Tuesday, June 2, 2015

ராஜன் குறையின் மனப்பாங்கு

இம்மாத காலச்சுவடில் வெளியாகி உள்ள ஸ்டாலின் ராஜாங்கத்தின் ”திராவிட இயக்கமும் தலித் விடுதலையும் எனும் கட்டுரை பற்றி ராஜன் குறை இவ்வாறு சொல்கிறார்: “இன்னமும் எங்கோ ஒரு சீற்றம் திராவிட இயக்கத்தின்மீது உள்ளோட்டமாக வெளிப்படுவதை உணரமுடிகிறது. சம்வாதத் தொனியை தாண்டி (polemical stance) ஆய்வாக மாறுவதற்கு அந்த சீற்றத்தை தவிர்த்து திராவிட இயக்கத்தின் நேர்மறையான பங்களிப்புகளை தொகுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் வைக்கும் நுட்பமான விமர்சனங்கள் வலுப்பெறும் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால் வெகு சுலபமாக பார்ப்பன ஆதரவாக சுருக்கப்பட்டுவிடும்

ஸ்டாலின் ராஜாங்கத்தின் அக்கட்டுரையை படித்தேன். அது தலித் அரசியல் மற்றும் திமுக மீது வைக்கும் விமர்சனங்கள் நியாயமானவை. தர்க்கரீதியிலும் அக்கட்டுரையில் சிக்கல் இல்லை. ”  பெரியார் காலத்திலிருந்தே திராவிடர் கழகத்திற்குத் தாழ்த்தப்பட்டோர் விசயத்தில் வரையறைகள் இருந்தன. அடிப்படையில் திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான இயக்கம் கிடையாது. பிராமண எதிர்ப்பில் நியாயமே இல்லை என்று கூறமுடியாது. ஆனால் அதன் முதன்மை நோக்கோ, நிகழ்ச்சி நிரலோ தாழ்த்தப்பட்டோருக்கானதாய் இல்லை. அக்கட்சியின் பிராமண எதிர்ப்புக் கருத்து தலித்துகளுக்கும் அரசியல்ரீதியாக உதவியது என்பதைத் தாண்டி மற்றபடி அதில் சொல்வதற்கு ஏதுமில்லை. பெரியார் காலத்திலேயே அது பிரதிநிதித்துவப்படுத்திய சூத்திரர்களின் ஆதிக்கத்திற்கும் வன்முறைகளுக்கும் எதிராக தலித்துகள் தனித்துதான் போராடி வந்தனர். தலித்துகளுக்குத் தனி அமைப்புகள் இருந்தன. சில இடங்களில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உழைக்கும் தொழிலாளர்களாகத் திரண்டிருந்தனர். வேறு தளங்களில் தாங்கள் புரிந்து கொண்ட கருத்தியலுக்கு ஏற்ப காந்திய இயக்கத் தினரும் செயற்பட்டனர்.” என ஸ்டாலின் எழுதுவது வரலாற்று உண்மைகள். ஆனால் ஸ்டாலின் மீதான இக்கட்டுரையில் கருத்து சமநிலை இல்லை என்கிறார் ராஜன் குறை. கருத்து சமநிலைக்காக அவர் தனியாக ஒரு பத்தி திமுகவின் தலித் பங்களிப்பு, அதிமுகவின் தலித் பங்களிப்பு என எழுத வேண்டுமா? கடந்த ஐந்தாண்டுகளில் கணிசமான தலித்துகள் ப.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்ஸிலும் சேர்ந்துள்ளனர். அதற்காய் அக்கட்சிகளின் தலித் பரிமாணத்தைப் பற்றியும் எழுத வேண்டுமா? என்ன அபத்தம்! ஒரு எழுத்தாளன் தான் எடுக்கிற ஒரு நிலைப்பாட்டில் நம்புவதால் தான் அவன் அது பற்றி எழுதத் தலைப்படுகிறான். அதற்கான நியாயங்களை வகுக்கிறான். அனைத்து தரப்புகளுக்குமான தரவுகளை தொகுத்தளிப்பது அல்ல அவன் வேலை. தன் நியாயத்தை, நம்பிக்கையை பேசுவதே அவன் பணி. எனக்கு இந்த விமர்சனம் ராஜன்குறையின் மனநிலையைப் பற்றி மூன்று விசயங்களை காட்டுகின்றன.

1)    2014 ஜனவரி மாதம் காட்சிப்பிழையில் வெளியான ஸ்டாலின் ராஜாங்கத்தின் முக்கியமான கட்டுரை ஒன்று வெட்டி சுருக்கப்பட்டு வெளியானது. நான் கடந்த ஏழு வருடங்களாய் சிறு மற்றும் நடுநிலை பத்திரிகைளில் தொடர்ந்து எழுதி வருகிறேன். ஆனால் என்னுடைய ஒரு கட்டுரை கூட வெட்டப்பட்டதில்லை. வணிக பத்திரிகைகளில் தான் நீளம் கருதி வெட்டுவார்கள். ஆனால் நடுநிலை மற்றும் சிறுபத்திரிகைகளில் கட்டுரையின் தரமும் ஆழமும் தான் முக்கியம், நீளம் அல்ல. இடம் போதவில்லை என்றால் வேறொரு தகுதி குறைவான கட்டுரையை அடுத்த இதழுக்கு என வெளியே வைத்து விட்டு பெரிய கட்டுரையை அவ்விடத்தில் போடுவார்கள். ஆக எனக்கு இது ஒரு அரசியல் நகர்வு என அப்போதே பட்டது. ராஜன் குறை அப்பத்திரிகையின் மீது கணிசமான செல்வாக்கு செலுத்துபவர். இப்போது அவர் ஸ்டாலினை விமர்சிப்பது பார்த்தால் இரண்டுக்கும் தொடர்பு உள்ளதோ என ஐயம் எழுகிறது. என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை. ஊகம் மட்டுமே. புதிதாய் கவனம் பெற்று வரும் திறமையாளர்களைப் பார்த்து “நன்னா பாடறே, ஆனா ஸ்ருதி சுத்தம் இல்லே. பார்த்துக்கோ என மணடையில் தட்டுவது அவரது ஸ்டைல். ‘ஸ்டாலின் நல்லா எழுதறீங்க. ஆனா இதெல்லாம் போதாது என்பதன் பொருளும் இது தான். இது தீவிர வாசகர்களை ஈர்க்கிற எழுத்து பாணியும், புதிதாய் சிந்திக்கிற திறமையும் கொண்ட எழுத்தாளர்கள் தோன்றும் போது அவர்கள் மீது ராஜன் குறை கொள்ளும் பதற்றத்தின் வெளிப்பாடு என நான் பார்க்கிறேன்.

2)    காட்சிப்பிழை நடத்தின கருத்தரங்கில் நான் தமிழ் சினிமாவில் புரோமேன்ஸ் பற்றி பேசினேன். அது முடிந்ததும் ராஜன் குறை என்னிடம் வந்து கட்டுரை சிறப்பு, ஆனால் தரவுகளை அடுக்கி விட்டு அதன் மீது என் அவதானிப்புகளை வைக்கக் கூடாது என அறிவுரைத்தார். இது ராஜன் குறையின் அடுத்த பிரச்சனை. அவர் இங்கு ஸ்டாலின் ராஜாங்கத்துக்கு வலியுறுத்துவதும் இது தான். இது ஆய்வுக்கட்டுரைகளின் முறைமை. ஆய்வுக்கட்டுரையாளர்கள் பொதுவாய் ஒரு பிரச்சனையை எடுத்து ஒரு கருத்தியல் சட்டகத்தின் மீது ஒரு மீது இட்லித்தட்டில் மாவை ஊற்றுவது போல வைப்பார்கள். அது வெந்ததும் இறக்கி வைப்பார்கள். அதில் புது சிந்தனைகளோ பார்வையோ இராது. எழுத்தாளனின் மனநிலை, உணர்ச்சி சார்பு வெளிப்படாது. இப்படித் தான் எழுத வேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால் உண்மையில் ஒரு எழுத்தாளன் இப்படி எழுதக் கூடாது. வலை போல் ஒரு கருத்தியலை பின்னிப் பின்னி வைப்பது தான் ராஜன் குறையின் எழுத்து முறைமையும். அவருடைய எழுத்தில் ஒரு சொந்தக் கண்டுபிடிப்பு எதுவும் இருக்காது. கருத்தியலும் தர்க்கமும் சரியாய் உள்ளதா என்பதில் அவர் முழு கவனமும் இருக்கும். அது தான் அவரது பலவீனம். இது போன்ற எழுத்தை ஒரு கல்வித்துறை கருத்தரங்கில் சமர்ப்பித்து டி.ஏ, டி.ஏ வாங்கி, வேலை உயர்வுக்காய் சி.வியில் சேர்க்கலாமே ஒழிய எழுத்துலகில் இதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஏனென்றால் இதில் எந்த புது அவதானிப்புகளோ இல்லை. வாசகர்கள் எபோதும் புது அவதானிப்புகள் கொண்ட, துணிச்சலான பார்வை கொண்ட எழுத்தையே விரும்புகிறார்கள். ஆனால் அத்தகைய எழுத்து ராஜன் குறையை பதற்றப்படுத்துகிறது. அபிஷ்டு அபிஷ்டு என சொல்லிக் கொண்டே இருக்கிறார். எழுத்தாளனுக்கு தற்சார்பு அவசியம். ஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுத்திலுள்ள தற்சார்பைத் தான் அவர் கண்டிக்கிறார். ஆனால் தற்சார்பு தான் எழுத்துக்கு ஒரு வெளிச்சத்தையும் நிறத்தையும் அடையாளத்தையும் அளிக்கிறது. ஆழத்தையும் தீவிரத்தையும் கொடுக்கிறது. இலக்கிய எழுத்து தற்சார்பு கொண்டது. கல்வியாளரின் எழுத்து எந்த சார்பும், எந்த நிலைப்பாடும் அற்றது. அது வார்க்கப்பட்ட ஒரு காங்கிரீட் துண்டைப் போன்றது. இலக்கியவாசகன் அத்தகைய காங்க்ரீட் துண்டுகளை நிராகரித்து விடுவான். இதை நான் மட்டும் சொல்லவில்லை. ஆஷிஸ் நந்தியின் முழுக்கட்டுரைகளின் தொகுதியான A Very Popular Exileஇன் முன்னுரையில் இமிதியாஸ் அகமது சொல்வதும் தான். ராஜன் குறை பரிந்துரைக்கும் எழுத்துமுறை எந்த சார்போ அவதானிப்போ அற்ற தரவுகளை அடுக்கி விட்டு பின்னகர்ந்து கைகட்டி நிற்கும் ஒன்று. அது கல்வியலாளனுக்கானது; எழுத்தாளனுக்கானது அல்ல. ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ளது ஒரு கல்வியாளக் கட்டுரை அல்ல. அது நடுநிலை இலக்கியப்பத்திரிகையான காலச்சுவடில் வெளியாகியுள்ள ஒரு எழுத்தாளக் கட்டுரை. அக்கட்டுரையை ஏன் ஒரு கல்வியாள அச்சுக்குக்குள் ராஜன் குறை திணிக்கப் பார்க்கிறார்? 

3)    ஒருமுறை ஜெயமோகன் பற்றி ராஜன் குறையிடம் பேசும் போது அவரிடம் வெளிப்பட்ட கோபமும் கொந்தளிப்பும் என்னை வியப்பில் ஆழ்த்தின. ஜெயமோகன் தத்துவத்தை சரியாய் படிக்காமல் குளறுபடியாய் எழுதுகிறார் என பொங்கினார். ஆனால் அவரது கண்டனம் எனக்கு மிகையாகப்பட்டது. எழுத்தாளனின் கருத்துநிலையில் உள்ள புதுமை, அதன் ஆழம், புதுத்தாவல் என்பதை கவனிப்பதை விட, ஒரு அளவுகோல் வைத்து அவனது கருத்துக்களின் கல்வியல் சரித்தன்மையை சரிபார்ப்பதே அவரது அக்கறையாய் உள்ளது. ஜெயமோகன் தத்துவவாதி அல்ல. அவர் தத்துவத்தை கராறாய் கற்று குறையின்றி தொகுக்க வேண்டியதில்லை. தத்துவத்தில் இருந்து ஒரு கருத்தை எடுத்து அதை தன் பார்வையில் விரிவுபடுத்துவதே எழுத்தாளனின் நோக்கம். ராஜன் குறை ஏன் சட்டதிட்டங்கள், விதிமுறைகள், சரித்தன்மை, சமநிலை பற்றியெல்லாம் இவ்வளவு அக்கறைப்படுகிறார்? ஏன் இப்படி உடைவு, சிதைவு, குழப்பம், சீரற்ற பார்வை பற்றியெல்லாம் இவ்வளவு அச்சப்படுகிறார்? இது ஒருவித பிராமணியமா?


4)  தொண்ணூறுகளின் துவக்கத்தில் கூகிள் இல்லாததால் மேற்கத்திய கருத்தியலை மொழியாக்கி அல்லது தமிழில் சுட்டு அளிப்பவர்களுக்கு ஒரு மதிப்பு இருந்தது. இன்று கூகிள் அவர்களின் இடத்தை பிடித்துக் கொண்டது.இன்று சொந்தமாய் எழுதுகிறவன் தான் எழுத்தாளன். ஏற்கனவே உள்ள கருத்தியல்களின், தரவுகளின் மாவை பிசைந்து உருவம் கொடுப்பவன் அல்ல.  ராஜன் குறை நீங்கள் எனக்கு மகாபாரத போர் முடிந்த பிறகான திருதராஷ்டிரனை நினைவுபடுத்துகிறீர்கள்.
ஸ்டாலின் ராஜாங்கம் திமுகவை விமர்சிப்பது இறுதியில் பிராமணியத்தை ஆதரிப்பதாய் போய் முடியும் என எச்சரிக்கிறீர்கள். என்ன மாதிரியான தர்க்கம் இது? தன்னை நிராகரித்த பெண்ணை நோக்கி “மிக மோசமான கணவன் உனக்கு அமையட்டும்” என ஒரு ஆண் சபிப்பதை போன்ற தர்க்கம் இது. எந்த பெண்ணுக்கும் அப்படி நடப்பதில்லை.

No comments: