Tuesday, June 23, 2015

எழுத்தும் திருமணமும்


ஒரு தோழியிடம் பேசிக் கொண்டிருந்தேன். கல்யாணம் ஆன எழுத்தாளர்களின் புனைவுகளையே விரும்பிப் படிப்பதாய் சொன்னார். நன்றாய் எழுதுவதற்கு திருமண வாழ்வு அவசியம் என்றொரு லாஜிக்கை வைத்தார். நான் திருமணமான பின் தான் எழுத்தில் சவால்கள் மிகவும் அதிகரிப்பதாய் சொன்னேன். வாழ்க்கைத்துணைகள் எப்போதும் ஒருவர் எழுத்து, இசை போன்ற கலை அனுபவங்களில் மூழ்கித் தொலைவதை விரும்புவதில்லை. அவர்கள் அதனால் நீங்கள் அக்கலையை பயிலும் போது முடிந்தவரை தொந்தரவு பண்ணுவார்கள்.


 ஏனென்றால் நீங்கள் எழுதும் போதோ வேறு ஒரு கலையை பயிலும் போதோ அவர்கள் தனிமையை, அது தரும் பயத்தை கடுமையாய் உணர்வார்கள். நீங்கள் அவர்களை விட்டு இன்னொரு இடத்துக்கு போனால் கூட உணர்வுரீதியாய் அவர்களுடன் இருப்பீர்கள். ஆனால் எழுதும் போது முற்றிலும் அவர்களை விட்டு நீங்கி மற்றொரு உலகுக்கு போய் விடுவீர்கள். நான் என் மனைவியிடம் பேசிக் கொண்டே அதே நேரம் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லாத ஒன்றை எழுதி எழுதி பழகி விட்டேன். அவள் வலுக்கட்டாயமாய் கணினியை மூடினாலோ கைகளை பிடித்து வைத்தாலோ மட்டுமே எரிச்சல் கொள்வேன்.

 நம் ஊர் பொதுவாக நிறைய இடையூறுகளும் சத்தங்களும் நெரிசலும் மிக்கது. சென்னையில் ஒரு கீழ்த்தளத்து வீட்டில் வசிக்கையில் தனக்கு நடைபாதையில் குடியிருக்கும் உணர்வு வந்ததாய் தோழி சொன்னார். டி.வி இன்னொரு எதிரி. டி.வி சத்தம் போல் என்னை எரிச்சலூட்டுகிற இன்னொன்று இல்லை. ஒரு காலத்தில் நான் காதில் சொருகும் ear plugs வாங்கி பயன்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் அது பெரும்பாலும் உதவவில்லை. அதற்கு பதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பிடித்த பாடல்களை திரும்பத் திரும்ப கேட்பேன். என் கண் முன் உள்ள காட்சிகள் எனக்கு இடையூறு அல்ல. எழுதும் போது என் கண் முன் நான்கைந்து பேர் திமுதிமுவென ஓடினால் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் சிறு ஒலிகள் கூட என் கவனத்தை சிதைக்கும். இப்படியான சூழலில் மிகுந்த தனிமையை கோரும் ஒரு வேலையை நாம் செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.

திருமணம் இயல்பாகவே எழுதுவதில் நம் ஊரில் உள்ள பிரச்சனைகளை இரட்டிப்பாக்குகிறது. இனி என் வாழ்க்கையில் குழந்தை வரும் போது அவை மும்மடங்காகும் என்பதில் சந்தேகமில்லை. தகழியின் “செம்மீன்” நாவல் எழுதப்பட்ட கதையை ஒருமுறை சுகுமாரன் உயிர்மையில் எழுதி இருந்தார். தகழி அந்நாவலை தொடராய் எழுதுவதாய் ஒரு பத்திரிகைக்கு வாக்கு கொடுக்கிறார். விளம்பரமும் வருகிறது. ஆனால் தகழி எழுத ஆரம்பிக்கவில்லை. பத்திரிகை அதிபர் பல முறை தகழியை சந்தித்து எழுதும்படி வேண்டுகிறார். தகழி ஒரு வக்கீல் என்பதால் வழக்கின் தஸ்தாவேஜுகளை அடுக்கி வைத்திருப்பார். அதைக் காட்டி எழுத்துப்பிரதி எனச் சொல்லி ஏமாற்றி வந்தர். ஒருநாள் அவர் உண்மையை ஒத்துக் கொண்டார். தனக்கு எழுதுவதற்கான ஒரு தோதான இடம் இல்லை என்றார். அவர் வீடு சின்னது. உறவினர்களும் மனைவி குழந்தைகளும் உருவாக்கும் நெருக்கடியில் அவரால் ஒரு சொல் கூட எழுத முடியவில்லை. இறுதியில் பத்திரிகை அதிபர் அவரை அழைத்துப் போய் ஒரு விடுதி அறையில் கிட்டத்தட்ட சிறை வைத்து அந்நாவலை எழுதச் செய்தார். எனக்கு எழுத சிரமம் வரும் போதெல்லாம் இக்கதை நினைவு வரும்.

தோழி என் “கால்கள்” நாவலை படித்து விட்டார். அதில் பெண்ணுலகம் அணுக்கமாய் தீவிரமாய் வந்துள்ளதாய் சொன்னார். (அதிலுள்ள சிறு குழப்படிகளையும் சேர்த்து தான் சொன்னார்) எனக்கு ஒரு பெண்ணின் தரப்பில் இருந்து அந்நாவலை எழுத உதவியது திருமண வாழ்க்கை தான். ஒரு பெண்ணுடன் சேர்ந்து நெருக்கமாய் வாழாத பட்சத்தில் அவர்களின் உடல் சார்ந்த பல்வேறு சிக்கல்களை, உணர்வுகளை அறிய முடியாது. ஆனால் அதற்கு திருமணம் செய்யத் தான் வேண்டுமென்று இல்லையே!

ஸ்டீபன் கிங் எனும் அமெரிக்க வணிக நாவலாசிரியர் எழுத்தின் கலை பற்றி ஒரு நல்ல நூல் (On Writing) எழுதி இருக்கிறார். அதில் தனது எழுதுவதற்கான அலுவலகம் பற்றி குறிப்பிடுகிறார். நம்மூரில் சினிமா இயக்குநர்களுக்கு மட்டுமே அப்படி அலுவலகம் உள்ளது. பாலாஜி சக்திவேல் தன் அலுவலகம் போனால் முழுக்க வீட்டில் இருந்து துண்டித்து தனி உலகுக்கு போய் விடுவார். மிஷ்கின் வீட்டையும் அலுவலகத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார். ஒரு நல்ல சமையற்காரர் வைத்திருக்கிறார். அது போன்றும் ஒருவர் இருக்கலாம் தான். ஆனால் அதேவேளை முழுக்க ஆண்கள் நிரம்பின வீடும் நல்லதில்லை. விட்டில் ஒரு பெண் வேண்டும். அவள் உருவாக்குகிற நெருக்கடிகள், தொந்தரவுகள், கலைப்புகள் வாழ்க்கையை பரபரப்பாக, சாகசமாய், சுவாரஸ்யமாய் மாற்றும். ஒரு சின்ன எழுதும் அலுவலகம் வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. ஆனால் தொலைவில் ஒரு பெண் என்னைத் திட்டும் ஒலியும் சின்னதாய் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதைக் கேட்டு ரசித்தபடியே நான் எழுத வேண்டும். 

1 comment:

Otherworlder Innoarulagam said...

படிக்க இலகுவாக உள்ளது, சில சம்பவங்கள் அப்படியே வந்து போகின்றன ஒரே மாதிரி அனுபவம் உள்ளது எனக்கும், எழுதுவோரில் திருமணமான பலருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சல்லிசான விஷயங்களை சுவாரசியப்படுத்த இல்லத்தில் பெண் இருக்க வேண்டும் அவள் மனைவியாக இருந்தால்தான் சுவாரசியத்தின் முழுமையே. வார்த்தைகள் கோர்வையாக்கி இதனை தட்டச்சு செய்கையில் தடைப்பட்டது ஒரு தொலைபேசி அழைப்பால். நினைவுகளுக்கு நன்றி.