Friday, June 19, 2015

ஜெ.பி. சாணக்யாவின் “பூதக்கண்ணாடி”

Image result for ஜெ.பி சாணக்யா

ஜெ.பி சாணக்யாவின்பூதக்கண்ணாடிதமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாய இருக்கலாம். அதன் விரிவைப் பார்க்கையில் ஒரு குறுநாவலின் சின்ன விதை போலத் தோன்றுகிறது. அதன் சிறப்பு ஒரு மனநிலையை மெல்ல மெல்ல மீட்டி பிரம்மாண்டமாய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது தான்

அடிப்படையில் அது ஒரு மனநிலைக் கதை. பெரிதாய் சம்பவங்கள் ஏதும் நடக்காமல், ஆனால் நடப்பது போன்ற ஒரு திகிலை தக்க வைப்பது சாணக்யாவின் தனித்திறன் தான். கதையின் முடிவில் ஒரு பெண் இறக்கிறாள். ஆனால் அவள் கொலையை சித்தரிக்காமல் விடுவதன் மூலம் நம் பயத்தை பலமடங்காய் பெருக்குகிறார். சதா கண்காணிக்கப்படுவதான பயம் அப்பெண்ணுக்கு இருக்கிறது. அவளை கண்காணிப்பது அவள் அக்காவின் மகனான ஒரு பையன். இந்த கண்காணிப்பின் அச்சம் தான் கதையின் mood. அவள் மீது அப்பையனுக்கு உள்ள தகாத இச்சை (taboo) கூட நிக்ழவதோ நேரடியாய் வெளிப்படுவதோ இல்லை. தொழில்நுட்ப ரீதியில் மேலாய் எழுதப்பட்ட ஒருமோகமுள்இது.

ஜெ.பி சாணக்யாவின் புனைவில் கதைகூறும் மற்றும் கதை கேட்கும் பாத்திரங்கள் கதைக்குள் இருப்பதில்லை. அதாவது பங்குபெறுவதில்லை. தன் சொந்த வாழ்க்கையின் கதையை ஒருவன் சொல்வதாய் இருந்தாலும் எதார்த்தமாய் நினைவில் இருந்து மீட்டு சொல்லும் முஸ்தீபுகள் இல்லை. “பூதக்கண்ணாடியில்கதைமாந்தரை நன்கு அறிந்த ஒரு கிராமத்து ஆள் கதையை விவரிக்கிறார். அப்போது அவர் பாத்திரங்களை பக்கத்தில் போய் நுணுக்கமாய் விவரிக்கிறார். அவர்களின் மன ஓட்டங்களைப் பேசுகிறார். சம்பிரதாயமான கதைசொல்லலில் யார் எதை பேச வேண்டும் எனும் விதிகள் உண்டு. உதாரணமாய் ஒரு பாத்திரத்தின் மன ஓட்டத்தை invisible third person எனப்படும் மூன்றாம் நிலை கதை சொல்லி கூறலாம். அக்கதைசொல்லி எழுத்தாளன் தான் என்பது உணர்த்தப்படும். அவன் தன்னை கடவுள் நிலையில் வைத்துக் கொண்டு எதையும் அறிந்து சொல்பவனாய் இருப்பான். ஆனால் சாணக்யா இந்த சம்பிரதயங்களை கலைத்துப் போடுகிறார். அபரிதமான சுதந்திரத்துடன் கதையில் பயணிக்கிறார்.

 இங்கு கதை கூறுபவரும் கேட்பவரும் யாராக வேண்டுமெனிலும் இருக்கலாம். கதை என்பது உண்மை என்று அல்லாமல் அதைக் கூறுபவரின் முழுமையான கற்பனையாகவும் பார்க்கலாம், அல்லது அது கேட்பவரின் விருப்பம், கற்பனை பொறுத்தும் மற்றொன்றாய் திரியலாம். இது பொதுவாய் எழுதும் போதும் வாசிக்கும் போதும் நடப்பது தான். ஆனால் சாணக்யாவின் கதையில் இது கதைகூறலுக்குள் நடக்கிறது என்பது தான் சிறப்பு. அதுவும் “பூதக்கண்ணாடி” ஒரு பின்நவீனத்துவ, மிகைபுனைவு இல்லை. எதார்த்த கதை தான். அதன் எதார்த்த வடிவத்துக்குள் அவர் அநாயசமாய் விளையாடுவது வியப்பளிக்கிறது. இந்த விளையாட்டின் அற்புதமான உதாரணம், என்னைப் பொறுத்தவரையில், ரூல்போவின் பெட்ரோ பரோமா நாவல் தான். அக்கதையில் நாயகன் பேய்கள் மட்டும் வசிக்கும் ஒரு நகரத்துக்கு போகிறான். அங்கு அவனுக்கு கடந்த காலத்தின் நினைவில் இருந்து பல குரல்கள் கேட்கின்றன. சம்பவங்கள் நிஜம் போல் மீண்டும் தோன்றுகின்றன. அவனிடம் பேசும் பாத்திரங்களின் வசனங்களின் ஊடாய் சட்டென ஒரு கடந்த கால உரையாடலுக்குள் கதைசொல்லி நம்மை அழைத்துப் போவார். பொதுவாய் பேய்க்கதை வடிவம் தரும் சுதந்திரத்தை பயன்படுத்தி காலம், இடம் சார்ந்து கதைக்கு இருக்கும் விதிமுறைகளை நொறுக்கி விடுவார் ரூல்போ. ரூல்போவை போல் காலத்தையும் இடத்தையும் சுலபமாய் மீறி கதையை நகர்த்திப் போகும் மற்றொரு படைப்பாளி இல்லை. யார் எந்த இடத்தில் கதையை சொல்லுவது என்கிற சிக்கலே அவருக்கு இல்லை. சாணக்யா இவ்விசயத்தில் ரூல்போவை ஓரளவு நெருங்குகிறார். உண்மையில், எதார்த்த கதை எழுதுபவர்களுக்கு இது எவ்வளவு சிக்கலானது எனத் தெரியும். கதையின் கட்டுப்பாடுகளை உதறி, இயல்பாய் பயணிப்பது ஒரு தனி சாதனை தான்.

 “முதல் தனிமை”  என்னும் கதையில் ஒரு பாரில் இருந்து தன் கதையை ஒரு பழைய வயதான நண்பருக்கு கூறுகிறான் கதைசொல்லி. ஆனால் அவன் தன் நினைவை சித்தரிக்கும் போது inverted commasக்கு உள்ளே அதை வைப்பதில்லை. நேரடியான சித்தரிப்புக்கும் நினைவு சித்தரிப்புக்கும் வித்தியாசம் இருப்பதில்லை. இப்போது சொல்லப்படும் இதுதான் உண்மை என்றில்லை, இது சொல்பவன் மற்றும் கேட்பவனின் கற்பனை பொறுத்து உருவாகிற கதையாக இருக்கலாம் எனும் தொனி உள்ளது. அதனால் சாணக்யாவுக்கு எந்த கட்டுப்பாடும் இருப்பதில்லை. தமிழில் இந்த பாணியை சிலர் செயற்கையாய் திணிப்பதுண்டு. ஆனால் சாணக்யா இயல்பாய் சரளமாய் செய்கிறார்.

No comments: