Friday, June 12, 2015

பா.ஜ.கவின் மலைப்பாம்பு அரசியல்


மலைப்பாம்பு இரையை மெல்ல நெருங்கி தன் உடலால் சுற்றி வளைத்து இறுக்கும். நெருக்கி எலும்புகளை கூழாக்கும். இரை செயலிழந்த பின் அதை முழுதுமாய் முழுங்கி விட்டு ஜீரணமாகும் வரை பல மணிநேரங்கள் அசையாது படுத்துக் கிடக்கும். மெதுவான வலிமிகுந்த மரணம். இதற்கு இரை மீது பாய்ந்து கழுத்தைக் கடித்து உயிரெடுக்கும் சிங்கம், புலிகள் மேல். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் இந்த மலைப்பாம்பை போலத் தான் நடந்து கொள்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அது தில்லி மற்றும் உ.பியில் அடிவாங்கியது. உ.பி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் அங்கு நிகழ்ந்த சில கற்பழிப்பு வழக்குகளை பெரிதுபடுத்தி மீடியா மூலமாய் அகிலேஷ் யாதவை தாக்கியது. அதே போல் அங்கு மதக் கலவரங்களையும் விளைவிக்க முயன்றது. அதாவது மத உணர்வுகளை ஒரு புறம் தூண்டி, ஆளுங்கட்சியின் சட்டம் ஒழுங்கு பற்றி மோசமான சித்திரத்தை உருவாக்கி தேர்தலில் வெல்ல முயன்றது. ஆனால் இம்முயற்சி மண்ணைக் கவ்வியது.

பா.ஜ.க அடுத்து வங்காளத்தை குறி வைத்தது. ஏற்கனவே ஊழலில் ஊறிப் போயிருந்த மம்தா அரசை ஷாரதா ஊழல் வழக்கு மூலம் சிக்க வைத்தது. சி.பி.ஐ விசாரணை மூலம் சுற்றி வளைத்து நெருக்கு எலும்புகளை நொறுக்கும் நிலை வரை கொண்டு வந்தது. ஆனால் வங்காளத்தில் இடதுசாரிகள் பலவீனமாய் இருந்தாலும் இந்த ஊழல் குற்றச்சாட்டையும் கடந்து அடுத்த தேர்தலில் வெல்லும் சாத்தியங்களுடன் தான் மம்தா இருக்கிறார் என ஒரு வங்காள நண்பர் என்னிடம் கூறினார். இதனால் பா.ஜ.க இப்போது மம்தாவுடன் கூட்டணி அமைக்கும் வகையில் காய் நகர்த்துகிறது. ஊழல் வழக்கின் வேகத்தை குறைத்து அதை சாகடிப்பதன் மூலம் மம்தாவுடன் பேரம் பேசுகிறது. வங்கதேச பயணத்தில் மோடியுடன் மம்தாவுடன் சேர்ந்து பயணித்துள்ளது இதன் அறிகுறி தான்.
 இதே அரசியலைத் தான் பா.ஜ.க தமிழகத்தில் ஜெயலலிதவுக்கு வழக்கில் இருந்து விடுதலைப் பெற்றுத் தந்து செய்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட பா.ஜ.கவை நம்பியே இருக்கிறார். கூட்டணியில் எத்தனை இடங்கள் என பேரம் பேசுவதில் இப்போது பா.ஜ.கவின் கரம் தமிழகத்திலும் வங்காளத்திலும் வலுத்துள்ளது. அப்படி கூட்டணி சேர்ந்து மட்டுமே அவர்களால் சில இடங்களாவது வெல்ல முடியும்.

தில்லி தேர்தலில் கடும் தோல்வி அடைவோம் என பா.ஜ.க நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனென்றால் ஆம் ஆத்மியின் நிலை பரிதாபமாகவே அதுவரை இருந்தது. சட்டென தேர்தலுக்கு முன் அவர்களுக்கு சாதகமாய் அலை கிளம்பியது. இந்த ஏமாற்றத்தின் கசப்பை பா.ஜ.க தொடர்ந்து அற்ப அரசியல் மூலமாய் தில்லியில் வெளிப்படுத்தி வருகிறது. தில்லியில் ஆளுங்கட்சிக்கு ஆட்சி அதிகாரம் மிக மிக குறைவு. அது மத்தியின் கையில் ஒரு பொம்மை அரசாகவே இருக்க இயலும். இந்த சட்டரீதியான அனுகூலத்தை பயன்படுத்தி பா.ஜ.க தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு தலைவலி அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. ஊழல் வழக்கில் மாட்டும் காவல் அதிகாரிகளை கைது செய்வதற்கு உள்ள உரிமை சம்மந்தமாய் ஆளுநருக்கும் கேஜ்ரிவாலுக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறி, நீதிமன்ற வழக்கு என தில்லியில் ஆம் ஆத்மிக்கு நிம்மதியாய் ஆட்சி செய்ய அவகாசம் வழங்கக் கூடாது என்பதில் பா.ஜ.க தெளிவாய் உள்ளது. இப்போது அங்குள்ள குப்பை அள்ளும் தொழிலாளர்களுக்கு இருமாதமாய் சம்பளம் வழங்காததால் அவர்கள் 15 டன் குப்பையை சாலையில் கொட்டி தில்லியை நாறடித்து விட்டார்கள். சம்பளத்துக்கான பணத்தை மத்திய அரசு கொடுக்கவில்லை என ஆம் ஆத்மியும், நாங்கள் கொடுத்து விட்டோம் என பா.ஜ.கவும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகிறது. இதனால் அங்கு பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கும், உடல்நலக் கேட்டுக்கும் உள்ளாகிறார்கள். இதை மத்திய அரசு நன்றாய் அறியும். அதேவேளை இதை மாநில அரசின் பெரும் குற்றமாய் மக்கள் பார்க்கப் போவதும் இல்லை. ஆனால் பா.ஜ.க இங்கு வேறு ஒரு சேதியை தில்லி மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது: “மத்தியில் எங்கள் ஆதரவு இன்றி தில்லியில் சரியாக ஆட்சி நடக்காது. மக்களும் நிம்மதியாய் வாழ இயலாது. எங்களை தேர்தலில் தோற்கடித்த நீங்கள் அவஸ்தைப்படுங்கள். இனிமேலாவது இந்த தப்பை செய்யாதீர்கள்.” மாநில தேர்தலில் தம்மை தோற்கடித்ததற்காக பா.ஜ.க மக்களுக்கு வழங்கும் சாட்டையடி தண்டனை இது.

இது ஒருவித தந்தைவழி சமூக மனப்பான்மை. மோடி மக்களை ஒரு சர்வாதிகார தந்தையை போல் நடத்துகிறார். என்னைப் பணிந்தால் உங்களை அன்போடு நடத்துவேன். எதிர்த்தால் செருப்பால் அடிப்பேன் என்கிறார். சுதந்திரத்துக்கு பிறகு மக்களை இப்படி நேரடியாய் பழிவாங்கும் ஒரு மத்திய அரசு அமைந்ததில்லை. இதுவரை காஷ்மீரிலும், வடகிழக்கிலும் மத்திய அரசுகள் செய்து வந்ததை மோடி அரசு தில்லியிலே செய்து காட்டி உள்ளது: எந்த ஆதரவும் இன்றி கொஞ்ச கொஞ்சமாய் கழுத்தை நெரித்துக் கொல்வது தான் இது. நல்ல வேளை தமிழகம் மோடியின் கையெட்டும் தொலைவில் இல்லை.
இந்திரா காந்தி முதற்கொண்டு இவ்வாறு மாநிலங்களின் பிரதான அரசியல் கட்சிக்குள் ஊடுருவி கட்டுப்படுத்தும் போக்கை காங்கிரசும் கடைபிடித்து வந்துள்ளது. ஆனால் இவ்வளவு தீவிரமாய் திட்டமிட்டு பா.ஜ.கவை போல் செய்ததில்லை. அதற்கு ஒரு காரணம் தான். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள போது பெரும்பாலான மாநிலங்களில் அதற்கு வலுவான ஆதரவும், அதிகாரமும் இருந்தது. ஆனால் பெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைத்த நிலையிலும் பா.ஜ.கவிற்கு அது இல்லை. மேலும் மோடியின் வசீகரமும் வளர்ச்சி பிரச்சாரமும் அவர் ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே ஒளி மங்கி விட்டது. இது அடுத்து வந்த மாநில தேர்தல் முடிவுகளில் தெரிந்தது. அதனால் மோடி எப்படியாவது அடுத்த பத்து வருட காலத்தில் மாநிலங்களில் தன் கட்சியின் பிடியை இறுக்க முயல்கிறார். இந்தியா வளர்ச்சிப் பாதையில் போகிறதோ பாதாளத்துக்கு போகிறதோ மோடியின் கவனம் முழுக்க இப்படி மலைப்பாம்பு அரசியல் செய்து தன் கட்சியின் அதிகார பரப்பை மாநிலங்களில் பெருக்குவது தான்.


 ஆனால் இந்த எதிர்மறை அரசியல் மக்களிடம் அவருக்கு கெட்டபெயரையே பெற்றுத் தரும் என அவர் உணர்வதாய் தெரியவில்லை. மக்களுக்கும் அவருக்குமான தூரம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

No comments: