாழ்கிறோம். நம் உடலை பிறர் மிக அதிகமாய் பார்க்கிற காலத்தில் வாழ்கிறோம். நம் தோற்றம் நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு என மிதமிஞ்சி நம்புகிற காலத்தில் வாழ்கிறோம். இது வாழ்க்கையை ஒரு இடறல் இல்லாத ஒழுக்குடன் வாழ நம்மை அனுமதிப்பதில்லை. சதா தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டு வாழ்வது போன்ற ஒரு அவலம் வேறில்லை. அது தான் நம்மை உளவியல் ரீதியாய் நெருக்கடிக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாக்கிறது. விளைவாக மோசமான கொண்டாட்ட செயல்களில் ஈடுபட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டு அது குறித்து வருந்தி மேலும் மனம் சோர்ந்து மீண்டும் மருத்துவரிடம் சென்று மருந்து உண்டு ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டு…இது ஒரு முடிவற்ற சுழற்சியாக உள்ளது.
நம் உடல் பற்றி சதா அடுத்தவர் அலசுவதும் கவலைப்படுவதும் பரிந்துரைகள் செய்வதும் வெறும் வியாபார லாபம் சம்மந்தபட்ட ஒன்று மட்டுமல்ல. தன் உடல் மீது மதிப்பீடுகள் வைக்கப்படும் போது அதை ஏற்கிற மனிதன் தன்னை முழுக்கவே மதிப்பிடுகிறவரிடத்து இழக்கிறான். மீடியா நிறுவனங்கள் பார்வையாளனின் உடலை இவ்வாறு கையகப்படுத்துவதைப் பற்றி நிறைய பேசி இருக்கிறோம். எவ்வாறு இன்று சிவப்பு × கறுப்பு நிறம், ஒல்லியான உயரமான பெண்கள் × கறுத்த குள்ளமான பெண்கள் என எதிரிடைகள் உருவாக்கப்பட்டு தென்னிந்தியர்களின் சுயபச்சாதாபம் தூண்டப்படுவது பற்றி விவாதங்கள் நடந்துள்ளன. அழகுநிலையங்கள் பெண்களின் கேசத்தை பார்க்கும் விதமே விநோதம். சுருள் மயிர், அலையலையான மயிர் ஆகியவற்றை “நோய்வாய்ப்பட்டவையாக” பார்த்து அவற்றுக்கு “சிகிச்சைகளை” பரிந்துரைக்கிறார்கள். டானி ஏண்ட் கய் எனும் அமெரிக்க மயிர் திருத்த நிலைய ஸ்டைலிஸ்ட் என்னிடம் சொன்னார் “சுருள் மயிர் கொண்ட பெண்களுக்கு வேறு வழியே இல்லை. இந்த 2500 ரூ களிம்பைத் தடவி செட் செய்தால் மட்டுமே பார்க்கும்படியாய் 8 மணிநேரம் இருக்கும்”. அவர் சொல்வதிலும் உண்மையில்லாமல் இல்லை. ரொம்பவே சுருண்ட கேசம் கொண்டவர்களுக்கு அடர்த்தியும் இருந்தால் முடி சரியாக பராமரிக்காவிட்டால் சற்று பீதியூட்டும்படி தான் இருக்கும். ஆனாலும் அதுவும் ஒரு இயல்பு தானே. இந்த ஸ்டைலிஸ்டுகள் வரும் முன் நம்மூரில் எத்தனையோ பெண்கள் இவ்வகை கூந்தலை அள்ளிக்கட்டித் தானே திரிந்தார்கள். நாம் இதுவரை கவனிக்காமல் நார்மல் என நினைத்தவற்றை இவர்கள் கண்டுபிடித்து அவற்றின் பிசிறை சுட்டுக் காட்டுகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொண்டு விட்டால் பிறகு நம் தலையை அவர்களிடம் ஒப்புக் கொடுத்தே ஆக வேண்டும்.
எனக்கு இது நம் மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனையாகத் தான் தெரிகிறது. தலையை ஸ்டைலிஸ்டிடம் ஒப்புவிக்கையில் நம் மனதை, நம் ஆளுமையைத் தான் அவரிடம் கொடுக்கிறோம். அதை வெட்டி எப்படி வேண்டுமெனிலும் வடிவம் தர உரிமை அளிக்கிறோம். இது நம்மை மேலும் நன்றாக தோற்றம் கொள்ள வைக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் எப்படி வேண்டுமெனிலும் இருக்கக் கூடிய சுதந்திரத்தையும் அதோடு இழக்கிறோம். எப்படி வேண்டுமெனிலும் எனில் சற்று பிசிறாக, குளறுபடியாக, குறைகளுடன், ஏறுக்குமாறாய், சீரற்று, ஒழுங்கற்று இருக்கும் சுதந்திரத்தை.
முன்பை விட நாம் இன்று அதிக புறவயமாய் சிந்திக்க தொடங்கி விட்டோம். நம் ஆளுமையை தோற்றமாய் புறவயப்படுத்தி படுத்தி மனமற்றவர்களாகி விட்டோம். கண்ணாடியிலும், புகைப்படத்திலும், பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் புரொபைல் படங்களிலும் நம்மை பார்த்து பார்த்து அதுவே நாமாகி விட்டோம். நம் சுயம் என்பது நம் உடலின் பிம்பங்களாக நமக்கு வெளியே புது வடிவம் எடுத்துள்ளது. இன்று பரவலாகி வரும் டேட்டூ எனப்படும் பச்சைகுத்துவது நல்ல உதாரணம். முன்பு எம்.ஜி.ஆர், முருகன் வேல் போன்ற பொது பண்பாட்டு அடையாளங்களை பச்சை குத்தினார்கள். அது லட்சியத்தின், விசுவாசத்தின் அடையாளமாக இருந்தது. இன்று இது தனிப்பட்ட உணர்வுகளை, அந்தரங்க நம்பிக்கைகளை உடல் மீது பதிப்பதாக மாறி உள்ளது. இரண்டு பேர் முத்தமிடும் படத்தை சரிபாதியாய் பிரித்து காதலர்கள் பச்சை குத்துகிறார்கள். செல்லப்பிராணிகள், பிடித்த கார்டூன் நாயகர்கள் என்று எதையெதையோ உடலில் சுமந்து விளம்பரப் பலகை போல் ஆகி வருகிறோம். இங்கிலாந்தில் உள்ள ஹேடென்ஹேமில் ஒருவர் தன் வீட்டு வேலியில் உள்ள புதரை ஆண்குறியின் வடிவில் செதுக்கினார். அதை கவனித்த அரசு அதிகாரிகள் அவருக்கு 80 பவுண்டுகள் அபராதம் விதித்தனர். அவருக்கு தன் பால்நிலையின் பிம்பமாக அப்புதர் இருக்கிறது. அது பொதுவெளியில் மக்கள் பார்க்கும் படி வைப்பது உண்மையில் விரசம் அல்ல. டேட்டூ, வித்தியாசமான கூந்தல் வடிவங்கள் போல இதுவும் ஒரு கலை வெளிப்பாடு தான். இப்போது நம் மனதை, சுயத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனிலும் நம் தோற்ற பிம்பத்தை கட்டுப்படுத்தினால் போதும் என்றாகி விட்டது. அதாவது அபராதம் விதித்தால் போதும்.
கடந்த பத்து வருடங்களில் விக்ரம், சூர்யா இருவரும் சில படங்களுக்காக தம் உடலை தேவையில்லாத அளவுக்கு வருத்திக் கொண்டு பார்வையாளர்களையும் முகம் சுளிக்க வைத்தனர். சூர்யா “வாரணம் ஆயிரத்துக்காக” உடல்நலம் கெடும் அளவுக்கு எடையை குறைத்தார். விக்ரம் “ஐ” படத்துக்காக தன் பல் ஒன்றை பிடுங்கினதுடன், உடல் எடையையும் ஆபத்தான அளவுக்கு குறைத்தார். எதார்த்தம் எனும் பெயரில் பாலா தன் நடிகர்களின் உடல்களை படுத்துகிற பாட்டை பற்றி சொல்ல வேண்டியதில்லை. நடிப்பு என்பது உடலை நேரடியாக மாற்றி வடிவமைக்கிற கலை அல்லவே. ஒரு சாதாரண உடல் கொண்ட ஆள் கூட தன் நடிப்பின் மூலம் தன்னை பிரம்மாண்டமான ஆகிருதியாகவோ மிக பலவீனமான நோயாளியாகவோ காட்ட முடியும். இன்றும் நாடக அரங்கில் நடிகர்கள் இதை சாதாரணமாய் நிகழ்த்துகிறார்கள். பார்வையாளனின் மனம் மிக சுலபமாக புற உண்மைகளை மறுத்து மாற்று உண்மையை ஒரு கலை அரங்கில் ஏற்று நம்பி அதில் லயிக்கும் என்பது காலங்காலமான உண்மை. ஆனாலும் இந்த நடிகர்கள் ஏனிவ்வாறு உடலை நேரடியாக ஒரு தோட்டக்காரர் புதரை வடிவமைப்பது போல் வடிவமைப்பதே நடிப்பு என நம்புகிறார்கள்? நடிகர்களும் தமக்கே அறியாமல் புறத்தோற்றத்தின் பிம்பமே தம் சுயம் என நம்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஆக இது இருவிதமாக செயல்படுகிறது. மீடியா ஆளுமைகள் நம்மை நம் உடல் பிம்பத்தை கட்டமைக்க தூண்டுகிறார்கள். பிறகு நாமே இந்த மீடியா ஆளுமைகளே இதை தமக்குத் தாமே செய்து கொள்ளும்படி தூண்டுகிறோம். பரஸ்பர வதை.
சமீபமாக பிரெஞ்சு அரசாங்கம் மிக மெல்லிசான (ultra-thin) மாடல்களை தடை செய்திருக்கிறது. அதாவது உடலை எடை குறைந்ததாக வைப்பதே லட்சியம் என தொடர்ந்து செய்யப்பட்ட பரப்புரையால் ஒரு தலைமுறையே நோஞ்சான்களாக, பலவீனர்களாக போய் விட்டார்கள் என பிரஞ்சு அரசு அஞ்சுகிறது. அதனால் அப்படி பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களுக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனையும் அபராதமும். குறிப்பிட்ட BMIக்கு கீழ் எடை கொண்ட பெண் மாடல்களுக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 75,000 யுரோக்கள் அபராதமும். ஆனால் இயல்பாகவே ஒல்லிப்பீச்சான்களாக உள்ள பெண்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் ஏன் சிறை செல்ல வேண்டும்? முற்போக்கு சிந்தனையாளர்கள் கூட எவ்வாறு உடல் பிம்பத்தை ஒரு மதிப்பீடாக கொண்டு மக்களை ஒடுக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதே பார்வையின் படி அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்டு குண்டாக இருப்பதும் கூட குற்றம் தானே! அவர்களையும் தானே தண்டிக்க வேண்டும். ஒரு எடை எந்திரத்தை வீடு வீடாக கொண்டு போய் கச்சிதமான BMI இல்லாதவர்களை சிறையில் தள்ளலாமே? BMI எனும் உயரத்துக்கு ஏற்ற எடை எனும் மாய சதவிகித விதிமுறை தான் நம் காலத்தின் மிக பயங்கரமான ஒடுக்குமுறைக் கருவி. இந்த BMIயை கச்சிதமாக கொண்டுள்ளோர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்றோ இல்லாதவர்கள் ஆரோக்கியமற்று இருக்கிறார்கள் என்றோ எந்தவித உத்தரவாதமோ அறுதியான தரவுகளோ இன்றி இதை முன்வைத்து மக்களை ஒடுக்குகிறார்கள். ஒரு பக்கம் தனியார் மருந்து நிறுவனங்களும், மீடியாவும் மக்களை கட்டுப்படுத்த விழைந்தால், அவர்களை எதிர்க்கும் நோக்கில் அரசாங்கமும் அதே BMI கருவியைக் கொண்டு மக்களைக் கட்டுப்படுத்துகின்றன. ஏற்கனவே இஸ்ரேல், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் இத்தடை நிலுவையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
BMI மட்டுமல்ல கச்சிதமான சிக்ஸ்பேக் உடமைப்பு என்பது மற்றொரு போலி பிம்பம் தான். நான் முன்னர் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் ஒரு நண்பரை சந்தித்தேன். என்னோடு தான் சேர்ந்தார். ஆனால் மூன்றே மாதத்தில் அர்னல்டு ஷுவஸ்நேக்கர் மாதிரி உடல் வந்து விட்டது. அடுத்து ஆறுமாதங்கள் அப்படியே இருந்தார். பிறகு மெல்ல மெல்ல உடல் இளைத்து முன்பிருந்தது போல் சாதாரண மனிதர் ஆகி விட்டார். இடையில் என்ன நடந்தது எனக் கேட்டேன். அவர் சொன்னார் “body mass powder வாங்க காசில்ல அதனால் தான். அதை சாப்பிடிறதை நிறுத்தினதும் இப்பிடி ஆயிட்டேன்”. ஊரில் என் அப்பாவுக்கு ஆத்மநண்பர் ஒருவர் இருந்தார். அவர் பால்யத்தில் இருந்தே கடுமையான உடற்பயிற்சிகள் செய்பவர். ஊரில் அவர் அளவுக்கு சிறப்பாய் பாரில் பயிற்சி செய்ய யாராலும் முடியாது என அப்பா சொல்வார். ஆனால் அவரைப் பார்த்தால் தொப்பையும் தொளதொள மார்புமாய் இருப்பார். அவர் உடல்வாகு அப்படி, ஆனால் நல்ல சண்டைக்கலை ஆசான் என அப்பா அவரைப் பற்றி சொல்வார். அவர் எண்பது வயதுக்கு மேல் நன்றாக வாழ்ந்து தான் இறந்தார். ஜெயின் கல்லூரியில் நான் வேலை பார்க்கையில் வேதியல் துறையில் ஒரு பேராசிரியர் இருந்தார். பார்ப்பதற்கு குள்ளமாய் ரொம்ப ஒல்லியாய் பாவமாய் இருப்பார். ஆனால் இஷின்ரியு கராத்தேவில் தமிழகத்தின் சிறந்த ஆசான்களில் ஒருவர். ஜப்பானுக்கு சென்று கராத்தேவின் பல நிலைகளை கற்று வந்தவர். அவரால் சில நொடிகளில் நான்கு பேரை அடித்து வீச முடியும். அவரைப் பார்த்தால் “நீங்க இந்த பவுடரை சாப்பிட்டா மூணே மாசத்தில “ஐ” பட விக்கிரம் மாதிரி ஆகலாம் சார்” என யாராவது விற்பனை பிரதிநிதி சொல்வார். ஆனால் அவர் விக்கிரமை விட ஆரோக்கியமானவர்.
உடல் பற்றி அடுத்தவர் கருத்து தெரிவிக்கும் போது நம் மீது தம் அதிகாரத்தை பிரயோகிக்க முயல்கிறார் எனப் பொருள். இந்த ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்க முதல் வழி நம் உடல் மீதான விமர்சனத்தை வெளியில் இருந்து ஏற்காது இருப்பது. நம் வாழ்வு என்பது தொடர்ந்து மாறுதலுக்கு உட்படும் ஒரு ஒழுக்கு. அதன் பிரதிபலிப்பு மட்டுமே நம் சுயம் என்பது. ஆக நம் சுயத்துக்கும் நிரந்தர அடையாளம் இல்லை. அது மாறிக் கொண்டே இருக்கிற ஒன்று. நம் வாழ்வின் பிரதிபலிப்பு சுயம் என்றால், அப்பிரதிபலிப்பின் நீட்சி நம் உடல். ஆக நம் சுயமும் உடலும் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிற, அடையாளமற்ற வஸ்துக்கள். இரண்டுமே விளக்கங்களுக்கும் தர்க்கத்துக்கும் அப்பாற்பட்டது. நாம் எப்படி வாழ்கிறோமோ அதுவாக இருக்கிறோம். உதாரணமாய் மூன்று மாதங்கள் நடைபயிற்சி செய்கிறீர்கள். உங்கள் உடல் அதற்கு தோதாக மாறுகிறது. ஒரு வாரம் நிறுத்தி வைத்தால் மற்றொன்றாக மாறுகிறது. நிறுத்தாமலே பயிலும் போதும் உங்களுக்கு கடும் உளவியல் நெருக்கடி வேலையிலோ தனிப்பட்ட வாழ்விலோ ஏற்படுகிறது என்றால் அதுவும் உங்கள் மனதையும் உடலையும் நிச்சயம் மற்றொன்றாக மாற்றும். எந்த வித ஆரோக்கியமும் நிரந்தரம் அல்ல. நீங்கள் சற்று முன் போல் இப்போது இல்லை. ஆக “ஆரோக்கியமான வாழ்க்கை” என்பதை வாழவே முடியாது. ஆரோக்கியமாக சற்று காலம் இருக்கலாம். ஆனால் அது வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே. ஆரோக்கியமற்று இருப்பதும் வாழ்வின் நல்ல பகுதி தான். நிரந்தர ஆரோக்கியம், நீடித்த உடல் நலம் ஆகியவை வெறும் லட்சியபூர்வ கட்டமைப்புகள். அதை அடைந்தவர் யாரும் பூமியில் இல்லை. ஏனென்றால் வாழ்வின் போக்கே நிரந்தரத்துக்கு எதிரானது. ஆக நாம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சொல்லப்படும் அறிவுரைகளை பரிசீலிக்காமலே நிராகரித்து விடலாம். அவை நம் மீது அதிகாரம் பிரயோகிப்பதற்கான தந்திரங்கள் மட்டுமே.
 வாழ்கிறோம் எனும் பிரக்ஞை இன்றி லயித்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை. மற்றபடி நம் மனம் மற்றும் உடலை சரிப்படுத்தி சீர்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்தலாம் என அறிவுறுத்துபவர்களை நிராகரிக்க வேண்டும். நம் வாழ்வை உள்நோக்கி திருப்ப வேண்டும். சமீபத்தில் திருவல்லிக்கேணி தெரு ஒன்றில் ஒருவர் என்னை எதிர்கொண்டு ஒரு துண்டு பிரசுரம் நீட்டினார். அது உடல் எடை குறைக்கும் மருந்து பொடி ஒன்றிற்காக விளம்பரம். பார்த்ததுமே நிராகரித்தேன்.
“ஏன் சார் ஒரு தடவை டிரை பண்ணிப் பாருங்களேன்”
“எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்ல”
அவர் சற்று வாயடைத்து நிற்க நான் நடந்தேன். சற்று தூரத்தில் அவரது சகா ஒருவர் என்னிடம் வந்து சொன்னார் “சார் உங்க நிலைமைக்கு இன்னும் வெயிட் குறைச்சா ரொம்ப வசதியா இருக்கும் இல்லையா? ஏறி இறங்க நடக்க எல்லாம் ஈஸியா இருக்குமே?”
நான் சொன்னேன் “சரி தான் சார். அதே மாதிரி எனக்கு இன்னும் கொஞ்ச நல்ல வேலை கிடைச்சாலும் நல்லா இருக்கும். இன்னும் அதிகம் சம்பளம் கிடைச்சாலும் நல்லா இருக்கும். இன்னும் நல்ல வண்டி ஒண்ணு கிடைச்சா நல்லா இருக்கும். என்னை சுற்றி இருக்கும் இந்த மக்கள் நிறைய படித்து விழிப்புணர்வு பெற்றாலும் நல்லா இருக்கும். சரியான படி ஓட்டுப்போட்டு ஊழல் அரசியல்வாதிகளை இவங்க துரத்திட்டா அதுவும் நல்லா இருக்கும். இவங்க எல்லாருக்கும் இது போல எத்தனையோ விசயங்கள் நடந்தா நல்லா இருக்கும். அதெல்லாம் நடந்ததும் நான் உங்களைத் தேடி வரேன்”

அவர் எனக்கு பதிலளிக்கவில்லை. மாற்றப்படாதபடி இந்த உலகில் எவ்வளவோ சிக்கலான விசயங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் நம் உடலமைப்பும். மிச்சத்தை எல்லாம் மாற்றாமல் இதை மட்டும் ஏன் 
மாற்றத் துடிக்கிறார்கள் என எனக்கு விளங்கவில்லை.

ஜூன் 2015 உயிர்மையில் வெளியான கட்டுரை

2 comments:

Pandiaraj Jebarathinam said...

நல்ல கட்டுரை...முடிவில் மாறவேண்டிய நிலைகளை விவரித்து எல்லாம் சரியானதும் அழைக்கிறேன் என்ச்சொன்னது பிடித்தமானது...

Praveen Raja said...

Wonderful article!!